Published:Updated:

ஆன்டி இண்டியன் - சினிமா விமர்சனம்

ஆன்டி இண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்டி இண்டியன்

முதல் படத்திலேயே சமரசமின்றி அரசியல் பேசியிருக்கும் இளமாறனின் தைரியம் பாராட்டுக்குரியது.

ஆன்டி இண்டியன் - சினிமா விமர்சனம்

முதல் படத்திலேயே சமரசமின்றி அரசியல் பேசியிருக்கும் இளமாறனின் தைரியம் பாராட்டுக்குரியது.

Published:Updated:
ஆன்டி இண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்டி இண்டியன்

சமகால அரசியலை நக்கலும் நையாண்டியுமாகத் தன் பாணியில் கேலி பேசியிருக்கும் படம் இந்த ‘ஆன்டி இண்டியன்.’

அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் வரையும் பாஷா ஒருநாள் கொலை செய்யப்படுகிறார். தந்தை முஸ்லிம், தாய் இந்து - கலப்புத் திருமணத்தில் பிறந்தவர் என்பதால் பாஷா உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்கள் எழுகின்றன. பிணத்தை வைத்து ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் சுயலாபத்திற்காக அரசியல் செய்ய முயல, அதன்விளைவாக இது அரசியல் பிரச்னையாக உருவெடுக்கிறது. இறுதியாக என்ன முடிவெடுக்கப்பட்டது என்பதே ‘ஆன்டி இண்டியன்’ பேசும் அரசியல்.

பாஷாவாக நடித்திருக்கும் இளமாறனுக்குக் கதைப்படி திரையில் பெரிதாக வேலையில்லை. அவரின் மாமாவாக நடித்திருக்கும் ஜெயராஜ்தான் கதையை நகர்த்திச் செல்லும் முக்கியப் புள்ளி. தங்கள் லாபத்திற்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும் சாமானியனைத் திரையில் முன்னிறுத்துகிறார் ஜெயராஜ். ராதாரவி, ‘ஆடுகளம்’ நரேன், `வழக்கு எண்’ முத்துராமன், வேலு பிரபாகரன், சார்லஸ் வினோத் என ஏகப்பட்ட நடிகர்கள். அனைவரும் தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். ஓரிரு காட்சிகளே வந்தாலும் தனித்துத் தெரிகிறார்கள் பாலாவும் ‘கில்லி’ மாறனும். தனக்கேயுரிய ஸ்டைலில் பாலா சிரிப்பை வரவழைக்க, சுளீர் வசனங்களால் அரசியல் நிகழ்வுகளைப் பகடி செய்கிறார் மாறன்.

ஆன்டி இண்டியன் - சினிமா விமர்சனம்

இசை இளமாறனே. கானாவை அவர் படமாக்கிப் பயன்படுத்தியிருக்கும் இடம் ஓகே. இரண்டாம் பாதியில் அதுவே சமாளிப்பாகவும் மாறிவிடுகிறது. எஞ்சிய இடங்களில் அவர் கோத்திருக்கும் இசையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சின்னச் சின்ன வேலைப்பாடுகளில் கவனிக்க வைக்கிறார் கலை இயக்குநர் வீரமணி கணேசன். கதிரவனின் ஒளிப்பதிவும் சராசரி மீட்டரில்தான் இருக்கிறது.

முதல் படத்திலேயே சமரசமின்றி அரசியல் பேசியிருக்கும் இளமாறனின் தைரியம் பாராட்டுக்குரியது. சாவு வீடாக இருந்தாலும் ஓட்டுக்குப் பணம் வாங்கச் செல்வது போன்ற ரசனையான காட்சிகள் பலம்.

வலுவான முதல் பாதிக் காட்சியமைப்புகள் மதவாத அமைப்புகளின் பாசாங்குத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினால், கடைசியில் வரும் கலவரம் வாக்கு அரசியலுக்காக எந்த எல்லைக்கும் போகும் கட்சிகளின் கோர முகத்தைக் கண்முன் நிறுத்துகிறது. ‘ஒரு பொணத்தை வச்சு 13 பேரைக் கொன்னீங்க, இப்போ 13 பொணத்தை வச்சு எத்தனை பேரைக் கொல்லுவீங்க?’ போன்ற வசனங்கள் சுளீர்.

ஆன்டி இண்டியன் - சினிமா விமர்சனம்

முதல்பாதியில் விறுவிறுவென நகரும் கதை இரண்டாம் பாதியில் தட்டுத் தடுமாறி எங்கெங்கோ சுற்றுகிறது. முதல்வரே தலையிடும் அமைதிப் பேச்சுவார்த்தையில் எப்படி இவ்வளவு எளிதாக விஷமிகள் புகுந்து குழப்பமுடியும் என்பது தொடங்கி ஆங்காங்கே சில லாஜிக் மீறல்களும் கவனத்தைக் குலைக்கின்றன.

கதையில் கொண்ட சமரசமில்லாத்தன்மையை மேக்கிங்கிலும் மேற்கொண்டிருந்தால் இன்னமும் நிறைய பேரைப் பேச வைத்திருப்பார் இந்த ஆன்டி இண்டியன்.