Published:Updated:

"யாரா இருக்கோங்கறத விட்டுட்டு, என்னவா மாறணும்னு சிந்திக்கணும்!"- அனுஹாசன் #MorningMotivation

"என்னோட வாழ்க்கை ரொம்ப ஈஸினு எல்லோரும் நினைப்பாங்க. ஆனா, அப்படியில்ல. என்னுடைய வாழ்க்கையிலும் நிறைய அப்ஸ் அண்ட் டவுன்ஸ் இருந்திருக்கு."

அனுஹாசன்
அனுஹாசன்

''வாழ்க்கையில ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு சவால் நமக்கு முன்னாடி காத்திருக்கும். அந்தச் சவாலை நாம் எப்படி எதிர்கொள்கிறோம், எப்படி எடுத்துக்கிறோம் என்பதில்தான் நம்முடைய சக்சஸ் இருக்கு'' என்கிறார் நடிகை அனுஹாசன். 'வாழ்வை மாற்றிய வாக்கியம்' பற்றிக் கேட்டோம் அவரிடம்.

Anuhasan
Anuhasan

''வாழ்க்கையில நமக்கு முக்கியமான ஸ்கில்ஸ் நிறைய தேவைப்படுது. இதுல முக்கியமான விஷயம் என்னனு பார்த்தீங்கன்னா, 'நான் யாரா இருக்கேன்'ங்கிறதை விட்டுக்கொடுத்துட்டு, 'நான் என்னவா மாறணும்'ங்கிறதை நோக்கிப் பயணம் பண்றதுதான். 'நான் எப்படி மாறினால் என்னுடைய வாழ்க்கை பெட்டரா இருக்குமோ அப்படி நான் மாறுகிற தன்மைதான் ரொம்ப முக்கியமான விஷயம்' - என்னுடைய பதினாறாவது பிறந்த நாளின்போது என் ஃப்ரெண்டு கல்பனா, இந்த வாக்கியங்கள் இருந்த ஒரு பர்த்டே கார்டை எனக்குக் கொடுத்தாங்க. அந்த வாக்கியங்கள் என்னை ரொம்ப இன்ப்ரஸ் பண்ணிச்சு. எனக்கு ரொம்ப பிடிச்ச வாக்கியங்கள்னா இதுதான். பதினாறு வயதிலிருந்து இதை நான் ஃபாலோ பண்றேன். என் வாழ்க்கையில இந்த வாக்கியங்களுக்கு ரொம்ப முக்கியமான பங்கு உண்டு.

என்னோட வாழ்க்கை ரொம்ப ஈஸினு எல்லோரும் நினைப்பாங்க. ஆனா, அப்படியில்ல. என்னுடைய வாழ்க்கையிலும் நிறைய அப்ஸ் அண்ட் டவுன்ஸ் இருந்திருக்கு. எல்லாரையும் போலவே எனக்கும் கஷ்ட நஷ்டங்கள், தடைகள், வருத்தங்கள், சவால்கள் இருந்திருக்கு. அந்த மாதிரி சேலஞ்சிங்கான கஷ்டமான தருணங்கள்ல, அடுத்து என்ன பண்ணலாம்ங்கிற கேள்வியை நான் எனக்குள்ள கேட்டுக்குவேன். இதை எப்படிக் கடந்து போறதுனு நான் நினைப்பேன்.

Anuhasan
Anuhasan
Vikatan

அப்படிக் கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அதே பதில்தான் எனக்கு வருது. நான் என்னவா மாறினா எனக்கு நல்லா இருக்குமோ, அதே மாதிரி மாறுவதற்குரிய, மாறும் தன்மையை வளர்த்துகொள்வது பற்றித்தான் நான் நினைப்பேன்.

ஒவ்வொரு தருணத்திலும் நான் இதைத் தவறாம கடைப்பிடிக்கிறேன். இத்தனை வருஷமா நான் எதுவா இருந்தாலும், ஒவ்வொரு வருஷமும் என்னை நான் மாற்றிக்கொண்டே வருவேன். என் மனசுல எப்பவுமே இது ஒரு நல்ல விஷயமாத்தான் தோன்றியிருக்கு. உதாரணமா, நான் காலேஜில் படிக்கும்போது என்னை ஒரு இன்டெலிஜென்ட்னு நினைச்சுக்கிட்டுத்தான் போனேன். ஆனா, அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது, கஷ்டப்பட்டுப் படிச்சாத்தான் நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ண முடியும்ங்கிற விஷயம். எனக்குள்ள இருந்த ஈகோவை தூக்கிப் போட்டுட்டு, விழுந்து விழுந்து படிச்சுத்தான் நல்ல மார்க் வாங்கினேன்.

Anuhasan
Anuhasan

சினிமா, டிவிக்கு வந்த பிறகு என்கூட வேலைபார்க்கிறவங்கள்ல யாராவது வேலையில் அக்கறை இல்லாமல் இருந்தா எனக்கு சட்டுன்னு கோபம் வந்து அவங்க மேல 'வள்ளு'னு விழுந்துடுவேன். எதுவும் சரியா இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். அப்படி இல்லையினா கோபம்தான் வரும். ஒரு கட்டத்துல எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது... அப்படி நான் ஸ்ட்ரிக்ட்டா இருந்ததால எனக்கு எந்த நல்ல பெயரும் கிடைக்கலை. ஒண்ணை உணர்ந்தேன்... கோபப்படுறதை மாத்திக்கணும்னு நினைச்சேன். அதே மாதிரி என்னை மாத்திக்கிட்டேன்.

இப்போ... இங்கே இங்கிலாந்துல நான் ஆக்டிங் வாய்ப்பைத் தேடிப் போகும்போது, இங்குள்ள சேனல்கள்ல வாய்ப்புகள் வந்துச்சு. 'இந்த ரோல் இருக்கு, நீங்க பண்ணுவீங்களா'னு இந்தியாவில் கேக்குற மாதிரி இங்க கேட்பாங்கனு நினைச்சேன். ஆனா, 'ஒரு ரோல் இருக்கு, இதுக்கு நீங்க ஆடிஷன் பண்ணுவீங்களா?'னு கேட்டாங்க. முதல் தடவை அப்படிக் கேட்கும்போது எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு. சினிமாவுக்கு வந்து 25 வருஷம் நடிச்சாச்சு. டிவியிலயும் நிறைய பண்ணியாச்சு. அப்படி இருக்கும்போது என்னை இந்த ரோலுக்கு ஆடிஷன் பண்றீங்களானு கேட்கிறதை நான் விரும்பலை. என்னுடைய ஈகோ வந்து இடிக்க ஆரம்பிச்சது.

அப்புறம் என் மனசுக்குள்ள ஒரு கேள்வி எழுந்துச்சு. 'இப்ப நீ இதை மாத்திக்கணும். இந்த ஈகோவை விட்டுடணும்'னு தோணுச்சு. அப்போ ஒரு விஷயம் புரிஞ்சது. நான் யார், எப்படிங்கிறது தெரியாம, 'இந்த கேரக்டருக்கு நீங்க பேசினா சரியா இருக்கும்'னு என்னை நினைச்சாங்க பாருங்க, அந்த அங்கீகாரம் ரொம்ப முக்கியம். அப்போ இதில் ஏதோ ஒரு திறமை நமக்கு இருக்குதுனு நினைச்சேன். நல்லா இருக்கும்னுதானே கூப்பிடறாங்கனு எனக்குப் புரிஞ்சது. என்னுடைய ஈகோவை தூக்கி ஓரமா வெச்சிட்டுப் பேசினேன். அதைத் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள்.

என்ன சொல்ல வர்றேன்னா, வாழ்க்கையில ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொருவிதமான சவால் நமக்கு முன்னாடி காத்திருக்கும். அந்தச் சவாலை நாம் எப்படி எதிர்கொள்கிறோம், எப்படி எடுத்துக்கிறோம் என்பதில்தான் நம்முடைய சக்சஸ் இருக்கு.

Anuhasan
Anuhasan
" 'தேவர் மகன்' பாடலுக்காக மன்னிப்புக் கேட்கிறோம்!" - மனம் திறக்கும் கமல்

நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி என்னன்னா, 'இப்ப நான் யாரா இருக்கேன்? நான் எதுவா மாறினால் என்னுடைய வாழ்க்கை சிறப்பா இருக்கும்?' என்கிற அந்த கேள்வியைக் கேட்டுக்கிட்டு நாம எந்த அளவுக்கு மாற்றத்தை நமக்குள் கொண்டு வர்றோமோ அந்த அளவு வாழ்க்கையில சந்தோஷத்தைப் பார்க்கலாம். இதுதான் என்னுடைய ஒப்பீனியன். இதுதான் எனக்கு என் வாழ்க்கையில ரொம்ப ஹெல்ப் பண்ணியிருக்கு. இது உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்."