சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ரஜினி காந்த் - 70 அபூர்வ தர்பார்!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

தர்பார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேட்டி

“அரசுப் பள்ளி மாணவன் நான். ஒவ்வொரு பீரியடின் இடையிலும், மதிய உணவு இடைவேளையிலும் நாங்கள் எல்லோரும் பேசும் ஒரே டாப்பிக் சினிமா மட்டுமே. அதில் ஒரு குரூப் ரஜினி சாரின் ஸ்டைல் பற்றியும், இன்னொரு குரூப் கமல் சாரின் நடிப்பு பற்றியும் காரசாரமாக விவாதிக்கும்.

ரஜினி, A.R. Murugadoss
ரஜினி, A.R. Murugadoss

அன்றைய காலகட்டத்தில் ‘ரஜினி ரசிகன் என்று, ரஜினியைப்போலவே தலையை வாரிக்கொண்டும், கையில் காப்பு போட்டுக் கொண்டும் திரிகிறானே’ என்று பெற்றோர் திட்டுவார்கள். அப்போதுதான் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படம் வந்தது. அதில் ரஜினி சார் ஒரு பெண்ணுக்கு அப்பாவாக நடித்திருப்பார். அதிலிருந்து பெற்றோர்களுக்கும் அவரைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதன்பின், இயக்குநர் ராஜசேகர் சாருடைய ‘படிக்காதவன்’, ‘தம்பிக்கு எந்த ஊரு’ போன்ற படங்கள் அவரைக் குழந்தைகளிடமும் கொண்டு போய்ச் சேர்த்தன. ஒரு கட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் அவரைப் பிடிக்க ஆரம்பித்தது. அவர் வளர்ந்தார். அதன்பின் ரஜினி சார் சொல்வதுதான் வேத வாக்கு என்பதுபோல் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் அவரது செல்வாக்கு உயர்ந்தது. அந்தச் சமயத்தில் ரஜினி சார் பேட்டிகள், பேச்சுகளை எல்லோரும் தேடித்தேடிப் படிக்க ஆரம்பித்தனர்.

நான் கல்லூரி முடித்து சினிமா வாய்ப்புக்காக அலைந்துகொண்டிருந்த நேரம். பிரசாத் ஸ்டூடியோவில் ‘உழைப்பாளி’ படத்துக்காக ‘உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லை’ பாடலுக்கான ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. தூரமாக நின்று ரஜினி சாரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கே கூட்டத்துக்கு நடுவில் காக்கிச் சட்டை, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு சூப்பர் ஸ்டார் ஆடிக்கொண்டிருந்தார். அதுதான் நான் முதன்முதலாக ரஜினி சாரை நேரில் பார்த்தது. சினிமாவில் உதவி இயக்குநராகக்கூடச் சேராத அந்தச் சமயத்தில், இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரைப் பார்த்தது மகிழ்ச்சியாகவும், மிகப்பெரிய ஆச்சர்யமாகவும் இருந்தது.

ரஜினி
ரஜினி

தமிழில் ‘கஜினி’ ஹிட் ஆன நேரத்தில் போன் செய்து அவர் வீட்டுக்கு அழைத்தார். நேரில், மிக அருகில் அவரைப் பார்க்கிறேன். முதல் ஐந்து நிமிடத்துக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை. ஆனால், அடுத்து ஒரு மணி நேரம் ஆன்மிகம், சினிமா, அரசியல் என நிறைய பேசினோம். நான் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் எந்தவித மறுப்புமின்றி, மழுப்பலுமின்றி பதிலளித்தார். அடுத்து நான் இந்திப் படம் எடுக்கச் சென்றுவிட்டேன். திரும்பி வரும்போது அவரது தேதி இல்லை. இப்படி நான் இயக்குநராகி, 18 வருடங்களுக்குப் பிறகுதான் அவரை இயக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது.

ரஜினி சார் கடுமையாக உழைப்பார். மிகவும் எளிமை யானவர். எல்லோரிடமும் எந்தவித வேறுபாடும் இன்றி நட்பாகப் பழகக்கூடியவர் என்று அவரைப் பற்றி நிறைய பேர் சொல்லியிருப்பார்கள். அதனால் நான் அதையே சொல்லப் போவதில்லை. ஆனால், நான் பார்த்த அளவில், சினிமாவை அவ்வளவு சின்ஸியராகவும், பயத்துடனும், மரியாதையுடனும் அணுகும் வெகு சிலரில் ரஜினி சாரும் ஒருவர். ஒவ்வொரு படத்திலும் ஜெயிக்கவேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு சின்ன விஷயத்துக்காகவும் மெனக் கெடுவதும், அந்தக் காட்சி சரியாக வந்துவிட்டதா’ எனத் தனக்குள் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்ப்பதும் என என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தினார். இவ்வளவு பெரிய சீனியர் ஆர்ட்டிஸ்ட் இத்தனை வெற்றிகளுக்குப் பிறகும் இவ்வளவு அர்ப்பணிப்புடன் இருப்பது எனக்கு ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது. வேறு எந்தத் துறையிலும் இந்த அளவுக்கு யாரும் இவ்வளவு தீவிரமாக இருப்பார்களா என்று தெரியவில்லை.

ரஜினி
ரஜினி

ரஜினி சாரிடம் பேசும்போது நாற்பது வயதுடையவரிடம் பேசுவது போல்தான் இருக்குமே தவிர, எழுபது வயதில் இருப்பவரிடம் பேசுவதுபோல் இருக்காது. சொன்ன விஷயத்தையே சொல்வது, அதையே விரிவாகச் சொல்வது என்று இல்லாமல், எதைச் சொல்லவேண்டுமோ அதைத் தெளிவாகவும், சுருக்கமாகவும், நறுக்கென்றும் சொல்லிவிடுவார். அவருடைய அணுகுமுறையும் அப்படித்தான் இருக்கும். அதேபோல், ஆன்மிகத்தில் அவர் படித்த புத்தகங்களையெல்லாம் பார்த்தால் ரொம்பவே ஆச்சர்யமாக இருக்கும். விதவிதமான புத்தகங்களைப் படித்து, அதுபற்றி நிறைய பேசுவார். எனக்கும் இரண்டு புத்தகங்கள் கொடுத்துப் படிக்கச் சொன்னார். எனக்கு ஆன்மிகத்தின் மீது ஆர்வம் அதிகமாகக் காரணம் அவர்தான்.

நான் தூரமாக இருந்து சினிமாவைப் பார்த்து, பின் அதற்குள் வந்து ஒரு படம் பண்ணினேன். அதேபோல, ரஜினி சாரையும் திரையில் பார்த்து, தூரத்தில் இருந்து பார்த்து, பின் அருகில் பார்த்துப் பேசி இப்போது அவருடன் ஒரு படம் பண்ணியிருக்கிறேன் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

ரஜினி
ரஜினி

ரஜினி சாரோடு சினிமாவுக்கு வந்த நிறைய பேர் இன்று இந்தத் துறையை விட்டே சென்றுவிட்டார்கள். சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இத்தனை வருடத்துக்குப் பிறகும் ரஜினி சார் அதே எனர்ஜியோடு அப்படியே இருக்கிறார். கிட்டத்தட்ட 100 படங்களுக்குப் பிறகுதான் அவருக்குத் தெலுங்கு மார்க்கெட் ஓப்பன் ஆனது. ஹிந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும் ‘2.0’ படத்திற்குப் பின்தான் ஹிந்தியிலும் மார்க்கெட் ஓப்பன் ஆனது. அறுபது வயதில் மார்க்கெட் ஓப்பன் ஆகி, புதுப்புது மொழிகளில் மார்க்கெட் பிடிப்பது என்பது எனக்குத் தெரிந்து ரஜினி சார் என்கிற ஒருவரால் மட்டுமே முடியும்.

சூப்பர் ஸ்டாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!