Published:Updated:

`நானும்கூட புர்கா அணிந்திருப்பேன். ஆனால்.?!’- மகள் மீதான விமர்சனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

``நம்முடைய செயல்களில் இருந்துதான் நல்ல விஷயங்களையும் கெட்ட விஷயங்களையும் கற்றுக்கொள்கின்றனர். அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தை நான் கொடுத்திருக்கிறேன். தேவையானவற்றை எடுத்துக்கொள்கிறார்கள்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா, புர்கா அணிவது தொடர்பான சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்தவண்ணம் உள்ளன. புர்கா விமர்சனங்கள் தொடர்பாக ரஹ்மானும் கதிஜாவும் தங்களது விளக்கங்களையும் பதிவுசெய்து வருகின்றனர். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், கதிஜா புர்கா அணிந்துள்ளது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரஹ்மான், புர்கா குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கதிஜா
கதிஜா

தஸ்லிமா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கதிஜா புர்கா அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``நான், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை மிகவும் விரும்புகிறேன். ஆனால், அவரது அன்பான மகளைப் பார்க்கும்போதெல்லாம் மூச்சுத்திணறல் ஏற்படுவதைப்போல உணர்கிறேன். கலாசாரம் மிக்க குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள்கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்பது வருத்தத்தை அளிக்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்த கதிஜா, ``அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின், என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சுத்தமான காற்றை சிறிதுநேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், எனக்கு மூச்சுத் திணறலாக இல்லை. மாறாக, பெருமையாகவும் என்னுடைய நடவடிக்கைகளில் உறுதியாகவும் நிற்கிறேன். உண்மையான பெண்ணியம் என்றால் என்ன என்பதை கூகுள் செய்து பாருங்கள்” எனப் பதிலடி கொடுத்திருந்தார்.

Vikatan

இதைத் தொடர்ந்து, 'தி குவின்ட்' ஊடகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில், இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதிலளித்த அவர், ``ஆண்கள் புர்கா அணியக்கூடாது என்கிறார்கள். இல்லையெனில், நானும் அணிந்திருப்பேன். ஷாப்பிங் சென்றுவருவது, நிலையான ஒரு வாழ்க்கையைக் கண்டுபிடிப்பது ஆகியவற்றிற்கு எளிதாக இருந்திருக்கும். என்னுடைய மகள் சுதந்திரமாக இருக்கிறார் என நினைக்கிறேன். ஏனென்றால், வீட்டில் வேலை செய்பவர்களின் உறவினர்கள் யாராவது இறந்தால்கூட இறுதிச் சடங்கிற்கு அவள் சென்றுவருகிறாள். சமூகம் சார்ந்த அவளுடைய நடவடிக்கைகள் மற்றும் எளிமை ஆகியவற்றைப் பார்க்க திகைப்பாக இருக்கிறது” என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

கதிஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு அளித்த பதிலை குறிப்பிட்டுப் பேசிய ரஹ்மான், ``நஸ்ரினுக்கு பதிலளிக்கும் முன்னர் என்னுடனோ அல்லது குடும்பத்தில் மற்றவர்களுடனோ கதிஜா கலந்தாலோசிக்கவில்லை” என்றார். மேலும், ``மதம் சார்ந்த விஷயம் என்பதைவிட, உளவியல் சார்ந்த விஷயம் என்றுதான் நான் இவற்றை நினைக்கிறேன். நமது பிரச்னைகளையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ளும் வகையில் பிள்ளைகளை வளர்ப்பதுதான் சரியான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன். நம்முடைய செயல்களில் இருந்துதான் நல்ல விஷயங்களையும் கெட்ட விஷயங்களையும் கற்றுக்கொள்கின்றனர். அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தை நான் கொடுத்திருக்கிறேன். அதில் தேவையானவற்றை எடுத்துக்கொள்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

முதல் சம்பளம், ரஹ்மான் ஸ்ட்ரீட், ஒபாமாவின் வாழ்த்து! - ரஹ்மான் பற்றிய 15 சுவாரஸ்யங்கள்! #HBDRahman
அடுத்த கட்டுரைக்கு