Published:Updated:

``சந்திரமுகி, புலிகேசி மட்டுமில்ல... இதையெல்லாம்கூட நான்தான் வரைஞ்சேன்!'' - கலை இயக்குநர் தேவா

மனைவி நிவேதா மற்றும் குழந்தையுடன் கலை இயக்குநர் தேவா
மனைவி நிவேதா மற்றும் குழந்தையுடன் கலை இயக்குநர் தேவா

ஓவியர் ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களைத் தனது கலை இயக்கத்தின் மூலம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திய கலை இயக்குநர் தேவாவிடம் ஒரு பேட்டி.

ஒரு திரைப்படம் உருவாவதில் தொடங்கி வெளிவரும் வரை, அதன் பின்னணியில் முகம் தெரியாத கலைஞர்கள் பலரது உழைப்பு அடங்கியிருக்கிறது. அதில் முக்கியமானவர்கள் கலை இயக்குநர்கள். கதைகளின் முக்கியத்துவத்திற்கும், பாடல்களின் தேவைகளுக்கும் ஏற்ப ரசனையுடன் வடிவமைத்துத் தருவதில் இவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது.

Recreation of Ravi Varma's paintings
Recreation of Ravi Varma's paintings

அந்த வகையில் சமீபத்தில், ஓவியர் ரவி வர்மாவின் ஓவியங்களை ஜி. வெங்கட்ராம் புகைப்படங்களாக மறு உருவாக்கம் செய்து வெளியிட்டது கவனம்பெற்றது. இதற்காகப் பலரும் இதைப் பாராட்டினார்கள். புகைப்படங்களுக்கு இணையாக கவனிக்கப்பட்டது அதன் பின்னணியில் உள்ள கலை இயக்கம். ஓவியர் ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களைக் கலை இயக்கத்தில் கண்முன் கொண்டுவந்து நிறுத்திய கலை இயக்குநர் தேவாவிடம் பேசினோம். அவர் பேசியதற்குப் பிறகுதான் பல சுவாரஸ்யமான விஷயங்கள் தெரியவந்தன.

"என்னோட சொந்த ஊர் மதுரைக்குப் பக்கத்துல இருக்கிறல கல்லுப்பட்டி. அங்க ஒரு ஓவியக் கூடம் வெச்சு நடத்திட்டிருந்தேன். என்னைப் பொருத்தவரை யோகா கத்துக்கறதும், ஓவியம் கத்துக்கறதும் ஒண்ணுதான். ரெண்டுமே மனசை ஒருநிலைப்படுத்தும். ஆனாலும், ஓவியம் கத்துக்கறதுக்கு பெருசா யாரும் இப்போ ஈடுபாடு காட்டுறது இல்லை. ஒரு கட்டத்துல, சொந்த ஊர்ல ஓவியத்துக்கான வாய்ப்புகள் குறைஞ்சிட்டு வந்தது. அதனால சினிமாவுக்குள்ள நுழையிற கனவோட சென்னைக்குக் கிளம்பி வந்தேன். எனக்கு சினிமாவுல யாரையும் தெரியாதுங்கிறதால, எப்படி வாய்ப்பு கேட்குறது, யார்கிட்ட பேசுறதுனுகூட தெரியாது. அப்போ, மெரினா பீச் பக்கம் உட்கார்ந்து ஓவியங்கள் வரைஞ்சுதான் பிழைப்பு நடத்திட்டிருந்தேன்.

`அந்நியன்' பட  பாறை ஓவியங்களுக்கு முன்னால்...
`அந்நியன்' பட பாறை ஓவியங்களுக்கு முன்னால்...

அப்புறம், சென்னையில ஒரு ஆர்ட்டிஸ்ட்கிட்ட வேலை பார்த்தேன். அவர் மூலமா சினிமாவுக்குள்ள நுழைஞ்சேன். `முதல்வன்' படத்துல வர்ற `அழகான ராட்சசியே', `அந்நியன்'ல `ரண்டக்க ரண்டக்க', `சிவாஜி'ல 'பல்லேலக்கா', `நண்பன்'ல `அஸ்கு லஸ்கு'னு ஷங்கர் சார் படங்கள்ல வர்ற பாடல்களுக்கு ஓவியம் வரைஞ்சது, அந்த சமயத்துல கவனிக்கப்பட்டது. அந்த ஓவியக்குழுவுல நானும் இருந்திருக்கேன்.

அதுமட்டுமில்ல... `சந்திரமுகி' படத்துல வேட்டைய ராஜா உருவத்தையும், சந்திரமுகி உருவத்தையும் நான்தான் வரைஞ்சேன். சந்திரமுகியை தி.நகர்ல இருக்கிற ரேணுகானு ஒரு நடனக் கலைஞரை மாடலா வெச்சுதான் வரைஞ்சேன். எனக்கு முன்னாடி நிறைய பேர் அந்த ஓவியத்தை வரைஞ்சு கொடுத்திருந்தாங்க. அதெல்லாம் திருப்தி ஆகாம, கடைசில நான் வரைஞ்ச ஓவியத்தைதான் ஓகே பண்ணாங்க.

வடிவேலு சார் நடிச்ச `இம்சை அரசன் 23-ம் புலிகேசி'ல வர்ற அவரோட ஓவியமும் நான் வரைஞ்சதுதான். வடிவேலு சாருக்கு அந்த ஓவியம் ரொம்பப் பிடிச்சுப் போய், `எனக்கு இதே மாதிரி வரைஞ்சு கொடுடா'னு கேட்டு வாங்கிக்கிட்டார். எப்படிப் பார்த்தாலும் எங்க ஊர்க்காரர். ஸோ, நான் வரைஞ்ச ஓவியம் அவருக்குப் பிடிச்சுப்போனதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். அதேமாதிரி, 'பாகுபலி' படத்துல வர அனுஷ்காவோட (தேவசேனா) ஓவியமும் நான் வரைஞ்சதுதான்.

வடிவேலுவுடன் தேவா
வடிவேலுவுடன் தேவா

அப்போ, `காசு கொடுக்கறாங்களா... வேலை வந்துச்சா'னுதான் இருந்தேன். நான்தான் இந்த ஓவியங்களை எல்லாம் வரைஞ்சேன்னுகூட வெளிய யாருக்கும் தெரியாது. இந்தக் காரணத்தால பலபேர், `அந்த ஓவியங்கள் வரைஞ்சது நான்தான்'னு உரிமை கொண்டாடிட்டு இருந்தாங்க. அதை எல்லாம் நான் பெருசா எடுத்துக்கலை. கல்யாணம் பண்ண பிறகு என்னோட மனைவி, `உங்களோட வேலை வெளியில தெரியணும்'னு ஊக்கப்படுத்திட்டு இருந்ததால, அதை நோக்கி இப்போ ஓடிட்டு இருக்கேன். இப்போ, `ஜீவி' படத்தோட டயலாக் ரைட்டர் இயக்குற `க்' படத்துல கலை இயக்குநரா கமிட்டாகியிருக்கேன்.

40 படங்களுக்கும் மேல வேலைபார்த்துட்டுதான் சினிமான்னா என்னன்னு தெரிஞ்ச கலை இயக்குநரானேன். கலை இயக்குநராக ஓவியம் தெரிஞ்சிருக்கிறதும் அவசியம். ஆர்ட் டைரக்‌ஷன் அதுக்கும் அப்பாற்பட்டது. ஒவ்வொரு மதத்துலேயும் கல்யாண வீட்டு விசேஷம் எப்படி இருக்கும், துக்க வீடு எப்படி இருக்கும், கீழ்த்தட்டு மக்களோட வாழ்க்கை, மேல்தட்டு மக்களோட வாழ்க்கைனு எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சாதான் முழுமையான ஒரு கலை இயக்குநரா வெற்றிபெற முடியும்."

'ரவிவர்மா ஓவியங்கள்' புகைப்பட காலண்டர் வெளியீட்டு விழானின் போது
'ரவிவர்மா ஓவியங்கள்' புகைப்பட காலண்டர் வெளியீட்டு விழானின் போது

ரவி வர்மா ஓவியங்களைப் புகைப்படங்களா மறு உருவாக்கம் செய்ததில் பணியாற்றியது பற்றி கேட்டோம். "என்னோட கரியர்ல ஒரு பெரிய ஸ்டெப் எடுத்து வெச்சது இந்த வொர்க் மூலமாதான். போன வருஷம் டிசம்பர் தொடக்கத்துலதான் இந்த வேலை பண்ணப்போறதை வெங்கட்ராம் சார் சொன்னார்.

ஸ்ருதி முதல் சமந்தா வரை ரவிவர்மாவின் ஓவிய வெர்ஷன்! ஜி.வெங்கட்ராம் போட்டோஷுட் கதை

ரவி வர்மா ஓவியங்களுக்கான செட் போடுறதுல இருந்த சவால் என்னன்னா, ரவி வர்மா கேரளாவைச் சேர்ந்தவர். அங்க கிடைக்கிற பழங்கள், பொருள்கள்னு அதை ஓவியமா வரைஞ்சிருப்பார். இதை ஓவியத்துல கொண்டுவர்றது எளிது. ஆனா, அதேமாதிரியான பொருள்களைத் தேடுறதும், செட் போடுறதும்தான் சவாலான விஷயமா இருந்தது. அதுவுமில்லாம, எந்த ஆர்ட்டிஸ்ட்டோட ஷூட் அடுத்து இருக்கப்போகுதுன்னு ஒருநாளுக்கு முன்னாடிதான் தெரியும். அந்த ஒரு நாளைக்குள்ள ஓவியத்துல இருக்கிற மாதிரியான பொருள்களைத் தேடறதும், செய்யறதும் சவாலா இருந்தது."

இந்த ரீ-கிரியேஷன்ல ஐஷ்வர்யா ராஜேஷ் பக்கத்துல இருந்த நகைப்பெட்டி, அந்தக் காலத்துல யூஸ் பண்ணது. இப்போ எங்க தேடியும் கிடைக்கலை. அதனால, பிளாஸ்டிக் ப்ளேட் யூஸ் பண்ணிதான் அந்தப் பெட்டியை செஞ்சேன். அதேமாதிரி, ஸ்ருதி ஹாசன் உட்கார்ந்திருக்கிற பாறையும் தெர்மக்கோல்ல ரெடி பண்ணது. இதேபோல, ரம்யா கிருஷ்ணன் பக்கத்துல இருந்த பில்லரும் கிடைக்காம, ஒரு இரவுல தெர்மக்கோல்ல செஞ்சது. இந்த மாதிரி, ஒரிஜினாலிட்டிக்காக சின்ன விஷயங்களையும்கூட பார்த்துப் பார்த்து பண்ணோம்.

தேவா வரைந்த அனுஷ்கா ஓவியம்
தேவா வரைந்த அனுஷ்கா ஓவியம்
``டீமே கழிவுநீர்ல இருந்தப்போ பயமா இருந்தது!" - `விசாரணை' சமுத்திரக்கனி

ஆர்ட் டைரக்‌ஷனைப் பொறுத்தவரை, `முடியாது'ன்னு ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கேன். கமல், அனுஷ்கான்னு பல பிரபலங்களை ஓவியங்களா வரைஞ்சு, அவங்களுக்குக் கொடுத்திருக்கேன். எனக்கு ஓவியர் சில்பியோட லைன் டிராயிங் வரையறதுதான் கஷ்டமான காரியம். அதை ரீ-கிரியேட் பண்ணிட்டிருக்கேன். ரவி வர்மாவோட ஓவியங்கள்ல என்ன கலர், எப்படிப் பயன்படுத்தியிருக்கார்ங்கிற நுட்பம் தெரியும்ங்கிறதால, அந்தக் கலரிங் கொண்டு வர்றதும், அவரோட ஓவியங்களை வரையிறதும் எனக்கு ஈஸியாதான் இருந்தது. இந்த புராஜெக்ட்ல வேலைபார்த்தது மறக்க முடியாத அனுபவம். இந்த வாய்ப்பு தந்த வெங்கட் சாருக்கு நன்றி" என்று மகிழ்ச்சியுடன் முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு