சினிமா
தொடர்கள்
Published:Updated:

“‘பீஸ்ட்’ செட்டைப் பார்க்கணும்னு கே.வி.ஆனந்த் ஆசைப்பட்டார்!”

டி.ஆர்.கே.கிரண்
பிரீமியம் ஸ்டோரி
News
டி.ஆர்.கே.கிரண்

எனக்கு நடிக்கிறதுல ஆர்வம் இருக்கு, ரொம்பப் பிடிக்கும். `அயன்' படத்துல ஜெகன் நடிச்ச கேரக்டரை கே.வி.ஆனந்த் என்னைத்தான் பண்ணச் சொன்னார்

சினிமாவில் கலை இயக்கம் என்பது ஒரு கடல். கலை இயக்குநர்கள் நினைத்தால் ஆண்டிப்பட்டியில் அமெரிக்காவைக் காட்ட முடியும். கதைக்கு ஏற்றவாறு செட் அமைப்பது, அந்தக் காட்சிகளுக்கேற்ற பொருள்களை அரங்கேற்றுவது என கதை நடக்கும் உலகிற்கு நம்மை முதலில் அழைத்துச் செல்வது கலை இயக்கம்தான். அது குறித்த பல கேள்விகளை தமிழ் சினிமாவின் முக்கியமான கலை இயக்குநர்களில் ஒருவரான டி.ஆர்.கே.கிரணிடம் முன் வைத்தேன்.

`` `பீஸ்ட்' படத்துக்காக நீங்க போட்ட பிரமாண்ட மால் செட்ல இன்டீரியர் வேலைகள் துல்லியமா இருந்தது. அதற்கான மெனக்கெடல்..?’’

``நிறைய படங்கள்ல பிரமாண்ட செட் போட்டிருக்காங்க. அதெல்லாம் எக்ஸ்டீரியர் மட்டும்தான் இருக்கும். இன்டீரியர் வேணும்னா, தனியா ஃப்ளோருக்குள்ள போய்ப் போடுவாங்க. ஏக்கர் கணக்குல செட் போடுவாங்க. ஆனா, அதனுடைய உயரம் 20 அடிதான் இருக்கும். அதுக்கு மேல கிராபிக்ஸ் பண்ணிக்குவாங்க. ஆனா, `பீஸ்ட்' மால் செட்ல என்ன ஸ்பெஷல்னா, 60 அடி உயரம், 250 அடி அகலம் செட் போட்டோம். அதுக்கான இன்டீரியர் வேலைகளும் தனியா பண்ணாமல் அதுக்குள்ளேயே பண்ணினோம். ஒரு கட்டடத்துக்கு என்ன பண்ணுவோமோ அதே மாதிரி பேஸ்மென்ட் ரெடி பண்ணி, அதுக்கு மேல மாடி செட் போட்டோம். அந்தச் சமயத்துல புயல் வேற வந்திடுச்சு. அதையெல்லாம் எங்க செட் தாங்கி நின்னுச்சு. இன்டீரியர் டிசைன் பண்ண இந்தியா முழுக்க நிறைய மால்களுக்குப் போனோம். லைவா ஒரு மால்லதான் ஷூட் பண்ண பிளான் பண்ணியிருந்தோம். ஆனா, அனுமதி கிடைக்கலை. தவிர, விஜய் சாரை மாலுக்குக் கூட்டிட்டுப் போய் ஷூட் பண்ண முடியாது. நிறைய கூட்டம் வந்திடும். அதனாலதான் செட் போடலாம்னு முடிவாச்சு. அதுல இருக்கிற இன்டர்நேஷனல் பிராண்ட் ஷோ ரூம்கள், ஐரோப்பிய ஸ்டைல் மார்பிள், சுவர் இதெல்லாம்தான் அந்த பிரமாண்டத்துக்குக் காரணம்.''

“‘பீஸ்ட்’ செட்டைப் பார்க்கணும்னு கே.வி.ஆனந்த் ஆசைப்பட்டார்!”

``லைவ் லொகேஷன்ல ஷூட் பண்ணும்போது, ஆர்ட் டைரக்டருக்கான வேலை என்னவா இருக்கும்?’’

``செட் போடுறது மட்டும்தான் ஆர்ட் டைரக்டருடைய வேலைன்னு இல்லை. உதாரணத்துக்குச் சொல்லணும்னா, ஒரு பங்களா வீடு. அதை ஒரு நீதிபதியுடைய வீடா காட்டணும். அப்போ அது சார்ந்த பொருள்களைக் கொண்டு வந்து அதை நீதிபதியுடைய வீடா மாத்தணும். அதுதான் லைவ் லொகேஷன்ல ஆர்ட் டைரக்‌டருக்கான வேலை. நமக்குக் கிடைக்கிற லைவ் லொகேஷன் எல்லாம் நம்ம கதைக்கு ஏத்ததா அமையாது. நாமதான் அமைச்சுக்கணும். `காப்பான்' படத்தில் பிரதமர் வீடா காட்டிய இடம், ஒரு காலேஜ்ல ஷூட் பண்ணினது.''

``தெலுங்கு, மலையாளப் படங்களில் நீங்க வேலை செய்யும்போது, அந்த ஊர் கலாசாரங்களைப் பற்றித் தெரிஞ்சிருந்தால்தானே அவங்களுக்குப் பரிச்சயமான பொருள்களைப் பயன்படுத்தமுடியும்?’’

``நிச்சயமா. அதுக்குப் பெரிய தேடல் தேவை. தமிழ், தெலுங்குப் படங்களில் வேலை செய்யும்போது எல்லாப் பொருள்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். கேரளாவுல அவங்க பயன்படுத்துற பொருள்கள் வித்தியாசமா இருக்கும். இதெல்லாம்கூட சமாளிச்சிடலாம். வெளிநாட்டுக்குப் போய் ஷூட் பண்ணும்போது, இங்கிருந்து நிறைய பிராப்பர்ட்டீஸ் எடுத்துட்டுப் போவோம். `இரண்டாம் உலகம்' படத்துல ஜார்ஜியாவை இந்தியாவா காட்டினோம். அப்போ நம்ம பொருள்கள் அங்க கிடைக்காது. அதனால, இங்கிருந்து கொண்டு போனோம். அங்க பத்தாமலும் போயிடக்கூடாது. அதிகமாவும் எடுத்துட்டுப் போக முடியாது. காரணம், வெயிட் அதிகமாகும்போது, ப்ளைட்ல அதுக்கான கட்டணமும் அதிகமாகும். அதனால, என்ன தேவைன்னு ரெண்டு மூணு முறை விஷுவலைஸ் பண்ணிக்கணும்.''

“‘பீஸ்ட்’ செட்டைப் பார்க்கணும்னு கே.வி.ஆனந்த் ஆசைப்பட்டார்!”

``ஒரு படத்துக்கு நல்ல ஆர்ட் டைரக்‌ஷன் எப்படியிருக்கணும்?’’

``இயக்குநர் லொகேஷனுக்கு வந்தா, கதை நடக்கிற உலகத்துக்குள்ள வந்த உணர்வு கிடைக்கணும். அப்படி இருந்தால்தான், அவர் உணர்ந்து ஷாட் வைப்பார். சாபு சிரில் சார் பத்தி ஒரு விஷயம் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். ஒரு இந்திப் படத்துக்காக ஹாஸ்பிட்டல் செட் போட்டிருக்கார். செட் போட்டு முடிச்சதும், உள்ள பினாயில் தெளிச்சு விட்டிருக்கார். காரணம், பினாயில் வாசனை இருக்கும்போது உண்மையாவே ஒரு ஹாஸ்பிட்டல்ல இருக்கிற மாதிரி நடிகர்கள் உணர்வாங்க. அப்போ அவங்களை அறியாமலே அவங்க உணர்வுகள் அதுக்கு செட்டாகிடும். ஒரு ஆர்ட்டிஸ்ட் நாம இங்கதான் இருக்கோம்னு நம்பணும். அதுக்கு ஆர்ட் டைரக்‌ஷன் சப்போர்ட் பண்ணணும். அதேபோல, நாம எவ்வளவு மெனக்கெட்டு செட் போட்டாலும் படம் பார்க்கும்போது அது செட்டுனு மக்களுக்குத் தெரியக்கூடாது. அதுதான் எங்க வெற்றி.''

``உங்க நண்பர் கே.வி.ஆனந்துக்கும் உங்களுக்குமான அறிமுகம் எப்போ? அவரை இப்போ எவ்வளவு மிஸ் பண்றீங்க?’’

`` `நேருக்கு நேர்' படத்துல அவர் ஒளிப்பதிவாளர். நான் அசிஸ்டென்ட் ஆர்ட் டைரக்டர். என் குருநாதர் ராகவன் சார். அவரும் கே.வி.ஆனந்தும் ரொம்ப நெருக்கம். அப்படிதான் நான் அவருக்குப் பழக்கமானேன். எனக்கு `மயக்கம் என்ன' வாய்ப்பு வந்தபோது, கே.வி என்கிட்ட, ``தமிழ் சினிமாவுல சிறந்த இயக்குநர் செல்வராகவன். அவர் படம் வேலை செய்யக் கிடைக்குது. நீ போய் வேலை செய். நம்ம படத்துக்கான செட் வேலையை உனக்குத் தகுந்த மாதிரி மாத்திக்கிறேன்'னு சொல்லி அனுப்பி வெச்சார். இப்போ `பீஸ்ட்' கமிட்டானதும், அவ்வளவு சந்தோஷப்பட்டார். `மிகப்பெரிய படம். இதை நல்லபடியா முடி. அடுத்து நம்ம படத்துக்காக லொகேஷன் பார்க்கப் போலாம்'னு சொன்னார். `பீஸ்ட்' செட் முடிஞ்சதும் சொல்லு. நான் வந்து பார்க்கிறேன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். ஆனா, அதுக்குள்ள இப்படியெல்லாம் நடந்தது ஏத்துக்கவே முடியலை.''

“‘பீஸ்ட்’ செட்டைப் பார்க்கணும்னு கே.வி.ஆனந்த் ஆசைப்பட்டார்!”

``ஒளிப்பதிவாளருக்கும் ஆர்ட் டைரக்டருக்குமான உறவு எப்படி இருக்கணும்?’’

``சினிமாவுல ரொம்ப சீக்கிரமா ஈகோ க்ளாஷாகிடும். அப்படி ஆகாமல் இருக்கணும்னா, நாம எல்லோர் கூடவும் ஃப்ரெண்ட்லியா விட்டுக்கொடுத்துப் போகணும். நம்மளை வேலை செய்ய இயக்குநர் கூப்பிடுறார். அவருடைய எழுத்து படமா உயிர்பெறுது. அதுக்குதான் எல்லோரும் வேலை செய்யணுமே தவிர, தனித்தனியா செயல்படக் கூடாது. ஒரு ஆர்ட் டைரக்டர் கேமராமேனோடு சேர்ந்து கலந்து பேசிதான் செட் போடணும். அதேபோல, டான்ஸ் சீக்வென்ஸ் இருக்கும்போது டான்ஸ் மாஸ்டர்கூடவும் டிஸ்கஸ் பண்ணிக்கணும். அதேமாதிரிதான் ஸ்டன்ட்டும். ஆர்ட் டைரக்‌ஷன் மட்டும் படத்தை நல்லாக் கொண்டு வர முடியாது. எல்லோரும் ஒருத்தருக்கொருத்தர் சப்போர்ட் பண்ணி வேலை செஞ்சாதான் படம் நல்லா வரும்.''

``சமீபமா, உங்களை இம்ப்ரஸ் பண்ணின ஆர்ட் வொர்க்?’’

``ராமலிங்கம் போட்ட `கர்ணன்' செட் ரொம்ப யதார்த்தமா இருந்தது. நான் அவர்கிட்ட போன் பண்ணியே பேசினேன். அப்புறம், இப்போ வெளியான `விக்ரம்' படத்துல சதீஸுடைய வொர்க் ரொம்ப நல்லாருந்தது. அவருடைய வொர்க் `மாநகரம்' படத்துல இருந்து கவனிச்சுட்டு வர்றேன்.''

``உங்களுடைய அடுத்த படங்கள்?’’

``இப்போ தெலுங்குல ரவிதேஜா சாருடைய `ராவணசுரா' படம் போய்க்கிட்டிருக்கு. அப்புறம், ஒரு பெரிய படத்துக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் அதுக்கான வேலைகள் தொடங்கும்.''

``நடிகராகவும் உங்களை சில படங்களில் பார்க்கமுடியுதே!’’

``ஆமா. எனக்கு நடிக்கிறதுல ஆர்வம் இருக்கு, ரொம்பப் பிடிக்கும். `அயன்' படத்துல ஜெகன் நடிச்ச கேரக்டரை கே.வி.ஆனந்த் என்னைத்தான் பண்ணச் சொன்னார். ஆனா, அப்போ முடியாமப்போயிடுச்சு. அதுக்குப் பிறகு, அவருடைய படங்கள்ல ஒரு கதாபாத்திரத்துல நடிக்க வெச்சிடுவார். அதுபோக, நண்பர்கள் அவங்க படத்துக்குக் கூப்பிட்டா, போய் நடிப்பேன்.''