Published:Updated:

" `சார்பட்டா' படத்துக்காக இப்பவே விருது கிடைச்ச மாதிரி இருக்கு!" - கலை இயக்குநர் ராமலிங்கம்

ராமலிங்கம்
ராமலிங்கம் ( க.சதீஷ்குமார் )

''பீரியட் படங்கள்ல செட் சூப்பரா இருக்குனு சொன்னா, அது பெரிய கிரெடிட்தான். விருது கிடைச்ச மாதிரி. ஆனா, சமகால கதைகள் உள்ள படங்கள்ல செட் சூப்பர்னு சொன்னா அது மைனஸ்.''

பா.இரஞ்சித்தின் 'அட்டகத்தி' தொடங்கி 'சார்பட்டா' வரை கலை இயக்குநராக பயணிப்பவர் த.ராமலிங்கம். 'காலா'வில் மும்பை தாராவியை சென்னையில் கொண்டு வந்தவர், இப்போது 'சார்பட்டா'வில் பழைய மெட்ராஸுக்குள் நம்மைக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறார்.

''லவ்வு, பாட்டு, ஃபைட்னு ஒரே மாதிரியான ஃபிளாட்டான படங்கள்ல ஒர்க் பண்றதை விட, இப்படிப்பட்ட படங்கள்ல ஒர்க் பண்றது தான் சவால்'' என ரசனையாக பேச ஆரம்பிக்கிறார் ராமலிங்கம்.

சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை

'' சார்பட்டா' 1970-களை பிரதிபலிக்கும் ஒரு பீரியட் படம். இதுல எதுவுமே டெக்னிக்கலா தெரியக்கூடாதுன்றதுல கவனமா இருந்தேன். அதனாலதான் டீசர் ரிலீஸானதும் அவ்ளோ வரவேற்பு கிடைச்சது. பொதுவா ஒரு கலை இயக்குநருக்கு எந்தப் படம் பண்ணாலும் ஒரு எக்சைட்மென்ட் இருக்கும். அதுவும் பீரியட் ஃபிலிம்னா இன்னும் பயங்கரமா உணர்வு மேலோங்கும். கலர் எவ்ளோ அழகா இருந்தாலும், கறுப்பு வெள்ளைனா ஒரு கூடுதல் அட்ராக்‌ஷன் இருக்கத்தானே செய்யும்... அதுபோலத்தான்!

நான் ஓவியங்கள் வரையும் போது கூட, பீரியட் காலகட்டங்களை வரையறதுக்குத்தான் எப்பவும் தோணும். 'சார்பட்டா' ஸ்கிரிப்ட் படிக்கும் போதே, ஒரு வின்டேஜ் லுக் தோணிடுச்சு.

ராமலிங்கம்
ராமலிங்கம்

படத்துக்காக மின்ட் சாலை செட் போட்டோம். ரேவ் ஏரியா, தங்கசாலைனு பலதுகள்லயும் 1970-கள்ல இருந்த எந்த விஷயமும் இப்ப இல்ல. மணிக்கூண்டு மட்டும்தான் இருக்கு. கூகுள்ல தேடினாலும் ரெஃபரன்ஸ் இல்ல. அதனால, ரீ-கிரியேட் பண்றதுல பெரிய சவால் இருந்துச்சு. சின்னச் சின்ன ரோட்டோர கடைகள், ரிக்‌ஷா ஓட்றவர், பூக்கடைக்காரங்கனு அந்த டைம்ல உள்ள பெரியவங்ககிட்ட பேசினோம். அங்கே தாஸ் ஸ்டூடியோ முக்கியமான ஸ்பாட். அந்த ஸ்டூடியோ எப்படி இருந்துச்சுனு கண்டுபிடிச்சு கொண்டு வந்தோம்.

இன்னொரு விஷயம், பீரியட் படங்கள்ல செட் சூப்பரா இருக்குனு சொன்னா, அது பெரிய கிரெடிட்தான். விருது கிடைச்ச மாதிரி. ஆனா, சமகால கதைகள் உள்ள படங்கள்ல செட் சூப்பர்னு சொன்னா அது மைனஸ். ஏன்னா, பீரியட் ஃபிலிம்ல அந்த இடம் கிடையாது. செட்டுதான் போட்டிருக்காங்கனு தெரியும். அந்த செட் கதையோட இயல்பு தன்மைக்கு நியாயம் சேர்க்கும் போது, 'சூப்பரா அமைஞ்சிருக்கு'னுதான் சொல்வாங்க. 'கபாலி'யில் தாய்லாந்து, மலேஷியாவை ரீ-கிரியேட் பண்ணினோம். அதை யாருமே பேசல. எனக்கு அதுல கொஞ்சம் வருத்தம் வந்து, பத்திரிகையாளர் சந்திப்புல 'பெரிய ஆர்ட் டைரக்டர்கள் பண்ணினா தான் பேசுவீங்களா?'னு ஆதங்கத்துல கேட்டுட்டேன். 'அது செட்டு மாதிரி தெரியலை. அந்தந்த நாடுகள்ல போய் ஷூட் செஞ்சதுனு நினைச்சோம்'னு அவங்க சொல்லும்போதுதான் காம்ப்ளிமென்ட்டா உணர்ந்தேன்.

அதேப்போல 'சார்பட்டா' காலகட்ட ஆட்கள் அவங்க வாழ்ந்து புழங்கின இடத்தை மறுபடியும் அடையாளம் கண்டுபிடிச்சா, அதையே பெரிய வெற்றியா பார்க்குறேன். பாக்ஸிங்கிற்கும் எனக்கும் தொடர்புகள் நிறைய இருக்கு. சின்ன வயசுல பாக்ஸிங் கத்திருக்கேன். 'மெட்ராஸ்' படத்துல சுவர் இருந்த ஏரியா நான் தங்கியிருந்த இடம்தான். அங்கே வீட்டுக்கு ஒரு பாக்ஸர் இருப்பாங்க. ஆனா, 'சார்பட்டா' பாக்ஸிங் ஃபார்முலாக்கள் வேற. பார்த்திபன்னு ஒரு பாக்ஸர் நிறைய தரவுகள் கொடுத்தார். பாக்ஸிங் மேடை எப்படி இருக்கணும்னு சொன்னவர் அவர்தான்.

சார்பட்டா
சார்பட்டா

சின்ன வயசுல இருந்தே நான் நல்லா வரைவேன். ஆனா என்னை யாரும் என்கரேஜ் பண்ணி பாராட்டி, ஒரு பென்சில்கூட பரிசா கொடுத்ததில்ல. நானும் என் ஃப்ரெண்டும் ஒரு போட்டிக்குப் போயிருந்தோம். நண்பனுக்கு வரைய தெரியாது. அதனால, அவனுக்காக ஒரு பாரதியாரும், எனக்கு நேரு கையில குழந்தையை தூக்கி வச்சிருக்கற மாதிரி ஒரு ஓவியமும் வரைஞ்சேன். ஆனா, முதல் பரிசு பாரதியாருக்கு கொடுத்தாங்க. என் உழைப்பை பாராட்டி இதுவரைக்கும் விருதுகளோ அங்கீகாரமோ கிடைச்சதில்ல.

ஆனா, ரசிகர்கள், மீடியாக்கள் என்னை கொண்டாடும் போது, விருது கிடைக்காத கவலையெல்லாம் பறந்திடுது. 'சார்பட்டா' படத்துல செட் எல்லாம் சூப்பர்னு எல்லோரும் சொல்லும்போதே பல விருதுகள் கிடைச்ச ஃபீல் வருது!'' என முகம் மலர சிரிக்கிறார் கலை இயக்குநர் ராமலிங்கம்.

அடுத்த கட்டுரைக்கு