Published:Updated:

``சீரியல் ஷூட்டிங்; இடைவிடாது அழுத குழந்தை; வேதனைப்பட்ட பெற்றோர்!" - நடந்தது இதுதான்!

குழந்தை ( சித்திரிப்புப் படம் )

நடிக்க வைக்கிறேன் என ஒரு வயது குழந்தையை செயற்கையாக அழ வைக்கிறதுங்கிறது அந்தக் குழந்தையை சித்திரவதை செய்வது, இது குழந்தை மீதான வன்முறை தான்.

``சீரியல் ஷூட்டிங்; இடைவிடாது அழுத குழந்தை; வேதனைப்பட்ட பெற்றோர்!" - நடந்தது இதுதான்!

நடிக்க வைக்கிறேன் என ஒரு வயது குழந்தையை செயற்கையாக அழ வைக்கிறதுங்கிறது அந்தக் குழந்தையை சித்திரவதை செய்வது, இது குழந்தை மீதான வன்முறை தான்.

Published:Updated:
குழந்தை ( சித்திரிப்புப் படம் )

சினிமாவை விட சீரியலுக்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு இருக்கிறது. அன்றாடம் வீட்டில் சீரியல் பார்ப்பதை பலர் பொழுது போக்காகவே வைத்திருக்கிறார்கள். இப்படியான தொடர்கள் எளிதாக மக்களை சென்றடைவதால் அதற்கென சில நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்றைய சீரியல்களில் குழந்தைகளைப் பயன்படுத்துவது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. சின்னத்திரை மட்டுமன்றி சினிமாக்களிலும், யூடியூப் தளங்களும் குழந்தைகளை நடிப்பதற்காகப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது.

குழந்தை
குழந்தை
சித்திரிப்புப் படம்

பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அந்த ஷாட்டில் பத்து மாதக் குழந்தை அழுது கொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் எதிர்பக்கமாக நின்று அவளின் தந்தையும், தாயும் அவள் அழுகையை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். கட் சொல்லும் வரையில் குழந்தை அழும். மறுபடி டேக் சொன்னதும் அழத் தொடங்கிவிடும். இப்படியே கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேல் குழந்தை அழுது கொண்டிருந்தது. அழுது, அழுது சோர்ந்து போய் குழந்தை தூங்கி விட்டது. அந்த ஃப்ரேமில் குழந்தை அழ வேண்டும் என்பதற்காக குழந்தையை எழுப்பினார்கள். அது மறுபடியும் அதே சத்தத்துடன் அழத் தொடங்கியது. இறுக்கமான மனநிலையில் நின்று கொண்டிருந்த அந்தக் குழந்தையின் தாய், தகப்பனிடம் பேசினேன்.

இப்ப குழந்தைக்கு விவரம் தெரிஞ்சிட்டதால யார்கிட்டேயும் போக மாட்டேன்றா.. இப்படித்தான் அழுதுட்டே இருக்கா.. நானும் போதும்னு சொல்லி பார்த்துட்டேன். இன்னையுடன் முடிஞ்சிடும்னு சொல்லியிருக்காங்க.. பார்க்கலாம்! குழந்தை அழுது, அழுது கண்ணெல்லாம் கணத்து போச்சு.. மூக்கும் ஒழுக ஆரம்பிச்சிடுச்சு.. அவ ஏங்கிட்டே இருக்கிறதனால தண்ணீர் கூட குடிக்க கொடுக்க முடியலை!' என்றனர். 

குழந்தை
குழந்தை

அந்தக் குழந்தையோட அழுகையை அங்க யாரும் பொருட்படுத்தலைங்கிறதுதான் மனதை கணக்கச் செய்யும் உண்மை. தொடர்ச்சியா இது மாதிரியான சம்பவங்களை சீரியலில் பார்க்க முடியுது. இத்தனை வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை மட்டும்தான் சீரியலில் பயன்படுத்தணும்னு எந்த வரையறையும் இல்லாததும் இதற்கு ஒரு காரணம்! அழும் குழந்தைக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டா அந்தப் பொறுப்பை யார் ஏத்துப்பாங்க? முன்னணி நடிகர்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டா அது சுலபமா வெளியில் தெரிஞ்சிடும். இந்த மாதிரியானவங்களுக்கு ஏதாவது பிரச்னை வந்தா கூட அவங்க யார்கிட்டேயும் சொல்ல முடியாது. 

பெரிய, பெரிய லைட்ஸ்களை பயன்படுத்துறது குழந்தைகளை நிச்சயம் பாதிக்கும்னு பலருக்கும் தெரிஞ்சிருந்தாலும் நீ காசு வாங்கிட்டு தானே குழந்தையை நடிக்க வைக்கிற.. அப்ப நான் சொல்றதை கேட்டுத்தான் ஆகணும் என்கிற மனப்பான்மையுடன் சீரியல் புரொடக்‌ஷன் தரப்பிலும் நடந்து கொள்வதாக சொல்கிறார்கள் குழந்தைகளின் பெற்றோர்கள்! 

விவரம் தெரிந்த குழந்தையை நடிக்க வைப்பது ஒருபுறம் என்றால் ரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு என்ன தெரியும்? ஒரு நாள் முழுக்க வெயிலிலோ, ஒரு அறையிலோ அத்தனை வெளிச்சத்துக்கு மத்தியில் இருக்க அந்தக் குழந்தை சம்மதம் கொடுத்ததா என்ன? பெற்றோர்களும் பணத்திற்காகவும், புகழுக்காகவும் தங்களுடைய குழந்தைகளை தொடரில் நடிக்க வைக்க விரும்புகிறார்கள். 

இதுகுறித்து குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயனிடம் பேசினோம்.

தேவநேயன்
தேவநேயன்

``எந்தத் துறையானாலும் சரி குழந்தைகளை வழிநடத்துவது அப்படிங்கிறதுக்கான முதன்மையான நெறிமுறைங்கிறது குழந்தைகள் சிறந்த நலனைப் போற்றுதல், பாராட்டுதல், பாதுகாத்தல் என்கிற இது மூன்றும்தான். குழந்தைகளுடைய சிறந்த நலன் அப்படிங்கிறது குழந்தைகள் விரும்புவதல்ல. ஒரு குழந்தை 24 மணி நேரமும் ஐஸ் கிரீம் சாப்பிட விரும்புதுங்கிறதுக்காக நாம ஐஸ் கிரீம் கொடுக்கக் கூடாது. விரும்புவது என்பது வேறு. சிறந்த நலன் என்ன என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்வது என்பது வேறு!

ஒரு வயதில் இருக்கிற ஒரு குழந்தையை செயற்கையாக அழ வைக்கிறதுங்கிறது அந்தக் குழந்தையை சித்திரவதை செய்வது. இது குழந்தை மீதான வன்முறை தான்! குழந்தைகள்மீது நடக்கக்கூடிய வன்முறையை நாம கலை வடிவமாக ஏற்றுக் கொள்ளமுடியாது. இது குழந்தைகள் மீது நடக்கக் கூடிய உடல் ரீதியான வன்முறை. இதனால பயன் பெறப்போவது அந்தக் குழந்தை அல்ல. நடிக்கிறதனால அந்தக் குழந்தையுடைய சிறந்த நலன் பாதுகாக்கப்படுதான்னா அதுவும் இல்ல. துன்புறுத்தலின் மூலம் ஒருத்தங்க மகிழ்ச்சி அடையுறாங்கன்னா அது வன்முறை மனநிலை தான்! 

சினிமாவில் நடிக்கிறதுங்கிறது பெருசு தானே? அது ஒரு வாய்ப்பு தானே? என்பதெல்லாம் ரெண்டாவது பட்சம். குழந்தையை துன்புறுத்தி பிரபலமடையச் செய்வது என்பது சரியா? குழந்தைகளை போற்றுவது, பாராட்டுவது என்பது வேறு! குழந்தைகளை சுரண்டுவது என்பது வேறு! இது குழந்தைகளை சுரண்டுறது! 

ஒரு குழந்தைகளுக்கான இயல்பான தன்மையை சுரண்டுறது என்பது அந்தக் குழந்தைக்கான உரிமை மீறல்தான்! ரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைங்க மகிழ்ச்சியா இருக்கணும், நிறைய தண்ணீர் குடிக்கணும், நல்லா தூங்கணும், ஆரோக்கியமாக இருக்கணும். அதுதான் அந்தப் பருவம். 

பாதிக்கப்படும் குழந்தை
பாதிக்கப்படும் குழந்தை

ரெண்டு வயசுல ஒரு குழந்தைக்கு 1330 திருக்குறளையும் மனப்பாடம் பண்ண வச்சு சொல்ல வைக்கிறதையும் நான் வன்முறைன்னு தான் சொல்லுவேன். குழந்தை நட்சத்திரங்களாக இருக்கிறவங்க தான் பெரிய நட்சத்திரங்களாக இருக்காங்க அப்படிங்கிற பெற்றோர்களுக்கான பொதுபுத்தி. எத்தனை நட்சத்திரங்கள் குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பிரபலமாகியிருக்காங்க? ஒன்னு, ரெண்டு பேருக்காக ஆயிரக் கணக்கான குழந்தைகள் பாதிக்கப்படணுமா? 

ஒரு படைப்பாளி குழந்தையை மையப்படுத்தி எடுக்கிறாங்களா அல்லது பெண்களை மையப்படுத்தி எடுக்கிறாங்களா அதுதான் பிரச்னை. குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கிறதுதான் இங்க மிகப்பெரிய பிரச்னை. குழந்தை தானேங்கிற மனநிலையும் இதுக்கு ஒரு காரணம். குழந்தைகளுக்கென ஒரு மனசு இருக்கு, அவர்களுக்கென விருப்பம் இருக்கு அப்படிங்கிற எண்ணமில்லாமல் குழந்தை தானேங்கிற பார்வை ரொம்ப கண்டிக்கத்தக்கது.

ரியாலிட்டி ஷோக்களாக இருக்கலாம், சின்னத்திரை வெள்ளித்திரையாக இருக்கலாம், சோசியல் மீடியாவாக இருக்கலாம் எங்கே இது மாதிரியான வன்முறைகள் நடந்தாலும் அது நிச்சயம் கண்டிக்கத்தக்க ஒன்று! ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகளை பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை National Commission for Protection of Child Rights போட்டிருக்காங்க. ஆனா, சினிமாவிலோ சீரியல்களிலோ சோசியல் மீடியாக்களிலோ எந்த சட்டமும் இன்னமும் இல்லை. ஆனா, அதற்கான சைல்டு ரைட்ஸ் கண்டிப்பாக போடணும்!' என்றார். 

இதுகுறித்து சீரியல் இயக்குநர் ஒருவரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர் கூறியதாவது, ``சீரியல் ஷூட்டிங்கில் குழந்தைகளைப் பயன்படுத்தறது முன்னாடில்லாம் கிடையாது. ரொம்பச் சின்னக் குழந்தைகளைக் காட்ட வேண்டி வந்தா குழந்தைகளுக்குப் பதிலா பொம்மையை வச்சு க்ளோஸ் அப்ல காட்டாமப் பார்த்துக்கிடுவோம். ஏன்னா, அதுல நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்துச்சு. குழந்தை அழுதுட்டே இருந்தா ஷூட்டிங் தடைபடும். அம்மா முகம் தவிர மத்தவங்க தூக்குறப்ப குழந்தைகள் அழத்தான் செய்யும். தவிர, ரொம்பச் சின்னக் குழந்தைகளை ஆளாளுக்குத் தூக்கிட்டு இருக்கிறப்ப குழந்தையின் உடல் நலன் பாதிக்கப் படலாம். இந்த மாதிரிச் சிக்கல்களால்தான் அதைத் தவிர்ப்போம்.
ஆனா சமீபமா சில இயக்குநர்கள் குழந்தைகளைப் பயன்படுத்தவும் செய்றாங்க. குழந்தையுடன் அம்மாவையும் ஷூட்டிங் ஸ்பாட்டுலயே இருக்க அனுமதிக்கறதாச் சொல்றாங்க. நிஜக் குழந்தையைக் காட்டுறப்ப கூடுதல் யதார்த்தத்துடன் இருக்கும்னு நினைக்கிறாங்க இவங்க. ஆனா பெரும்பாலான இயக்குநர்கள் குழந்தைகளைப் பயன்படுத்தறதுல உள்ள சிக்கல்களைப் புரிஞ்சு வச்சிருக்கிறதால கூடுமானவரை தவிர்க்கவே நினைக்கிறாங்க.'' என்கிறார் பிரைம் டைம் ஹிட் சீரியல் தந்த அந்த இயக்குநர்.