Published:Updated:

Enjoy Enjaami: சர்ச்சை; அறிக்கை; அறிவு, சந்தோஷ் நாராயணன், தீ பதிவுகளில் சொல்லியிருப்பது இதைதான்!

எஞ்சாய் எஞ்சாமி | Enjoy Enjaami

Enjoy Enjaami பாடல் தொடர்பாக தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் அமர்ந்து உரையாடுவதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.

Enjoy Enjaami: சர்ச்சை; அறிக்கை; அறிவு, சந்தோஷ் நாராயணன், தீ பதிவுகளில் சொல்லியிருப்பது இதைதான்!

Enjoy Enjaami பாடல் தொடர்பாக தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் அமர்ந்து உரையாடுவதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.

Published:Updated:
எஞ்சாய் எஞ்சாமி | Enjoy Enjaami
`எஞ்சாயி எஞ்சாமி' பாடல் தமிழில் வெளியான தனியிசைப் பாடல்களில் உலகமெங்கும் கவனம் பெற்ற பாடல். இந்த பாடல் வெளியாகி பிரபலமடைந்த சில நாட்களிலேயே பத்திரிகை ஒன்றின் அட்டைப்படம், பாடலாசிரியர் மற்றும் பாடகர் அறிவின் பெயர் குறிப்பிடாதது என சர்ச்சைகள் எழுந்தன. அதற்கு பாடலில் சம்பந்தப்பட்ட அறிவு, தீ, சந்தோஷ் நாராயணன் என யாரும் விளக்கம் கொடுக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மேடையில் `எஞ்சாயி எஞ்சாமி' பாடலை பாடகி தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் இருவரும் இணைந்து பாடினர். பாடகர் அறிவு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இது மேலும் சர்ச்சைகளை கிளப்பின. இந்த தொடர் சரச்சைகள் குறித்து முதல்முறையாக இன்று பாடகர் அறிவு ஒரு பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒரு விளக்கத்தை அளித்திருந்தார். தற்போது அந்த பாடலைப் பாடிய பாடகி தீ ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அளித்த விளக்கம்

"வாங்கோ வாங்கோ ஒண்ணாகி" - அறிவுக்கு பதிலளித்த சந்தோஷ் நாராயணன்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது பாடகி தீ கொடுத்துள்ள விளக்கம்:

வணக்கம்! எல்லோரும், ஆரோக்கியமாக நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். இசைப் பயணத்தில் தொடர்ச்சியாக நீங்கள் எனக்களித்துவரும் அன்பிற்கும், ஆதரவிற்கும் என்றைக்குமான நன்றிகள். நீங்கள் எனக்கு விவரிக்க முடியாத அளவு மகிழ்ச்சியைத் தருகிறீர்கள், உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றியுடன் இருக்கிறேன். நான் எஞ்சாயி எஞ்சாமி குறித்து பேச விரும்புகிறேன்.

எஞ்சாயி எஞ்சாமி - நம் ஒருவருக்கொருவர் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையை நெருக்கமாகக் கொண்டுவரும் உன்னதமான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. அங்கீகரிக்க, கொண்டாட மற்றும் பாதுகாக்க இயற்கையோடு ஒன்றி பஞ்சபூதங்களை (ஐந்து கூறுகளை) வழிபட்டு, மனிதப் பிரிவினைகளால் (சாதி, மதம், முதலியன) வந்த இன்னல்களின்றி வாழ்ந்த பழங்காலத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றியதே பாடலின் மையக்கரு. அவர்கள் நம் வேர்கள். இந்தப் பாடல் அவர்களைப் ஒரு நினைவூட்டல். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது, பூமியையும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதென்பது நமது கூட்டுப் பொறுப்பு. இந்தப் பாடல் நம் வேர்களைக் கண்டடைவதற்கும் அவற்றைத் தழுவுவதற்கும் வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன். காதல், கஷ்டங்கள், துக்கம், காயங்கள், பயம் மற்றும் ஈகோ ஆகியவற்றின் மூலம் நாம் ஒரு பழங்கால விதையின் இனிமையான பழங்கள் என்பதை நினைவில் கொள்கிறோம். நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்துதான் வந்துள்ளோம்.

நான் சொல்வது, செய்வது மற்றும் எனது சமூக ஊடகங்களில் நான் பகிரும் விஷயங்கள் ஆகியவற்றின் மீது எனக்கு முழுக் கட்டுப்பாடு உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் எழுத்தாளர்/பாடகர் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பாளர்/இசையமைப்பாளர் என்ற முறையில் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியிருக்கிறேன். எனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் நான் அவர்கள் இருவரைப் பற்றியும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடன் பேசியிருக்கிறேன். என்ஜாயி எஞ்சாமியில் இருவரின் முக்கியத்துவத்தையும் எந்தக் கட்டத்திலும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. எனது ஒவ்வொரு படிநிலையிலும், எனக்கு கிடைத்த ஒவ்வொரு மேடையிலும் இருவரையும் கொண்டாட விரும்பினேன். அவர்களின் பங்களிப்பை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன், ஒவ்வொரு நிலையிலும் அதைச் செய்தும் வருகிறேன். எங்கள் பணி குறித்து மற்றவர்களால் பகிரப்பட்ட விளம்பரப்படுத்தப்பட்டவற்றில் எனக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை. இந்த பாடலை உருவாக்க இயக்குனர் மணிகண்டன் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளார். அவருடைய `கடைசி விவசாயி' திரைப்படம் எஞ்சாயி எஞ்சாமி -க்கு உந்து சக்தியாக இருந்தது. இதை நான் எப்போதும் ஒவ்வொரு நிலையிலும் குறிப்பிட்டுள்ளேன்.

ரோலிங் ஸ்டோன் கவர் ஸ்டோரி
ரோலிங் ஸ்டோன் கவர் ஸ்டோரி

பாடல் வரிகளும், உருவாக்கமும் எங்கள் அணியால் பெரிதாக விவாதிக்கப்பட்டு செழுமைப்படுத்தப்பட்டது. பாடல் வெளியாகும் வரை நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் இருந்தோம். வள்ளியம்மாள் பாட்டி பாடல் வீடியோவில் இடம்பெற்றிருப்பது நாம் தாய் வழி சமூகம் என்பதைக் குறிக்கும் அடையாளமாக இருந்தது. எங்கள் பாடலுக்குப் பின்னால் உள்ள அர்த்தங்கள் மற்றும் கதைகள் பெரும்பாலானவற்றை, வெளியீட்டிற்குப் பிறகு அறிவின் ஒவ்வொரு நேர்காணல் மூலமாகவும் நான் கற்றுக்கொண்டேன்.

அறிவு சொல்வது மிகவும் முக்கியமானது மற்றும் முதன்மையானது என நான் நம்பியதால், அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்றே நான் விரும்பினேன். எங்கள் பாடலின் அனைத்து வருமானம், உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்படுகின்றன. இந்த பாடல் எட்டிய, எட்டப்போகும் உயரங்களை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனுபவிக்கவே நான் விரும்பினேன். ஒரு வாய்ப்பு தவறாக, சமத்துவமின்மையாக இருந்தால் ​​நான் அதில் ஒரு பகுதியாக இருக்கமாட்டேன்.

தீ மற்றும் அறிவு எஞ்சாயி எஞ்சாமி பாடலில்
தீ மற்றும் அறிவு எஞ்சாயி எஞ்சாமி பாடலில்

கடந்த ஆண்டு ரோலிங் ஸ்டோன் இந்தியா அட்டைப்படத்தில் நானும், ஷான் இடம் பெற்றிருந்தோம். அது நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கவுள்ள ஆல்பத்துக்கான அட்டைப்படம். அந்த ஆல்பம்தான் அந்த அட்டைப்படத்துக்காக முக்கிய காரணம். அது என்ஜாயி எஞ்சாமி அல்லது நீயே ஒலி பாடல் பற்றியது அல்ல. நாங்கள் பகிர்ந்த அந்த அட்டையிலும் பாடல் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அந்த குறிப்பிட்ட கவர் ஸ்டோரி, வரவிருக்கும் எங்கள் ஆல்பங்கள் மற்றும் majja பற்றிய ஒரு தளமாக இருந்தது. அறிவு, சந்தோஷ் நாராயணன் மற்றும் அனைத்து majja கலைஞர்கள் பற்றிய கவர் ஸ்டோரிகளையும் கட்டுரைகளையும் ரோலிங்ஸ்டோன் வெளியிட இருக்கிறது என்று எனக்குச் சொல்லப்பட்டது. இது எங்கள் அட்டைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பு ரோலிங்ஸ்டோனால் ஒரு ட்வீட்டாக அறிவிக்கப்பட்டது, அதைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன்.

Spotify போன்ற அதிகாரப்பூர்வ தளங்களில் Enjoy Enjaami DJ Snake ரீமிக்ஸில் அறிவுக்கான கிரெடிட் கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் மூவருக்கும் அதன் பின்னுள்ள மார்க்கெட்டிங் பற்றிய கட்டுப்பாடு இல்லை.

அறிவையும் என்னையும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினர், ஆனால் அறிவு அமரிக்காவில் இருந்த காரணத்தால், அவரால் பங்கேற்க முடியாததால் அவர் குரலை எங்கள் நிகழ்ச்சியில் பயன்படுத்திக் கொண்டோம். அறிவின் குரலுக்காகவும், பாடலில் அவரின் பங்களிப்புக்காகவும் நிகழ்வில் அவர் பேசப்பட்டார்.

Chess Olympiad நிகழ்ச்சியில் தீ, கிடாக்குழி மாரியம்மாள்
Chess Olympiad நிகழ்ச்சியில் தீ, கிடாக்குழி மாரியம்மாள்

ஒரு பக்கச்சார்பற்ற மத்தியஸ்தருடன், ஊடகங்களுடனோ அல்லது இல்லாமலோ பகிரங்கமாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் அமர்ந்து உரையாடுவதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.

பாடலை உருவாக்கியதற்காக உங்களுக்கும் சந்தோஷ் நாராயணன், அறிவு, மஜ்ஜா மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் நான் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி.

இந்த பூமியின் மீதும் உயிர்கள் மீதும், கொண்ட அன்பு மற்றும் மரியாதையின் பொருட்டு நண்பர்களான சக கலைஞர்களால் எஞ்சாயி எஞ்சாமி பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை எப்போதும் வெல்லும் - தீ