Published:Updated:

16 ஆண்டுகளுக்குப் பிறகும் விஜய்-யின் `கில்லி' ஏன் டிரெண்டிங்கில் இருக்கிறது தெரியுமா?!

கில்லி
கில்லி

வேர்ல்டு டிரெண்டிங் எல்லாம் சாதாரண மேட்டர் என்றாலும், நேற்று கில்லி குறித்து விஜய் ரசிகர்களைத் தாண்டி பலதரப்பினரும் இணையத்தில் சிலாகித்திருந்தனர். இந்த சிலாகிப்புகளுக்குப் பின்னால் ஒரு நல்ல கமர்ஷியல் படத்துக்கான ஏக்கம் வெகுவாகத் தென்பட்டது.

'பேட்லி மிஸ்ஸிங் கில்லி விஜய்', 'பெஸ்ட் கமர்ஷியல் ஃபில்ம் எவர்', 'ஆல் டைம் ஃபேவரைட்' என நேற்று சன் டி.வி-யில் கில்லி ஒளிபரப்பானபோது, ட்விட்டர்வாசிகள் பயங்கர உற்சாகத்தோடு ட்வீட் இட்டுக்கொண்டிருந்தனர். #கில்லி இந்தியா முழுவதும் டிரெண்டிங். அஜித், விஜய் ரசிகர்களுக்கு இந்தியா, வேர்ல்டு டிரெண்டிங் எல்லாம் சாதாரண மேட்டர் என்றாலும், நேற்று கில்லி குறித்து விஜய் ரசிகர்களைத் தாண்டி பல தரப்பினரும் இணையத்தில் சிலாகித்திருந்தனர். இந்த சிலாகிப்புகளுக்குப் பின்னால் ஒரு நல்ல கமர்ஷியல் படத்துக்கான ஏக்கம் வெகுவாகத் தென்பட்டது.

கில்லி
கில்லி

ஒரு மிகப்பெரிய சாட்டிலைட் சேனலில் ஞாயிற்றுக்கிழமை 6:30 மணி ப்ரைம் டைம் ஸ்லாட். அதுவும் இந்த ஊரடங்கு நாள்களில் எல்லோரும் நிச்சயம் குடும்பத்தோடு டி.வி முன் அமர்ந்திருப்பர். அந்த நேரத்தில், சேனல் தரப்பினர் புதுப்படங்களைப் போட்டு வியாபாரரீதியாகத் தங்களுக்கான லாபத்தையும், டிஆர்பி-யையும் ஏற்றிக்கொள்வார்கள். இப்படியான முக்கியமான நேரத்தில், ரிலீஸாகி 16 வருடங்கள் கழித்து ஒரு படத்தை ஞாயிற்றுக்கிழமை ஆறரை மணி ப்ரைம் ஸ்லாட்டில் போடுகிறார்கள் என்றால், இன்றைக்கும் மக்களிடம் அந்தப் படத்துக்கு ஒரு கிரேஸும் எதிர்பார்ப்பும் இருக்கிறதென்று புரிந்துகொள்ளலாம். இது கில்லிக்கு மட்டும் இருந்தால், நாம் அந்தப் படத்தைப் பற்றி மட்டும் பேசலாம். ஆனால், அடுத்த வாரம் இதே ஸ்லாட்டில் திருப்பாச்சி ஒளிப்பரப்பாக இருக்கிறது. இதுவும் ஒரு அக்மார்க் விஜய் படம். நாம் இப்போது பேசவேண்டியது, இன்றைக்கும் மார்க்கெட் இருக்கும் அந்தக் காலத்து விஜய் படங்கள் குறித்தும் விஜய் குறித்தும்தான்.

காதல் படங்களில் களமாடிக்கொண்டிருந்த விஜய், 'திருமலை' மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுத்த பிறகுதான், விஜய்க்குள் இருக்கும் அந்த முழுமையான என்டர்டெய்னர் வெளிவரத் தொடங்கினார். டான்ஸ்,பாட்டு,காமெடி, சென்ட்டிமென்ட், மாஸ் பன்ச்சுகள் என விஜய் ஒரு முழுமையான கமர்ஷியல் பேக்கேஜாக இங்கிருந்துதான் மாறினார். கில்லி எல்லாவற்றுக்கும் உச்சம். "எப்டி இருந்தான்!?" - "நெருப்பு மாதிரி இருந்தான்" என பாண்டு பேசும் வசனத்துக்கேற்ப, கமர்ஷியல் நெருப்பாக சூடேற்றினார். கில்லியின் வசனங்களுக்காகவே பரதனுக்கு விஜய் இன்னொரு வாய்ப்புகூட கொடுக்கலாம். அந்த அளவுக்கு விஜய்க்கென்றே பரதனின் பேனா ஓவர் டியூட்டி பார்த்திருக்கும். அதன்பின் வெளியான திருப்பாச்சி', 'சிவகாசி', 'சச்சின்' ஆகிய படங்கள் மூலம், தான் எல்லா வயதினரும் ரசித்துப் பார்க்கக்கூடிய நடிகன் என்ற அந்தஸ்த்தை எட்டினார்.

விஜய் தேர்ந்தெடுத்து நடித்த இந்தப் படங்கள் எதுவும் எந்த விதத்திலும் தமிழ் சினிமாவுக்குப் புதிதானவை கிடையாது. இருப்பினும், வெகுஜனம் விரும்பும் ஒரு கமர்ஷியல் மீட்டரை கச்சிதமாக உணர்ந்து, கமர்ஷியல் கதைகளைத் தேர்வு செய்திருப்பார் விஜய்.

கில்லி
கில்லி

பேட்லி மிஸ்ஸிங் கில்லி விஜய் என்கிறார்கள். ஆனால், விஜய் இப்போதும் முழுக்க முழுக்க கமர்ஷியல் படங்களில்தானே நடித்துக்கொண்டிருக்கிறார்? அப்படியென்றால் தற்போதைய விஜய்-யிடம், கில்லி விஜய்-யிடம் இருந்த ஏதோ ஒன்று மட்டும் மிஸ்ஸிங்.

'போக்கிரி'க்குப் பிறகு அவர் நடித்த 'குருவி', 'வேட்டைக்காரன்', 'சுறா' போன்ற படங்களும் கமர்ஷியல் படங்கள்தான் என்றாலும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாதவை. அது, பார்த்துப் பழக்கப்பட்ட வழக்கமான விஜய் படங்கள் என்பதால் மட்டுமில்லை. 'கில்லி'யில் பிடித்த அந்த கமர்ஷியல் டிராக்கை தனது எதிர்காலத் திட்டத்துக்காக 'குருவி' வகையறா படங்களில் தடம் மாற்றிக்கொண்டார். இந்தப் படங்களில் விஜய்யை மக்கள் தலைவனாகக் காண்பித்து, தனிமனித துதிப்பாடல்களை கிடைக்கிற கேப்பிலெல்லாம் நிரப்பியிருப்பார்கள். 'கில்லி'யில் உருவான அந்த என்டர்டெய்னிங் ஆல்ரவுண்டர் விஜய் மறையத் தொடங்கிய இடம் இதுதான். ஃப்ளாப்களிலிருந்து மீண்டு வந்து மீண்டும் விஜய்க்கு பழைய கில்லி ஃபார்மை ஓரளவுக்கு கொடுத்தது 'வேலாயுதம்'. 'துப்பாக்கி'க்குப் பிறகு கதைத்தேர்வுகளை முழுமையாக மாற்றி, தன்னுடைய படங்கள் ஏதோ ஒரு சோஷியல் மெசேஜை பேசியே ஆக வேண்டும் என்ற எழுதப்படாத விதிக்குள் முடங்கிக்கொண்டார் விஜய்.

விஜய்-யின் புதிய ஃபார்முலாவில் 'மெர்சல்', 'சர்கார்', 'பிகில்' எல்லாமே ஹிட் படங்கள்தான் என்றாலும்,

2004-ல் ரிலீஸான கில்லி-யை 16 வருடங்கள் கழித்து இன்றும் டி.வி-யில் விளம்பரங்களோடு சேர்த்து 4 மணி நேரம் ஆடாமல் அசையாமல் பார்க்க முடிகிறது. ஆனால், விஜய்-யின் சமீபத்திய படங்களான சர்காரையும் பிகிலையும் இதே மாதிரி 2036ல் உட்கார்ந்து பார்க்க முடியுமா என்பதற்கு, பதில் எல்லோருக்குமே தெரியும். இந்த வேறுபாட்டுக்கு இடைப்பட்ட இடைவெளிதான் உச்சபட்ச கமர்ஷியல் நாயகன் விஜய், சோஷியல் மெசேஜ் படங்களிலும் அரசியல் படங்களிலும் சிக்கிக்கொண்ட இடம்.

விஜய்-யின் அந்த 'கில்லி' பீரியட் படங்களில் காமெடி சரவெடிகளுக்கும் பஞ்சமிருக்காது. தன்னுடன் கூட்டணிக்கு வடிவேலு இருந்தால் ஒரு மாதிரியான காமெடி, வடிவேலு இல்லாமல் இருந்தால் விஜய்யே நேரடியாக காமெடியில் ஸ்கோர் செய்வது என விஜய்-யின் அந்தக்கால கமர்ஷியல் படங்களில் காமெடிக்கு முக்கியப் பங்கிருக்கும். சமீபத்திய காலத்தில் வேலாயுதத்திற்குப் பிறகு விஜய் நடித்த எந்தப் படத்திலும் காமெடிக்கு பெரிய அளவில் ஸ்கோப் இருக்காது. 'ஃப்ரெண்ட்ஸ்', 'சச்சின்', 'வசீகரா' படங்களில் விஜய் வடிவேலு காமெடிகள்தான் இன்னும் நகைச்சுவை சேனல்களில் நிரம்பியிருக்கின்றன.

கில்லி
கில்லி

கில்லி டைப்பில் விஜய்க்கே தனி காமெடி ட்ராக்குகளை எழுதலாம். ஆனால், கடந்த 10 வருடங்களில் எந்த இயக்குநரும் விஜய்க்கு அப்படி எழுதவே இல்லை.

'போக்கிரி', 'சச்சின்', 'வசீகரா' போன்ற படங்களில் வரும் காதல் காட்சிகள் அவ்வளவு நேச்சுரலாக ஜிவ்வென்று இருக்கும். சமீபத்திய படங்களில் விஜய் ஓங்கி ஓங்கிப் பேசும் வசனங்களை ஓரமாக நின்று வேடிக்கைபார்க்கும் வகையில்தான் விஜய் பட ஹீரோயின் கேரக்டர்கள் வடிவமைக்கப்படுகின்றன.

அதே மாதிரிதான் கபிலன் விஜய்க்கு எழுதிய ஓப்பனிங் பாடல்கள் எல்லாம் இன்றும் திருவிழா கொண்டாட்டமாக பட்டிதொட்டியெங்கும் ஸ்பீக்கர்களை அதிரச்செய்கின்றன. விஜய் -யின் சமீபத்திய ஓப்பனிங் பாடல்கள், இணையவாசிகளின் டிரெண்டுக்கு மட்டுமே ஏற்றவாறு இருப்பதால், பழைய ஓப்பனிங் பாடல்களிலிருந்த ஒரு வசீகரம் இப்போது மிஸ்ஸிங்.

லவ், ஆக்ஷ்ன், டான்ஸ், பாட்டு, நகைச்சுவை என ஆல் ஏரியாவிலும் கில்லியான ஒரு கமர்ஷியல் நடிகர், இவற்றையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு சோஷியல் மெசேஜ் படங்களில் மட்டும் நடித்துக்கொண்டிருப்பது சோகம்தான்.

மேரிகோல்டு பிஸ்கட்டில் எத்தனை ஓட்டை... பேன் சீப்பில் எத்தனை பற்கள் என எண்ணிக்கொண்டு போர் அடித்துப் போய் அதீத அயர்ச்சியில் இருப்பவர்களையும் கவர்ந்திழுத்து ரசிக்க வைக்கும் சக்தி, விஜய்-யின் அந்தப் பழைய ஃபார்முலா படங்களுக்கு இருக்கிறது.

கில்லி
கில்லி

ஒரு வெறித்தனமான விஜய் ரசிகனுக்கு, விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், கில்லி - திருப்பாச்சி காலத்து விஜய் -யைத்தான் ரீ க்ரியேட் செய்ய முயற்சிசெய்வான். ஏனெனில் ரசிகர்கள், 'பேட்லி மிஸ்ஸிங் கில்லி விஜய் நவ் அ டேஸ்'.

எந்த சோஷியல் மெசேஜும் அரசியலும் இல்லாமல் ஒரு பரபர மாஸ் கமர்ஷியல் படத்தில் நடிங்க டியர் விஜய்...

சும்ம்ம்ம்மா....நெருப்பு மாதிரி!

அடுத்த கட்டுரைக்கு