தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் மிக முக்கியமானவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என இவர் இயக்கிய படங்களுக்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. கடைசியாக இவரது இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் 'ராக்கி' திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் என்பவரது இயக்கத்தில் 'சாணிக் காயிதம்' என்ற திரைப்படத்தில் நடிகராக செல்வராகவன் அறிமுகமானார். இந்தப் படத்தில் செல்வராகவனுடன் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார். இதையடுத்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் செல்வராகவன் நடிக்கிறார் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில்தான் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் தற்போது செல்வராகவன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தத் தகவலை இயக்குநர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதை ரீ ட்வீட் செய்து செல்வராகவனும் இதை உறுதிப்படுத்தினார்.