Published:Updated:

முதல் நீ, முடிவும் நீ! - நினைவின் நதியை பத்திரப்படுத்திய நட்சத்திரம்!

முதல் நீ முடிவும் நீ

முதல் நீ முடிவும் நீ திரைப்படம் என் நினைவுகளில் புதைந்து கிடந்த ரெட்டை ஜெடைகளை, மீசை அரும்பாத முகங்களை, சைக்கிளை, குரூப் ஸ்டடியை, பப்ளிக் எக்சாமை என மனதின் சுவர்களில் படிந்துகிடந்த ஞாபகத்தின் நிறங்களை அடர்த்தியாக்கியது.

முதல் நீ, முடிவும் நீ! - நினைவின் நதியை பத்திரப்படுத்திய நட்சத்திரம்!

முதல் நீ முடிவும் நீ திரைப்படம் என் நினைவுகளில் புதைந்து கிடந்த ரெட்டை ஜெடைகளை, மீசை அரும்பாத முகங்களை, சைக்கிளை, குரூப் ஸ்டடியை, பப்ளிக் எக்சாமை என மனதின் சுவர்களில் படிந்துகிடந்த ஞாபகத்தின் நிறங்களை அடர்த்தியாக்கியது.

Published:Updated:
முதல் நீ முடிவும் நீ

ஒருவரின் பெயரைத் தவிர, வேறு எந்தப் பின்புலமும் தெரியாமலே நீங்கள் நட்பானது யாருடன் எனக்கேட்டால் பலருக்கும் நினைவில் வரும் பெயர் பள்ளிப் பருவ சிநேகத்தின் பெயர்தான். சாதி, மதம், பொருளாதார நிலை, அழகு என எந்த மதிப்பீடுகளுமற்று நாம் நம்முடன் படித்த நபர்களை அனுகிய அந்தப் பள்ளி பருவம் சுகந்தமானது. வருடத்துக்கு ஒருமுறை எடுக்கப்பட்டு நம் அலமாரியிலோ, பீரோக்களிலோ பத்திரப்படுத்தப்பட்டிருக்கும் பள்ளி குரூப் போட்டோக்கள், நம் மொபைல் கேலரியிலிருக்கும் படங்களைவிட ஆத்மார்த்தமானவை. உங்களுக்கு உங்கள் பள்ளி, எனக்கு என் பள்ளி. ஆனால், நினைவுகள் அதில் சுமந்துவரும் மனிதர்களின் ப்ரியமும் ஒன்றுதானே. அந்த முகங்களை அவ்வப்போது சில நிகழ்வுகள் ஞாபகப்படுத்திவிடுகின்றன. சமீபத்தில் ஓடிடியில் வெளிவந்திருக்கிறது முதல் நீ முடிவும் நீ திரைப்படம். அப்படம் என் நினைவுகளில் புதைந்து கிடந்த ரெட்டை ஜெடைகளை, மீசை அரும்பாத முகங்களை, சைக்கிளை, குரூப் ஸ்டடியை, பப்ளிக் எக்சாமை என மனதின் சுவர்களில் படிந்துகிடந்த ஞாபகத்தின் நிறங்களை அடர்த்தியாக்கியது. படம் குறித்த, அதன் தொழில்நுட்பம் குறித்த விமர்சனமோ, நுட்பமான விவரணையோ அல்லாமல், படம் கடத்திய அந்த உணர்வை சொல்லும் கட்டுரைதான் இது.

முதல் நீ முடிவும் நீ
முதல் நீ முடிவும் நீ

பகுத்தறிவு எட்டாத, அரசியல் புரிந்திடாத பருவம். சேத்தன் பகத், சுஜாதா தவிர தீவிர இலக்கிய வாசிப்பிற்கு பழகியிருக்காத பருவம். நடக்கவிருக்கும் தேர்வு குறித்தோ, லஞ்ச் பாக்ஸில் என்ன இருக்கும் என்பதோ, மறந்துவிட்ட ஹோம் ஒர்க்கிற்கு காரணம் சொல்ல கதை யோசித்ததோ தான் அதிகபட்ச சிந்தனையாக, கவலையாக இருந்த பருவம். அந்தப் பருவத்தில்தான் மெல்ல நம் மனம் இனம்புரியாத பல உணர்வுகளை உணரத் தொடங்கியிருப்போம். இதுவரை ஏற்பட்டிடாத பிடித்திருக்கிறா, பிடிக்கவில்லையா என்பதைத் தாண்டியதொரு பரவசத்தைக் கடத்திய பலவும் அந்தப் பருவத்தில்தான் நிகழத் தொடங்கின.

வார இதழ்களில் வரும் சிறு கவிதைகளும், தொடர் கதைகளும் எழுத்துக் கூட்டி தமிழ் ஊட்டும். நமக்குள் கிடந்த படிப்பைத் தவிர்த்த ஒரு திறமையை நாமே அறியத் தொடங்கியிருப்போம். நம்மை கொஞ்சம் நேர்த்தியாக, அழகாக மாற்றிக் கொள்ளத் தோன்றும். திரைப் பாடல்கள் ஞாபகத்தில் தங்கத் தொடங்கும். ஏதாவது ஒரு பாடலை நாம் முணுமுணுக்கத் தொடங்கியிருப்போம். முதல் சண்டை, முதல் காதல், முதல் பிரச்னை, முதல் மேடை, முதல் வாழ்த்து, முதல் தோல்வி, முதல் வெற்றி, முதல் நட்பு என எல்லா முதல்களின் முகத்துவாரம் பள்ளிதான். அந்த பள்ளிப்பருவத்தை, அது நமக்கு கடத்திய நம் பால்ய நினைவுகளைக் கடைசியாக எப்போது அசைபோட்டீர்கள்?

பால்ய சிநேகத்தில் எழும் விளையாட்டுத்தனம், சிறு சிறு ஊடலும் கூடலும் எனப் பள்ளி, கல்லூரி காதல் ஒன்றும் தமிழ் சினிமாக்குப் புதிதல்ல. பள்ளிப் பருவ காதலுடன் எப்போதும் `Infactuation' என்ற ஆங்கில சொல் ஒட்டிக்கொள்ளும். புரிதலின்றி, ஆராயாமல் வேகத்தில் வயதின் தாக்கத்தால் ஏற்படுவதுதான் பள்ளிக் காதல் என்ற கருத்தை இச்சமூகம் நமக்கு ஊட்டியிருக்கிறது.

ஒரே பள்ளியில் படிக்கும் பதின்ம வயது மாணவர்களிடையே மலரும் சிநேகம், பள்ளி சூழல், நட்பு, சேட்டைகள், துளிர் விடாத கனவுகள் என தமிழ் சினிமா பலமுறை நடந்த பாதையில் அப்படியே பின்தொடர்கிறது, தர்புகா சிவா -வின் `முதல் நீ , முடிவும் நீ !'. சலிப்பு தட்டும் அளவுக்குப் பார்த்துப் பழக்கப்பட்ட அதே கதைக்களம் தானே அப்படி இருக்க ஸ்பெஷல் என்ன?. கண்டிப்பாக ஸ்பெஷல்தான். கதைக்களம் புதிதல்ல. ஆனால் இந்த படம் கொண்டு வந்து சேர்க்கும் அந்த உணர்வு புதிது.

பொதுவாகவே பள்ளி காதல் என்று காட்டும் பாதி படங்களின் காட்சிகள் மிகைப்படுத்தப்படுபவைதான் என்று நினைப்பதுண்டு. அதுபோக பொது சமூகத்தின் 'பள்ளிப் பருவ காதல் காதலே இல்லை' என்ற கருத்து என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. படங்களில் காட்டும் பள்ளி நட்பு , சேட்டைகள் என அவற்றுடன் இனைந்து பயணிக்க இயலுமே தவிர, பள்ளி காதலைச் சித்தரிக்கும் கதைகள் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.( 96 போன்ற படங்கள் அதைச் செய்தாலும் அது பள்ளி பருவத்தினை மட்டுமே சொன்ன படமல்ல.) இந்த படம் பார்ப்பதற்கு முன்புகூட, அந்த மனநிலைதான். ஆனால் இப்படம் மனதுக்கு நெருக்கமான ஒரு பாடலைப் போலவே இருந்தது. அந்த வரிகள் நமக்கானவையாக, அல்லது நாம் எழுத நினைத்தவையாக இருந்தன. இப்படம் நாம் வாழ்ந்த அல்லது வாழ ஆசைப்பட்ட பள்ளிப் பருவத்தைச் சொல்லியது.

முதல் நீ முடிவும் நீ
முதல் நீ முடிவும் நீ

10- ம் வகுப்பு முடித்துவிட்டு 11-ம் வகுப்பு செல்வது நம் வாழ்வில் மிக முக்கியமான பருவம். குரூப் வாரியாக நண்பர்கள் பிரிவதும், புது நட்பு வட்டாரம் உருவாவதும், பதின்ம வயதின் முதிர்ச்சி அடைவதும் என அத்தனை மாற்றங்களையும் கடக்கும் வயது அது. படம் அந்த காலத்தின் உணர்வுகளையே அதிகம் பேசியது. அதுவரை , "10 வது தான் லைப் " என்று சொன்ன வாய்களெல்லாம் , "12 வது தான் லைப் ",என்று கூற ஆரம்பிக்கும். முதல் நாளே முதல் வகுப்பை தவறுவது, அதற்கு இட்டுக்கட்டி காரணம் கூறும்போது , கும்பலாக "பொய் "என்று கத்தி நம்மை கோர்த்து விடும் நண்பர்கள். இவ்வாறு, படத்தின் ஒவ்வொரு காட்சியும் , நம் பள்ளி பருவத்தில் நம் மண்டையில் ஓடிய கேள்விகளையும், நாம் செய்த சேட்டைகளையும் நினைவு கூறியது.

கண்டிப்பான ஆசிரியர்கள் மத்தியில், அத்தி பூத்தாற்போல தன்மையான, மாணவர்களுக்கு பிடித்தமான ஆசிரியர் ஒருவர் இருப்பார். இப்படத்தில் வரும் `பிரியா மிஸ்' கதாபாத்திரம் அப்படியானவர். எனக்கு 11 வது எடுத்த `தமிழரசி' என்ற பிசிக்ஸ் மிஸ்ஸைப் போல. கோ-எட் ஸ்கூலாக இருந்தாலும் ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ளவோ, பார்த்துக்கொள்ளவோகூடாது என்ற அளவுக்குக் கண்டிப்பான, பழைமைவாதிகள் நிறைந்த பள்ளியில், ஆண் மாணவர்களுடன் பேசுவது தவறல்ல என பிசிக்ஸ் பீரியடில் ஆண் மாணவர்களுடன் பேச அனுமதிப்பார் தமிழரசி மிஸ். யோசித்துப் பார்க்கையில் இதுபோல கற்பிதங்களை நொறுக்கிப் போட்ட, நமக்கான புதிய திறப்புகளுக்கு அனுமதித்த ஆசிரியர்கள்தான் பலருக்கும் பிடித்தமான, பலர் வாழ்வை மாற்றியவர்களாக இருக்கிறார்கள். ரேகாவுக்கு ஒரு அணு இருந்தது போல , என் அணு 'அஞ்சனா'. காம்போசிஷன் நோட்டில் `நண்பனுக்கு மடல்' எழுதுவோமல்லவா, அதில் பெயர் எழுதும் காலம் முதல் இன்று வரை பள்ளி என்றாலே என் நினைவை எட்டும் முதல் பெயர் இவளுடையது தான். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் பள்ளியில் யாரோ ஒருவருடைய முகத்தை பிரதிபலித்தது.

முதல் நீ முடிவும் நீ
முதல் நீ முடிவும் நீ

பால்ய காதல் என்பதால், திணிக்கப்பட்ட சிறுபிள்ளைத்தனமோ, அசட்டுத்தனமோ துளிகூட எந்த கதாபாத்திரத்திலும் தென்படாததே இப்படத்தின் தனித்துவமாகப்பட்டது. அவர்கள் எல்லோரும் கடந்து வந்த பள்ளி நண்பர்களைப் போன்ற முகசாயலில் இருந்தனர். 'வினோத் -ரேகா' இவர்களின் காதல். ஒரு பதின்ம வயது காதல் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற கட்டுபாடோ, கற்பிதமோயின்றி நிதர்சனத்தைக் காட்டியது. நான் பள்ளி படிக்கும் காலத்தில் சமூக ஊடகங்கள் பெருகத் தொடங்கிய காலம் என்பதால் சாட்டிங், டெக்ஸ்டிங் என காதலிப்பதும் , பார்த்துக்கொள்வதும் சுலபமாகிவிட்டது . அதே போல், காதல் முறிவதும், கடப்பதும், மீண்டும் காதல் பூப்பதும் எல்லாமே பல நேரங்களில் இன்ஸ்டன்ட் ஆக அரஙகேறி இன்ஸ்டன்ட் தலைமுறை ஆகிவிட்டது. இதில் முதல் தொடுதல், முதல் முத்தம், எட்ட நின்று பார்ப்பது, நினைவுகள் உருவாக்குவது என எதுக்குமே பெரிதாக முக்கியத்துவம் கிடைப்பதில்லை. அப்படி பள்ளியைக் கடந்த, கடக்கும் தலைமுறைக்கு , இந்த படம் ஒரு மிகப்பெரிய ஏக்கத்தைக் கடத்துகிறது.

"ச்ச , நானும் 90's ல ஸ்கூல் படிச்சிருக்கலாம் ", என்று நினைக்கவைக்கிறது.

நினைவின் தாழ்வாரத்துக்கு நம்மை இழுத்து சென்றதில் பெரும்பங்கு இசைக்குதான். 90's மூட் உருவாக்கி, அக்கால இசை , அன்றைய வாக்மான், கேசெட் பதியும் ஸ்டூடியோ ,என இப்படத்தின் முதல் கதாநாயகனாகக் கதையோடு இசையும் பயணிக்கிறது. `வேண்டியதெல்லாம் கிடைத்துவிட்டால் தேவையின் அருமை தெரியாது' . இந்த உண்மையையும் இயக்குநர் தர்புகா சிவா மய்யமாக முன்வைக்கிறார். பெயர், புகழ், பணம், அந்தஸ்து, எனக் கனவுகள் ஒருபுறமும், ஒரு மனிதனை முழுமையாக்கும் காதல் மறுபுறமும் என்ற கட்டத்தில் எதைத் தேர்வு செய்வது? எது நீடித்த மகிழ்ச்சியளிக்கும்? என்ற எல்லோருக்குமான கேள்வியின் பதிலை சிந்திக்க வைத்திருக்கிறார்.

"பின்னோக்கி காலம் போகும் எனில்

உன் மன்னிப்பைக் கூறுவேன்!

கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்

பிழை எல்லாமே களைவேன்! "

முதல் நீ முடிவும் நீ
முதல் நீ முடிவும் நீ

என சித் ஸ்ரீராம் குரல் உச்ச ஸ்தாயியைத் தொடும்போது கண்களில் வழியும் நீர் மனதின் சுனையிலிருந்து வெளிப்பட்டதே!. இப்படத்தின் தொடக்கத்தில் டைட்டிலின்போது வான்காவின் ஓவியத்தை காட்சிப்படுத்தியிருப்பர். ஓவியங்கள் இருண்மையான நிறத்திலிருந்து தொடங்கி மெல்ல நட்சத்திரங்கள் பூக்கும். அந்த நட்சத்திரம் நதியை அடையாளப்படுத்தும். இந்நட்சத்திரங்கள் போல நம் மனதில் நிறைந்திருக்கும் ஒரு புன்னகை, கண்ணீர் துளி, கடைசி சொல், மறந்திடவே முடியாத பார்வை இவைதாம் நம் நதியையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றன.