புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ், மத்திய திரைப்படப் பிரிவு மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்திய திரையுலக மேதை சத்யஜித் ரே நூற்றாண்டு திருவிழாவை புதுச்சேரியில் நேற்று 17-ம் தேதி தொடங்கின. புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் திரையரங்கில் சத்யஜித் ரே உருவாக்கிய, உலக அளவில் இந்திய திரை உலகுக்கு பெருமை சேர்த்து பல விருதுகளை குவித்த 9 திரைப்படங்களும், ஷியாம் பெனகல் உருவாக்கிய சத்யஜித் ரே ஆவணப்படமும் திரையிடப்பட இருக்கிறது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் முதல் நாளான நேற்று உலக புகழ் பெற்ற பதேர் பாஞ்சாலி திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட எடிட்டர் லெனின் , சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனும் கலந்து கொண்டு ’சத்யஜித் ரே 100’ எனும் புத்தகத்தை வெளியிட்டனர். விழாவில் பேசிய எடிட்டர் லெனின் அவர்கள் சத்யஜித்ரே உடனான தனது முதல் சந்திப்பை பற்றிப் பகிர்ந்து கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும் பேசிய அவர் "சத்யஜித்ரே படங்களை பார்த்தாலே போதும் அப்டேட் ஆகி விடலாம்" என்றார். அதேபோல "சத்யஜித் ரேவுக்கு இந்தியாவை தாண்டியும் பிரான்ஸ் நாட்டில் அதிகமான புகழ் உண்டு. உள்ளூரில் கால்பதித்து வெளிநாட்டளவில் பாய்ச்சலை காட்டியவர் அவர், இந்திய சினிமாவை உலகரங்குக்கு கொண்டு சென்றவர்" என்றார் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கவுரவத் தலைவர் எழுத்தாளர் தமிழ்செல்வன்.
இறுதியாக பேசிய சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், "புதுச்சேரி மணப்பட்டில் 100 ஏக்கரில் திரைப்பட நகரமும், பொழுதுபோக்கு மையமும் அமையும். அதனை வணிகரீதியில் பயன்படுத்தமுடியும். அதற்கான விரிவான அறிக்கை தயார் செய்ய டெண்டர் விடப்படும். அதேபோல வருகின்ற மார்ச் மாதம் இந்திய-பிரெஞ்சு விழாக்கள் சுற்றுலாத்துறையுடன் இணைந்து நடத்தப்படவிருக்கிறது. அப்போது உணவு திருவிழா, திரைப்படத் திருவிழா ஆகியவை நடக்கும்" என்றார்.