Published:Updated:

ஒரு லைப்ரரி... இரண்டு பேர்... கவனம் ஈர்க்கும் குறும்படம்!

சக்தி தமிழ்ச்செல்வன்

இரண்டே மைய கதாபாத்திரங்கள். படத்தின் இறுதிக்காட்சியில் வரும் 3 கதாபாத்திரங்கள். 16 நிமிட படம் முழுவதும் ஒரே அறைக்குள் நடக்கும் குறும்படம்.

உள்ளங்கை நெல்லிக்கனி
உள்ளங்கை நெல்லிக்கனி ( Screenshot from YouTube )

இரண்டே மைய கதாபாத்திரங்கள். படத்தின் இறுதிக்காட்சியில் வரும் 3 கதாபாத்திரங்கள். 16 நிமிட படம் முழுவதும் ஒரே அறைக்குள் நடக்கும் குறும்படம். கதை சொல்லல், நடிப்பு, லைவ் சவுண்ட் ரெக்கார்டிங், ஒளிப்பதிவு என கவனம் ஈர்க்கிறது 'உள்ளங்கை நெல்லிக்கனி' குறும்படம். மேற்கத்திய சினிமாக்களில் கவனம் பெற்ற பல படங்கள் நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கின்றன.

குறும்படம்
குறும்படம்
Screenshot from YouTube

செவ்வியல் தன்மை கொண்ட பல நாவல்கள் திரைப்படமானபோது பரவலான கவனம் பெறாமல் போனதும் உண்டு. தமிழ் சினிமாவிலும்கூட சிறுகதைகளை மையப்படுத்தியும், நாவலையும் திரைப்படமாக்கியுள்ளனர். தில்லானா மோகனாம்பாள் தொடங்கி படப்பிடிப்பிலிருக்கும் அசுரன் வரைக்கும் பல உதாரணங்கள் உண்டு.

குறும்படம் எடுப்பது பரவலான பிறகு, சிறுகதைகளை மையப்படுத்தியும் குறும்படங்கள் எடுக்கப்பட்டன. சினிமா இயக்குநராவதற்கான விசிட்டிங் கார்டாக அன்றி, குறும்படம் என்கிற கலை வடிவத்தை சரியான முறையில் கையாண்டு குறும்படங்கள் வெளியாகி சர்வதேச குறும்பட விழாக்களிலும் கவனம் பெறுகின்றன.

கொலம்பியாவைச் சேர்ந்த புகழ்மிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வேஸின்,'The Woman Who Came at Six o'Clock' என்ற சிறுகதையின் குறிப்பிட்ட கருவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது குறும்படம்.

திரைக்கதை எழுதி, இயக்கி எடிட் செய்திருக்கிறார் அரிகரசுதன். ஒரு காலேஜ் லைப்ரரியில் லைப்ரேரியனுக்கும், கல்லூரி மாணவிக்கும் நடக்கும் உரையாடலாக கதை நகர்கிறது.

அரிகரசுதன்
அரிகரசுதன்

ஒரு கொலைக்கான பின்னணி அந்த உரையாடல் வழியே தெரியவருகிறது. விறுவிறுப்பாக நகர்கிறது கதை. இந்தக் குறும்படம் நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பரவலாகப் பாராட்டையும் பெற்றுள்ளது. இக்குறும்படத்தின் இயக்குநர் அரிகரசுதனிடம் குறும்படம் குறித்துப் பேசினோம்.

"2016-லயே எடுக்க ஆரம்பிச்ச படம் முடிக்க கொஞ்ச நாளாகிடுச்சு. என்னோட நண்பர் மகேஷ் மனோகரன்தான் ஒளிப்பதிவு பண்ணினார். படம் பிளாக் அண்ட் ஒயிட் வைக்கலாம்னு முடிவு பண்ணினவுடனே, மியூசிக்கும் ஹிட்ச்காக் படங்கள்ல வர்றமாதிரி மியூசிக் பண்ணிக் குடுத்தாரு அருண் பிரபாகர். சவுண்ட்ஸ் எல்லாமே லைவ் ரெக்கார்டிங் பண்ணினோம். ஆனந்த் ஒலிப்பதிவு பண்ணினார். 'ஆரண்ய காண்டம்' படத்தோட ஒளிப்பதிவாளர் பி.எஸ். வினோத், நடிகர் டேனியல் பாலாஜி, `இன்று நேற்று நாளை' படத்தோட டைரக்டர் ரவிக்குமார்னு நிறைய பேர் பாராட்டினாங்க.

Vikatan

நிறைய திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினோம். தமிழ் ஸ்டூடியோ நடத்தின குறும்படத்துக்கான பாலுமகேந்திரா விருது கிடைச்சது. யூடியூப்-ல ரிலீஸ் பண்ணின அப்புறம் நிறைய பேர் பாராட்டுறாங்க. சினிமா பண்ணனும்தான் ஆசை. ஒரு த்ரில்லர் கதை வச்சுருக்கேன். நிறைய தயாரிப்பாளர்கள்கிட்ட கதை சொல்லிட்டு இருக்கேன். கூடிய சிக்கரம் படம் பண்ணுவேன்னு நினைக்குறேன் ப்ரோ!" நம்பிக்கையுடன் பேசி முடித்தார் அரிகரசுதன்.