கட்டுரைகள்
Published:Updated:

ஏன் சேது அவசரம்?

சேதுராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
சேதுராமன்

நான் சொல்லிக்கொடுத்த காட்சிகளை அப்படியே மனசுக்குள் உள்வாங்கி இயல்பாக நடித்துக் கொடுத்தார்.

அந்த மரணச்செய்தியைக் கேட்டபோது பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மூன்றே படங்களில் நடித்தபோதும் துறுதுறுப்பான உடல்மொழியால் அழுத்தமாகப் பதிந்துபோனது டாக்டர் சேதுராமனின் முகம்.

கொரோனாவிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்வது எப்படி என்று தன் இறுதிநாள் வரை விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுக்கொண்டிருந்தவர் 36 வயதேயான சேதுராமன். அவரை சினிமாவில் அறிமுகப்படுத்திய, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் இயக்குநர் மணிகண்டனிடம் பேசினேன்.

“சேது, நடிகர் சந்தானத்துக்கு நீண்டகால நண்பர். 2012-ம் ஆண்டு ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடிப்பதற்கு ஏற்கெனவே சந்தானத்தையும், ‘பவர்’ ஸ்டாரையும் ஒப்பந்தம் செய்துவிட்டோம். ஹீரோவாக நடிப்பது யார் என்று நான்கைந்து பேரை அழைத்து தேர்வு நடத்தினோம். திருப்தி இல்லை. அப்போதுதான் சந்தானம் சேதுவைக் கொண்டுவந்து நிறுத்தினார். பார்த்தவுடனே சேதுவை எனக்குப் பிடித்துவிட்டது. என்னுடைய ஜாவா பைக்கில் அமர்ந்தபடி சேது போஸ் கொடுக்க போட்டோக்களை எடுத்தோம். அவர் படத்தில் நடிக்க வேண்டிய காட்சிகள், பேசவேண்டிய வசனங்கள் குறித்து சேதுவிடம் விளக்கினேன். ஏற்கெனவே படத்தைப்பற்றிச் சொன்னதாலோ என்னவோ சினிமாப் படப்பிடிப்பில் கொஞ்சம்கூட சீரியாஸாகவோ, டென்ஷனாகவோ அவர் இல்லவே இல்லை. நான் சொல்லிக்கொடுத்த காட்சிகளை அப்படியே மனசுக்குள் உள்வாங்கி இயல்பாக நடித்துக் கொடுத்தார்.

தோல் மருத்துவர் என்பதால் மருத்துவத் துறையிலேயே மேன்மேலும் படித்து முதலில் போயஸ் கார்டனில் ஒரு ஸ்கின் கிளினிக்கைத் திறந்தார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அடுத்து அண்ணாநகரில் இன்னொரு கிளினிக்கைத் திறந்தார். அதன்பிறகு சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் மூன்றாவது மருத்துவமனை என்று படிப்படியாக வளர்ந்துகொண்டே போனார்.

சேதுராமன்
சேதுராமன்

இப்போது சினிமா உலகில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் சேதுதான். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் மாரடைப்பு வரும் என்று சொல்வார்கள். சேதுவைப் பொறுத்தவரை வாழ்க்கையில் நன்றாக செட்டிலாகி சந்தோஷமாகத்தான் இருந்தார். அவருக்கு மாரடைப்பு வந்தது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இப்போது நினைத்தாலும் சேதுவின் ஒரு வயதுக் குழந்தை கண்ணுக்குள்ளேயே இருக்கிறது” என்று கலங்குகிறார் மணிகண்டன்.