Published:Updated:

''குழந்தை மனசுக்காரர்!" - கிரேஸி மோகனின் இறுதி அஞ்சலி இது!

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

கிரேஸி மோகனின் இறுதி அஞ்சலியில் பல நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது குடும்ப வழக்கப்படி சடங்குகள் முடிந்து தகனம் செய்யப்பட்டது.

ஒரு பேட்டியில், 'உங்களுடைய நீண்ட நாள் ஆசை எது?' என்ற கேள்வியை கிரேஸி மோகனிடம் கேட்க, இரண்டே வார்த்தையில், 'நீண்ட நாள்...' என்று பதிலளிப்பார். 'நீண்ட நாள் வாழணும் இதுதான் என்னுடைய ஆசை' என்று இவர் அந்தப் பேட்டியில் சொன்னதுதான், இவரது இரங்கல் செய்தியைக் கேட்டதும் நினைவுக்கு வந்தது. சிரித்தவன் நூறாண்டு காலம் வாழலாம் என்றால், சிரிக்க வைத்தவணும் நூறாண்டு காலம் வாழ வேண்டும்தானே. அதுதானே அறம். வெறும் வியர்வைத் துளிகளில் மருத்துவமனை சென்றவர், அனைவரது கண்களிலும் கண்ணீர் துளிகளை விதைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

Goundamani pays tribute to Crazy Mohan
Goundamani pays tribute to Crazy Mohan
சொ.பாலசுப்ரமணியன்

நேற்று காலை சுமார் 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்குள் அவர் இறந்துவிட்டதாகப் பல வாட்ஸப் குரூப்களிலும், இணையதளங்களிலும் செய்தியைப் பரப்பினார்கள், சிலர். மதியம் இரண்டு மணியளவில், 'சிகிச்சை பலனின்றி கிரேஸி மோகன் உயிரிழந்தார்' என்ற ப்ரேக்கிங் நியூஸ் வெளியானது. காலையில் பரவிய வதந்தியைப்போல, இதுவும் பொய்யாக இருக்கக்கூடாதா எனப் பல மனங்கள் ஏங்கியது. மீண்டும் சமூக வலைதளங்களை கிரேஸி மோகன் ஆக்கிரமிக்கத் தொடங்கினார். விரைந்து அவரது வீட்டிற்குச் சென்றோம்.

மந்தைவெளி அம்மணி அம்மாள் தெருவில் இருக்கிறது இவரது வீடு. எளிமையான வீடு. சுற்றி தேம்பி அழுத நிலையில் உறவினர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். வீடியோ கேமராக்களும், பத்திரிக்கையாளர்களும் வீட்டுக்கு வெளியே இருந்தனர். கிரேஸி மோகன் இதையெல்லாம் பார்த்தால், வார்த்தைகளால் விளையாடியிருப்பார்.

Vivek
Vivek
சொ.பாலசுப்ரமணியன்

ஆனால், நாம் பார்த்தது வேறு. மூக்கிலிருந்து ரத்தம் வடிந்த நிலையில் அவரது உடலைப் பார்த்த மொத்தக் கூட்டமும் கதறியழுதது. அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து கண்ணாடிப் பேழைக்குள் அடைத்தார்கள். ஏறத்தாழ எல்லோரையும் சிரிக்க வைத்தவரை, உறைந்துபோய் கண்ணாடிப் பேழைக்குள் தூங்கிய நிலையில் பார்த்தபோது, நிலைகுலைந்த மனதுதான். பிறகு, ஒவ்வொருவராக அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரத் தொடங்கினார்கள்.

த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, இயக்குநர் பிரம்மா, சுரேஷ் கிருஷ்ணா, கல்யாண், வையாபுரி, பாடகர் நித்யாஶ்ரீ மகாதேவன், சந்தான பாரதி, எழுத்தாளர் மதன், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, வைரமுத்து, கவுண்டமணி, காத்தாடி ராமமூர்த்தி, சிவகுமார், நாசர், ஜி.வி.பிரகாஷ், விவேக், பி.சி.ஶ்ரீராம், கோவை சரளா, சி.ஆர்.சரஸ்வதி... எனத் திரைத்துறையைச் சேர்ந்த பல கலைஞர்களும், அரசியல்வாதிகளும் கிரேஸி மோகனுக்கு மரியாதை செலுத்த வந்திருந்தனர். உள்ளே சென்றபோது அமைதியாகச் சென்ற பல கண்கள், வெளியே வரும்போது அழுது கலங்கியிருந்தது. மாலைகளும், மலர்களும் கிரேஸியின் உடலைச் சூழ்ந்திருந்தது.

Suriya
Suriya

வெளியே நின்றிருந்த பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த வைரமுத்து, "இதுவரை சிரிக்க வைத்ததைத் தவிர, யாரையும் அழ வைத்ததில்லை . முதன்முறையாக பலரை அழவிட்டுச் சென்றிருக்கிறார். நோய்வாய்ப்பட்டாரா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா, மரணத்தின் அறிகுறிகள் தெரிந்தனவா.. என உறவினர்களிடம் கேட்டேன். 'காலையில் 10 மணிக்கு எல்லோரிடமும் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்தார். 10.30 மணிக்கு நெஞ்சு வலி வந்தது; மருத்துவமனையில் சேர்த்தோம், மறைந்துவிட்டார்' என்றார்கள். மரணமென்பது ஒருவனுக்கு இவ்வளவு நிம்மதியாக வருவதென்பது அரிது. எல்லோரையும் பண்படுத்திக்கொண்டிருந்த, புண்படுத்தத் தெரியாத ஒரு நல்ல நகைச்சுவையாளனைத் தமிழ்நாடு இழந்திருக்கிறது. அவரது நகைச்சுவையும், நினைவுகளும் நீண்ட காலம், மண்ணில் நின்று வாழும்.'' எனப் பேசினார்.

விவேக், "உலகெங்கும் பல நாடகங்கள் போட்டு தமிழின் பெருமையை வளர்த்தவர். எனக்கு நல்ல நண்பர். அவர் சிறப்பாக வெண்பா எழுதுவதே எனக்கு வெகுநாள்கள் கழித்துத்தான் தெரியும். ஒருமுறை போனில் அழைத்து இது சம்மந்தமாகப் பேசியிருக்கிறேன். உலகெங்கும் அவருக்கு இருக்கும் ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன், இந்த வருத்தத்தில் நானும் பங்குகொள்கிறேன்." என்றார்.

Crazy Mohan
Crazy Mohan

இவரைத் தொடர்ந்து பல நடிகர்களும், கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தனர். வந்திருந்தவர்கள் மீண்டும் மீண்டும் கிரேஸியை வர்ணித்த வார்த்தை, 'அவர் ஒரு குழந்தை மனசுக்காரர்' என்பது. அது உண்மைதான். இவருடன் நெருக்கமான பழகிய அனைவருக்கும் அது தெரிந்திருக்கும். இவரது உடல் காலை 10.30 மணிக்கு மந்தைவெளியிலிருந்து, பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கிரேஸி மோகனின் குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்தபின், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு