Published:Updated:

மலையாள 'ஹெலன்'... தமிழின் 'அன்பிற்கினியாள்'... மாற்றமா, முன்னேற்றமா? ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

அன்பிற்கினியாள்

80'ஸ் கிட்ஸைக் கவர்ந்த அருண் பாண்டியன் கம்பேக் படமாக, தன் மகள் கீர்த்தி பாண்டியனை நாயகியாக வைத்து தயாரித்து நடித்துள்ள படம் 'அன்பிற்கினியாள்'. சர்வைவல் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படம் எப்படி இருக்கிறது?

மலையாள 'ஹெலன்'... தமிழின் 'அன்பிற்கினியாள்'... மாற்றமா, முன்னேற்றமா? ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

80'ஸ் கிட்ஸைக் கவர்ந்த அருண் பாண்டியன் கம்பேக் படமாக, தன் மகள் கீர்த்தி பாண்டியனை நாயகியாக வைத்து தயாரித்து நடித்துள்ள படம் 'அன்பிற்கினியாள்'. சர்வைவல் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படம் எப்படி இருக்கிறது?

Published:Updated:
அன்பிற்கினியாள்

மாலில் இருக்கும் ஃபாஸ்ட் புட் கடையில் பார்ட் டைமாக வேலைப் பார்த்துக்கொண்டே கனடா செல்லும் தன் கனவை நோக்கிப் பயணிக்கிறார் நர்ஸிங் படித்திருக்கும் அன்பிற்கினியாள் (கீர்த்தி பாண்டியன்). அப்பா சிவம் (அருண் பாண்டியன்) ஜாலி கேலி தந்தையாக இருந்தாலும், தன் மகள் கனடா செல்வதை விரும்பாதவராகவே உலா வருகிறார். ஒரு சமயத்தில் தன் மகளின் காதலால் காவல் நிலையம்வரை சென்று வருபவர், அதன் பிறகு தன் மகளுடன் பேசுவதைத் தவிர்க்க, அது அவளை மிகவும் பாதிக்கிறது. ஓர் இரவில், சமய சந்தர்ப்பங்கள், கவனக் குறைவு போன்ற சிக்கல்களால் தான் வேலைப் பார்க்கும் ஃபாஸ்ட் புட் கடையின் மாமிசங்கள் பதப்படுத்தப்படும் குளிர்சாதன அறையில் சிக்கிக்கொள்கிறாள் அன்பிற்கினியாள். அவளை தந்தையின் அன்பும், காதலனின் போராட்டமும் மீட்டதா என்பதே கதை!

அன்பிற்கினியாள்
அன்பிற்கினியாள்

மலையாளத்தில் ஹிட்டடித்து நடிகை அனா பென்னை தென் இந்தியா முழுக்க அறிமுகப்படுத்திய 'ஹெலன்' படத்தைத் தமிழ் பேச வைத்திருக்கிறார் இயக்குநர் கோகுல். தன் வழக்கமான நக்கல் நையாண்டி டெம்ப்ளேட்டை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, திரைக்கதையில் ஒரிஜினல் படத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும், கதாபாத்திரங்களிலும் அவர்களின் வாழ்வியலிலும் மலையாள நெடி எங்கேயும் அடிக்காமல் தமிழ்ப்படுத்தியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதேபோல், 'பப்ளிக் எக்ஸாம்', 'வனிதா விஜயகுமார் பேட்டி' என டிரெண்டிங் விஷயங்களை ஆங்காங்கே சேர்த்திருப்பது நல்ல நையாண்டி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

படத்தைத் தாங்கும் 'அன்பாக' கீர்த்தி பாண்டியனுக்கு ஸ்கோர் செய்ய வாய்ப்புள்ள கதாபாத்திரம். அனா பென்னின் பாத்திரத்திலிருந்து சிறிது மாற்றங்கள் செய்து, சீரியஸ் பெண்ணை கொஞ்சம் நம்மூர் டெம்ப்ளேட்டில் லூசுப் பெண்ணாகக் காட்ட முயன்றிருக்கிறார்கள். தொடக்கத்தில் பெரிய ஈர்ப்பு இல்லையென்றாலும், குளிர்சாதன அறையில் அவர் மாட்டிய பின்னர், நீளும் காட்சிகளில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துடிக்கும் உதடுகள், அடிப்பட்ட கால்கள், ரத்தம் வழியும் மூக்கு, சிராய்ப்படைந்த கைகள், போராடத் துடிக்கும் மன தைரியம் எனப் படு ரியலாக தன் பங்கைக் கொடுத்திருக்கிறார் கீர்த்தி பாண்டியன். அதற்கு பக்கபலமாக அந்தக் காட்சிகளுக்கு மேலும் நம்பகத் தன்மையைக் கூட்டியிருக்கிறது ரோஷனின் ஒப்பனை. நாயகியின் சிறு சிறு முயற்சிகள் வெற்றி அடையும் போதெல்லாம் ஒரு மாஸ் மொமன்ட் ஃபீல் எட்டிப் பார்ப்பது படத்தின் பெரும்பலம்.

அன்பிற்கினியாள்
அன்பிற்கினியாள்

அப்பாவாக அருண் பாண்டியன், முற்பாதியில் பல இடங்களில் தடுமாறியிருக்கிறார். பழைய படங்களில் ஸ்டன்ட் காட்சிகளுக்கென பெயர் போனவர், இங்கே எதுவும் செய்ய முடியாமல் விழிப் பிதுங்கி பரிதவிக்கும் அப்பா பாத்திரத்தைத் திரையில் கொண்டுவர சிரமப்பட்டிருக்கிறார். அவரின் பர்ஃபாமென்ஸைப் பார்க்க கடைசி 30 நிமிடங்கள்வரை நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அன்பின் காதலன் 'டயானா' சார்லஸாக வரும் பிரவீன் ராஜா தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். வில்லனாக வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், நல்லது செய்யப்போராடும் அந்த கான்ஸ்டபிள், பக்கத்து வீட்டு மனிதர்கள், மால் வாட்ச்மேன் என எல்லாப் பாத்திரங்களும் கதையில் பெரும்பங்கு வகிப்பது பலமான எழுத்துக்கான சாட்சி. அனைவருமே சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மலையாளப் படங்கள் பொதுவாக 'மெயின் கான்ஃப்ளிக்ட்' எனப்படும் கதையின் மையக்கருவை நோக்கி நகர, சற்றே நேரம் எடுத்துக்கொள்ளும். 'ஹெலன்' படமும் அதில் விதிவிலக்கல்ல. கிட்டத்தட்ட படத்தின் முக்கியப் பிரச்னைக்கு நாம் ஒரு மணிநேரம் வரைக் காத்திருக்க வேண்டும். தமிழ் ரீமேக்கிலும் இதை அப்படியே பின்பற்றி இருப்பது சற்றே அயர்ச்சியை உண்டாக்குகிறது. என்னதான் சீன் செட்டிங், தீம் செட்டிங் என்றாலும், முதல் 30 நிமிடங்களில் கதைக்குள் நுழைவதுதான் நம்மூர் செட்டிங். அதை கொஞ்சம் கவனத்தில்கொண்டு முதல் பாதியின் நீளத்தைச் சற்றே குறைத்திருக்கலாமே கோகுல்?! மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு அந்தக் குளிர்சாதன அறையின் பெரும் பதைபதைப்பை அசால்ட்டாகக் கூட்டியிருக்கிறது. ஜாவேத் ரியாஸின் பாடல்கள் ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை சிறப்பு. எலி தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அருமை!

அன்பிற்கினியாள்
அன்பிற்கினியாள்

மலையாளப் படத்தின் நாயகன் நாயகியின் மதங்களைத் தமிழில் மாற்றியமைத்தது ஏன் எனப் புரியவில்லை. அதேபோல், சாதி சார்ந்த வசனங்கள் மலையாளத்துக்கு ஓகே. தமிழ்த் திரையிலும் அதை அப்படியே நீளச் செய்திருக்க வேண்டுமா?

முதல் பாதியை இன்னமும் கூர்தீட்டி, சர்வைவல் காட்சிகளுக்கு இன்னமும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால், இந்த அன்பை அடைத்து வைக்க தாழ் இருந்திருக்காது. ஆனாலும் இந்த 'அன்பிற்கினியாள்' நம் அன்பிற்கு உரியவள்தான்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism