Published:Updated:

‘வாழ்’ ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் : சார்ஜ் தீரும் போனில் காதலி போடும் மொக்கையும்… வாழ்க்கையும்!

'அருவி' இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கும் 'வாழ்' படம் எப்படி... ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பயணமும், இயற்கையும் கற்றுக் கொடுக்கும் பாடம் வாழ்நாளுக்குமானது என்பதைப் பேசுகிறது 'வாழ்'!

சிம்பிளாய் சொல்லவேண்டுமென்றால் வருடம் முழுக்க வேலை வேலை என இயந்திரத்தனமாய் உழல்பவர் நீங்கள் என்றால் ப்ளீஸ் ஒரு மாதம் எங்காவது பயணம் செய்து ஆன்மாவை சுத்திகரியுங்கள் என்பதைத்தான் சினிமாவாக்கி இருக்கிறார்கள்.

வாழ்வைப் புரிந்து கொள்வதற்கு... வாழ்வின் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கும் பயணங்கள் அவசியம் என்பதை உணர்த்தி, பிழைத்திருத்தலுக்கும் வாழ்தலுக்கும் இடையிலான வேறுபாடுகளை நவீன உலகின் யதார்த்த கதாபாத்திரங்களின் வழி விளக்க முயற்சி செய்திருக்கிறார் `அருவி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். 'வாழ்' கரை சேர்தததா?

வாழ்
வாழ்

ஐடியில் வேலை பார்க்கும் பிரதீப் அந்தோணி, வீடு… வீடு விட்டால் வேலை என சராசரி வாழ்க்கையை சின்ஸியராய் வாழும் இளைஞன். அவன் வாழ்வில் சந்திக்கும் ஒரு பெண்ணால் அவன் வாழ்க்கையே தடம் மாறிவிடுகிறது. அவளால் நிகழும் ஒரு பயணத்தையும், அந்தப் பயணத்தால் அவனுக்கு ஏற்படும் திடுக்கிடும் அனுபவங்களையும், அதனால் உண்டாகும் வாழ்க்கை குறித்த புரிதலையும்தான் இரண்டு மணிநேரத்துக்குள் அடங்கிவிடும் ஒரு Road Adventure Dramaவாக சொல்லியிருக்கிறார்கள்.

‘அருவி’யில் கதை நாயகனாக நடித்த பிரதீப் அந்தோணியைத் தவிர மற்ற பாத்திரங்கள் அதிகம் பரிச்சயமில்லாத நடிகர்கள் என்பதால் முதல் சீனிலிருந்தே வேற்று மொழிப் படத்தை டப்பிங்கில் பார்த்த உணர்வு எழாமல் இல்லை. எல்லாரையும் போல ஏன் என்ற கேள்வி கேட்காமல் ஏனோ தானோ என வாழ்ந்து கொண்டிருக்கும் ஐடி ஊழியரின் வாழ்க்கையை ஹீரோ பிரதீப் கண்முன் பிரதிபலிக்கிறார்.

தங்கச்சி லவ் மேட்டர், உம்முனா மூஞ்சி மேனேஜர், அழுகாச்சி லவ்வர் என சராசரி மனிதனினுக்கு வரும் அர்த்தமற்ற அத்தனை பிரச்னைகளும் நாயகன் பாத்திரமான பிரகாஷுக்கு வருவது படத்தில் காமெடி ஏரியாவை சிறப்பாக செய்திருக்கிறது. க்ளைமாக்ஸில் உயிருக்குப் போராடும் அவசரத்தில் இருக்கும்போதும், சார்ஜ் தீரப்போகும் செல்போனில் காதலி போடும் கொடூர மொக்கை போன்று அங்கெங்கு சிரிக்க வைக்கிறார்கள். பயணம் குறித்த படம் என்பதால் ஒளிப்பதிவாளர் ஷெல்லே கேலிஸ்ட் தான் படத்தின் நாயகன் என்றே சொல்லலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படத்தின் நாயகி போன்ற பாத்திரத்தில் வரும் பானு கேரக்டர் அறிமுகமாகும் போது ஏக எதிர்பார்ப்பை உண்டு பண்ணுகிறது. ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் பாத்திரப்படைப்பின் குழப்பத்தால் நாயகனைப் போலவே நாமும் குழம்பி விடுகிறோம். யதேச்சையாக நிகழ்ந்த ஒரு சம்பவத்துக்காக ஒரு பெண் இந்த எக்ஸ்ட்ரீம் போக வேண்டியதன் அவசியம் என்ன..? தன் மகன் யாத்ராவை ஹீரோவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் அதை சென்னையிலேயே செய்திருக்கலாமே, ஏன் அவனை அழைத்துக் கொண்டு ஒரு ரோடு ட்ரிப்? என ஏகப்பட்ட கேள்விகள் எழாமல் இல்லை. ஆனாலும் லாஜிக் மறந்து அந்த பயணம் பல கேள்விகளை நமக்குள் எழுப்பாமல் இல்லை.

வாழ்
வாழ்

நாயகனுக்கும் சிறுவன் யாத்ராவிற்கும் இடையிலான கெமிஸ்ட்ரி செம! பிரெஞ்சு பெண் பாத்திரத்தை கையாண்ட விதம் தமிழ் சினிமாவுக்கு புதுசு. அதேபோல் வழியில் சந்திக்கும் தாத்தா சொல்லும் புறா கதை நெகிழ வைக்கிறது. இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாய் கவனம் ஈர்க்கிறார் 'அருவி' இயக்குநர்.

இலக்கற்ற பயணம் கொஞ்சம் போர் அடித்தாலும் ஒளிப்பதிவு நேர்த்தியும், பிரதீப் குமாரின் ஆன்மீக தத்துவார்த்த இசையும் முதல் பாதியை கண் விரித்துப் பார்க்க வைக்கிறது. தியேட்டரில் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்த ‘வாழ்’ வாழ்வானுபவமாய் மாறியிருக்குமோ என்னவோ?

தவமிருப்பது போல திரையின் முன்னமர்ந்து வாழ்வைத் தேடும் பொறுமை இருப்பவர்களுக்கான சிறந்த ட்ரீட் ‘வாழ்’! இரண்டாவது நாயகி பிரெஞ்சுப் பெண் அறிமுகத்திற்குப் பின் முழு படமும் ஒரு பாடல் போல... ஒரு கவிதை போல மாறிவிடுகிறது. கவிதையின் இடையில் கதை சுவாரசியம் அற்றுப் போனது தான் வாழின் ஒரே பிழை.

இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு என அத்தனையும் சிறப்பாக இணைத்திருக்கும் இயக்குநரின் டேஸ்ட்டுக்கு சலாம் சொல்லலாம். ஃப்ளாஷ்பேக் கிளிப்ஸ் மீண்டும் மீண்டும் தேவையற்ற இடங்களில் சுட்டி காட்டப்படுவது கொஞ்சம் தொய்வை ஏற்படுத்துகிறதே தவிர, கனவு உட்பட பல இடங்களில் எடிட்டிங் சிறப்பு!

‘வாழ்’ ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் : சார்ஜ் தீரும் போனில் காதலி போடும் மொக்கையும்… வாழ்க்கையும்!

இரண்டாம் பாதி கதையின் வேகம் முதல் பாதியில் கால்வாசி கூட இல்லாதது படத்தின் மைனஸ். பிரதீப் அந்தோணி, சிறுவன் மற்றும் பானுவின் நடிப்பு சிறப்பு. பிரதீப்பின் பின்னணி இசைத் தொகுப்பை மட்டும் லூப்பில் போட்டுக் கேட்கலாம். காடு மலை அருவி என கேமரா செல்லும் இடங்களில் எல்லாம் அழகு வழிகிறது.

நெற்றியில் பெரிதாக இருக்கும் குங்குமத்தைக் கூட கவனிக்காமல் சைட் அடிப்பது, ப்ரபோஸ் பண்ண வீம்பாய் அழைப்பது என அட போட வைத்தாலும், சிரிப்பு போலீஸ் சேசிங் காட்சி என ஆங்காங்கே ‘அட போங்கப்பா’ என அலுக்க வைக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக ஒரு சோதனை முயற்சி சினிமாதான் இந்த 'வாழ்'!

'நாம் சந்திக்கும் மனிதர்கள் நம் வாழ்வை மாற்றும் வல்லமை மிக்கவர்கள்' என்ற கனமான கருத்தை படம் உணர்த்துகிறது. ‘வாழ்’ ஒரு அனுபவ சினிமா... சிலருக்கு ரொம்ப பிடிக்கும், சிலருக்கு போரடிக்கும்… சிலருக்கு வலிக்கும்... சிலருக்கு வாழ்வளிக்கும்... நம் 'வாழ்'க்கையும் அப்படித்தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு