Published:Updated:

அசோக் செல்வன் - ஹரிஷ் கல்யாண் சந்திப்பு!

அசோக் செல்வன் - ஹரிஷ் கல்யாண்

``நடிகனா இருந்தா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனுஷனா இருக்கலாம்!'' - அசோக் செல்வன்; ``தியேட்டர்ல கிடைக்கற கைத்தட்டல்தான் என்னை ஹீரோ ஆக்குச்சு!" - ஹரிஷ் கல்யாண்

அசோக் செல்வன் - ஹரிஷ் கல்யாண் சந்திப்பு!

``நடிகனா இருந்தா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனுஷனா இருக்கலாம்!'' - அசோக் செல்வன்; ``தியேட்டர்ல கிடைக்கற கைத்தட்டல்தான் என்னை ஹீரோ ஆக்குச்சு!" - ஹரிஷ் கல்யாண்

Published:Updated:
அசோக் செல்வன் - ஹரிஷ் கல்யாண்

சினிமா

கோலிவுட்டில் வளர்ந்துவரும் இளம் கதாநாயகர்களில் ஹரிஷ் கல்யாணும் அசோக் செல்வனும் முக்கியமானவர்கள். கல்லூரிப் பெண்களின் மோஸ்ட் ஃபேவரைட் கனவுக் கண்ணன்கள். இருவரும் தமிழ், தெலுங்கு என செம பிஸி! சார்மிங் அண்டு ஹேண்ட்ஸம் ஹீரோக்களைச் சந்திக்க வைத்தால் எப்படி இருக்கும்? இருவரையும் தொடர்புகொண்டோம். கேட்டதுமே ஓகே சொல்லி, சந்திப்பை உறுதிசெய்தனர்.

வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ காரில் மாஸாக வேட்டி-சட்டையில் வந்து இறங்கினார் ஹரிஷ் கல்யாண். நீல நிற ஸ்கோடாவில் க்ளாஸாக பேன்ட் ஷர்ட்டுடன் ஹாய் சொல்லியபடி வந்தார் அசோக் செல்வன். ``ஹே மச்சி... எப்படி இருக்க... எப்படிப் போய்க்கிட்டு இருக்கு?'' என இருவரும் கட்டிப்பிடித்து நலம் விசாரித்துக்கொண்டனர். போட்டோ ஷூட் செஷன் செம ஜாலியாக நிறைவுற்றது. ``சரி, என்னெல்லாம் கேட்கப்போறீங்க?'' என ஆர்வத்துடன் பேட்டிக்குத் தயாரானார்கள்.

``முதல் கேள்வி என்ன கேட்பீங்கன்னு நான் சொல்லவா? `எப்போ உங்களுக்குக் கல்யாணம்' அதுதானே?'' என அசோக் ஆரம்பிக்க, ``ஆமா மச்சி... எல்லாப் பேட்டியிலயும் இந்தக் கேள்வியை சந்திக்க வேண்டியதா இருக்கு. நமக்கென்ன அவ்ளோ வயசா ஆகுது?'' என்ற ஹரிஷின் கவுன்ட்டருடன் தொடங்கியது பேட்டி!

``நான் சினிமாவுக்கு வரணும்னு சின்ன வயசுல எல்லாம் யோசிச்சதுகூட இல்லை. ஷங்கர் சார் படங்களுக்கு மட்டும்தான் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போவாங்க. `காதலன்', நான் முதன்முதல்ல பார்த்த படம்'' என்றார் அசோக் செல்வன். ``நான் முதன்முதல்ல பார்த்த படம், ஜென்டில்மேன்'' என்றார் ஹரிஷ்.

``ஹே... சூப்பர்! பார்த்தீங்களா, ரெண்டு பேரும் முதன்முதல்ல ஷங்கர் சார் படம்தான் பார்த்திருக்கோம்'' என ஹைஃபை போட்டுக்கொண்டனர். தொடர்ந்தார் அசோக். ``என் அப்பா தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகர். எப்போவும் எங்க வீட்ல எம்.ஜி.ஆர் பாடல்கள் ஓடிக்கிட்டே இருக்கும்'' என்ற அசோக்கிடம், ``ஹே, எங்க அப்பாவும்தான் மச்சி'' என மீண்டும் ஹைஃபை போட்டுக்கொண்டனர். ``இந்தியன் டீமுக்கு கிரிக்கெட் விளையாடணும்ங்கிறதுதான் என் கனவாகவும் ஆசையாகவும் இருந்தது. சினிமா பத்தின ஆசையேயில்லை. காலேஜ் படிக்கும்போது ஃப்ரெண்ட் உசுப்பேத்திதான் சினிமா ஆசை வந்தது. ஸ்ட்ரீட் தியேட்டர், ஷார்ட் பிலிம்னு நடிச்சு, நடிக்கிறது ரொம்பப் பிடிச்சுப்போய் சின்சியரா சினிமா வாய்ப்புகள் தேட ஆரம்பிச்சேன். மச்சான்... உனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமா ஆசை இருந்திருக்கும்ல?'' என்று அசோக் கேட்க, பதில் சொல்லத் தொடங்கினார் ஹரிஷ் கல்யாண்.

அசோக் செல்வன் - ஹரிஷ் கல்யாண் சந்திப்பு!

``சின்ன வயசுல படம் பார்க்க ரொம்பப் பிடிக்கும். எல்லாப் படத்துக்கும் போயிடுவோம். ரஜினி சார் படம் ரிலீஸானா, மனசுக்குள்ள அவ்வளவு சந்தோஷமா இருக்கும். எங்க வீடு அப்போ ஷூட்டிங் ஹவுஸா இருந்தது. அதனால, நிறைய ஷூட்டிங் பார்த்துப் பழக்கம். அங்க வர்ற ஹீரோக்கள், தியேட்டர்ல ஹீரோக்களுக்குக் கிடைக்கிற கைத்தட்டல்கள், ஸ்கூல் ஸ்டேஜ்ல பர்ஃபார்ம் பண்ணும்போது கிடைக்கிற ஆரவாரம் இதெல்லாம்தான் என்னை சினிமான்னு யோசிக்க வெச்சதுன்னு நினைக்கிறேன். இன்ஜினீயரிங் சேர்ந்து, `இல்ல, இது நமக்கு செட்டாகாது'ன்னு காலேஜ் போறதை நிப்பாட்டிய பிறகு, தீவிரமா சினிமான்னு முயற்சி பண்ண ஆரம்பிச்சேன்'' என்றார். ``மச்சி. காலேஜ் பாதியிலேயே நின்னுட்டியா? நோ டிகிரியா?'' என அசோக், ஹரிஷிடம் கண்ணடித்துக் கேட்க, ``மூணு மாசத்திலேயே நின்னுட்டேன். அதுக்கப்புறம் கரெஸ்ல படிச்சு டிகிரி வாங்கினேன். நீ?'' அசோக்கிடம் ஹரீஷ் கேட்க, ``லயோலாவுல விஸ்காம் படிச்சேன். பட் நோ டிகிரி மச்சி. நமக்கெதுக்கு அதெல்லாம்?'' என்றார் கூலாக.

``ஹீரோவாகிடுவோம்ங்கிற நம்பிக்கை உங்களுக்குள்ள எப்போ வந்தது?'' என்ற கேள்வியைக் கேட்டவுடன், இருவரிடத்திலும் ஓர் அமைதி. ``இப்போவுமே நான் ஹீரோவான்னுதான் தோணுது. ஓகே. நாம ஹீரோவாகுறோம்னு ஒரு மொமன்ட்ல முடிவெடுக்கலை. இது ஒரு ப்ராசஸ்தான்'' என்ற ஹரிஷைத் தொடர்ந்தார் அசோக். ``ஒரு ஃப்ரெண்ட் உசுப்பேத்தினான்னு சொன்னேன்ல அப்போதான். அவன் யாருன்னா, இயக்குநர் ஐ.வி சசி சாருடைய பையன் அனி. இப்போ அவன் இயக்குநர். ஆனா, அப்போ அவனுக்கு நடிகனாகணும்னு ஆசை. `மச்சி நடிகனா இருந்தா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனுஷனா இருக்கலாம்டா'ன்னு சொல்லுவான். `அப்போ நானும் நடிக்கிறேன்டா'ன்னு ஆரம்பிச்சதுதான். நடிக்கணும்னு முடிவெடுத்தவுடனே என்னை நான் ஹீரோவாதான் பார்த்தேன். அவ்வளவு திமிரு. அப்போ எனக்கு 18 வயசுதான். அனிக்கு தெரிஞ்ச ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர்கிட்ட `சார். நடிச்சா ஹீரோ, இல்லைனா வில்லன்தான் சார். மத்ததெல்லாம் வேண்டாம்'னு சொன்னேன். இன்னிக்கு அதை நினைச்சா செம காமெடியா இருக்கு.''

``என்னைக்காவது உங்க பெயரை கூகுள் பண்ணி வீக்கிப்பீடியா பார்த்ததுண்டா?''

``நான் அப்படியேதும் பார்த்ததில்லையே'' என்று ஹரிஷ் சொல்லி முடித்தவுடன், சிரித்துக்கொண்டே கைதூக்கித் தலையாட்டியபடி பேசத் தொடங்கினார் அசோக். ``நான் நிறைய முறை அசோக் செல்வன்னு கூகுள்ல டைப் பண்ணி, என்ன வருதுன்னு தேடிப் பார்த்தேன். நான் சினிமாவுக்கு முயற்சி பண்ணிட்டிருந்த சமயத்திலேயே, அதுல நம்மளைப் பத்தி எதுவும் வராதுன்னு தெரிஞ்சும் அடிக்கடி பார்ப்பேன். நமக்கும் விக்கிப்பீடியா பேஜ் வந்த பிறகு, ரொம்ப சந்தோஷமா இருந்தது'' என்றார்.

என்ன மாதிரியான கதைகளில் நடிக்கவேண்டும், மக்கள் தங்களை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய பேச்சு வந்தது. ``ஒவ்வொரு கதையும் கேட்கும் போதும் நடிக்கும்போதும் மனசுக்குள்ள வர்ற கேள்விகள் இரண்டுதான். ஆடியன்ஸுக்கு இந்தக் கதை பிடிக்குமா, இந்தக் கதையில நான் நடிச்சா ரசிப்பாங்களா அப்படிங்கிறதுதான். அப்புறம், இயக்குநர் நம்மளை நம்புறார். ஆனா, இதை நம்மளால பண்ண முடியுமான்னு கேள்வி வரும். சில சமயம், இயக்குநர் நம்ம மேல வெச்ச நம்பிக்கையில அந்தக் கதைக்குள்ள போயிடுவேன். படம் வெளியாகி அதுக்கான ரெஸ்பான்ஸ் எப்படியிருக்குன்னு வந்த பிறகுதான், ஆடியன்ஸுடைய மனநிலை எப்படியிருக்குன்னு ஓரளவுக்குப் புரியுது. நான் நடிச்சு ஓடின படத்துல என்ன ப்ளஸ், ஓடாத படத்துல என்ன மைனஸ்னு பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டு, அடுத்த படத்துல அதைச் சரிசெஞ்சுக்கறதுதான் என்னுடைய வேலை'' என்று தெளிவாகச் சொன்னார் ஹரிஷ்.

அசோக் செல்வன் - ஹரிஷ் கல்யாண் சந்திப்பு!

``என்னைப் பொறுத்தவரை நான் டெஸ்டிங் பீரியட்ல இருக்கேன்னு தோணுது. அதனால, இப்போது பெரிய ப்ளானெல்லாம் இல்லை. யார்கிட்ட வொர்க் பண்ணினா என்ன கத்துக்கலாம்னுதான் ட்ராவல் பண்ணிக்கிட்டிருக்கேன். எனக்கு இன்னும் கத்துக்காத மாதிரியே ஒரு உணர்வு இருக்கு. இந்த ஜானர், இந்த மாதிரி படம் நமக்கு செட்டாகுதான்னு பரிசோதனை முயற்சியிலதான் இருக்கேன்'' என்று தன் மனநிலையை வெளிப்படுத்தினார் அசோக்.

``பரிசோதனை முயற்சி, டெஸ்டிங்னு சொல்றாப்ள. அசோக் மண்டைக்குள்ள ஒரு கெமிஸ்ட்ரி லேப் இருக்கும் போலயே'' என்ற ஹரிஷ் தொடர்ந்தார். ``அசோக் சொன்ன மாதிரி, எக்ஸ்ப்ளோர் பண்ண வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கு. சினிமாங்கிறது ஒரு கடல்தானே!''

ரசிகர்கள் பற்றிய கேள்வி வர, அசோக் ஆரம்பித்தார். ``ஹரிஷ் ஃபேன்ஸ் எனக்கு போன் பண்ணி, `என் தலைவன் ஹரிஷ் கல்யாணுடைய பிறந்தநாளுக்கு உங்க ட்விட்டர் பேஜ்ல அவருக்கான காமன் டி.பியை ரிலீஸ் பண்ணுங்க'ன்னு கேட்டிருக்காங்க. பயங்கர ரசிகர்கள் இருக்காங்க ஹரிஷுக்கு'' என்றவுடன், ``உண்மையாவே ரசிகர்களின் அன்பு நம்மளை அப்படி நெகிழவைக்கும். அம்மாவின் அன்புக்கு நிகரா ரசிகர்களின் அன்பைப் பார்க்கிறேன். என்னை நேசிக்கிற விரும்புற என் ரசிகர்களுக்கு அன்பும் முத்தங்களும்'' என்று ஃப்ளையிங் கிஸ்களைப் பறக்கவிட்டார் ஹரிஷ்.

``ஹரிஷ் சொன்ன மாதிரி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மகிட்ட காட்டுற அன்பு தனி ஃபீல்தான். நான் கொஞ்ச காலம் படம் பண்ணாமல் மனதளவுல ரொம்ப டவுனா இருந்தேன். அப்போ கிடைச்ச ஆறுதல் ரசிகர்களின் அன்பு மட்டும்தான். அவங்களுக்காக உழைக்கணும்னு தோணுது. ரசிகர்களுக்கு என்னுடைய மனமார்ந்த அன்பும் முத்தங்களும்'' என்று மாறி மாறி தங்களின் ரசிகர்களுக்கு அன்பைக் கொட்டினர்.

``உங்க கரியரின் டர்னிங் பாயின்ட்னு எதைச் சொல்வீங்க?'' என்று கேட்டோம்.

``எனக்கு பிரேக் கொடுத்தது `தெகிடி.' டர்னிங் பாயின்ட் `ஓ மை கடவுளே'தான். அதுல வர்ற மாதிரியே என் கரியரின் செகன்ட் இன்னிங்ஸ் அந்தப் படத்துல ஆரம்பமாச்சு'' என்றார் அசோக் செல்வன்.

``எனக்கு பிக்பாஸும் `பியார் பிரேமா காதல்' படமும்தான்'' என்ற ஹரிஷை இடைமறித்த அசோக், ``நான் `பியார் பிரேமா காதல்' தியேட்டர்ல பார்க்கும்போது பின்னாடி சீட்ல செம சத்தம். எல்லோரும் பொண்ணுங்க. செமயா என்ஜாய் பண்ணிப் படம் பார்த்தாங்க'' என்றார்.

``ஹரிஷுடைய எந்தப் படத்துல அசோக்கும், அசோக்குடைய எந்தப் படத்துல ஹரிஷும் நடிக்கணும்னு நினைக்கிறீங்க?'' என்று கேட்டோம்.

``எனக்கு `பியார் பிரேமா காதல்' '' என அசோக் செல்வனும், ``எனக்கு `ஓ மை கடவுளே' '' என ஹரிஷ் கல்யாணும் இன்ஸ்டன்ட் பதில் கொடுத்தனர். ``மச்சி, `பியார் பிரேமா காதல் 2'ல நீயும், `ஓ மை கடவுளே 2'ல நானும் நடிச்சா எப்படி இருக்கும்?'' என ஹரிஷ் கேட்க, ``சூப்பரா இருக்கும் மச்சி. பண்ணிடலாமா?'' என ஹைஃபை போட்டுக்கொண்டார் அசோக்.

``ஆரம்பத்துல இருந்தே வீட்ல சினிமாவுக்குப் போகணும்ங்கிற என்னுடைய விருப்பத்துக்கு ஆதரவு கொடுத்திருக்காங்க. எந்தப் படமும் இல்லாமல் இருந்த சமயத்திலும் தோல்விகளிலும் என்கூட இருந்திருக்காங்க. எப்போவும் இருப்பாங்க. இப்படி அப்பா அம்மா கிடைச்சது என் ஆசீர்வாதம்'' என்று ஹரிஷ் எமோஷனலாகச் சொல்லி முடித்தவுடன், தொடர்ந்தார் அசோக். ``நான் சினிமாவுக்குப் போகணும்னு சொன்னவுடன் வீட்ல வேண்டாம்னு பயந்தாங்க. எனக்கு யாரையும் அந்தத் துறையில தெரியாது. நம்மளாலும் படத்தைத் தயாரிக்க முடியாது. வேற எதாவது பண்ணலாமேன்னு அப்பா சொன்னார். `ஒரு கட்டத்துல ஆறு மாசம் டைம் உனக்கு'ன்னு கெடு கொடுத்தாங்க. அதை அஞ்சு வருஷமா எடுத்துக்கிட்டேன். இப்போ ரொம்ப சப்போர்ட்டா இருக்காங்க. என் அக்காவை `ஓ மை கடவுளே' பண்ணும்போது தயாரிப்புக்கு இழுத்துட்டேன். இப்போ குடும்பமே எனக்குப் பக்கபலமா இருக்கு'' என்றார் அசோக் செல்வன்.

அசோக் செல்வன் - ஹரிஷ் கல்யாண் சந்திப்பு!

``என் படத்துடைய ரிலீஸ் நாளின்போது, வீடே கல்யாண வீடு மாதிரி அவ்ளோ பரபரப்பா இருக்கும். அந்தப் பரபரப்புக்கு நான்தான் காரணமா இருப்பேன். உங்க வீட்ல எப்படி மச்சி?'' ஹரிஷ் கேள்விக்கு பதில் சொன்னார் அசோக். ``என் வீட்ல எல்லோரும் ரொம்ப சில். `எத்தனை மணிக்கு ஷோ?', `ம்ம்... நல்லாயிருந்துச்சுப்பா' அவ்ளோதான்.''

இப்போ இருக்கிற இளம் ஹீரோக்களை எந்த விஷயம் தயாரிப்பை நோக்கித் தள்ளுது? ``நான் நடிச்ச `ஓ மை கடவுளே' கதையை எந்தத் தயாரிப்பாளரும் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதனால, `Happy High'னு ஒரு கம்பெனி ஆரம்பிச்சு நானும் அக்காவும் படத்தைத் தயாரிச்சோம். படம் தயாரிச்சு நிறைய காசு பார்க்கலாம்னு எடுத்த முடிவு இல்லை இது. `இந்தக் கதையில நடிக்கணும். யாரும் தயாரிக்க முன்வரலை. நம்மளே பண்ணலாம்...' அவ்ளோதான். இங்க நிறைய ஹீரோக்கள் அப்படித்தான் தயாரிப்பாளர்கள் ஆகுறாங்கன்னு நினைக்கிறேன். நமக்குக் கதை கேட்கும்போது இது வொர்க் அவுட்டாகும்னு ரொம்ப நல்லாத் தெரியுது. ஆனா, மத்தவங்க தயாரிக்க முன்வரலைன்னா என்ன பண்றது, நம்மளே இறங்கிட வேண்டியதுதான்'' என்ற அசோக் செல்வனைத் தொடர்ந்தார், ஹரிஷ் கல்யாண். ``எனக்கு அசோக் சொன்ன மாதிரி இந்தக் கதையை நாம பண்ணணும்னு தோணியிருக்கு. ஆனா, தயாரிப்பாளர்கள் அமையல. ஆனா, அந்தப் படத்தை எடுத்துத் தயாரிக்கிற அளவுக்கு தைரியம் இருக்கான்னு தெரியலை. அந்த இயக்குநர்கள் எல்லாம் என்ன பண்றாங்கன்னுகூடத் தெரியலை.''

``சினிமாவில் உங்க மென்டர் யார்?''

``விஜய் சேதுபதி அண்ணன் என்னுடைய மென்டர். நான் பொதுவா அட்வைஸ் எல்லாம் எடுத்துக்கமாட்டேன். ஆனா, அவர் ஏதாவது சொன்னா கேட்பேன். காரணம், அவர் பர்சனல் அனுபவத்துல இருந்து எடுத்துச் சொல்லுவார். நான் நல்லா வரணும்னு ஆசைப்படுற மனுஷன்'' என்ற அசோக்கின் பதிலைத் தொடர்ந்து, ஹரிஷ் ஆரம்பித்தார். ``எனக்கு மென்டர்னா, தேவான்னு ஒரு ஃப்ரெண்ட் இருக்கார். எனக்கு சினிமா, பர்சனல் லைஃப்னு எல்லாத்துலயும் எனக்கு உறுதுணையா இருக்கிறவர். எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தாலோ, டபுள் மைண்டடா இருந்தாலோ இவர்கிட்டதான் கேட்பேன்.''

சினிமாவில் தனக்கான மார்க்கெட், பிசினஸ் பற்றிய கேள்வி வர, ``அசோக்தான் புரொட்யூசர். அவர்கிட்ட கேளுங்க'' என அசோக்கைக் கைகாட்டினார், ஹரிஷ். ``சினிமா பிசினஸ் முழுமையா புரியமாட்டிங்குது. நமக்கான மார்க்கெட் என்னன்னு தெரிஞ்சு படம் பண்றது நல்ல விஷயம். நடிகராவும் தயாரிப்பாளராவும் இருக்கிறதுல சின்ன சிக்கல் இருக்கு. எல்லாத்தையும் பிசினஸா, பணமா பார்க்கிற மாதிரி சூழல் வந்திடுது. யாரைப் பார்த்தாலும் `இவங்களுக்கு இன்னைக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கணும்'னே தோணுது. அதனால, இனிமே இந்த பிசினஸ் நம்பருக்குள்ள வரலைன்னு அக்காகிட்ட சொல்லிட்டேன். ஒரு ஹீரோ தன் பிசினஸ் பத்தித் தெரிஞ்சுக்கணும். அதே சமயம், அதுக்குள்ள ஆழமா போகக்கூடாது.''

``என்னைப் பொறுத்தவரை நம்மளை நம்பிப் பணம் போடுற தயாரிப்பாளருக்கும் விநியோகம் பண்ற விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள் எல்லோருக்கும் லாபம் வரணும். அதுக்கு எவ்வளவு நேர்மையா உழைக்க முடியுமோ உழைக்கணும், அவ்ளோதான்'' என்றார் ஹரிஷ் கல்யாண்.

அசோக் செல்வன் - ஹரிஷ் கல்யாண் சந்திப்பு!

சினிமா பற்றிய ஒரு கேள்வி, பர்சனல் லைஃப் பற்றிய ஒரு கேள்வி ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுத்தோம். ``முதல்ல நான் ஆரம்பிக்கிறேன். என்ன மாதிரியான கரியர் உனக்கு இருக்கணும்னு ஆசைப்படுற? மக்களுக்காக மட்டுமே பண்ற படம், கலைக்காக பண்ற படம், ரெண்டையும் ஒரு கட்டத்துல பேலன்ஸ் பண்ணணும்னு ஆசையா இருக்கும். உனக்கு எப்படி? எனக்குள்ள நிறைய முறை இந்தக் கேள்வி தோணிக்கிட்டே இருக்கு. அதனால உன்கிட்ட கேட்கிறேன்'' என்றார் அசோக். ``நடுவுலதான் இருக்கணும்னு நினைக்கிறேன். மக்களுக்காகத்தான் படம் பண்றோம். அதுல நாம விரும்புற விஷயங்களையும் பண்ணணும்'' என்றார் ஹரிஷ். ``எனக்கு அப்படித்தான் தோணுது மச்சான். ஆனா, அந்த பேலன்ஸைப் பிடிக்கிறதுதான் ரொம்ப கஷ்டம். சரி அடுத்த கேள்வி. இப்போ டேட் பண்ணிக்கிட்டு இருக்க?'' என அசோக் கேட்க, ``நிஜமா யாரையும் டேட் பண்ணலை மச்சி'' என்றார். ``மச்சான்... என் கண்ணைப் பார்த்துச் சொல்லு'' என அசோக் மீண்டும் கேட்க, ``உன் கண்ணு, கேமரா கண்ணு, சுதர்சன் கண்ணுன்னு எல்லோருடைய கண்ணையும் பார்த்துச் சொல்றேன். நிஜமா யாரையும் டேட் பண்ணலை'' என்றார் உறுதியாக.

``அசோக்... கல்யாணம் பத்தின உன்னுடைய பார்வை என்ன? எப்போ கல்யாணம் பண்ணப்போற?'' என்ற ஹரிஷின் கேள்விக்குத் தயங்காமல் பதில் சொன்னார் அசோக் செல்வன். ``எனக்கு கல்யாணம்ங்கிறது ரொம்ப கஷ்டம்னு தோணுது. இன்னும் ஒரு வருஷத்துக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு எந்தத் திட்டமும் இல்லை. எனக்குத் தோணுச்சுனா, எப்போ வேணாலும் பண்ணிக்குவேன். தோணலைன்னா, பண்ணிக்காமலேகூட இருந்திடுவேன். இதுதான் கல்யாணத்தைப் பத்தி என்னுடைய மைண்ட்செட்.''

``சூப்பர். சினிமாவுக்கு வரலைன்னா என்ன ஆகியிருப்ப?'' என்று கேட்டவுடன், ``ஸ்கை டைவிங் இன்ஸ்டரக்டராகியிருப்பேன். நான் அடுத்து அது தொடர்பா ஒரு சர்ட்டிபிகேட் கோர்ஸ் பண்ணப்போறேன். ரெண்டு மூணுமுறை ஸ்கை டைவிங் பண்ணினேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. நான் அட்வெஞ்சர் விரும்பி'' என்று ஆச்சர்யப்படுத்தினார் அசோக் செல்வன்.

ஆசைகள் பற்றிப் பேச்சு வந்தது. ``பைக் ட்ராவல் பண்ணணும்னு ஆசை. பைக் வாங்கித் தாங்கன்னு ரொம்ப வருஷமா கேட்டுக்கிட்டிருக்கேன். பாதுகாப்பு இல்லைன்னு எங்க வீட்ல தயங்கறாங்க. நம்மளே முடிவெடுக்கிற ஸ்டேஜ் வரும்போது வாங்கணும்'' என்ற ஹரிஷை இடைமறித்த அசோக், ``ஹே... இன்னும் சின்னப் பையனாவே உன்னை நினைச்சுட்டிருக்கியா? நமக்கு வயசாகிடுச்சு மச்சி'' என்று கவுன்டர் கொடுக்க, இருவர் முகத்திலும் அப்படியொரு சிரிப்பு. ``சரி உனக்கு என்ன ஆசை சொல்லு'' என்று ஹரிஷ் கல்யாண், அசோக் செல்வனிடம் கேட்க, ``எனக்கு பெசன்ட் நகர், ஈ.சி.ஆர், போட் கிளப்ல ஒரு நல்ல வீடு வாங்கணும் மச்சி, அவ்ளோதான்'' என்றார்.

சிறு வயது க்ரஷ், செலிபிரிட்டி க்ரஷ் சொல்லுங்களேன் என்று கேட்க, ``எனக்கு சின்ன வயசுல சானியா மிர்சா, குஷ்பு மேம் ரெண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும். இப்போ கேட்டா, இந்திய கிரிக்கெட்டர் ஸ்மிருதி மந்தனாவைப் பிடிக்கும்'' என்ற அசோக்கைத் தொடர்ந்தார் ஹரிஷ் கல்யாண். ``எனக்கு ஜோ மேம் ரொம்பப் பிடிக்கும். இப்போ க்ரஷ்னா, ராஷ்மிகா மந்தனா.''

``டேட்டிங் ஆப்ல உங்களுக்கான பயோவை எப்படி வைப்பீங்க?'' என்றோம். ``அந்த மாதிரி ஆப் இதுவரை பயன்படுத்தினது இல்லை. அப்படி இருந்தால், `பாசிட்டிவான நபர், சில நேரங்களில் சோம்பேறி, சில விஷயங்கள்ல ரொம்ப ரிலாக்ஸ், சில விஷயங்கள்ல டென்ஷன், எனக்குள்ளேயே ரெண்டு எக்ஸ்ட்ரீம் இருக்கு. கோவம் கொஞ்சம் அதிகம்' இதுதான் என் பயோ'' என்ற ஹரிஷைத் தொடர்ந்தார், அசோக். ``அட்வெஞ்சரிஸ்ட். ஓவர் திங்கிங் பண்ணாத நபர்'' என்று யோசிக்கையில, ``Saturday நைட் ஸ்கை டைவிங் போகலாம் வர்றீயா?'ன்னு வெச்சுக்கோ மச்சான். உனக்கு கரெக்டா இருக்கும்'' என ஹரிஷ் எடுத்துக்கொடுக்க, ``சூப்பர்... அதுதாங்க என் பயோ.''

``சினிமாத் துறையில நீங்க அடைய நினைக்கிற இடம் என்ன?''

``எனக்கான இடம் ஒண்ணு இருக்கு. அதை அடையணும்னு நினைக்கிறேன். அது எப்போ எப்படின்னு எனக்குத் தெரியாது. கடவுள்விட்ட வழி'' என ஹரிஷ் முடிக்க, அசோக் சொல்ல ஆரம்பிக்கிறார். ``நான் வந்த இடத்துல இருந்து பார்த்தால் இதுவே எனக்கு சாதனைதான். இதுக்குப் பிறகு, போனஸ்தான். இந்த ப்ராசஸை என்ஜாய் பண்ணணும். நிறைய கத்துக்கணும், நல்ல படங்கள் பண்ணணும், ஜாலியா இருக்கணும், அவ்ளோதான். நான் நடிக்கிற தமிழ்ப் படத்தை சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்குக் கொண்டு போகணும்னு ஆசை இருக்கு. `சில சமயங்களில்'னு ஒரு படம் நடிச்சேன். அது கோல்டன் குளோப் டாப் 10-ல வந்தது. அமெரிக்காவுல ஜூரியுடன் படத்தைப் பார்த்தேன். அவங்களுக்குத் தமிழ்னா தெரியலை. இந்திப் படம்னு நினைச்சுட்டு இருந்தாங்க. ரொம்ப கஷ்டமா இருந்தது. அதனாலதான் எனக்கு அந்த ஆசை வந்தது.''

``இந்தப் பேட்டியைப் பார்த்துட்டு உங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு படம் பண்ண கதை வந்தால், என்ன மாதிரியான கதையா இருந்தால் நல்லாருக்கும்?''

``காலேஜ் ஸ்டோரி'' என்று ஒரே நேரத்தில் இருவரிடமிருந்தும் பதில் வந்தது. இளம் இயக்குநர்களே, நோட் பண்ணுங்கப்பா!

``ரெண்டு பேரும் எங்கேயாவது பார்த்தால் ஹாய் பை ஃப்ரண்ட்ஸ்தான். ஆனா, இந்தப் பேட்டி மூலமா ரொம்ப நெருக்கமான மாதிரி உணர்வு கிடைச்சிருக்கு. ஓகே ஹரிஷ்... கிரிக்கெட் விளையாடும்போது கூப்பிடு வர்றேன்.'' ``நீயும்தான் மச்சி. அடிக்கடி மீட் பண்ணலாம்'' என்று இருவரும் நமக்கு பை பை சொல்லி விடைபெற்றனர்.