பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: அசுரன்

அசுரன்
பிரீமியம் ஸ்டோரி
News
அசுரன்

‘நிலம் எங்கள் உரிமை; கல்வி எங்கள் ஆயுதம்; சுயமரியாதை எங்கள் வேட்கை;

திகாரத்தில் பங்கு எங்கள் கோரிக்கை’ என, பொட்டில் அறைந்து அரசியல் பேசும் வெக்கைப் பரப்பு மனிதர்களின் வாழ்க்கையே ‘அசுரன்.’

அசுரன்
அசுரன்

‘காடுண்டு தானுண்டு’ என சாதுவாய் வாழும் சம்சாரி சிவசாமி. ‘வடக்கூரான்’ என்றழைக்கப்படும் அண்டை ஊர் முதலாளி நரசிம்மன், சிவசாமியின் காட்டைச் சுற்றியிருக்கும் எல்லா வயல்களையும் வளைத்துப்போடுகிறார். எஞ்சி நிற்கும் சிவசாமியின் காடும் அவர் கண்களை உறுத்த, தொடங்குகிறது ஓர் எளிய குடும்பத்தின் போராட்டங்கள் நிறைந்த ரத்த சரித்திரம். ஒரு கொலை, ஒரு பழிவாங்கல், தேடல் வேட்டை, கனமான பின்கதை இவற்றினூடாக உரிமைக்காக உரத்த குரல் எழுப்பி உறவுகளை இழந்தவன், சமகாலத்தில் அடங்கிக்கிடந்து ‘அசுரன்’ ஆவதே மிச்சக்கதை.

சிவசாமியாக தனுஷ். தொடக்கக் காட்சிகளில் வயதுமுதிர்ந்தவராய் தனுஷை ஒப்புக்கொள்ள மறுக்கிறது மனம். ஆனால் போகப்போக தன் உடல்மொழியால் முதிர்ச்சியும் நிதானமும் கொண்ட தந்தையாய் மனதின்மீது ஏறி அமர்கிறார். ஊர்க்காரர்கள் காலில் விழுந்து திரும்பும்போது தளர்நடை, அத்தனை போதையிலும், காவல்நிலையத்தில் அடிபட்டுத் திரும்பும் தன் மகனைப் பார்த்துத் துள்ளலுடன் எழும் தருணம், முன்கதை அறியாது திட்டும் இளைய மகனின் அவமானப்படுத்தும் வசவுகளைப் பொருட்படுத்தாத தன்மை, படமெடுக்கும் நாகத்தைப்போல தேவையான தருணங்களில் திமிறியெழும் வீரம், சாதியத் தந்திரத்தின் நுட்பம் அறியும்போது எழும் கோபம் என நடிப்பு அசுரனாக தனுஷ். அன்பில், காதலில், அவமானத்தில், போதையில், கோபத்தில் என தனுஷின் கண்கள் காட்டும் உணர்ச்சிகள், நடிப்புக்கான பாடத்திட்டம்.

Dhanush,  Manju Warrier
Dhanush, Manju Warrier

மஞ்சு வாரியர்... காத்திருந்து கிடைத்த பெருமைக்குரிய அறிமுகம். மலையாளத்து வாடை அடிக்கும் வட்டாரமொழி ஒரு பலவீனம்தான். ஆனால், தன் குட்டிக் குட்டி முகபாவனைகளால் அதைச் சமன் செய்கிறார். மகன் திரும்புவான் என்ற தாயின் காத்திருப்பையும் பரிதவிப்பையும் நமக்கும் கடத்துகிறார். பாசக்கார மாமனாய் வாழ்ந்திருக்கிறார் பசுபதி. மூத்தவன் முருகனாய் வரும் டீஜே அருணாசலம் கோபக்கார இளைஞர்களின் குறியீடு. வசனங்களிலும் உடல்மொழிகளிலும் இளமைத்துடிப்பை இறக்கிவைத்திருக்கிறார். ஆனால் பாவம், உதட்டசைவுகளுடன் ஒட்டாத டப்பிங் சொதப்பல் உறுத்துகிறது. சிதம்பரம் கதாபாத்திரத்தைத் தன் சின்னத் தோள்களில் தூக்கிச் சுமந்திருக்கிறார் கென். ‘செவல செத்துட்டா செவப்பி, அண்ணன் செத்துட்டா நான்னு அப்படியே இருக்கப்போறீ யாம்மா?’ என மருகும் இடம் தமிழ்சினிமாவில் கென்னுக்கான அறிமுக அட்டை. இன்னும் பல உயரங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன கென்!

பஞ்சமி நிலமீட்புக்கான உரிமைவிதையை ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் விதைக்கும் வழக்குரைஞர் பாத்திரத்துக்கு அடர்த்தி கூட்டியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். நில அபகரிப்பு முதலாளி வடக்கூரானாய் ‘ஆடுகளம்’ நரேன். தியேட்டர் கழிவறையில் அவமானப்படும் காட்சியில் அழுத்தமான நடிப்பைப் பதிவுசெய்தி ருக்கிறார்.

இறுக்கமான இரண்டாம்பாதியின் நெகிழும் முனை ‘அம்மு அபிராமி.’ குறுகுறு கண்களால் குறும்புசெய்து இறுதியில் கனம் கடத்துகிறார். ஏ.வெங்கடேஷும், நித்திஷ் வீராவும், பவனும் சாதியப் படிநிலையின் கோரமுகத்தைப் பட்டவர்த்தனமாய்க் காட்டி, பார்ப்பவர்களைப் பதறவைக்கிறார்கள். போலீஸாக பாலாஜி சக்திவேல், போராளியாக சுப்ரமணிய சிவா எனப் பொருத்தமான தேர்வுகள்!

யதார்த்தமான மனிதர்களில் தொடங்கி புழுதிமணலைத் தொட்டு இறுதியாக ஹீரோயிசத்தை எட்டிப்பிடிக்கிறது ஜி.வி பிரகாஷின் இசை. நிலத்துச் சூட்டை அப்படியே நம் உடலுக்குக் கடத்துகிறது வேல்ராஜின் கேமரா. ஜாக்கியின் கலைவண்ணத்தில் வீடுகளும் கதை சொல்கின்றன. கால வித்தியாசங்களை கண்முன் நிறுத்துகிறது பெருமாள் செல்வத்தின் ஆடை வடிவமைப்பு. பீட்டர் ஹெயினின் சண்டைக்காட்சிகள் பதற்றம் கூட்டுகின்றன.

அசுரன்
அசுரன்

நாவலைப் படமாக மாற்றுவது எல்லோருக்கும் கைவராத மாயக்கலை. அதில் தான் வித்தகன் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறார் வெற்றிமாறன். நாவலின் மையக்கரு சிதையாமல் அதை சுவாரஸ்யமான அரசியல் சினிமாவாக்கி, பஞ்சமி நில அரசியலை முன்வைத்து, தவிர்க்கமுடியாத படைப்பாக கண்முன் நிறுத்துகிறார். ஆனால், அதை முழுமையான படைப்பாகக் கருதமுடியாததற்கு முக்கிய காரணம் டப்பிங், ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவற்றில் எக்கச்சக்கமாய் நிகழ்ந்திருக்கும் தொழில்நுட்பச் சொதப்பல்கள்.

வெற்றிமாறன் படம் என்றாலே அரசியலும் அழகியலும் தொழில்நுட்ப நேர்த்தியும் கைகோத்து நிகழ்த்தும் கலைப்படைப்பு என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்களிடம் இருக்கும். ஆனால், இத்தனை தொழில்நுட்பக் குளறுபடிகள் ரசிகர்கள்மீது காட்டப்படும் அலட்சியம் என்றே கொள்ள வேண்டும். கதைக்களமே வன்முறைக்களம் என்றாலும், நம் முகத்தில் ரத்தக்கறை அப்பும் அளவுக்கான வன்முறைக்காட்சிகள் அதிகம்.

வயலில் திருடப் போகிறவர்களைச் செருப்பை வைத்தே அடையாளம் காணும் சிவசாமி, ஆதிக்கத் திமிருக்கு எதிராய் ஆயுதமாகும் மூத்த மகனின் செருப்பு, சூழலின் ஆபத்தை மறந்து மலைமீது அயர்ந்து உறங்கும் மகன் சிதம்பரத்தை எழுப்பும் அப்பாவின் செருப்புச்சத்தம் என முதல்பாதியில் பதியும் செருப்புச்சுவடு களுக்குப் பின்னால் இரண்டாம் பாதியில் ஒரு சுயமரியாதைக் கதை இருப்பது வெற்றிமாறனின் முத்திரை. “நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுங்க; ரூபா இருந்தா பிடுங்கிக்கிடுவானுங்க; படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது” என்ற வரிகளின் பின்னால் உள்ள விடுதலை அரசியலும், “அதிகாரத்துக்குப் போ. ஆனா அவங்க நமக்குப் பண்ணுனதை நீ யாருக்கும் பண்ணாதே” என்ற வரிகளின் பின்னால் உள்ள பகைமறப்பு அறமும் ‘`இது நமக்கான அசுரன்’’ என்று சொல்லவைக்கின்றன.