Published:Updated:

கோடம்பாக்கத்தின் லேண்ட்மார்க்.... ஏ.வி.எம். உலக உருண்டையின் கதை!

இந்தியாவின் மிகப் பழைமையான, இன்றும் இயக்கத்திலிருக்கும் படத்தயாரிப்புக்கூடமான ஏவி.எம்மின் வானுயர வளர்ந்திருக்கும் வாசல்தான் தமிழ் சினிமாவின் இந்த அடையாளத்தைத் தாங்கி நிற்கின்றது.

Globe at AVM Studios
Globe at AVM Studios

பரந்துவிரிந்து அடர்த்தியாக வளர்ந்திருக்கும் சென்னையின் அந்தச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் சென்று வருகிறார்கள். இந்தப் பெருநகரத்தின் இரண்டு முக்கியமான பகுதிகளை இணைக்கும் அந்தச் சாலை, பல திரைமுகங்களின் அன்றாடக் கூடாரம். ஏன், இன்னும் சொல்லப்போனால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் அடையாளம் ஒன்றை ஏந்திவருகிறது இந்த நீண்டநெடும் சாலை.

கோடம்பாக்கத்தின் லேண்ட்மார்க்....  ஏ.வி.எம். உலக உருண்டையின் கதை!

இந்தியாவின் மிகப் பழைமையான, இன்றும் இயக்கத்திலிருக்கும் படத்தயாரிப்புக்கூடமான ஏவி.எம்மின் வானுயர வளர்ந்திருக்கும் வாசல்தான் தமிழ் சினிமாவின் இந்த அடையாளத்தைத் தாங்கி நிற்கிறது. கோடம்பாக்கத்தையும் சாலிகிராமத்தையும் இணைக்கும் இந்தச் சாலையில் வடபழனியின் ஒரு புள்ளியில் நின்று சற்று அண்ணாந்துப் பார்த்தால் தமிழ்த் திரையுலகம் 80 ஆண்டுகளுக்கும் மேலாக எப்படிச் சுழன்றுகொண்டிருக்கிறது என ஏவி.எம்மின் இந்த உலக உருண்டை வடிவில் தெரியும்.

1960-களின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட இந்த உலக உருண்டை பலத் திரைப்படங்களில் காட்டப்பட்டுள்ளது. "இந்த உலக உருண்டையப் பார்க்கும்போது தமிழ் சினிமாவையே மொத்தமா பார்த்தமாதிரிதான்" என்கிறார் உதவி இயக்குநராகப் பணிபுரியும் தமிழரசன்.

கோடம்பாக்கத்தின் லேண்ட்மார்க்....  ஏ.வி.எம். உலக உருண்டையின் கதை!

தமிழரசனைப்போல் வடபழனியில் வந்து ஆயிரம் சினிமா கனவுகளோடு இறங்கும் லட்சக் கணக்கானோருக்கு கண்டவுடன் உற்சாகம் தருவது இந்த உலக உருண்டை என்பது மறுக்க முடியாத உண்மை. "சினிமா உலகமே இந்த உலக உருண்டை மாதிரிதான் நிற்காம சுத்திக்கிட்டு இருக்கும். அதுவே ஒரு அடையாளம்தான்" என்கிறார் உதவி இயக்குநர் விஜய்சங்கர்.

அந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு சினிமா என்றாலே ஏவி.எம் தான், ஏவி.எம் என்றாலே இந்த உலக உருண்டைதான். ’நீங்க எத்தன வருஷமா இங்கே தங்கியிருக்கீங்க, எத்தன வருஷமா இந்த உலக உருண்டையப் பார்க்குறீங்க’ என வடபழனி பகுதிவாசி ஒருவரிடம் கேட்டபோது, "நாங்க மூணு தலைமுறையா இங்கதான் இருக்கோம். எனக்கு 40 வயசாகுது. நான் பொறந்ததுல இருந்தே இதைப் பார்த்துட்டுதான் இருக்கேன்.

கோடம்பாக்கத்தின் லேண்ட்மார்க்....  ஏ.வி.எம். உலக உருண்டையின் கதை!

அப்போதெல்லாம் இந்த உலக உருண்டை ஸ்டூடியோவுக்கு உள்ளே இருந்த வாசல் கிட்ட இருக்கும். அதுக்குப் பிறகு ரெண்டு தடவ இடம் மாத்திட்டாங்க. ஸ்கூல் விட்டு வரும்போது நாங்க அங்கேதான் விளையாடுவோம். அது நிக்காம எப்படி சுத்திக்கிட்டே இருக்குன்னு யோசிச்சு அந்தத் தூணைச் சுற்றி வந்திருக்கோம். நாங்க நிறைய தேடித் தேடிப்பார்த்தும் அது எப்படி சுத்துதுன்னே கடைசி வரக் கண்டுபுடிக்க முடியல" என்றார்.

தொடர்ந்து அந்த உலக உருண்டை குறித்து ஏவி.எம் தொடர்புடைய சிலரிடம் கேட்டோம். "நான் ஏவி.எம்முக்குத் தண்ணீர் கேன், சாப்பாடு சப்ளை பண்ணுறேன். கிட்டத்தட்ட 20 வருஷமா பண்ணுறேன். அந்த உலக உருண்டையப் பார்த்தாலே ஒரு நம்பிக்கை வரும். நம்ம வாழ்க்கை மாதிரி சுத்திக்கிட்டே இருக்குதுல" என்றார்.

கோடம்பாக்கத்தின் லேண்ட்மார்க்....  ஏ.வி.எம். உலக உருண்டையின் கதை!

வடபழனி மக்கள் இதை ஒரு புராதனச் சின்னமாகவே பார்க்கிறார்கள். ஆனால், பலருக்கு இதன் வரலாற்றுப் பின்னணி தெரியவில்லை. ஏன், பல சினிமாக்காரர்களுக்கே தெரியவில்லை. அதனால், இதுகுறித்து ஏவி.எம்.சரவணனிடமே கேட்டுவிடலாம் என அவரை நாடினோம்.

"ஏ.வி.எம் ஸ்டூடியோ ஆரம்பத்துல காரைக்குடியில இருந்தது. அங்க ஒரு சின்ன விபத்து நடந்தது. ஏற்கெனவே அந்தச் சமயத்துல காரைக்குடியில இருந்து சென்னைக்கு ஸ்டூடியோவை மாத்தலாமானு யோசிச்சிட்டு இருந்தோம். முதல்ல சென்னை ஸ்டூடியோவுக்கு பவர் சப்ளை இல்லாம இருந்தது. அதனால வர முடியாம இருந்தது. அப்புறம் சென்னை ஸ்டூடியோவுக்கு கரன்ட் சப்ளை கிடைச்சது. உடனே சென்னைக்கு மாத்திட்டோம். அது மாத்தி சில வருஷத்துலதான் இந்த ஐடியாவும் வந்தது. எங்க ஆர்ட் டிப்பார்ட்மென்ட்தான் அதை முழுசா டிசைன் பண்ணுனது. அப்புறம் பாம்பேல அந்த டிசைனைக் கொடுத்து இந்த உலக உருண்டைய செஞ்சோம்" என ரத்தினச் சுருக்கமாக வரலாற்றை விவரித்தார் சரவணன்.

கோடம்பாக்கத்தின் லேண்ட்மார்க்....  ஏ.வி.எம். உலக உருண்டையின் கதை!

அதற்கென தனி மின் இணைப்பு, அதில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டாலும்கூட நிற்காமல் சுற்றவைக்க ஒரு ஜெனரேட்டர் எனத் தனி கவனம் செலுத்துகிறது ஏவி.எம் நிர்வாகம். "அது மொத்தமாகவே ஒரு சென்டிமென்ட். சொத்துப் பிரியும்போது, ஸ்டூடியோவோட வாசலைப் பிரிச்சு கட்டும்போதுகூட இந்த உலக உருண்டை கண்டிப்பா வாசல்ல இருக்கணும்னு மாத்தி வச்சோம். அப்படி மாத்தும்போதுதான் அதோட ஸ்விட்ச் போர்டுகூட அதுக்குக் கீழயே உள்ள பில்லர்ல ஒரு ரூம் கட்டி அதுல வச்சிருக்கோம்" என்று முடித்தார் ஏவி.எம்.சரவணன்.