Published:Updated:

Bachelor - சினிமா விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ் - திவ்யபாரதி
பிரீமியம் ஸ்டோரி
ஜி.வி.பிரகாஷ் - திவ்யபாரதி

அறிமுக நாயகி திவ்யபாரதி கோபம், குழப்பம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் ஈர்த்தாலும் அதற்கான வாய்ப்புகள் படத்தில் மிகக்குறைவு.

Bachelor - சினிமா விமர்சனம்

அறிமுக நாயகி திவ்யபாரதி கோபம், குழப்பம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் ஈர்த்தாலும் அதற்கான வாய்ப்புகள் படத்தில் மிகக்குறைவு.

Published:Updated:
ஜி.வி.பிரகாஷ் - திவ்யபாரதி
பிரீமியம் ஸ்டோரி
ஜி.வி.பிரகாஷ் - திவ்யபாரதி

லிவ் இன் ரிலேஷன்ஷிப் போன்ற நவீன வாழ்க்கையை மேற்கொள்வதா, அப்பா-அம்மாவுக்கு பயந்து அதை மறைப்பதா என்ற தடுமாற்றத்தில் வாழும் முரட்டு சிங்கிள் இந்த ‘பேச்சிலர்.’

கோயம்புத்தூரிலிருந்து பெங்களூருக்கு வந்து ஐ.டி பணியாளராக இருக்கும் ‘டார்லிங்’ ஜி.வி.பிரகாஷுக்கு நண்பர் வழி அறிமுகமாகும் சுப்புலட்சுமியைப் (திவ்யபாரதி) பார்த்தவுடன் பட்டாம்பூச்சி பறக்கிறது. ரூம் மேட்டாகும் இருவருக்கும் காதல் கம்மி, காமம் கொஞ்சம் தூக்கல் பார்முலாவில் லிவ் இன் ரிலேஷன்ஷிப். எதிர்பாராதவிதமாக நாயகி கர்ப்பமாகிவிட, அதை நாயகனும், நண்பர்களும், உறவினர்களும் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதுதான் ‘பேச்சிலர்’ படத்தின் கதை.

நண்பர்களுடனான ஜாலியான காட்சிகளில் ஸ்கோர் செய்யும் ஜி.வி.பிரகாஷ் பிரச்னைகளைக் கையாளும் முதிர்ச்சியின்றி உலாவும் இந்தப் பாத்திரத்தின் இன்னொரு பரிமாணத்துக்கு நியாயம் செய்யாமல் கடந்துபோகிறார். அறிமுக நாயகி திவ்யபாரதி கோபம், குழப்பம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் ஈர்த்தாலும் அதற்கான வாய்ப்புகள் படத்தில் மிகக்குறைவு. மிஷ்கின், ‘நக்கலைட்ஸ்’ கேங்க் அருண், மனோஜ், தனம், பிருந்தா, பக்ஸ்’ பகவதி பெருமாள், முனீஷ்காந்த் ஆங்காங்கு சிரிக்கவைக்கிறார்கள். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் சித்து குமாரின் பின்னணி இசையும் படத்தில் ஈர்க்கும் விஷயங்கள்.

Bachelor - சினிமா விமர்சனம்

காதல்மீதெல்லாம் பெரிதாக ஈர்ப்பில்லாத நவீன கலாசாரத்தை விரும்பும் பெண், ஒரு பாரம்பரியமான நிலப்பரப்பிலிருந்து வந்து இந்தக் கலாசாரத்தை எதிர்கொள்ளும் இளைஞன் இருவருக்கும் இடையிலான உறவும் முரணும்தான் கதை என்று யோசித்திருக்கும் அறிமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார், பார்வையாளர்களுக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அடல்ட் காமெடியும் ஸ்டைலிஷான காட்சிகளும் இருந்தால் போதும் என்று திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார்.

மீண்டும் மீண்டும் வரும் சம்பவங்களால் நீளமான முதல்பாதி சலிப்பை ஏற்படுத்துகிறது. இரண்டாம்பாதியில் ஆங்காங்கே கலகலப்பூட்டினாலும் நோக்கங்கள் இல்லாமல் நகரும் திரைக்கதையால் எல்லாம் உடைந்துபோன பீர்பாட்டில்கள் போல் வீணாகின்றன. குடும்பத்துக்குத் தெரியக்கூடாது என்றுதான் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பை மறைக்கும் நாயகன், கோர்ட் கூண்டுவரை குடும்பம் ஏறியபிறகும் ஏன் தடுமாறுகிறார், சம்பவம் நடப்பது பெங்களூரில், ‘குற்றம்’ சாட்டப்படுபவர் கோவை, ஏன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது, இரண்டாம் பாதியில் காணாமல்போகும் நாயகியின் மனவுணர்வுதான் என்ன என்று எக்கச்சக்க கேள்விகள்.

வெறுமனே அடல்ட் காமெடி படமா, நவீன கலாசாரத்தால் ஏற்படும் உறவுச்சிக்கல்களைப் பற்றிய படமா என்ற குழப்பத்தாலும் க்ளிஷேவான காட்சிகளாலும் நிறையவே தடுமாறியிருக்கிறார் இந்த ‘பேச்சிலர்.’