Published:Updated:

சினிமா விமர்சனம்: பக்ரீத்

விகடன் விமர்சனக்குழு

விவசாயிக்கும் ஒட்டகத் துக்கும் இடையேயான பாசப் போராட்டமே `பக்ரீத்.’

பிரீமியம் ஸ்டோரி

பூர்வீக நிலம் தன் கைக்கு வந்ததும் இயற்கை விவசாயம் செய்ய நினைக் கிறான் ரத்தினம். கடன் வாங்கச் சென்ற இடத்தில் `சாரா’ எனும் ஒட்டகக்குட்டியும் அவன் கைக்கு வந்து சேர்கிறது. நாளடைவில், ரத்தினத்தின் குடும்ப உறுப்பினராக மாறிப்போகும் சாரா, தமிழ் நாட்டின் தட்பவெட்பம் தாங்கமுடியாமல் தவிக்கிறது. சாராவை ராஜஸ்தானில் விட்டுவிட ரத்தினம் மேற்கொள்ளும் பயணத்தில் கடக்கும் மேடுபள்ளங்கள் திரைக்கதையாக நகர்கின்றன.

விவசாயி ரத்தினமாக விக்ராந்த். நடிப்பு, முந்தைய படங்களைவிட முதிர்ச்சியைத் தொட்டிருக்கிறது. ரத்தினத்தின் மனைவியாக வசுந்தரா. கிராமத்துக் கதாபாத்திரங்கள் வசுந்தராவுக்குப் புதிதல்ல என்பதை நிரூபித்திருக்கிறார். ரத்தினத்தின் மகளாக நடித்திருக்கும் ஸ்ருதிகா, மழலை அழகு! லாரி ஓட்டுநராக நடித்திருக்கும் ரோகித் படாக், விக்ராந்தின் அண்ணன் ‘சேதுபதி’ ஜெயச்சந்திரன், நண்பன் தினேஷ் பிரபாகர், அமெரிக்கப் பயணி, லாரி க்ளீனர் என எல்லாக் கதாபாத்திரங்களும் படத்துக்குப் பக்கபலமாய் அமைந்திருக்கிறார்கள்.

சினிமா விமர்சனம்: பக்ரீத்

நலிவடைந்த விவசாயியின் கதை என்றதும் வெறும் சோகத்தை மட்டுமே லிட்டர் லிட்டராய்ப் பிழிந்து எடுக்காமல், பாசிட்டிவான பக்கங்களையும் காட்டி பேலன்ஸ் செய்திருக்கும் இயக்குநர் ஜெகதீசன் சுபுவுக்குப் பாராட்டுகள். நாயகனின் அமெரிக்கப் பயணியுடனான நிமிடங்களும், இங்கே வழக்கில் தோற்ற அண்ணன், தம்பி நிலத்தைக் கவனித்துக்கொள்ளும் எபிசோடும் அருமை. திருவள்ளூரில் ஒரு கிராமம், இயற்கை விவசாயத்தை நம்பும் ஒரு விவசாயி, அவனுக்கு எல்லாமுமாய் இருக்கும் அவனின் குடும்பம், செல்லப்பிராணிகள் ஒட்டகம், ஆடு, மாடு, காடு, வயல் எனப் படத்தின் முதற்பாதி நல்லதொரு உணர்வை மனதில் உண்டாக்குகிறது. படத்தின் இரண்டாம்பாதிதான் நம்மை நிறையவே சோதிக்கிறது.

சினிமா விமர்சனம்: பக்ரீத்

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான அன்பைப் பேசியிருக்கும் இப்படம், ஏதோவொரு புள்ளியில் பக்ரீத் பண்டிகைக்கு எதிராகவும் பசுக்காவலர்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும் வந்து நிற்கிறது. அதுதான் இயக்குநரின் கருத்து என்றால், அதை இன்னும் தெளிவாகவே பேசியிருக்கலாம்.

வெறும் காட்சிகள், வசனங்கள் மூலமாகவே கடந்துவிடும் உணர்வுகளை, மேற்கொண்டு கடத்துகிறேன் எனப் பின்னணி இசையில் எரிச்சல் மூட்டுகிறார் இமான். பின்னணி இசை ஏற்படுத்தும் பெரும் ரணத்திற்கு `ஆலங்குருவிகளா...’ பாடல் சிறுமருந்து. இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜெகதீசன் சுபு, ஒளிப்பதிவாளராக அதிக மார்க் வாங்குகிறார். ரூபனின் படத்தொகுப்பு படத்தின் ஒட்டக பலம்.

பார்வையாளர்களைப் படத்துக்குள் இழுத்திருந்தால், இந்த `பக்ரீத்’தை விமரிசையாகக் கொண்டாடியிருக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு