Published:Updated:

``100 படம் போதும்னார் பாலாசிங்... சொன்னபடியே 100 முடிஞ்சதும் கிளம்பிட்டார்!’’- #RIPBalasingh

பாலாசிங்
பாலாசிங்

```படத்துல நான் இருக்கேன்ல’னு உரிமையோடு கேட்டார். நானும் அவருக்கு கேரக்டர் வச்சிருந்தேன். ஆனா, அதுக்குள்ள இப்படியாகும்னு யாருமே எதிர்பார்க்கல.''

நடிகர் பாலாசிங் உடல்நலக் குறைவால் காலமானார். சென்னையில் இன்று அவரது உடலுக்குத் திரையுலகப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய பின், நாளை மாலை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

``100 படம் போதும்னார் பாலாசிங்... சொன்னபடியே 100 முடிஞ்சதும் கிளம்பிட்டார்!’’- #RIPBalasingh

குடும்பத்தை சொந்த ஊரிலேயே வைத்துவிட்டு சினிமாவுக்காக சென்னை வந்த பாலாசிங் இங்கு, அதே சினிமாத்துறையில் இருந்த பக்கத்து ஊரான வள்ளியூரைச் சேர்ந்த செல்வக்குமாருடன் வீடு எடுத்துத் தங்கியிருந்தார். பிள்ளைகள் வளர்ந்து சென்னைக்குப் படிக்க வந்தபோதும்கூட சென்னையில் வீடு வாங்கவில்லை. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இரு வாரங்களுக்கு முன்புதான் மகளுக்குத் திருமணம் நடந்தது. மகன் இன்ஜினீயரிங் முடித்திருக்கிறார்.

பாலாசிங் குறித்து செல்வக்குமாரிடம் பேசினேன். ``சொந்த கிராமத்துல ஸ்கூல் படிச்சிட்டிருந்த நாள்கள்ல கோயில் திருவிழாவுல முதன்முதலா நாடக மேடை ஏறினதாச் சொல்வார். அதுவும் அன்னைக்கு வர வேண்டிய நடிகர் ஒருவர் வராமல் போக, `ஊர்ல யாருய்யா நல்லா நடிப்பாங்க’னு கேட்டு இவரை மேடை ஏத்தி விட்டிருக்காங்க. அப்படி ஆரம்பிச்சிருக்கு நடிப்புடனான தொடர்பு. அங்க கிடைச்ச கைத்தட்டல்... நாடகம், சினிமாப்பக்கம் அவர் கவனத்தைத் திருப்பியிருக்கு. ஞானியின் நாடகக் குழுவுல சேர்ந்து அப்படியே சினிமாப் பக்கம் வந்துட்டார். அதேநேரம் வீட்டுல பொருளாதார ரீதியாகவும் வசதிக்குக் குறைவில்லை. நல்லாவே விவசாயம் பண்ணிட்டிருந்தாங்க. இவரோட மனைவியும் பக்கத்துல தாமரைக்குளம்கிற ஊர்ல டீச்சர்.

பாலாசிங்
பாலாசிங்

சென்னையில ஆரம்பத்துல புரொடக்‌ஷன் மேனஜரா சில வருடங்கள் இருந்தார். ஷூட்டிங் இருந்தா சென்னையில் இருப்பார். இல்லையா ஊருக்குக் கிளம்பிடுவார். சமயங்கள்ல தொடர்ந்து வேலை இல்லாதது போலவே இருக்கும். நானேகூட அவர்கிட்ட ’நீங்க வீட்டுல சும்மா பக்கத்துல இருந்தாலே போதும்கிறாங்களே, அப்படி இருக்கலாம்ல; சினிமா முன்ன மாதிரி இல்ல, ரொம்ப மாறிடுச்சே'னு கேட்டிருக்கேன். அதுக்குப் ‘பெருசாயெல்லாம் ஒண்ணும் ஆசையில்லை... 100 படம் நடிச்சா போதும். நடிச்சிட மாட்டேனா?'னு என்னிடம் திருப்பிக் கேட்டார்.

‘அவதாரம்’ படம் தொடங்கி 'என்.ஜி.கே' வரை சரியா 100 படங்கள் நடிச்சிட்டார். 'என்.ஜி.கே' ரிலீசான அடுத்த சில நாள்கள்ல வேடிக்கையாப் பேசிட்டிருந்தப்பக் கூட ''100 படம் நடிச்சிட்டேன். இதைவிட வேறென்ன சாதனை வேணும்? ஊர்ல விளையாட்டா நாடக மேடை ஏறினவன். இன்னைக்கு இந்த உயரத்துக்கு வந்திருக்கேன். நாடகம், சினிமா, டிவின்னு எல்லாத்துலயும் ஒரு ரவுண்ட் வந்தாச்சில்லையா'' என ஒரு நிறைவோடு சொன்னார்.

சரி, இனிமே அப்படியே சுணங்கிடுவாரோன்னு நினைச்சு நானே என்னுடைய அடுத்த படமான `ராதையும் ராஜகுமாரனும்’ படத்துல அவரை நடிக்கக் கேட்டிருந்தேன். இதுக்கிடையில அவங்க ஊர் எழுத்தாளரான பொன்னீலன் கதையிலயும் நடிக்கிற ஆர்வம் இருந்தது’’ என்கிறார் செல்வக்குமார்.

பொன்னீலனின் `கரிசல்’ நாவலை சினிமாவாக எடுக்க இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகனிடம் பேசினேன்...

நாஞ்சில் பி.சி.அன்பழகன்
நாஞ்சில் பி.சி.அன்பழகன்

``என்னுடைய `காமராசு’ படத்தில் முரளியின் அப்பாவாக நடித்திருந்தார் பாலாசிங். என்னுடைய இன்னொரு படமான `நதிகள் நனைவதில்லை’ படத்திலும் நடித்தார். `ஒரே ஊர்க்காரர்கள்’ என்கிற பிணைப்பு எங்களிடம் இருந்தது. ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான் அவருடைய மகள் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அப்பதான் பொன்னீலன் நாவல் குறித்துப் பேச்சு வந்தது. ‘படத்துல நான் இருக்கேன்ல’னு உரிமையோடு கேட்டார். நானும் அவருக்கு கேரக்டர் வச்சிருந்தேன். ஆனா அதுக்குள்ள இப்படியாகும் யாருமே எதிர்பார்க்கல’' என்கிறார் அன்பழகன்.

 `புதுப்பேட்டை', `விருமாண்டி' படப் புகழ் நடிகர் பாலா சிங் காலமானார்!
அடுத்த கட்டுரைக்கு