Published:Updated:

``ஜேம்ஸ் பாண்ட், ஜெய்சங்கர் இன்ஸ்பிரேஷன்; `பெல்பாட்டம்'ல இதுதான் காம்பினேஷன்!" - இயக்குநர் சத்யசிவா

'பெல்பாட்டம்'
'பெல்பாட்டம்'

`பெல்பாட்டம்’ படத்தின் ரீமேக் மூலம் மூன்றாம் முறையாக நடிகர் கிருஷ்ணாவுடன் இணைகிறார் இயக்குநர் சத்யசிவா. அந்தப் படம் குறித்து அவரிடம் பேசினோம்.

`கழுகு’, `கழுகு 2’ படங்களுக்குப் பிறகு, கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற `பெல்பாட்டம்’ படத்தின் ரீமேக் மூலம் மூன்றாம் முறையாக நடிகர் கிருஷ்ணாவுடன் இணைகிறார் இயக்குநர் சத்யசிவா. அந்தப் படம் குறித்து அவரிடம் பேசினோம்.

``என் சொந்த ஊர் மூணார். குடும்பத்துல பலர் சினிமாக்குள்ள ஆர்ட் டைரக்டர், டெக்னீஷியன்னு ஃபீல்டுக்குள்ள இருந்தவங்கதான். அவங்களை எல்லாம் பார்த்துதான் சினிமாவுக்குப் போகணும்னு ஆசைப்பட்டு வந்தேன். ரெண்டு இயக்குநர்கள்கிட்ட அசிஸ்ட்டென்ட்டா வேலை பார்த்தேன். சினிமா பண்ணிடலாங்கற நம்பிக்கை வந்ததும் `கழுகு’ படத்தை ஆரம்பிச்சேன். சின்ன வயசுல மூணார் பகுதியில பார்த்து வளர்ந்த சம்பவங்களை அடிப்படையா வைச்சுதான் `கழுகு’, `கழுகு 2’ படங்கள் பண்ணினேன். எதிர்பார்த்த அளவு இல்லைன்னாலும், தமிழ் சினிமாவுல எனக்கான இடத்தைக் இந்த ரெண்டு படங்களும் கொடுத்திருக்கு. அந்த சீரியஸ் ஜானர்ல இருந்து வெளில வந்து `பெல்பாட்டம்'னு ஒரு படம், அப்புறம் ராணா சார்கூட ஒரு படத்துல வொர்க் பண்ணிகிட்டு வர்றேன். என்னோட சினிமா கரியர் ஃப்ரெஷ்ஷா ஆரம்பிச்சிருக்கு" எனப் பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் சத்யசிவா.

`` `பெல்பாட்டம்’ கன்னட படத்தை தமிழ்ல ரீமேக் பண்ற ஐடியா எப்படி வந்தது?"

`பெல்பாட்டம்'
`பெல்பாட்டம்'

`` `கழுகு 2’ பண்ணிகிட்டிருந்த சமயம் பக்கத்துல `பெல்பாட்டம்’ பட ஷூட்டிங்கும் போயிட்டிருந்தது. அந்தப் படத்தோட கேமராமேன் எனக்கு நல்ல நண்பர். `பெல்பாட்டம்’ படம் பத்தி நிறைய விஷயங்களை என்கிட்ட பகிர்ந்துக்குவார். அந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்கு ரொம்பப் பிடிச்சிடுச்சு. இன்னும் சொல்லப்போனா, அந்தப் படம் ரிலீஸுக்கு முன்னாடியே அதோட தமிழ் ரைட்ஸை வாங்கிட்டோம். வித்தியாசமான கதைகளுக்குக் கண்டிப்பா மக்கள் மத்தியில வரவேற்பு இருக்கும். அந்த வகையில `பெல்பாட்டம்’ கன்னடத்துல ஹிட் அடிச்ச மாதிரி, தமிழ் சினிமாவுலேயும் ஹிட்டாகும்னு நம்பிக்கை இருக்கு.”

``கிருஷ்ணாவோட இது மூணாவது படம். உங்க நட்பு பத்திச் சொல்லுங்க?"

Actor Krishna
Actor Krishna

`` `பெல்பாட்டம்’ படத்தைக் கன்னடத்துல பண்ணியிருக்க ரிஷாப் ஷெட்டி மேனரிசமும் கிருஷ்ணாவோட மேனரிசமும் சரியா பொருந்திப் போகும். அதனால, படம் பார்க்கும்போதே எனக்கு கிருஷ்ணா சார்தான் முதல் சாய்ஸா ஞாபகத்துக்கு வந்தார். எங்களுக்குள்ள நல்ல நட்பு இருக்கறதுனாலயும், இதுக்கு முன்னாடி பண்ண படங்கள்ல இருந்த புரிதல்னாலையும் அவரை அணுகுறதுக்கு ஈஸியா இருந்தது. அதுவுமில்லாம அவருக்கும் கதை பிடிச்சிருந்தது. இப்ப படத்தோட ஷூட்டிங் முடிஞ்சு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் போய்கிட்டிருக்கு.”

`` `பெல்பாட்டம்’ கதையை என்ன மாதிரியான மாற்றங்களோட தமிழ்ல எதிர்பார்க்கலாம்?"

`பெல்பாட்டம்'
`பெல்பாட்டம்'

``இந்தப் படம் 80-கள்ல நடக்கிற கதை. சின்ன வயசுல ஜேம்ஸ் பாண்ட், ஜெய்சங்கர் படங்களைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகுற ஹீரோ, பெரியவனாகி போலீஸ் ஆனதும் அவன் சந்திக்கற சவால்களும் அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதும்தான் கதை. படம் ரொம்பவே ஜாலியா போகும். `கழுகு’, `கழுகு 2’ இன்னும் சில படங்கள்னு நான் இதுவரை இயக்கின படங்கள்ல இருந்து விலகி வந்து, வேற ஜானர்ல படம் இருந்தது வித்தியாசமான அனுபவமா இருந்தது. எந்த ஒரு படம்னு எடுத்துக்கிட்டாலும் அதுல பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்கள் இருக்கும். அந்த வகையில, இந்தப் படம் கன்னடத்துல வெளியானப்ப, என்ன நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததோ அதை கவனத்துல வச்சுகிட்டு, தமிழ்ல சரி பண்ணியிருக்கோம். மத்தபடி ரீமேக் படம்கிறதால தமிழ்ல பெருசா எந்த விதமான மாற்றங்களும் பண்ணல. `பெல்பாட்டம்’கிற டைட்டிலே 80'ஸ்ல நடக்கிற கதையை சிம்பாளிக்கா சொல்லுது. அதுவுமில்லாம, `பெல்பாட்ட’த்துக்கு கதையில ஒரு ட்விஸ்ட்டும் இருக்கு. அது படம் பார்க்கும்போது சுவாரஸ்யமா இருக்கும்.”

``படத்துல என்ன மாதிரியான சவால்கள் இருந்தன?"

'பெல்பாட்டம்'
'பெல்பாட்டம்'

``80'ஸ் கதைங்கிறதால லொகேஷன் தேடினது பெரிய சவாலா இருந்தது. நிறைய கிராமங்கள்ல இப்ப டவர் வந்தாச்சு, கிராமத்து வீடுகளும் இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிடுச்சுனு ஏகப்பட்ட விஷயங்களைக் கவனத்துல வெச்சுக்க வேண்டியதா இருந்தது. கடைசியா கேரளால இடுக்கி பக்கத்துல ஒரு கிராமத்துல ஷூட்டிங் முடிச்சோம். அந்தக் காலகட்ட ஹீரோயின் தேடிட்டிருந்தப்ப மஹிமா நம்பியார் இதுக்குச் சரியா இருப்பாங்கனு அவங்களைத் தேர்ந்தெடுத்தோம். பொதுவா டிடெக்டிவ் கதைகள்னாலே, சீரியஸா இருக்கும். இல்லைன்னா காமெடியா இருக்கும். ஆனா, இந்தப் படத்துல ரெண்டுமே இருக்கும். இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் எனக்குப் பிடிச்ச விஷயம்னா 80'ஸ்ல இருக்க ஒரு டிடெக்டிவ்க்கு கேஸ்ல என்ன விஷயங்கள் எல்லாம் ஆதாரமா கிடைக்குமோ, அதை வெச்சு சுவாரஸ்யமா இன்வஸ்டிகேட் பண்ணியிருப்பாங்க. போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள இருந்த பணம் காணாம போயிரும்; அதை ஹீரோ எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை."

``அடுத்த படங்கள்?"

ராணா
ராணா
'1945'

`` `1945’னு ஒரு படம் தெலுங்கு, தமிழ்னு பைலிங்குவலா ராணாவை வெச்சு பண்ணியிருக்கேன். இது பர்மால நடக்கற ஒரு ராணுவ வீரரோட கதை. `பாகுபலி 2’-க்குப் பிறகு ராணா கமிட் ஆன படம் இது. அதுல சத்யராஜ், நாசர், ரெஜினானு ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இருக்கு. இந்தப் படம் வெளிவந்த பிறகுதான் அடுத்து `பெல்பாட்டம்’ ரிலீஸாகும். ரெண்டு படங்களுமே சினிமா ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.”

அடுத்த கட்டுரைக்கு