1. எ ஹீரோ

இயக்குநர் அஸ்கர் பர்ஹாதி உலக சினிமா வட்டாரத்தில் மிகப்பிரபலம். 'எ செப்பரேசன்', 'சேல்ஸ்மேன்' போன்ற திரைப்படங்களை படைத்து உலகின் உயரிய விருதுகளை அனைத்தையும் அள்ளிக்கொண்டு போன ஆளுமை. இந்த வருடம் 'எ ஹீரோ' என்ற படத்தை உருவாக்கி கான் திரைப்பட விழாவில் 'கிராண்ட் ப்ரிக்ஸ்' என்ற விருதை வென்று ஆஸ்கர் விருதை வெல்ல வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்.
'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்பது எத்தனை நேர்மையான வாசகம் என்பதை கடன்பட்டவர்கள் மட்டுமே உணர இயலும். செலுத்த இயலாத கடனுக்காக சிறைக்கு சென்ற ஒருவன்தான் 'எ ஹீரோ' படத்தின் கதாநாயகன்.
கடனை அடைத்து சிறையிலிருந்து மீண்டு உலகத்தின் மத்தியில் கதாநாயகனாக காட்சியளிக்கும் வாய்ப்பு ஒரு வாசலில் இருக்கிறது. மாறாக கடனை அடைக்காமல் சிறைக்குச்சென்றால் வாழ்நாள் முழுக்க தன் மகனுக்கு கதாநாயகனாக இருக்கும் வாய்ப்பு மற்றொரு வாசலில். படத்தின் நாயகன் எதை தேர்வு செய்தான் என்பது முக்கியமல்ல! நாம் எதை தேர்வு செய்திருப்போம்? என்ற கேள்வியை நம்முள் விதைக்க முக்கியமாக முனைந்திருக்கிறார் அஸ்கர் பர்ஹாதி.
கடன்பட்டவன் கதாநாயகன் என்றால் கடன் கொடுத்தவனை வில்லனாக்குவதுதான் வழமையான வணிக சினிமா. கடன் கொடுத்தவனையும் கதாநாயகனாக்கி அழகு பார்ப்பது உலக சினிமா. இருவரது நியாயங்களையும் எடுத்துரைத்து வழக்காடுகிறார் அஸ்கர் பர்ஹாதி. இந்தக்கூறுகளை அஸ்கர் பர்ஹாதியின் முந்தைய படங்களிலும் காணலாம். அதுதான் அவரது பலம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
2. யூனி

இந்தோனேஷியா முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடு. எனவே மதத்தின் பெயரால் பெண்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள் இருக்கும்; சுதந்திரமும் இருக்கும். யூனி பதின்வயது பருவத்தில் இருக்கும் சிறுமி. பாரதியின் புதுமைப்பெண் போல் சுதந்திரமாக பறக்க நினைக்கிறாள். பண்பாடு என்ற பெயரில் போடப்படும் விலங்குகளை உடைக்க நினைக்கிறாள். யூனி உடைத்தாளா; உடைந்தாளா என்பதை விளக்கும் திரைக்கதையின் இறுதிக்காட்சி பார்வையாளர்களின் உறுதியை குலைத்தது. இயக்குநர் கமீலா அந்தினி உலக சினிமாவிற்கு கிடைத்த நல்வரவு.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS3.பேரலல் மதர்ஸ்

இயக்குநர் பெட்ரோ அல்மதவர் படங்களில் சிறந்த திரைக்கதை இருக்கும். அதை வளப்படுத்த பெனலோப் க்ரூஸ் என்ற தேவதையும் இருப்பார். இருவரது கூட்டணி தொடர் வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளது.
சந்தர்ப்பவசத்தால் ஒரு குழந்தைக்கு இரண்டு தாய்கள் உருவாகிறார்கள். அதனால் எழும் அகச்சிக்கல்கள்,புறச்சிக்கல்களை அடுக்கடுக்காக திரைக்கதையில் அடுக்கி இருக்கிறார் இயக்குநர். அதை இறுதிக்காட்சியோடு தொடர்பு படுத்தியதில் இயக்குநரின் ஆளுமை மிளிர்கிறது.
4. உமன் டூ க்ரை

‘பத்து நிமிடம் பல்லு விளக்குறதை காட்டுனா அது பல்கேரியா படம்’ என எழுத்தாளர் பாமரன் பல மேடைகளில் கூறி இருக்கிறார். அவரது பரப்புரைக்கு மிகச்சிறந்த எதிர்வினையாற்றிய பல்கேரிய திரைப்படம் ‘உமன் டூ க்ரை’.
ஆணாதிக்க சமூகம் விதித்த தளைகளை அடித்து நொறுக்கும் பெண்களை ஒன்று திரட்டித் திரைக்கதையில் இடம் பெறச் செய்துள்ளார்கள் இயக்குநர்கள் Vesela Kazakova and Mina Mileva.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
5. பேட் லக் பேங்கிங் ஆர் லூனி போர்ன்

ரொமானிய இயக்குநர் ராது ஜூட் இயக்கிய இத்திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக்கரடி என்ற உயரிய விருதைப் பெற்றுள்ளது. எனவே இத்திரைப்படத்திற்கு பார்வையாளர்கள் வருகை மிக அதிகமாக இருந்தது.
படத்திற்கான ஆன்மாவை இயக்குனர் இரண்டாம் பகுதியில்தான் வைத்திருந்தார். உலக சினிமாவின் உன்னதம் அங்குதான் நிகழ்ந்தது. 100 ஆண்டு கால ரொமானிய வரலாறு, அரசியல், பண்பாடு என அனைத்தையும் விமர்சித்து இருந்தார். அவரது விமர்சனத்தில் கடவுள், மத குருமார்கள், தேவாலயங்கள், சர்வாதிகாரிகள் என அனைவரையும் சாட்டை கொண்டு விளாசி விட்டார். போகிற போக்கில் பொதுவுடமைக்கும் இரண்டு போடு போட்டிருக்கிறார். முதலாளித்துவ சமூகத்தில் எளிய மக்கள் பந்தாடப்படுவதை பல காட்சிகளில் விஷூவல் கவிதையாக்கி இருக்கிறார். விலை உயர்ந்த கார்கள் எளிய மக்களின் நடைபாதையை ஆக்கிரமித்து நிற்பதை தொடர்ச்சியாகக் காட்சிப்படுத்தியுள்ளார். பண்பாடு, கலாசாரம் என்ற மூகமூடியணிந்து பிற்போக்குத்தனமாக உளறும் பல முகங்களை மூன்றாம் பகுதியில் காட்சிப்படுத்தி தோலுரித்து இருக்கிறார் இயக்குநர்.
6. வென் ஹிட்லர் ஸ்டோல் பிங் ராபிட்

புலம் பெயர்ந்தவர்களின் வரலாற்றைப் புலம்பித் தீர்க்கும் திரைக்கதைகளுக்கு மத்தியில் ‘வென் ஹிட்லர் ஸ்டோல் பிங் ராபிட்’ தனித்துவம் வாய்ந்த திரைக்கதையாக மலர்ந்திருக்கிறது. புலம் பெயர் அவலங்களை அகழ்வாராய்ச்சி செய்து சமர்ப்பித்ததுதான் இப்படத்தின் திரைக்கதை.
இத்திரைக்கதை புனைவு அல்ல:வரலாறு என்ற உண்மையை படத்தின் இறுதியில் உரக்க கூறியபோது படத்தின் மீது ஏற்பட்ட மதிப்பு இமயம் போல் வளர்ந்தது.
இயக்குநர் கெரோலின் லிங்க் திரைப்படங்களை ‘ரெட் ரோஸ்பெக்டிவ்’ பிரிவில் இடம் பெறச் செய்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு என் வாழ்நாள் நன்றியும் வாழ்த்தும்.
கட்டுரையாளர்: இயக்குநர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் ‘உலக சினிமா பாஸ்கரன்’ என்ற பெயரில் முகநூல், பதிவுலகம் போன்ற சமூக ஊடகங்களில் தான் பார்த்து மகிழ்ந்த உலக சினிமாக்களை அறிமுகம் செய்து வருகிறார். ‘நாணுடைமை’, ‘திறவுகோல்’ என இரு குறும்படங்களைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ‘இன்ஷா அல்லாஹ்’ எனும் திரைப்படத்தைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். தான் உருவாக்கிய மூன்று படங்களின் மூலம் 12 சர்வதேச திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். 48 சர்வதேச திரைப்பட விழா அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.