Published:Updated:

கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!

ரஜினிகாந்த் உடன் கே.பாலசந்தர்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினிகாந்த் உடன் கே.பாலசந்தர்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் படைத்த மறக்க முடியாத கதாபாத்திரங்கள் பற்றிய அலசல்!

கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் படைத்த மறக்க முடியாத கதாபாத்திரங்கள் பற்றிய அலசல்!

Published:Updated:
ரஜினிகாந்த் உடன் கே.பாலசந்தர்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினிகாந்த் உடன் கே.பாலசந்தர்

புதுமையான, வித்தியாசமான, சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை தமிழ்த் திரையில் உலாவ விட்டவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். திரை அரங்கத்தைவிட்டு வெளியே வந்த பிறகும், அவர் படைத்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனத்திரையை விட்டு அசைவது இல்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை பாலசந்தர் படைத்திருந்தாலும், அவர் படைப்பில் மிகச்சிறந்தவை என்று 10 கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்ய நினைத்தோம். அந்தப் பொறுப்பை அவரது மகளும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமியிடம் ஒப்படைத்தோம்.

கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!
கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!

''ரொம்பவும் அநியாயம் ஸார். அவர் படைப்பில் 100 கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும்...'' என்று அன்பாக அனுமதி கேட்டார். 'பத்தே பத்து கேரக்டர்கள்தான்... அதுவும் ஒரு நடிகரை ஒரு கேரக்டருக்காக மட்டும்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று நிபந்தனையை மீண்டும் அழுத்திச் சொன்னோம். ''சரி. அவர் கதாபாத்திரங்களைப் பற்றி முதலில் சில தகவல்களைச் சொல்லிவிட்டு பட்டியல் தருகிறேன்'' என்றவர், தீவிர சிந்தனைக்குப் பிறகு பேசத் தொடங்கினார். ''என் தந்தை படைத்த கதாபாத்திரங்கள் எத்தனையோ மனிதர்களைப் பாதித்து இருக்கிறது. ஆனால், என் தந்தையை உலுக்கிய கேரக்டர் என்றால், அது மகாகவி பாரதி மட்டும்தான். அதனால்தான் அவரது படங்களில் பாரதியை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தி இருப்பார்.

கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!
கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!

பாரதி அவரது பாடல்களில் கண்ணனை கடவுளாக, அரசனாக, தாயாக, தோழனாக, காதலியாக பல்வேறு வகைகளில் உருவகப்படுத்தி இருப்பார். அதுபோலவே, என் தந்தை பாரதியை பல்வேறு கதாபாத்திரங்களின் வழியே வெளிக்காட்டி இருப்பார். அவை எல்லாமே எனக்கும் பிடித்தவை. கே.பி-யின் படைப்பைப் பொறுத்தவரை, கதாபாத்திரங்களின் வழியேதான் கதை நகரும். அவரது கதாபாத்திரங்கள் கற்பனை, யதார்த்தம், புதுமை என்ற மூன்று வகையிலும் இருக்கும். சில கதாபாத்திரங்கள் ஒரு தீர்மானத்துடன் படத்தின் முடிவில் பேசும் வசனங்கள் அல்லது செய்யும் காரியங்கள், எதிர்பாராத திடுக் திருப்பம் கொடுத்து விடும். அதனால்தான் அவரது பாத்திரங்கள் நீண்ட காலமாக நினைவில் நிற்கின்றன. பலர் தொடுவதற்கு அஞ்சும் பாத்திரப் படைப்புகளை, ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு தைரியமாக அணுகுவதுதான், கே.பி-யின் ஸ்பெஷல். இனி, பட்டியலுக்கு வருகிறேன்.

கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!
கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!

'மேஜர் சந்திரகாந்த்’

ராணுவமிடுக்கு குறையாமல் எப்போதும் எதிலும் டிஸிப்ளின் என்று வாழ்பவர் மேஜர் சந்திரகாந்த். கண் பார்வை இல்லாத நிலையிலும் தன் வீட்டில் சுதந்திரமாக வாழ்பவர். தன் இளைய மகன் ஒரு இளம் பெண்ணைக் கெடுத்துவிட்டதையும், அதனால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதையும் அறியும் மேஜர் அதிர்ச்சி அடைகிறார். ஒரு கொலையைச் செய்துவிட்டு தன் வீட்டில் அடைக்கலம் தேடி வரும் நாகேஷ்தான், அந்தப் பெண்ணின் அண்ணன் - தன் இளைய மகனைக் கொன்றவன் என்று தெரிந்தும், அவர் பக்க நியாயத்தை உணர்ந்து, போலீஸ் அதிகாரியான தன் மூத்த மகனிடம் இருந்து அவரைக் காப்பாற்றுகிறார். கணீரென்ற குரலுடன் மேஜர் சுந்தரராஜன் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். இந்தப் படத்துக்குப் பிறகுதான் சுந்தரராஜன், 'மேஜர்' சுந்தரராஜனாக மாறினார். அண்ணன் (நாகேஷ்), தங்கை (ஜெயலலிதா) பாசத்துக்குப் பெயர் பெற்ற பல படங்களில், இந்தப் படமும் குறிப்பிடத்தக்கது. 'கல்யாணச் சாப்பாடு போடவா...’ என்ற பாட்டு மிகவும் பாப்புலர். என் தந்தை, ஜெயலலிதா அவர்களை டைரக்ட் செய்த ஒரே படம்.

'எதிர்நீச்சல்’ மாது

நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், சௌகார் ஜானகி போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த படம். நாகேஷ் கேரியரில் மறக்க முடியாத பாத்திரம்; வேறு யாராக இருந்தாலும் அவரைப் போல செய்திருக்கவே முடியாது. பல நடுத்தரக் குடும்பங்கள் இணைந்து வாழும் ஒரு ஃபிளாட் டைப் வீட்டில், ஆதரவு இல்லாத அனாதையாக மாடிப்படிக்குக் கீழே இருந்துகொண்டு, கஷ்டப்பட்டு படிக்கும் மாணவன் மாது. பல குடும்பத்தினரும் ஏவும் வேலைகளைச் சற்றும் முகம் சுளிக்காமல் செய்பவன். பலரும் அவனை ஒரு அஃறினைப் பொருளாகவே மதிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டில் முறைச்சாப்பாடு. 'மாது வந்திருக்கேன்’ என்று சாப்பாட்டுத் தட்டுடன் வீடு வீடாகச் சென்று அவன் கேட்கும் காட்சி பார்ப்பவர்கள் மனதை உருக்கும். ஏழ்மையைக்கூட ரசனையோடு ஏற்றுக்கொள்ளும் மாதுவின் செயல்களும், அவனை முடிந்தவரை அடிமையாக உபயோகப்படுத்தும் கேரெக்டர்களும் எவரையும் பாதிக்கும். திடீரென ஒரு பொருள் காணாமல் போகும். மாது மீது அனைவரும் அபாண்டமாக திருட்டுப்பழி சுமத்துவார்கள். அந்தப் பழியில் இருந்து மாது மீண்டு வரும் போதும், அவன் உள்ளம் வேண்டுவது அன்பை மட்டுமே.  'அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா’, 'சேதி கேட்டோ, சேதி கேட்டோ’, 'வெற்றி வேண்டுமா... போட்டுப் பாரடா எதிர் நீச்சல்’ போன்ற பிரபலமான பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகின்றன. மாது கேரெக்டரால் ஈர்க்கப்பட்டுதான், கிரேஸி மோகன், அவர் எழுதும் நாடகங்களில் தன் தம்பி பாலாஜி நடிக்கும் ரோலுக்கு 'மாது' என்றே பெயர் சூட்டினாராம்.

கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!
கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!

'அரங்கேற்றம்’ லலிதா

என் தந்தை இயக்கிய படங்களிலேயே மிகுந்த சர்ச்சைக்குள்ளான படம். சென்சார் போர்டு, இந்தப் படத்துக்கு 'ஏ’ சர்டிஃபிகேட் கொடுத்தது. அதை, 'கதைக்காக ஏ! சதைக்காக அல்ல’ என்று என் தந்தை விளம்பரம் செய்திருந்தார். ஏழை புரோகிதரின் மூத்த மகள் லலிதாவாக பிரமிளா நடித்திருந்தார். வாளிப்பான உடல் அழகு கொண்டவள். பெற்றோருக்கு நிறையக் குழந்தைகள். வருமானம் இல்லாமல் பட்டினியில் வாடும் குழந்தைகளுக்கு அரளி விதையை அரைத்துக் கொடுக்கும் அளவுக்கு நிலைமை இருப்பதை அறிந்து வேலைக்குப் போகிறாள் லலிதா. அவளுடைய குழந்தைத்தனம் சிதைந்து, வாழ்க்கையின் அதிர்ச்சிப் பக்கங்களை பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. டாக்டர் படிப்புக்காக மனு செய்திருக்கும் தம்பிக்கு சிபாரிசு வேண்டி, அரசியல்வாதியைச் சந்திக்கச் செல்லுமிடத்தில் கற்பை இழக்க நேரிடுகிறது. தற்கொலை செய்து கொள்ளப் போகிறாள். ஆனால், மனதுக்குள் போராட்டம். அதனால், தன் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தன்னையே அர்ப்பணிப்பது என்று முடிவு எடுத்து, தவிர்க்க முடியாமல் தவறான பாதையில் செல்கிறாள். அவள் தொடர்ந்து அனுப்பும் பணத்தால் குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்கிறது. அவளைச் சுற்றியுள்ள சமூகத்தைப் பொறுத்தவரை லலிதா ஒரு 'கால் கேர்ள்'. ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு, அவள் பக்க நியாயம் புரிந்தவர்களுக்கு அவள், குடும்பத்தைக் காக்கும் குலதெய்வம். இந்த மாறுபட்ட குணாதிசயத்தை கே.பி. படைக்கும் பல பாத்திரங்களில் காண முடியும். தங்கையின் திருமணத்துக்காக லலிதா மீண்டும் வீட்டுக்கு வருகிறார். ஏழு குழந்தைகளுக்குத் தாயான தன் அம்மா, மீண்டும் கர்ப்பமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.  ஒரு கட்டத்தில் லலிதாவின் புடவை விலகி இருப்பதைப் பார்த்து, தங்கை சரி செய்து கொள்ளச் சொல்வாள். 'ஆம்பிளைனாலே மரத்துப் போச்சு’ என்பாள் லலிதா. நெத்தி அடி வசனம். தவறான வழியில்தான் லலிதா இதுவரை பணம் சம்பாதித்திருக்கிறாள் என்பது வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு கட்டத்தில் தெரிந்துவிடும். அதுவரை மகிழ்ச்சியாக இருந்த குடும்பம் சுயநலத்தோடு, 'இந்தத் தொழில் செய்ய உனக்கு வெட்கமாக இல்லையா?’ என்று ஏசுகிறது. அவளுடைய தியாகம் வீணாகிறது. லலிதா ஒதுக்கப்படுகிறாள். மனநிலை பாதிக்கப்பட்டவளாக லலிதா வீட்டில் இருந்து வெளியேறுகிறாள். தவறான பெண் என்று தெரிந்தும் மருமகளாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறும் பக்கத்து வீட்டு உடையார் பாத்திரம் மூலம், விலைமகள் மறு வாழ்வை ஆதரித்த கே.பி., ஏன் கடைசியில் அவளுக்குப் பைத்தியம் பிடிக்க வைத்தார் என்பது என் மனதைக் குடையும் கேள்வி. 40 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் துணிச்சலான படத்தை இயக்குநர் சிகரம் எடுத்திருப்பது, பாராட்டுக்குரியது. இந்தப் படம்தான் அவருக்குப் புரட்சி இயக்குநர் என்ற பெயரைக் கொடுத்தது. தமிழ்நாடு அரசு, இந்தப் படத்தைக் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டது தனி தகவல்.

கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!
கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!

'தில்லு முல்லு’ - இந்திரன் அண்ட் சந்திரன்

முதன் முறையாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ரஜினிகாந்த் நடித்த முழுநீள நகைச்சுவைப் படம். இதில் அறிவுடை நம்பியாக நடிக்க வேண்டும் என்று என் தந்தை கேட்டபோது ரஜினி மிகவும் தயங்கினார். 'முழுநீள காமெடி செய்ய முடியுமா?’ என்று யோசித்தார். 'நான் சொல்றபடி நடித்தால் போதும், நன்றாக ஒர்க் அவுட் ஆகும்’ என்று, கே.பி. தைரியம் கொடுத்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் சேனல்களில் மீண்டும் மீண்டும் ரசிக்கப்படும் அளவுக்கு ரஜினி சிறப்பாகச் செய்திருந்தார். அவ்வப்போது செய்யும் சில்மிஷங்களும் சொல்லும் பொய்களும்தான் வாழ்வுக்குச் சுவை சேர்க்கின்றன. வேலை நிலைப்பதற்காகச் சொல்லும் பொய், 'இந்திரன் - சந்திரன்' என்று தன்னையே இரண்டு பேராகக் காட்டிக் கொள்ள வேண்டிய சூழலை ரஜினிக்கு ஏற்படுத்தி விடுகிறது. அதற்காக மீசையை எடுக்கிறார். அண்ணன், தம்பி, இருவரையும் ஒன்றாகப் பார்த்துவிட வேண்டும் என்று முதலாளி அடம்பிடிக்க, மேலும் மேலும் பொய்களைச் சொல்வார் ரஜினி. முதலாளியாக தேங்காய் சீனிவாசனும் 'இல்லாத’ தாயாக சௌகார் ஜானகியும் தூள் கிளப்பி இருப்பார்கள். தன்னுடைய 'பாமா விஜயம்’ படத்துக்குப் பிறகு என் தந்தை இயக்கிய முழு நீள காமெடிப்படம். 'ராகங்கள் பதினாறு... உருவான வரலாறு...’ பாடல்  சூப்பர் ஹிட். ரஜினியின் காமெடித் திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வந்த கேரக்டர்.

'அவள் ஒரு தொடர்கதை’ கவிதா

கவிதா, அந்த வீட்டின் புடவை கட்டிய ஆண் மகன். பூ மாதிரி மென்மையான மனதைக் கடினமாக்கிக்கொண்டு, கண்டிப்பு மிக்க ஆசான் மாதிரி வாழ்கிறாள். சொந்த ஆசாபாசங்களைப் புறந்தள்ளிவிட்டு, குடும்பத்துக்காக வாழும் முதிர்கன்னி. 'கவிதா ஒரு ராட்சசி’ என்ற பட்டப் பெயருடன் தெனாவெட்டாக வலம் வருபவளின் கண்டிப்பும், கோபமும் குடும்பத்தின் நன்மைக்கே என்பதை அவளைச் சாந்தவர்களேகூட புரிந்துகொள்ளவில்லை. பொறுப்பு​களைத் துறந்து ஓடிய அப்பா, குடித்து வாழ்நாளை வீணடிக்கும் அண்ணன், விதவைத் தங்கை, அண்ணன் குடும்பம், கண் பார்வையற்ற தம்பி என்று அவளுக்குச் சுமைகள் எக்கச்சக்கம். ராஜினாமா கடிதத்தை தினமும் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வாள். ஆனால், அதைக் கொடுக்கத்தான் அவளுக்கு நேரம் வரவில்லை.

கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!
கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!

ஐந்து வருடங்களாகத் தன்னை உயிருக்குயிராய் காதலித்தவன், தன் விதவைத் தங்கையை ஐந்து நிமிடங்கள் பார்த்ததுமே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். அதைத்தாண்டி தனக்கும் திருமணம் நடைபெறும் சூழல் ஏற்படும் நேரத்தில் அண்ணன் கொலை செய்யப்பட, மற்றொரு தங்கையை மணமேடையில் அமர்த்திவிட்டு மீண்டும் பழைய இயந்திரகதி வாழ்க்கைக்கே திரும்புகிறாள். அந்த முடிவை எடுக்கும்போது கவிதாவின் கண்களில் நீர் வருவதில்லை. என்றாலும், படம் பார்த்த பெண்கள் எல்லாருமே அழுதனர். அப்படி ஒரு தத்ரூபத்தோடு நடித்திருந்தார் சுஜாதா.  'தெய்வம் தந்த வீடு’ பாடல் பெரிய ஹிட். தெலுங்கில், 'அந்து லேனி கதா’ அதாவது முடிவில்லாத கதை என்ற பெயரில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. ஜெயப்ரதா நடித்திருந்தார். அங்கேயும் சூப்பர் ஹிட்.

'பார்த்தாலே பரவசம்’ மாதவா

விவாகரத்தான ஆணும், பெண்ணும் தொடர்ந்து நட்பு பாராட்ட முடியுமா? இன்று சர்வ சாதாரணமாகத் தெரியும் உண்மைக் காட்சிகளை, 10 ஆண்டுகளுக்கு முன், மாதவா பாத்திரம் மூலம் சொன்னவர் கே.பி.வினாடி நேரத்தில் தவறான முடிவு எடுத்து மணமுறிவு பெற்ற தன் முன்னாள் மனைவிக்கு, ஒரு நல்ல நண்பனாக இருந்து, அவள் மனதுக்குப் பிடித்த வேறொரு ஆணுடன் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்வது வரை மாதவா எல்லாம் செய்கிறான். இறுதியில் அவளையே இரண்டாவது முறையாக மணக்கிறான். இளைய சமுதாயத்தினர் எப்படித் தீர ஆலோசிக்காமல் முடிவுகள் எடுத்து வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்கிறார்கள் என்றும், வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் எத்தனை அவசியம் என்பதையும் இந்தப் படத்தில் அழகாகக் காட்டியிருந்தார். மாதவன் சிறப்பாக நடித்திருப்பார். 'அன்பே சுகமா, அழகே சுகமா’ பாடல் பெரிய ஹிட்.  

கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!
கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!

'அச்சமில்லை அச்சமில்லை’ தேன்மொழி

கே.பி-யின் பெண் பாத்திரங்கள் புத்திசாலிகள், விழிப்பு உணர்வு கொண்ட​வர்கள். இவர்கள் வாழ்க்கையில் புதிய சூழ்நிலைகளைச் சந்திக்கும் போது சில சமயம் மரபு மீறுவார்கள்.சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் புல்லுருவியாக கணவன் மாறுவதை உணர்ந்து, அவனைக் கொலை செய்யவும் துணிந்த காதல் மனைவிதான் அச்சமில்லாத தேன்மொழி. நல்லொழுக்கத்தில் சிறந்து விளங்கும் ஆடவனைப் பார்த்துக் காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொள்கிறாள். வாழ்க்கை நல்லபடியாகத்தான் போகிறது. அரசியல் காற்று அவன் மீது வீசியதும் எல்லாமே மாறிப்போகிறது. உன்னதமான பண்புகள் கொண்டிருந்த கணவன் படிப்படியாக தன் தர்ம, நியாய சிந்தனைகளை விட்டுக்கொடுத்துக் கொண்டே வருகிறான். கொலை கூட அவனுக்கு சகஜமாகி விடுகிறது. இல்லற ஒழுக்கம் அர்த்தமற்றதாகி விடுகிறது. அதனால், காதலித்து கைப்பிடித்த கணவனின் உயிரை எடுத்துவிட முடிவு செய்யும் தேன்மொழி, சுதந்திர தின விழாவில், பூ மாலையில் சொருகி வைத்த கத்தியோடு சென்று மாலை அணிவிக்கும் பாவனையில் கணவனைக் குத்தி விடுகிறாள். சமூக நலனா, தனி மனித சந்தோஷமா என்ற கேள்வி எழும்போது தேன்மொழி, முன்னதைத் தேர்ந்தெடுக்கிறாள். எப்படிப்பட்ட அபூர்வ சிருஷ்டி இவள்! 1984-ம் ஆண்டு, சிறந்த தமிழ்ப் படத்துக்கான ஜனாதிபதி விருதை இந்தப் படம் பெற்றது. திருநெல்வேலி வட்டாரத் தமிழை, அட்சர சுத்தமாகப் பேசி, தேன்மொழி கேரெக்டரை அற்புதமாகச் செய்திருந்தார் சரிதா. தனக்குக் கோபம் வரும் போதெல்லாம் தன் முகத்தில் தண்ணீர் அடித்துக் கொள்வது கே.பி. ஸ்டைலுக்கே உரிய வித்தியாசமான மேனரிஸம். ஒரு மலை அருவி ஃப்ளாஷ் பேக்கில் கதை சொல்வதாக படத்தை என் தந்தை அமைத்திருப்பார். படத்தின் டைட்டிலில் நடிகர்கள் பெயர்களை அடுத்து 'மற்றும் மலை அருவி’ என்று காட்டினார்.

கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!
கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!

'உன்னால் முடியும் தம்பி’ உதயமூர்த்தி

மிகப்பெரிய சங்கீத வித்வான் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளையின் (ஜெமினி கணேசன்) மகன்தான் உதயமூர்த்தி (கமல்). ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைப் போராட்டங்களைப் பார்த்து நெகிழ்ந்து போகும் மனிதநேயம் மிக்கவன். தந்தைக்கும் மகனுக்கும் இந்த விஷயத்தில் தர்க்கம், விவாதம். அதனால், மகன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். அந்த ஊரில் உள்ள தீண்டாமை, குடிப்பழக்கம், சிறுவர்களை பணிக்கு அமர்த்துவது போன்ற தவறுகளைச் சரிப்படுத்தி வெற்றி அடைகிறான். பாரதப்பிரதமர் அவனைப் பாராட்ட நேரில் வருகிறார். அதுவரை, 'மகன் உருப்படாமல் போகிறான்’ என்று எண்ணிக் கொண்டிருந்த தந்தை,  மனம் மாறுகிறார். உதயமூர்த்தியின் கதாபாத்திரம் உன்னதமான ஒன்று. ஊருக்கு ஓர் உதயமூர்த்தி இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே இனிக்கிறது. 'தனி ஒருவனைத் திருத்துவதின் மூலம் ஒரு கிராமத்தையே திருத்த முடியும்’ என்ற மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த உதயமூர்த்தி, என் தந்தையின் கதாபாத்திரங்களில் மிகவும் வலிமையானது. கமலின் நடிப்பு பார்ப்பவர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் பாசிடிவ் எனர்ஜியையும் கொடுக்கும். 'உன்னால் முடியும் தம்பி’யின் தெலுங்கு ரீமேக்கான, 'ருத்ரவீணா’ படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது கிடைத்தது.

அக்னி சாட்சி - அரவிந்தன்

மனைவியின் (சரிதா) புகைப்படத்தை என்லார்ஜ் செய்து வீட்டின் ஒரு பக்க சுவர் முழுவதும் ஒட்டி வைத்திருக்கும் கணவரைப் பற்றி கேள்விப்பட்டது உண்டா? மனைவிக்கு ஹிஸ்டீரியா வந்து கத்தும் போதும், குடும்ப உறுப்பினர்களைப் பார்த்து அவமரியாதையாகப் பேசும்போதும் இதமாகப் பேசும் கணவர் எப்படி இருப்பார் என்பதற்கு இலக்கணம்தான் சிவகுமார். புதுக் கவிதையையும் பாரதியையும் ரசிக்கத் தெரிந்தவள் கண்ணம்மா. ஆனால், சில சமயங்களில் புத்தி பேதலித்தது போல் நடந்து கொள்வாள். மனைவியை அப்படியே ஏற்றுக்கொண்டு, நூறு சதவிகிதம் கலப்படம் இல்லாத அன்பைப் பொழியும் சிவகுமார், ஒவ்வொரு பெண்ணுக்கும் லட்சியக் கணவன். கண்ணம்மாவைப் புரிந்து கொண்டு விட்டதாலேயே, அவன் வாழ்க்கையில் பல சிக்கல்கள். விவாகரத்து வரை போகிற அவன் மண வாழ்க்கையை மீட்டு எடுத்து, தான் செலுத்தும் அன்பால் மட்டும் நிறைவைக் காணும் கேரெக்டர். அந்த கணவனைப் பொறுத்தவரை கண்ணம்மா ஒரு குழந்தை. மனைவி என்ற எதிர்பார்ப்பை விட, அந்த வளர்ந்த குழந்தை மீது அன்பு செலுத்துவதை ஒரு கணவரின் கடமையாக நினைக்கும் சிவகுமாரின் பாத்திரம் ஆயிரத்தில் ஒன்று. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், 'கனா காணும் கண்கள் மெல்ல’ செம ஹிட்டான பாட்டு.

கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!
கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!

'சிந்து பைரவி’ சிந்து

திருமணத்துக்கு முன்பே பிறந்து விட்டதால், அனாதை ஆசிரமத்தில் வளர்கிறாள் சிந்து. சங்கீதம் இவளது மூச்சு. வெகுளித்தனம், கபடமில்லாத பேச்சு, ஜே.கே.பி. என்ற சங்கீத மேதையின் இசை மீது உள்ள பக்தி இவை கலந்ததுதான் சிந்து. கச்சேரி ஒன்றில் தமிழிசையைப் பரப்புவதற்காக ஜே.கே.பி-க்கு எதிராகக் கொடி தூக்கும் சிந்துவின் கலை ஆர்வமும், மேதாவிலாசமும் அந்த மேதையைக் கட்டிப்போட்டு விடுகின்றன. அவரது மனைவி பைரவியோ சங்கீதம் என்ன விலை என்று கேட்கும் ரகம். ஆனால், கணவன் மீது அலாதிப் பிரியம். இசையில் தொடங்கி அன்பைப் பரிமாறிக் கொள்ளும் சிந்துவும், ஜே.கே.பி-யும், பைரவியின் தற்கொலை முயற்சி காரணமாக தங்களுக்குள் எல்லைக் கோடு வரைந்து கொண்டு பிரிந்து விடுகிறார்கள். ஆனால், ஜே.கே.பி.மதுவுக்கு அடிமையாகி, வாழ்க்கையைத் தொலைக்கிறார். அதனால், தன் கணவனின் வாழ்க்கையை மீட்டுத் தருமாறு சிந்துவிடம் வேண்டுகிறாள் பைரவி. இறுதியில் சிந்துவை, கணவனுக்குத் திருமணம் செய்து வைக்க முன்வந்த பிறகும், சிந்து மறுக்கிறாள். தான் பெற்ற குழந்தையை, வெகுநாளாக குழந்தை பாக்கியம் இன்றி ஏங்கும் பைரவியிடம் ஒப்படைத்து விட்டு பிரிகிறாள். சிந்து பைரவியின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிந்து பேசும் வசனங்கள் முத்தானவை. இருமணம் புரிவதன் தவறையும், சமூகத்தில் பெரிய இடத்தில் இருக்கும் மனிதர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய அவசியத்தையும் புரிய வைக்கும் சாட்டைகள் அவை. 'பாடறியேன் படிப்பறியேன்’, 'நான் ஒரு சிந்து’ போன்ற பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். அற்புதமாக நடித்திருந்த சுஹாசினிக்கு இந்தியாவின் சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருதையும், இந்தியாவின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை இளையராஜாவுக்கும் 'சிந்து பைரவி’ பெற்றுக் கொடுத்தாள். இந்தப் பத்து கேரக்டர்களும் வித்தியாசமானவர்கள். ஆனால், இன்னும் சில கதாபாத்திரங்களைப் பற்றி சில வரிகளிலாவது சொல்வதுதான் கே.பி- யின் திறமைக்கு நாம் கொடுக்கும் மதிப்பாக இருக்கும்.

கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!
கே.பாலசந்தர் படைத்த கதாபாத்திரங்கள் பற்றி ஒரு பார்வை!

புத்திசாலித்தனத்தை தவறான வழிகளில் பயன்படுத்தும் 'நான் அவனில்லை’ ஜெமினி கணேசன். சார்லி சாப்ளின் போன்று விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் 'புன்னகை மன்னன்’ சாப்ளின் செல்லப்பா - கமல். தன்னை விட இளையவனை இசையில் ஈர்த்து, உறவு முறைச் சிக்கலில் மிரட்டும் 'அபூர்வ ராகங்கள்’ பைரவி - ஸ்ரீவித்யா. கணவனால் கைவிடப்பட்ட போதும் சோர்ந்து போகாமல் படித்து, கலெக்டராகும் 'இருகோடுகள்’ ஜானகி - சௌகார் ஜானகி. மன்மதக்குறும்பு காரணமாக பல பெண்களைத் துரத்தி, இறுதியில் மனைவியே கதி என்று மனம் திருந்தும் 'மன்மதலீலை’ மதன் - கமல். இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் 'வானமே எல்லை’ காந்திராமன் - ஹெச்.ராம கிருஷ்ணன். மனைவியைத் துன்புறுத்தும் 'கல்கி’ பிரகாஷ் - பிரகாஷ்ராஜ். விகல்பம் இல்லாத நண்பனாக 'அவர்கள்’ ஜானி - கமல். 'வறுமையின் நிறம் சிவப்பு’ - தேவியாக, ஸ்ரீதேவி. கஷ்டமான உலகத்திலேயே வாழும் 'நிழல் நிஜமாகிறது’ திலகம் - ஷோபா - என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

எஸ்.ரஜத், படங்கள் - ஞானப்பிரகாசம்

(31.10.2019 தேதியிட்ட தீபாவளி மலர் இதழில் இருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism