Published:Updated:

`நேர்கொண்ட பார்வை', `சூரரைப் போற்று', `புதுமைப் பெண்'... தமிழ் சினிமாவும் பாரதியார் ரெஃபரென்ஸும்!

Bharathiyar Birthday Special
Bharathiyar Birthday Special

பாரதியாரும் அவரது கவிதைகளும் தமிழ் சினிவில் புகழப்பட்ட அளவுக்கு, எடுத்துக்காட்டப்பட்ட அளவுக்கு வேறு எந்தக் கவிஞரோ அவரது கவிதைகளோ பயன்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.

ஒரு படைப்பாளியும் அவருடைய படைப்புகளும் பிற கலை வடிவங்களுக்குள் எடுத்து கையாளப்படுவது அவர்களுக்கான தனிச்சிறப்பு. அதிலும் தங்கள் காலத்தையும் கடந்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அந்தப் படைப்புகளின் உன்னதம் கடத்தப்படுவதெல்லாம் ஒரு சிலருக்கே சாத்தியப்பட்டிருக்கிறது. தமிழ்த் திரைத்துறையில் இலக்கியத்தின் தாக்கம் கொஞ்சம் குறைவுதான்.

Sivaji Ganesan as Bharathiyar
Sivaji Ganesan as Bharathiyar

ஏதோவொரு காட்சிகளில் திரையின் ஓரத்திலோ, மிகவும் குறைவான அளவில் சில பாடல்களிலோ இடம்பெறும் திருக்குறள் வரிகளைத் தாண்டி இங்கே இலக்கியம் பெரிதாக தமிழ் சினிமாவில் பங்குபெறுவதில்லை. அந்த வகையில் பாரதியாரும் அவரது கவிதைகளும் தமிழ் சினிவில் புகழப்பட்ட அளவுக்கு, எடுத்துக்காட்டப்பட்ட அளவுக்கு வேறு எந்தக் கவிஞரோ, அவரது கவிதைகளோ பயன்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. படங்களின் தலைப்பு, பாடல்களின் முதல் வரி, ஒரு பாடலுக்கான முழு வரிகள், நடிகர்கள் பேசும் வசனங்கள் எனப் பாரதியார் இல்லாத இடமே தமிழ் சினிமாவில் இல்லை என்றே சொல்லலாம்.

கண்ணதாசன் காலத்திலிருந்தே, திரைப்படப் பாடல்களில் பாரதியாரின் வரிகளைப் பயன்படுத்திவருகிறது தமிழ் சினிமா. `சிந்து நதியின்மிசை நிலவினிலே' என சிவாஜி கணேசன் தொடங்கி `சுட்டும் விழிச் சுடரே' என சூர்யா வரை பாரதியாரின் எக்கச்சக்கமான கவிதைகள் தமிழ்த் திரையிசையெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. அத்தனை எளிதாகத் தன்னை எந்தக் காலத்துக்கும் ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவையாக வெவ்வேறு பரிமாணங்களில் இருந்துவருகின்றன.

Suttum Vizhi Sudare
Suttum Vizhi Sudare

முதலாவதாக, ஒரு திரைக்கதையின் ஏதோவொரு சூழலுக்குள் பொருந்திக்கொள்ளும் வகை. இதற்கு, `உறியடி' படத்தின் உச்சக்கட்ட வன்முறைக் காட்சிகளை உதாரணமாகச் சொல்லலாம். `அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' எனத் தொடங்கும் அந்தப் பாடலை `உறியடி'யின் முதல் பாகத்தில் சாதியத்துக்கு எதிரான சூழலிலும், இரண்டாம் பாகத்தில் முதலாளித்துவத்துக்கு எதிரான சூழலிலும் பயன்படுத்தியிருப்பார் இயக்குநர் விஜயகுமார். குறிப்பாக, அந்தக் கவிதையின் `வெந்துத் தணிந்தது காடு' வரியை, இரண்டு படங்களிலும் அதிகார வர்க்கத்தை அடித்து அடக்கிய பின் வரச் செய்திருப்பார்.

எத்தனையோ இசை ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் பாரதியின் கவிதைகளை கர்னாடக இசையில் பாடுவதின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கின்றனர். கும்மி, பள்ளு, நாட்டுப்புறச் சந்தம் என மரபு வழி இசை வடிவங்களில் வீரியத்துடனும் கோபத்துடனும் எழுதப்பட்ட பாடல்களை ஏன் மென்மையான இசைக்குள் புகுத்த வேண்டும் என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. அந்த வகையில் 'உறியடி' படத்தில் அந்தப் பாடலைத் `தத்தகிட தித்தோம்' என அதற்கே உரிய தத்தகாரத்துடனும், அதே கோபத்துடனும் இசையமைத்திருப்பார்கள். அதுவே படத்தின் ஓட்டத்துக்கும் உயிர் கொடுத்தது.

Sindhu Bairavi
Sindhu Bairavi

அதேபோல, இயக்குநர் பாலச்சந்தரின் `வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் இடம்பெறும் `நல்லதோர் வீணை செய்தே' பாடலும் இதில் முக்கியமானது. கே.பாலசந்தர் படங்களில் காட்டப்படும் பாரதியார் மேற்கோள்களை மட்டும் வைத்தே ஒரு தனிக் கட்டுரை எழுதலாம். அதிலும் இந்தப் படத்தில் அதன் கதாநாயகன் ரங்கனை (கமல்ஹாசன்) ஒரு தீவிர பாரதி ரசிகனாக வடிவமைத்திருப்பார். ரங்கன் ஒரு திறமையான பட்டதாரியாக இருந்தும் வேலையில்லாமல் திண்டாடுவதை இந்தப் பாடலோடு ஒப்பிட்டு காட்டும் வகையில் அமைந்திருக்கும் படத்தின் திரைக்கதை. அதேபோல `தீர்த்தகரையினிலே' என்ற மற்றொரு பாரதியார் பாடலும் இந்தப் படத்தில் இடம்பெறும்.

பாலசந்தரின் `சிந்துபைரவி' படத்திலும் இரண்டு பாரதியார் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. `மோகம் என்னும்' என்ற பாடலை குழப்பத்தில் இருக்கும் நாயகன் ஜே.கே.பி (சிவகுமார்) பாடுவதாக ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்தப் பாடலுக்குப் பிறகுதான் படத்தின் திரைக்கதையும் மொத்தமாகத் தடம் மாறும். மேலும், `மனதில் உறுதி வேண்டும்' என்ற பாடலைப் படத்தின் ஹீரோ இண்ட்ரோவாகப் பயன்படுத்தியிருப்பார், பாலசந்தர். அநேகமாக, தமிழில் நாயகனை அறிமுகப் பயன்படுத்தப்பட்ட ஒரே பாரதியார் பாடல் இதுவாகத்தான் இருக்கும். பின்னாளில், `மனதில் உறுதி வேண்டும்' என்ற தலைப்பில் ஒரு படத்தையும் பாலசந்தர் இயக்கினார். இதேபோல `அச்சமில்லை அச்சமில்லை' என வேறொரு பாரதியார் பாடலின் வரியையும் தன் படத்துக்குத் தலைப்பாக வைத்தார்.

Kandukondain Kandukondain
Kandukondain Kandukondain

நடிகர் ரகுவரன் தமிழில் அறிமுகமாகிய `ஏழாவது மனிதன்' (1982) படத்தின் எல்லா பாடல்களும் பாரதியார் கவிதைகள்தாம். அதிலும் `காக்கைச் சிறகினிலே' பாடல் பெரும் ஹிட்டானது. அந்த வரிசையில் மிஷ்கின் இயக்கிய `அஞ்சாதே' படத்தின் `அச்சம் தவிர் நையப்புடை' பாடல் ஒரு மாறுபட்ட முயற்சி. பொதுவாக, ஒரு கவிதையை அப்படியே எடுத்து அதற்கு மெட்டமைப்பதுதான் வழக்கமாக இருக்கும். ஆனால் இந்தப் பாடலைப் பொறுத்தவரை, பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியின் வெவ்வேறு வரிகளை ஒன்றாகக் கோத்து ஒரு முழு பாடலாக மாற்றியிருப்பார்கள்.

பாடல்களில் பாரதியின் வரிகளைப் பயன்படுத்துவதில் மற்றொரு வகையும் இருக்கிறது. அதுதான் `கஜினி'யின் `சுட்டும் விழிச் சுடரே' வகை. ஒரு கவிதையின் முதல் வரியை எடுத்துக்கொண்டு அதிலிருந்து வேறொரு பாடலை எழுதுவது. `சுட்டும்விழிச் சுடர்தான் கண்ணம்மா' என பாரதி எழுதிய கவிதையை வைத்து நா.முத்துக்குமார் எழுதியதே இந்தப் பாடல். பாலுமகேந்திரா இயக்கிய `மறுபடியும்' படத்தில் வாலி எழுதிய `நல்லதோர் வீணை செய்தே' என்ற பாடலும் இந்த வகையில் சேரும்.

Petta
Petta

ஆனாலும், `சுட்டும்விழிச் சுடர்தான் கண்ணம்மா' பாடலையும் முழுவதுமாகப் பயன்படுத்தியிருக்கிறது தமிழ் சினிமா. ராஜீவ் மேனனின் `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் இந்தப் பாடல் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தின் காதல் காட்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் ஒரு பாரதியார் ரசிகையாக நடித்திருப்பார். `வறுமையின் நிறம் சிவப்பு' படத்துக்குப் பிறகு, ஒரு தீவிர பாரதி ரசிகராக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம் இதுதான். அதற்கு முன்னும் பின்னும் பல படங்களில் இருந்தாலும், இந்தப் படம் கொஞ்சம் ஸ்பெஷல்தான். 80'ஸ் கிட்ஸுக்கு `வறுமையின் நிறம் சிவப்பு', 90'ஸ் கிட்ஸுக்கு `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' என வைத்துக்கொண்டால், 2கே கிட்ஸுக்கு `மீசைய முறுக்கு'. இந்தப் படத்தின் பெயரில் தொடங்கி பல இடங்களில் பாரதியார் ரெஃபரன்ஸ் கொட்டிக்கிடக்கும். படத்தின் நாயகனும் தீவிர பாரதியார் வெறியனாக இருப்பார்.

`நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' என்ற வரியைக் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதிகமான முறை திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட பாரதியின் வரி இதுவாகத்தான் இருக்கும். `மகாநதி' கமல்ஹாசன், `பேட்ட' ரஜினி, `எனை நோக்கி பாயும் தோட்டா' கெளதம் மேனன், `கோ-2' பாபி சிம்ஹா என இந்தப் பட்டியல் நீளும். இவற்றையெல்லாம் கடந்த இன்னொரு பட்டியல் என்றால், `புதுமைப் பெண்', 'நேர்கொண்ட பார்வை', `சூரரைப் போற்று', `கேரள நாட்டிளம் பெண்களுடனே' எனப் பாரதியின் கவிதை வரிகளால் தலைப்பிடப்பட்ட படங்கள்.

இன்னும் பல வகைகளில், பரிமாணங்களில் பாரதியின் மேற்கோள்களும் ரெஃபரன்ஸ்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவர் பயன்படுத்திய சொல்லாடல்களும் முன் வைத்த கருத்தியலும் அத்தனை பின் நவீனத்துவம் வாய்ந்தவை. நிகழ்கால சமூகச் சூழலே இந்தக் கருத்தியலையும், அதை மொழிந்த பாரதியையும் இன்றும் அவசியமாக்குகின்றன, எதிர்காலத்திலும் ஆக்கும்.

``மேஜிக் பண்ணுங்க பாரதினு யுவன் கேட்டுக்கிட்டார்!" - பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி
அடுத்த கட்டுரைக்கு