Published:Updated:

``விரைவில் நற்செய்தி வரும்!"- நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடந்த பாரதிராஜா - இளையராஜா சந்திப்பு

"இயலும் இசையும் இணைந்தது. இதயம் என் இதயத்தை தொட்டது... என் தேனியில்" என்ற கேப்ஷனோடு போட்டோவை ட்வீட் செய்துள்ளார், இயக்குநர் பாரதிராஜா.

பாரதிராஜா - இளையராஜா
பாரதிராஜா - இளையராஜா

பாரதிராஜா - இளையராஜா கூட்டணியில் பல மெகா ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. 1977-ல் வெளியான '16 வயதினிலே' முதல் 1992-ல் வெளியான 'நாடோடி தென்றல்' வரை பாரதிராஜாவின் பல படங்களுக்கு இசையமைத்தவர், இளையராஜா. இந்தப் படத்திற்குப் பிறகு, சில காரணங்களால் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை. இருவரும் சினிமாவுக்கு வருவதற்கு முன்னதாகவே நண்பர்களாக இருந்தனர். இவர்களது கூட்டணியில் உருவான படங்களுக்கும் பாடல்களுக்கும் இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர்.

பாரதிராஜா - இளையராஜா
பாரதிராஜா - இளையராஜா

இந்நிலையில், இன்று அவர்களின் சொந்த ஊரான தேனியில் இருவரும் சந்தித்துள்ளனர். அதனை, "இயலும் இசையும் இணைந்தது. இதயம் என் இதயத்தை தொட்டது... என் தேனியில்" என்ற கேப்ஷனோடு தானும் இளையராஜாவும் காரில் அமர்ந்திருக்கும் போட்டோவை ட்வீட் செய்துள்ளார், இயக்குநர் பாரதிராஜா.

இந்தச் சந்திப்பு குறித்து விசாரித்தபோது, "ஒவ்வொரு வருடமும் தீபாவளி சமயத்தில் இளையராஜா தன் சொந்த ஊருக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்போது லோயர் கேம்ப் பகுதியில் உள்ள அவரது அம்மா சமாதிக்குச் செல்பவர், அந்த ஊர் மக்களையும் ரசிகர்களையும் சந்திப்பார். அப்படி இந்த தீபாவளிக்கு தேனிக்கு வந்தவர், இன்று பாரதிராஜாவை வைகை அணையில் சந்தித்துள்ளார். பல வருடங்கள் கழித்து இருவரும் மனம்விட்டுப் பேசியுள்ளனர். தொடர்ந்து, வைகை அணையில் உள்ள குடியிருப்பு கட்டடப் பணிகள் நடைபெற்று வந்த நேரத்தில் இளையராஜா வேலை பார்த்த இடங்களுக்கும் இருவரும் ஒரே காரில் சென்று சுற்றிப் பார்த்துள்ளனர்.

இளையராஜா- பாரதிராஜா
இளையராஜா- பாரதிராஜா

தவிர, விரைவில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் அழைத்து நற்செய்தி ஒன்றையும் அறிவிக்கவிருக்கிறார்கள். ஆனால், அது படமாக இருக்காது" என்ற தகவல்களும் கிடைத்தன. மனக்கசப்பு காரணமாக பிரிந்தவர்கள் இன்று ஒரே காரில் இன்முகத்தோடு அமர்ந்திருப்பது அவர்களின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.