சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

பூமி - சினிமா விமர்சனம்

ஜெயம் ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயம் ரவி

பூமியைத் தாங்கும் ஹெர்குலிஸ் போல் இந்த ‘பூமி’யை ஒட்டுமொத்தமாகத் தாங்குவது ஜெயம் ரவிதான்.

இந்தியாவில் விவசாயிகள் அழிவதற்குக் காரணம் கார்ப்பரேட் கம்பெனிகளும் அவர்களால் இயக்கப்படுபவர்களும்தான் என்று பொங்கியெழும் பூமிநாதனால் காப்பாற்றப்படும் ‘பூமி’ இது.

நாசா கொண்டாடும் விஞ்ஞானி பூமிநாதன். செவ்வாய்க் கிரகத்தை அணுகுண்டுகளால் சல்லடையாக்கி உருக்கிவிட்டு அதில் மனிதர்களைக் குடியமர்த்தலாம் என்கிற ஐடியாவுக்குச் சொந்தக்காரர். அதற்காக செவ்வாய் கிளம்பும்முன் தன் சொந்த ஊரைப் பார்த்துவிட்டுப்போகலாம் என வருபவரை, விவசாயம் செத்துக்கிடக்கும் வறண்ட நிலம் வரவேற்கிறது. காரணம் கார்ப்பரேட்தான் என்பதை டிரோன் ஷாட்களின் வழியே கண்டுபிடிக்கிறார். பிறகு அதற்கான தீர்வுகளை வாட்ஸ்-அப் பார்வர்டுகள், அரை உண்மைகள் நிறைந்த யூ-ட்யூப் வீடியோக்கள் வழியே கண்டடைந்து ‘இந்தியாவை விட்டே கார்ப்பரேட் கம்பெனியை’ எப்படி பூமிநாதன் ஓட ஓடத் துரத்தினார் (?!) என்பதே மீதிக்கதை.

பூமியைத் தாங்கும் ஹெர்குலிஸ் போல் இந்த ‘பூமி’யை ஒட்டுமொத்தமாகத் தாங்குவது ஜெயம் ரவிதான். தம்பி ராமையா தற்கொலையின்போது கலங்கி, அமைச்சர் ராதாரவியின் முன்பு கொதித்து, வில்லனுக்கு எதிராக வசனம் பேசி தனக்கான வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். ஆனால் நம்பகத்தன்மையற்ற காட்சிகள், வசனங்களால் அத்தனையும் வயலுக்குப் பாயாமல் விழலுக்கு இறைத்த நீராக வீணாகிறது. அசட்டு ஹீரோயின், அந்நிய வில்லன், நடிக்க வாய்ப்பில்லாத காமெடியன் எனத் தமிழ் சினிமா பார்த்துச் சலித்த ஏனைய அதே கதாபாத்திரங்கள். டட்லீயின் ஒளிப்பதிவு அடிக்கடி வானத்துக்குப் பறந்து பூமியைப் படம் பிடித்திருக்கிறது. இமான் இசையில் ‘கேட்ட’ பாடல்கள்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்று இயக்குநர் லக்‌ஷ்மண் நினைத்ததும் அதற்குப் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் சதியைப் பற்றிப் படமெடுக்க நினைத்ததும் நல்ல விஷயம்தான். ஆனால் அதுகுறித்த நம்பகமான தகவல்கள் இணையத்திலும் புத்தகங்களிலும் ஏராளம் கொட்டிக் கிடக்க, ஆதாரமற்ற செய்திகளைக் கோத்துப் படமெடுத்ததுதான் பலவீனம்.

பூமி - சினிமா விமர்சனம்

அணுகுண்டு போட்டுவிட்டு விவசாயம் செய்வது, ஒரே மாத்திரை போட்டு ஆக்சிஜனை ஏற்காதபடி நம் உடலை மாற்றுவது, காபியில் மருந்து கலந்துகொடுத்து ஆட்டிசம் நோயை வரவழைப்பது என அறிவியலுக்கே அடிக்கடி சவால் விடுகிறது கதை.

‘வெளிநாட்டு கோலா கம்பெனி தண்ணிய உறிஞ்சுது’ எனக் கண்ணீர் வடிக்கும் ஹீரோவே ‘‘இவர் நம்மூர்க்காரரு. சாப்ட் ட்ரிங்ஸுக்காக இவருக்கு நாம சக்கரை உற்பத்தி செய்யணும்’’ எனச் சொல்வது போன்ற காட்சிகள், ‘‘படிக்கப் போறியா, மாடு மேய்க்கப் போறியான்னு சின்ன வயசிலிருந்து தப்புத் தப்பா சொல்லிக் கொடுத்திருக்காங்க’’ போன்ற கல்விக்கு எதிரான அபத்த வசனங்கள் ஆகியவை ‘பூமி’யைத் தரிசாக்குகின்றன.