Election bannerElection banner
Published:Updated:

நடிகர் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகள் நட்ட பிக்பாஸ் ரம்யா பாண்டியன்!

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

திருவள்ளூரில் சர்வதேச புவி தினத்தை முன்னிட்டு மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் 59 மரக்கன்றுகளை நட்டனர்.

புவியின் சூழலியல் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதைத் தடுக்கும் நோக்கத்தோடு சர்வதேச அளவில் 1970-ம் ஆண்டு முதல் ஏப்ரல் 22-ம் தேதியன்று 'உலக புவி தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக, இளைஞர்களாலும், சூழலியல் ஆர்வலர்களாலும் கொண்டாடப்படும் இந்த புவி தினம் இந்தமுறை தமிழகத்தில் மறைந்த விவேக்கின் நினைவாகவும் கொண்டாடப்பட்டது.

Vivek
Vivek
Photo: Vikatan / Kalimuthu.P

நடிகர் என்பதைத்தாண்டி சமூக ஆர்வலர், சூழலியல் செயற்பாட்டாளர் என்றெல்லாம் தமிழக மக்களால் அழைக்கப்பட்ட விவேக்கின் 1 கோடி மரங்கள் நடும் கனவினை தற்போது அவரது ரசிகர்கள் நிறைவேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 59 வயதில் உயிர் நீத்த நடிகர் விவேக்கின் நினைவாக உலக புவி தினத்தில் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் வளாகத்தில் 59 மரக்கன்றுகள் நட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டது.

அதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி அரவிந்தன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

காலை 7 மணியளவில் தொடங்கிய நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான ரம்யா பாண்டியன் பங்கேற்றார். எஸ்.பி.அரவிந்தன், ரம்யா பாண்டியன் மற்றும் காவலர்கள் இணைந்து நடிகர் விவேக்கின் நினைவாக 59 மரக்கன்றுகள் நட்டனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு