Published:Updated:

`ஊர்ல கோயில் கட்டிட்டேன்; இனி மக்களைக் காப்பாத்தவேண்டியது 'வீரமுனி' பொறுப்பு!' - `பிக்பாஸ்’ சரவணன்

’பிக்பாஸ்’ சரவணன்
’பிக்பாஸ்’ சரவணன்

''கொரோனாவுக்கு முன்னாடி இருந்த பழைய வாழ்க்கையையும் பழைய சந்தோஷத்தையும் சேலம் மக்களுக்கு மட்டுமில்ல, கொரோனா பிடியில சிக்கிய எல்லா மக்களுக்குமே தர வேண்டியது இனி அவன் பொறுப்பு.'’

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று சேவல் வெட்டி படையலிட்டு, இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளார், சேலத்தை சொந்த ஊராகக் கொண்ட ‘பிக்பாஸ்’ சரவணன்.

சரவணன்
சரவணன்

சரவணனிடம் பேசினோம். `` ஊரடங்கு அறிவிக்கப்படுறதுக்கு முன்னாடியே குடும்பத்தோடு இங்க வந்துட்டேன். ஆரம்பத்துல சுமார் 40 பேர் வரைக்கும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருந்தாங்க. ஊரடங்கை ஸ்ட்ரிக்டா கடைபிடிச்சதாலயும் கடவுள் அருளாலயும் எண்ணிக்கையை அதிகரிக்கவிடாம ஒரே லெவல்ல வெச்சிருந்து, ஒருவழியா எல்லாரையும் குணப்படுத்திட்டாங்க. ஒரு வாரத்துக்கும் மேல ஆன நிலையில புதிய தொற்று இல்லாததால, கொரோனா இல்லாத மாவட்டமா அறிவிச்சிட்டாங்க.

மக்களோட இயல்பு வாழ்க்கையை திரும்ப தந்ததுக்கு நன்றி செலுத்தும் வகையிலதான் கடந்த ஞாயித்துக்கிழமை குடும்பத்தோடு போய் சாமி கும்பிட்டுட்டு வந்தேன்.

கோயில் வேற எங்கயும் இல்ல, சில மாதங்களுக்கு முன்னாடி நானே எங்க தோட்டத்துல வீரமுனி ஆலயத்தைக் கட்டி எழுப்பினேன். கிடா வெட்டி சிறப்பா கும்பிடணும்னு ஆசைதான். ஆனா, நாடு இன்னைக்கு இருக்கிற நிலையில கூட்டம் சேர்க்கறது சரியா இருக்காதில்லையா...

சரவணன்
சரவணன்

அதனால ஆடிக்குள் எல்லாம் கம்ப்ளீட்டா சரியாகிடுச்சுன்னா அப்ப கிடா வெட்டிக்கலாம்னு இப்ப சேவல் மட்டும் வெட்டி பொங்கலிட்டு வீரமுனிக்கு படையலிட்டாச்சு. கொரோனாவுக்கு முன்னாடி இருந்த பழைய வாழ்க்கையையும் பழைய சந்தோஷத்தையும் சேலம் மக்களுக்கு மட்டுமில்ல, கொரோனா பிடியில சிக்கிய எல்லா மக்களுக்குமே தர வேண்டியது அவன் பொறுப்பு’ என்கிறார் `சித்தப்பு' சரவணன்.

அடுத்த கட்டுரைக்கு