Published:Updated:

`விஜய் பிகிலுக்காக ஃபுட்பால் கத்துக்கிட்டாரா... அனிமேஷனா?!’ - `பிகில்’ கேமராமேன் விஷ்ணு பதில்

ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு
ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு

`விஜய்ணா 60 படங்களுக்கும் மேல பண்ணிட்டார். ஆனா, இப்பவும் ஏதாவது ஒரு புது விஷயத்தைப் பண்ணப்போறோம்னா, அதுக்காக மெனக்கெட்டு அதைக் கத்துக்கிட்டுத்தான் பண்ணுவேன்னு பிடிவாதமா இருப்பார்.’

விஜய் - அட்லி கூட்டணியின் ’மெர்சல்’ படத்தில் விஷூவலில் மெர்சல் காட்டியவர், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு. இதே கூட்டணியில், சமீபத்தில் வெளியான ’பிகில்’ படத்திலும் தனது கேமராவால் பலரையும் அசத்தியுள்ளார். அவரை சந்தித்துப் பேசினோம்.

’மெர்சல்’ படத்துக்குப் பிறகு ’பிகில்’ கமிட்டானப்போ, எந்த மாதிரியெல்லாம் உங்களை தயார்படுத்திக்கிட்டீங்க..?

bigil team
bigil team

’’படத்தோட ஸ்கிரிப்ட்டிலேயே ஸ்போர்ட்ஸ் ஒரு முக்கிய அம்சமா இருந்துச்சு. நடனம், சண்டையை எப்படி கோரியோகிராபர்ஸ் டிசைன் பண்றாங்களோ அதே மாதிரி ஸ்போர்ட்ஸ் சீன்ஸை டிசைன் பண்றதுக்கும் ஆட்கள் இருக்காங்க. அவங்களை லாஸ் ஏஞ்சலீஸ்ல போய் பார்த்தோம். அவங்கதான் ஃபுட்பால் விளையாடுற காட்சிகளை கோரியோ பண்ணிக்கொடுத்தாங்க. டிவி-யில் கிரிக்கெட் மேட்ச், ஃபுட்பால் மேட்சை காட்ற மாதிரி சினிமா எடுக்க முடியாது. சினிமாவுக்குனு சில விஷயங்களை பண்ணணும். அதையெல்லாம் அவங்கதான் டிசைன் பண்ணினாங்க.

’மெர்சல்’ படம் பண்ணும்போது எனக்கிருந்த பதற்றம், ’பிகில்’ பண்ணும்போது இல்லை. மெர்சலைவிட'பிகில்' படத்தை எப்படி சிறப்பா பண்ணலாம்னுதான் யோசிச்சிட்டே இருந்தேன். அதே சமயம், ஸ்கிரிப்ட்டுக்கு என்ன வேணுமோ அதை மீறி பண்ணவும் கூடாது. ஒரு கேமராமேனா பாட்டு, சண்டைக்காட்சிகளில் நான் நினைக்கிறதைப் பண்ணலாம். அதுவே கதைக்குள்ள போயிட்டா, ஸ்கிரிப்ட் கேட்குறதைத்தான் பண்ணணும். கதையைத் தாண்டி நாம எதையுமே பண்ணிடக்கூடாதுனு, மனசுல வச்சுத்தான் இந்தப் படத்தைப் பண்ணினேன்.’’

உங்களுக்கும் விஜய்க்கும் இடையே இருக்கும் நட்பைப் பற்றி சொல்லுங்க..?

’’ ‘பிகில்’ செட்டில் விஜய் அண்ணாவுக்கு பல தம்பிகள் இருக்காங்க. எப்போதும் யாராவது ஒருத்தர், அவர்கிட்ட பேசிட்டுத்தான் இருப்பாங்க. செட்டில் யார் வேணும்னாலும் அவர்கிட்ட போய் பேசலாம். அப்படித்தான் அவர் எல்லாரோடும் பழகுவார். நான் படத்தோட கேமராமேனா இருந்ததனால, ஒவ்வொரு ஷாட்டைப் பத்தியும் அவர்கிட்ட பேசுறது, என்ன பண்ணப்போறோம்னு சொல்றதுனு அதிகம் அவரோட பழகியிருக்கேன். விஜய் அண்ணா, எனக்கு அண்ணனுக்கும் மேல.’’

’மெர்சல்’ படத்தில் வெற்றிமாறன், வெற்றி, மாறன்னு விஜய் நடிச்ச மூணு கேரக்டர்களுக்கும் மூணு ஓப்பனிங் சீன் இருக்கும். அதே மாதிரிதான் ’பிகில்’ படத்துலயும் இருக்கு. ’பிகில்’ படத்தோட ஓப்பனிங் சீன்ஸை எப்படி ப்ளான் பண்ணீங்க?

bigil rayappan
bigil rayappan

’’அட்லி அண்ணாவோட ஸ்கிரிப்ட்டிலேயே விஷூவலா என்ன வேணும்னு இருக்கும். அதுமட்டுமில்லாமல், ராயப்பன் கேரக்டர் எழுதுனதுல இருந்து நானும் அட்லி அண்ணாவும் நிறைய பேசினோம். இது எதுவுமே ஒரு நாள்ல எடுத்த முடிவு கிடையாது. ராயப்பன் கேரக்டர் காவி வேஷ்டி கட்டியிருக்கணும், டார்க் கலர் சட்டைதான் போட்டிருக்கணும்னு ஒவ்வொரு விஷயமும் நாங்க பேசிப்பேசி பண்ணினதுதான். நாங்க பேசுனதை அப்படியே விஷூவல் பண்ணணும்னு ப்ளான் பண்ணினோம். அப்படியே பண்ணிட்டோம். அட்லி அண்ணாவும் நானும் விஜய் அண்ணாவோட ரசிகர்களாக இருக்குறதுனால, பில்ட் அப் ஷாட்ஸ், இன்ட்ரோ ஷாட்ஸை ரொம்ப ஆர்வமா எடுப்போம். இந்தப் படத்துல மூணு கேரக்டரும் வெவ்வேறு இடங்களில் அறிமுகமாகும். மைக்கேல் கேரக்டர் அவரோட ஏரியாவுல, ராயப்பன் கேரக்டர் கார்ல, ’பிகில்’ ஸ்டேடியம்லனு மூணுமே வேற, வேற மாதிரி ப்ளான் பண்ணி எடுத்தோம்.’’

பாடல்கள் ஷூட் பண்ணின அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க..?

verithanam bigil
verithanam bigil

'' ‘வெறித்தனம்’ பாட்டு அனுபவம் உண்மையாகவே வெறித்தனமாத்தான் இருந்துச்சு. முதலில் இந்தப் பாட்டை  பகலில் ஷூட் பண்ணலாம்னு ப்ளான் பண்ணியிருந்தோம். அப்பறம் ஒரு நாள், நைட் ஷூட் பண்ணினால்தான் நல்லா இருக்கும்னு தோணுச்சு. அட்லி அண்ணாகிட்டயும் விஜய் அண்ணாகிட்டயும் சொன்னப்போ, அவங்களும் எந்த மறுப்பும் சொல்லாம ஓகே சொல்லிட்டாங்க. இந்தப் பாட்டுல நான் என்னதான் வித்தியாசமான லைட்டிங் எல்லாம் வெச்சாலும், ஆடியன்ஸ் விஜய் அண்ணாவைத் தாண்டி வேற எதையும் பார்க்க மாட்டாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதனால, விஜய் அண்ணாவை மட்டும் ஹைலைட்டா காமிக்கலாம்னு ப்ளான் பண்ணித்தான் அந்தப் பாட்டை எடுத்தோம்.''

unakaga bigil
unakaga bigil

'உனக்காக’ பாட்டு எடுக்கும்போது, இந்தப் பாட்டுக்கான லைட்டிங் ரொம்பவும் வெளிச்சம் இல்லாம, ரொம்பவும் இருட்டா இல்லாம, மழை பெய்றதுக்கு முன்னாடி எப்படி இருக்குமோ அப்படி இருக்கணும்னு ப்ளான் பண்ணினோம். அந்த ஃபீலை கொண்டுவந்து பாட்டை எடுத்தோம். 

singappenney bigil
singappenney bigil

’சிங்கப்பெண்ணே’ பாட்டுக்கு முன்னாடி ’மாதரே’ பாட்டு முடிஞ்சிருக்கும். ’மாதரே’ பாட்டு ஒருவித மன அழுத்தத்தில் பாடுற மாதிரி இருக்கும். அப்படியே கட் பண்ணுனா, ’சிங்கப்பெண்ணே’ பாட்டு. செம எனர்ஜி கொடுக்கக்கூடிய பாட்டு.  அதை ஷூட் பண்ணும்போது, விஷூவலிலும் அந்த எனர்ஜியைக் கொடுக்கணும்னு நினைச்சு பண்ணினோம். ஒரு பாட்டு ஷூட் பண்ணப்போறோம்னா, ஒரு அஞ்சு நாள் அதுக்காகவே ஒதுக்கி எடுப்போம். ஆனா, ’சிங்கப்பெண்ணே’ அப்படி எடுத்த பாட்டு இல்லை. எப்போதெல்லாம் டைம் கிடைக்குதோ அப்போதெல்லாம் எடுத்தோம். ஒரு நாள் அஞ்சு மணிக்கே ஷூட் முடிஞ்சிருச்சுனா, அப்போ ’சிங்கப்பெண்ணே’ பாட்டை எடுப்போம். அந்தப் பாட்டு முழுக்கவே வேற, வேற லொக்கேஷன், மாண்ட்டேஜ்னு குருவி சேர்க்கிற மாதிரி ஒவ்வொரு ஷாட்டா சேர்த்துப் பண்ணினோம்.’’

விஜய் ஃபுட்பால் விளையாடுற சீன் எல்லாம் அனிமேஷன்தானா?

பிகில்
பிகில்

''இல்லை... விஜய்ணா 60 படங்களுக்கும் மேல பண்ணிட்டார். ஆனா, இப்பவும் ஏதாவது ஒரு புது விஷயத்தைப் பண்ணப்போறோம்னா, அதுக்காக மெனக்கெட்டு அதைக் கத்துக்கிட்டுத்தான் பண்ணுவேன்னு பிடிவாதமா இருப்பார். அப்படித்தான் ஃபுட்பால் ஷாட்ஸ் எடுக்கும்போது, ’நான்தான் பண்ணுவேன்... சி.ஜி வேணாம்’னு தெளிவா சொல்லிட்டார். அதுக்காக நேரம் எடுத்துக்கிட்டு பயிற்சி எடுத்தார். ஷாட்ஸ் அப்போ செமையா பண்ணிட்டார். அதனால நோ அனிமேஷன். அவரே அவ்ளோ இறங்கி வேலை செய்யும்போது, நாமளும் செய்யணும்ல. அதான், அவர் ஃபுட்பால் விளையாடுற சீன்ஸ் எடுக்கும்போது, நான் கேமராவுல விளையாடி இருப்பேன்.’’

‘கோச்.... கோச்சுக்காதீங்க  கோச்ச்ச்ச்ச்ச்...!’ - பிகில் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்
அடுத்த கட்டுரைக்கு