Published:Updated:

``உன் ஊர்ல முகம் பாக்குற கண்ணாடியே விற்காதா?" - அன்று சமுத்திரக்கனி யாரோ, இன்று ஹீரோ!

Samuthirakani
Samuthirakani

`நாடோடிகள்' படத்தின் வெற்றி, இயக்குநராக அவரை நாடெங்கும் பிரபலப்படுத்துகிறது. அதன் பின் நடந்ததெல்லாம் கடந்த தசாப்தத்தில் ஒரு திரைக்கலைஞன் நிகழ்த்திய அதிதூர பாய்ச்சல்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சேத்தூர் கிராமம். அங்கு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன், தன் அப்பாவின் பாக்கெட்டிலிருந்து 130 ரூபாய் எடுத்துக்கொண்டு சென்னைக்கு பஸ் ஏறினான். சினிமா பார்ப்பதும், சினிமா பற்றி பேசுவதுமே குற்றம் என்றிருந்த அச்சூழலில், முதல்முறையாகப் பார்த்திருந்த `அலைகள் ஓய்வதில்லை' சினிமா, அச்சிறுவனை என்னமோ செய்தது. தானும் ஒரு நடிகனாக வேண்டுமென்கிற வேட்கையில், ஒருவித வேகத்தில் பஸ் ஏறிவிட்டான்.

Samuthirakani
Samuthirakani

பேருந்து தாம்பரத்தைக் கடந்ததும் கண்டக்டர் கேட்கிறார், `எங்கப்பா இறங்கணும்?' சென்னையில் அவன் சந்தித்த முதல் கேள்விக்கே, அவனுக்கு பதில் தெரியவில்லை. ஆனால், 30 வருடங்களுக்குப் பிறகு அவனை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஒட்டுமொத்த சென்னைக்கும் தமிழகத்தும், ஏன் தென்னிந்தியா முழுவதுக்குமே அவனைத் தெரிந்திருந்தது. அந்தச் சேத்தூரானின் பெயர் சமுத்திரக்கனி.

இன்று எத்தனையோ படங்களில், எத்தனையோ மொழிகளில், முக்கியமான வேடங்களில் நடித்தும், சில படங்களை இயக்கியும், தயாரித்தும் ஓடிக்கொண்டிருக்கும் சமுத்திரக்கனியின் இந்நிலைக்குப் பின்னால் கடின உழைப்பும் விடா முயற்சியும் இருக்கிறது. 15 வயதில் முதல்முறையாக சென்னைக்கு வந்தபோது, அவரிடம் எந்தத் திட்டமும் இல்லை. கையிலிருந்த ஒரு டைரியில் டி.ராஜேந்தர் மற்றும் பாக்யராஜின் முகவரிகள் இருந்தன, அவ்வளவுதான். ஆனால், அவர்களது வீட்டையே அவரால் நெருங்க முடியவில்லை. கையிலிருந்த காசு கரையத்தொடங்க 4 நாள்கள் ஹோட்டலில் வேலைபார்த்து, காசு சேர்த்து விருதுநகருக்கு திரும்பிவிடுகிறார். பிறகு, ப்ளஸ் டூ முடித்ததும் வீட்டிலேயே 1,000 ரூபாய் வாங்கிக்கொண்டு மீண்டும் சென்னை வருகிறார். ``உன் ஊர்ல முகம் பார்க்குற கண்ணாடியே விற்காதா?" என இயக்குநர் ஒருவர், தன்னம்பிக்கையை சில்லுசில்லாக உடைக்கிறார்.

Samuthirakani
Samuthirakani

அப்போது சின்னத்திரையின் பரபரப்பான இயக்குநரான சுந்தர்.கே.விஜயனைச் சந்திக்கிறார் சமுத்திரக்கனி. அவரோ, ``நீ படிப்பை முழுசா முடிச்சுட்டு வா. பார்க்கலாம்" எனச் சொல்லி அனுப்பி வைக்க, மீண்டும் ஊருக்கு வந்து, கல்லூரியில் பி.எஸ்ஸி கணிதம் படித்துவிட்டு, இனிமேல் சினிமாதான் எனத் திட்டவட்டமாக முடிவு செய்துவிட்டு சென்னைக்கு படையெடுக்கிறார். இப்போது அவருக்கு எங்கே இறங்க வேண்டும், எங்கே செல்ல வேண்டும், யாரை பார்க்க வேண்டும் என எல்லாம் புரிந்திருந்தன. சென்னையின் சூழலும் ஓரளவு பழக்கப்பட்டிருந்தது. சுந்தர்.கே.விஜயனிடம் 12 சீரியல்களில் துணையாகப் பணியாற்றினார். அப்போதுதான், சமுத்திரக்கனியிடம் `நடிப்பை விடு, டைரக்‌ஷனுக்கு வா' என மடைமாற்றியிருக்கிறார் விஜயன். பிறகுதான் இயக்குநர் சிகரத்திடம் பணியாற்றும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.

Samuthirakani
Samuthirakani

கே.பாலசந்தரிடம் சில படங்கள் மற்றும் சில சீரியல்களில் பணியாற்றியதில், அவ்வளவு அனுபவம் கிடைத்திருக்கிறது. உடனே, எஸ்.பி.பி.சரண் அழைத்து, `உன்னைச் சரணடைந்தேன்' படத்தைக் கொடுக்கிறார். அதன்பிறகு, `நெறஞ்ச மனசு.' இரண்டு படங்கள் இயக்கியும், எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. முதல் முயற்சியில் சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் விருதுநகருக்குச் சென்றதுபோல, மீண்டும் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கே செல்கிறார். இம்முறை இயக்குநராக `அண்ணி', `செல்வி', `தங்கவேட்டை' என சின்னத்திரையில் பெரும் வெற்றிகளை சம்பாதிக்கிறார். ஆனாலும், வெள்ளித்திரையின் வெளிச்சம் அவரை நிம்மதியாக உறங்கவிடவில்லை. `நாடோடிகள்' படத்தின் திரைக்கதையை கையில் வைத்துக்கொண்டு, பல நடிகர்களிடம், தயாரிப்பாளர்களிடம் சொல்கிறார். எல்லோருமே தயங்குகிறார்கள்!

பிறகு, அவருடைய நண்பர் சசிகுமாரிடமிருந்து போன் வருகிறது. `சுப்ரமணியபுரம்' வாய்ப்பு அமைகிறது. படமும் வெற்றிபெறுகிறது. `நாடோடிகள்' திரைக்கதையும் திரைப்படமாக உருவம் கொள்கிறது. படம் அடைந்த மாபெரும் வெற்றியில், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, வங்காள மொழிகளில் ரீமேக்காகிறது. `சுப்ரமணியபுரம்' படத்தின் வெற்றி, நடிகனாக வேண்டுமென்கிற அவரது நீண்டகால லட்சியத்தை சாத்தியப்படுத்துகிறது. புதுப்பட வாய்ப்புகள் அவரைத் தேடிவருகின்றன. `நாடோடிகள்' படத்தின் வெற்றி, இயக்குநராகவும் அவரை நாடெங்கும் பிரபலப்படுத்துகிறது. அதன் பின் நடந்ததெல்லாம் கடந்த தசாப்தத்தில் ஒரு திரைக்கலைஞன் நிகழ்த்திய அதிதூர பாய்ச்சல்.

Samuthirakani
Samuthirakani

இந்த வெற்றிகளை எல்லாம்விட பெரியது, தான் சினிமாவுக்குள் வந்தோம், சாதித்தோம், சென்றோம் என்றில்லாமல், எல்லாவித நெருக்கடிகளையும் கடந்து மக்களின் பிரச்னைகளுக்கும் அவர் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார். திரையுலகில் பன்முகம் கொண்ட கலைஞன் என்றாலும், அரசியல்தான் அவரை முழுமையாகக் கலைஞராக மாற்றுகிறது. சமுத்திரக்கனி எத்தனையோ அட்வைஸ்கள் செய்திருக்கிறார். அதில் அவர் வாழ்விலிருந்து எடுத்துச் சொன்ன இந்த அட்வைஸ் மிக முக்கியமானது, ``முயற்சிகளில் தளர்வு அடைவது வேண்டாத வேலை. கொஞ்ச வருஷம் உழைத்துவிட்டு ஒண்ணும் கிடைக்கலைன்னு சொல்லிட்டு திரும்பிவிடக் கூடாது. உங்களுக்கான மகுடம் அடுத்த திருப்பத்திலும் காத்திருக்கலாம். ஓ.கேயா!"

பிறந்தநாள் வாழ்த்துகள் சமுத்திரக்கனி!
அடுத்த கட்டுரைக்கு