Published:Updated:

அர்விந்த் சாமி... 90'ஸின் சாக்லேட் பாய் மட்டுமல்ல... தமிழ் சினிமாவின் தனி ஒருவன்! #HBDArvindSwami

அர்விந்த் சாமி

`நீ வேற வழியில ரொம்ப தூரம் போயிட்டேன்னு கேள்விப் பட்டேன் தாமஸ். திரும்ப முடியாத ரொம்ப தூரமா?', `கடல்' படத்தில் டிரெய்லரில் அர்விந்த் சாமி பேசும் இந்த வசனம், அவருக்கானது.

அர்விந்த் சாமி... 90'ஸின் சாக்லேட் பாய் மட்டுமல்ல... தமிழ் சினிமாவின் தனி ஒருவன்! #HBDArvindSwami

`நீ வேற வழியில ரொம்ப தூரம் போயிட்டேன்னு கேள்விப் பட்டேன் தாமஸ். திரும்ப முடியாத ரொம்ப தூரமா?', `கடல்' படத்தில் டிரெய்லரில் அர்விந்த் சாமி பேசும் இந்த வசனம், அவருக்கானது.

Published:Updated:
அர்விந்த் சாமி

மணிரத்னம் எனும் திரைக் கவிஞன், அவர் பேனா மை படைத்த பல பாத்திரங்களுக்கு ரத்தமும் சதையுமாக உயிர்கொடுக்க இவரையே தேர்ந்தெடுத்தார். `நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்', இந்த வார்த்தைகளில் இருந்துதான் எல்லாம் தொடங்கியது. அர்விந்த் சாமி எனும் பெயருக்கு `அழகு' மட்டுமல்ல அர்த்தம். திறன் உழைப்பு, அர்ப்பணிப்பு, விடா முயற்சி என ஆயிரம் இருக்கின்றன. இன்று பிறந்தநாள் கொண்டாடும் அர்விந்த் சாமியின், ஆச்சர்யங்கள் நிறைந்த திரைப்பயணத்தில் மணிரத்னம் உடனான பயணத்தை மட்டும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

அர்விந்த் சாமி
அர்விந்த் சாமி

சூப்பர் ஸ்டார் ரஜினி, மெகா ஸ்டார் மம்முட்டி என இரு பெரும் நட்சத்திரங்களின் பேரொளிக்கு மத்தியில், சின்னஞ்சிறு நட்சத்திரமாக மின்னினார் அர்விந்த் சாமி. ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் அந்தக் காட்சி, தமிழ் சினிமாவின் உரையாடல் காட்சிகளுக்கான டெக்ஸ்ட் புக். ரஜினி, மம்முட்டி, நாகேஷ் என ஜாம்பவான்கள் சூழ்ந்திருந்த மேசையில், அர்விந்த் சாமியின் கண்களில் எந்தப் பதற்றமும் இல்லை. `கத்த வேண்டியதெல்லாம் கத்தி முடிச்சிட்டீங்களா? உங்களுக்கு இந்த ஊர் மக்கள் வேணா பயப்படலாம். நான் பயப்பட மாட்டேன்' என வார்த்தைகளில் கனம் சேர்த்து, கவனம் பெற்றார். கர்ணன், துரியோதனின் இருமுனைத் தாக்குதல்களை, ஒற்றை ஆளாக சமாளிப்பதற்கு திறமை வேண்டும், தன் திறமை மீதான நம்பிக்கையும் வேண்டும். அந்த நம்பிக்கையோடு அர்விந்த் சாமி எய்த அம்புகள் எதுவும் குறி தப்பவில்லை.

அடுத்த வருடமே, `ரோஜா' படத்தின் வாய்ப்பு வந்தடைகிறது. இம்முறை கதையின் நாயகனாக, சாவித்திரியின் சத்யவானாக! தூணுக்குப் பின்னால் நிற்கும் மதுபாலாவைப் பார்த்து, `எனக்கு இந்தப் பொண்ண பிடிச்சிருக்கு' என்பதில் ஆரம்பிக்கும் அர்விந்த் சாமியின் காதல் குரல், படம் முழுக்க குளிரின் இதத்தை கடத்திக்கொண்டே இருக்கும். தீ தீண்டிய தேசியக்கொடியை அர்விந்த்சாமி அணைக்கும் காட்சி, இப்போது நினைத்தாலும் மயிர் கூச்செறிய செய்கிறது. இறுதிக்காட்சியில், ரத்தம் சொட்ட அவர் ஓடிவந்து நாயகியைக் கட்டியணைக்கும் காட்சியில், ஒவ்வொரு பார்வையாளரும் அவரைக் கட்டித்தழுவினர். கதையின் நாயகனாக நடித்த முதல் படத்திலேயே, தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது. பேன்-இந்தியா நட்சத்திரம் எனும் அசாத்திய அந்தஸ்து.

அர்விந்த் சாமி
அர்விந்த் சாமி

`பம்பாய்' படத்தின் முதற்பாதியில் எப்போதும் மழை பொழிந்துகொண்டிருக்கும் வானத்தை, நீல - வெள்ளை உடையில் பிரதியெடுத்து காதலை பொழிந்திருப்பார் அர்விந்த் சாமி. இரண்டாம் பாதியில் எரிந்து முடித்த மரங்களின் துன்பத்தை, கருப்பு சட்டையில் பிரதிபலித்து அழ வைத்திருப்பார். "நான் உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்து விடுவேன். நீ எனக்காக வருவியா?' என நாயகியிடம் காதலைச் சொல்லும் படகுக்காட்சி இப்போதும் பசுமையாக இருக்கிறது. ''உயிரெல்லாம் கொன்னது போதும்; இந்த ஊர் எரிஞ்சது போதும். இன்னும் முடியலன்னா, எரிங்கடா. நான் இந்துவும் இல்ல முஸ்லிமும் இல்ல... நான் இந்தியன்'' என மொத்தப் படத்தின் செய்தியையும் அதன் வீச்சு குறையாமல் தன் நடிப்பில் கடத்தியிருப்பார். `பம்பாய்' அர்விந்த் சாமியின் பெரும் பாய்ச்சல்..!

`அலைபாயுதே' படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துக்கொடுத்தவர், அதோடு திரைத்துறையில் இருந்து சிலகாலம் விலகியிருந்தார். கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸையும் தன் குரு மணிரத்னத்துடனே தொடங்கினார். இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடிப்பது என்பதே எளிதல்ல. அதிலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இரட்டை சதம் அடிப்பதென்பது எளிதிலும் எளிதல்ல. ஆனால், அர்விந்த் சாமி அதை எளிதாகவே செய்துமுடித்தார். `நீ வேற வழியில ரொம்ப தூரம் போயிட்டேன்னு கேள்விப் பட்டேன் தாமஸ். திரும்ப முடியாத ரொம்ப தூரமா?', `கடல்' படத்தில் டிரெய்லரில் அர்விந்த் சாமி பேசும் இந்த வசனம், அவருக்கானது. ரொம்ப தூரம் வேற வழியில் சென்றால் என்ன, விட்ட இடத்தில் இருந்தே அடித்து நகர்த்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிருப்பார்.

அர்விந்த் சாமி
அர்விந்த் சாமி

`தளபதி' போல மீண்டும் மல்டி - ஸ்டார் காஸ்டிங் படம்! அதே மணிரத்னம். ஆனால், அர்விந்த் சாமி இம்முறை சின்னஞ்சிறு நட்சத்திரமல்ல. தன்னைப் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் போட்டிப்போட்டு மின்ன வேண்டும். அதிலும், தான் இந்தப் படத்தில் மட்டுமல்ல, திரைப் பயணத்திலும் மூத்தவன் எனும் தனித்துவம் தெரிய வேண்டும். வரதனாக கெத்துக் காட்டினார் அவர். தன் திறமையும், தன் திறமை மீதான நம்பிக்கையும்தான் அவரை தனித்துக் காட்டுகிறது. அவரைவிட அழகானவர்கள் வரலாம், திறமையானவர்கள் வரலாம். எதையும் செய்துவிடலாம் என்கிற துணிவு மிக்கவர்கள் வருவது அரிது. அப்படியான துணிவுமிக்க தனி ஒருவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!