Published:Updated:

அன்பின் `அசால்ட்' கார்த்திக் சுப்புராஜுக்கு... - ஒரு ரசிகனின் கடிதம்! #HBDKarthikSubbaraj

கார்த்திக் சுப்புராஜ்

அவன் பஸ் வந்தது. `படம், அரட்டிவிட்டாய்ங்கள்ல... @#$%!@' என நான் சொன்ன அதே கெட்டவார்த்தையை உதிர்த்துவிட்டு பஸ் ஏறினான். அதன்பிறகு, `வேர்டு ஆஃப் மௌத்'தில் படம் கவனிக்கப்பெற்றதில் ஓயாமல் வேலைசெய்த எங்களின் மௌத்துக்கும் சிறு பங்குண்டு.

அன்பின் `அசால்ட்' கார்த்திக் சுப்புராஜுக்கு... - ஒரு ரசிகனின் கடிதம்! #HBDKarthikSubbaraj

அவன் பஸ் வந்தது. `படம், அரட்டிவிட்டாய்ங்கள்ல... @#$%!@' என நான் சொன்ன அதே கெட்டவார்த்தையை உதிர்த்துவிட்டு பஸ் ஏறினான். அதன்பிறகு, `வேர்டு ஆஃப் மௌத்'தில் படம் கவனிக்கப்பெற்றதில் ஓயாமல் வேலைசெய்த எங்களின் மௌத்துக்கும் சிறு பங்குண்டு.

Published:Updated:
கார்த்திக் சுப்புராஜ்

கடந்த தசாப்தத்தில், தமிழ் சினிமாவில் புதிய புயல் ஒன்று உருவானது. குறும்படங்கள் இயக்கிய பெரும்படை ஒன்று, தமிழ் சினிமாவை கைப்பற்ற ஓடிவந்த பெரும் வேகத்தில் புழுதி பறந்து பெரும் புயல் ஒன்று உருவானது. தலைவர்கள் யாருமற்ற அந்தப் படையின் முன் வரிசை வீரர்கள் சிலர், பழைய வழக்கங்களை உடைத்தெறிந்து முன்னேறியதில், படையில் பின்வருபவர்களின் பாதை எளிதாக மாறியது. அப்படிப் பல இன்றைய இளம் இயக்குநர்களின், நாளைய புது இயக்குநர்களின் பாதையை எளிமைப்படுத்தியவர்களில், பயணத்தை ஊக்கமளித்தவர்களில் மிக முக்கியமான இயக்குநர், கார்த்திக் சுப்புராஜ். இன்று, தனது 36-வது வயதில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு, அவரின் ரசிகனாக ஒரு பிறந்தநாள் கடிதம்...

பேட்ட
பேட்ட

அன்பின் கார்த்திக் சுப்புராஜுக்கு...

`நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் இருந்துதான் உங்களின் பெயர் பரிச்சயம். சினிமா கனவுக்காக, பிரான்ஸில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டீர்கள் எனத் தெரிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. நீங்கள் மதுரையைச் சேர்ந்தவரெனத் தெரிந்தபோது, இன்னும் நெருக்கமானீர்கள். உங்களின் முதல் படம், `காட்சிப்பிழை'யில் தொடங்கி, `துரு', `ராவணம்', `பெட்டி கேஸ்', கடைசியாக, `நீர்' வரை அனைத்து குறும்படங்களுக்கும் ரசிகன் நான். இந்தப் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் எது தெரியுமா?

`காட்சிப்பிழை'தான். பெரும் பனையின் உருவம் சிறு புல்லின் நுனியில், அதுவும் புல்லின் நுனியிலுள்ள சிறு பனித்துளியில் தெரியும் சாத்தியங்களைக் கேட்டிருந்தபோதும், `காட்சிப்பிழை' ஆச்சர்யத்தையே தந்தது. அதில், ஒரு விமானத்தின் ஓசை தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கும் இலங்கையின் யாழ்ப்பானத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கும் எவ்வித உணர்வை உண்டுபண்னுகின்றன என்பதைச் சொல்லியிருப்பீர்கள். கடைசிப் படமான `நீர்', இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்களின் கதையைச் சொல்லியிருப்பீர்கள். உங்களின், `நாளைய இயக்குநர்' பயணம் அதன் இயல்பிலேயே இப்படியான ஒரு முழுமையை அடைந்திருப்பதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? நான் பலமுறை யோசித்திருக்கிறேன். நாங்கள் யோசித்திருக்கிறோம். அந்த `நாங்கள்'-ல் மற்றொருவன் ஜாவீத்.

பேட்ட
பேட்ட

ஜாவீத்தும் என்னைப்போலவே, `நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியின் ரசிகன். நான் சிவில் டிபார்ட்மென்ட்டும், அவன் வேறு டிபார்ட்மென்ட்டுமாகப் பிரிந்திருந்த எங்களை சிமென்ட் கலவையாக இணைத்தது சினிமாதான்! சினிமா பற்றிய பேச்சு தொடங்கினால், விஜய், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி தொடங்கி, விஜய் ஆதிராஜ் வரை நீளும். பாலாஜி மோகன், `காதலில் சொதப்புவது எப்படி?' இயக்கியபோது, உங்களின் சினிமா வருகைக்காக நாங்கள் காத்திருக்கத் தொடங்கியிருந்தோம். எங்கள் காத்திருப்பின் முடிவில்தான், `பீட்சா' அறிவிப்பு வெளியானது.

படம் எப்படியிருக்கப்போகிறது, என்னவாக இருக்கப்போகிறது என்கிற யூகங்களும், அனுமானங்களுமாக அடுத்தடுத்த நாள்கள் கழிந்தன. `பீட்சா' முதல்நாள், முதல்ஷோ சேர்ந்து பார்த்துவிட வேண்டுமென ஒவ்வொரு நாளின் முடிவிலும் உறுதிமொழி எடுக்காத குறை என்றால் படத்தின் போஸ்டர்களையும் பூதக்கண்ணாடி வைத்து பார்க்காத குறை. டியூனியின் போஸ்டர்களும் சந்தோஷின் பாடல்களும் ஒருவித புதுமையான உணர்வை, ரசணையை ஊட்டின. அந்தக் காலங்களை நினைவுக்கூர்கையில், படபடத்த இதயத்துடிப்பும், விறுவிறுத்த உள்ளங்கைகளுமே நினைவுக்குவருகின்றன. `பீட்சா'வின் போஸ்டரை போனின் வால் பேப்பராக மாற்றி, `ராத்திரி' பாடலை ரிங்டோனாக செட் செய்திருந்தேன். அன்று, `பீட்சா' ரிலீஸ்...

பீட்சா
பீட்சா

நானும் ஜாவீத்தும் மதுரை அம்பிகா தியேட்டரில் அமர்ந்திருக்கிறோம். "ஏதோ 7.1 சவுண்டு சிஸ்டமாம் மாப்ள. அரட்டிவிடப் போறாய்ங்க" என ஏ.சி குளிரில் நடுங்கியபடியே சொன்னான். படமும் ஓடத் தொடங்கியது. இருவருக்கும் அப்படியொரு சந்தோஷம். இன்டர்வெல் வந்ததும், `மாப்ள, எப்படி? சொன்னேன்ல... சவுண்டு அரட்டிவிட்டாய்ங்களா?!' என ஒலிக்கலவை மற்றும் பின்னணி இசைபற்றி பேசிக்கொண்டே இருந்தான். `மோகத்திரை' பாடலை ரிங்டோனாக வைத்திருந்த அவனுக்கு, அந்தப் பாடல் படமாக்கப்பட்டிருந்த விதமும் அவ்வளவு பிடித்துப்போனது. பேசிக்கொண்டே இருந்தான். கேன்டீனில் ஒருவர், `யாருய்யா டைரக்டரு' என ஆச்சர்யமாகப் பேசிக்கொண்டிருந்தார். எங்களுக்கு முன்பே தெரிந்திருந்தில் பெரும் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியும் தொடங்கியது...

அதுவரை குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தவன், பயத்தில் நடுங்க ஆரம்பித்தான். நானும்தான். பொம்மை சுற்றிவரும் காட்சி ஒன்று இருக்கிறதே... அதை முதன்முறை பார்க்கையில், குலை நடுங்கிவிட்டது. படத்தின் ஆன்மாவான அந்த ட்விஸ்ட்டின்போது, என் வாயிலிருந்து அதிர்ச்சியின் தொனியில் ஒரு கெட்டவார்த்தை. நான் கெட்டவார்த்தை பேசுவதே அவனுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும், அதைவிட அந்த ட்விஸ்ட் வேறு. வாயடைத்துப்போனான். படமும் முடிந்து, எழுந்து வெளியே வந்தபின்பும் அவன் சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. ஏதோ யோசனையிலேயே இருந்தான். பஸ் ஸ்டாப்பில் அமர்ந்திருந்தோம். அப்போதும் எதுவும் பேசவில்லை. கடைசியாக அவன் பஸ் வந்தது. `படம், அரட்டிவிட்டாய்ங்கள்ல... @#$%!@' என நான் சொன்ன அதே கெட்டவார்த்தையை உதிர்த்துவிட்டு பஸ் ஏறினான். அதன்பிறகு, `வேர்டு ஆஃப் மௌத்'தில் படம் கவனிக்கப்பெற்றதில் ஓயாமல் வேலைசெய்த எங்களின் மௌத்துக்கும் சிறு பங்குண்டு.

ஜகமே தந்திரம்
ஜகமே தந்திரம்

அந்த வருடம், விகடன் விருதுகள், விஜய் அவாட்ஸ் என விருதுகளை வாங்கிக் குவித்தது படம். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என விஜய்சேதுபதியும் வீசிய முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் அடித்தார். சந்தோஷ் நாராயணனும் `சூது கவ்வும்', `குக்கூ' என தனக்கென தனி இடத்தைப் பிடித்துக்கொண்டார். `பீட்சா', `காதலில் சொதப்புவது எப்படி?', `சூது கவ்வும்', `நேரம்' என நாங்கள் பார்த்து ரசித்த நாளைய இயக்குநர்கள் குழு, தமிழ் சினிமாவில் புது அலை ஒன்றை உருவாக்கினார்கள். மனம் நிறைய மகிழ்ச்சி. அந்த நேரத்தில்தான், அந்த சந்தோஷ செய்தியோடு ஓடிவந்தான் ஜாவீத்...

`டேய், எங்க ஏரியாவுல கார்த்திக் சுப்புராஜ் ஷூட் பண்ணிட்டு இருக்கார்டா. சித்தார்த், லஷ்மி மேனன், கருணாகரன் நடிக்குறாங்கடா' என்றவனின் கண்கள் மிளிர்ந்தன. `ஷூட்டிங் பார்க்க போவோம்டா' என்றதற்கு, `நான் ஸ்டார்ட் பண்ணும்போது சொல்றேன்டா. கெளம்பி வந்துடு' என குதூகலமானான். அன்று இரவு முழுக்க, சீக்கிரமே கார்த்திக் சுப்புராஜை நேரில் பார்க்கப்போகிறோம் என்கிற எண்ணம் தூங்கவிடாமல், பல கலர்ஃபுல் விஷுவல்களை ஓட்டிக்கொண்டிருந்தது. மறுநாள் காலை, கல்லூரி செல்ல பெரியார் பேருந்து நிலையம் வந்து இறங்கினேன். அங்கு, வழக்கத்தைவிட அதிக கூட்டம். கூட்டமிருந்தால் உள்ளே எட்டிபார்ப்பதுதானே தமிழனின் தனிக் குணம். எட்டிப்பார்த்தேன்.

ஜிகர்தண்டா
ஜிகர்தண்டா

பார்த்தால், கூட்டத்தின் நடுவே நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். `ஜிகர்தண்டா' படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. கறுப்பு சட்டை, நீல ஜீன்ஸ். கையில் மைக்குடன் மானிட்டர் முன் அமர்ந்திருந்தீர்கள். தனியாக சிரித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கூட்டத்தில் லட்சுமி மேனனிடமும் சித்தார்த்திடமும் ஆட்டோகிராஃப் வாங்க நின்றவர்களே அநேகம். சித்தார்த் கேரவனில் இருப்பதாகச் சொன்னார்கள். கருணாகரன், அந்த கட்டம்போட்ட பேன்ட்டோடு உங்கள் அருகில் அமர்ந்திருந்தார்.

கூட்டத்தில் ஒருவர், `அண்ணன் அழகிரி வாழ்க' என போதையில் கோஷம் போட்டுக்கொண்டிருக்க, அவரை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார்கள் உங்களின் உதவி இயக்குநர்கள். ஒருபக்கம் நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது.

கல்லூரியில் வகுப்புகளும் தொடங்கியிருக்கும். அன்று, நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. உங்களிடம் ஒரேயொரு ஆட்டோகிராஃப் வாங்கினால்போதும் என்ற எண்ணம் மட்டும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. சில மணி நேரங்களில் அன்றைய ஷூட்டிங்கும் முடிய, எழுந்துபோய் அங்கிருந்து பொட்டிக்கடையில் சிகரெட் வாங்கி பற்றவைத்தீர்கள். பையில் இருந்த ஒரு லாங் சைஸ் நோட்டையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு `சார், ஒரு ஆட்டோகிராஃப்' என உங்கள் முன்னால் நீட்டினேன். அதிர்ச்சியாகப் பார்த்தீர்கள். அந்தப் பார்வையில், அதுவரை ஒட்டுமொத்த மதுரையிலும் உங்களிடம் ஆட்டோகிராஃப் கேட்ட முதல் ஆள் நான்தான் என நினைத்து, பெருமைகொண்டேன். நோட்டை வாங்கி, `ஆல் தி பெஸ்ட்' என ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டீர்கள்.

இறைவி
இறைவி

ஜிகர்தண்டாவின் வண்ணத்தில், ஒருவித இளஞ்சிவப்பில் இருக்கும் படத்தின் போஸ்டர்கள்மீது பைத்தியம் பிடித்தது. ஜிகர்தண்டாவின் டிரெய்லர் வெளியான அன்று மட்டும் குறைந்தது 50 முறை அதைப் பார்த்திருப்பேன். இன்றுமே, `ஜிகர்தண்டா' டிரெய்லரை எக்காரணமும் இன்றி, சும்மாகவே ஓடவிட்டு பார்க்கும் பழக்கம் இருக்கிறது. `அந்த கார்த்தி நாயைக் கண்டுபிடிச்சுக் கொல்லணும்' எனும் வசனமும் அதைத் தொடர்ந்து வரும் உங்களின் பெயரும், இன்றும் சிரிப்பை ஏற்படுத்துகின்றன. படம் வெளியானது. "மாஸா காட்டிபுட்டு தேவையில்லாம, காமெடி பண்ணிவுட்டாய்ங்க" என சிலர் நொந்துகொண்டார்கள். எனக்கும் ஜாவீத்துக்கும் ஏனோ அந்தக் காரணத்திற்காகவே, `ஜிகர்தண்டா' மிகவும் பிடித்துப்போனது. இன்று வரையிலும் உங்களின் `பெஸ்ட்' என `ஜிகர்தண்டா'வைத்தான் நான் சொல்வேன். ஜாவீத் பற்றி தெரியவில்லை. கடைசியாக அவனை கல்லூரியில் பார்த்தது.

"அதுவொரு `மியூசிகல் கேங்ஸ்டர்' படம், சங்கர் கணேஷ் ரசிகனுக்கும் இளையராஜா ரசிகனுக்கும் இடையே உள்ள பகைமையைச் சொல்லும் மியூசிகல் கேங்ஸ்டர் படம்" என்பதில் ஆரம்பித்து, படத்தைப் பற்றிய அபத்தமான டீகோடுகளைச் செய்யத் தொடங்கியிருந்தேன். மூன்றாவது முறையாக பார்த்தபோது, செயின்ட் மேரீஸ் சர்ச்சின் கோபுரங்கள், இரண்டு கொம்பைப் போல சேதுவின் தலையில் தெரிவது. கயல் காதலுடன் கார்த்திக்கைப் பார்க்கையில், அவள் முன்னால் ஹார்ட்டின் வடிவ பிளாஸ்டிக் டப்பாக்கள் தொங்கிக்கொண்டிருப்பது எனப் புதுப்புது விஷயங்கள் கண்களுக்குத் தெரிந்தன. படத்தில் ஒரு வசனம் வரும், `நான் பார்க்குறது அரசியல் & ஈழம்' என கார்த்திக்கின் ரிப்போர்ட்டர் மாமா சொல்ல, `ரெண்டும் ஒண்ணுதான்' என்பான் கார்த்திக். `காட்சிப்பிழை' படத்தில் ஒலித்த அதே அரசியல். `இறைவி' படத்தில், அருள் இயக்கி வெளியாகாமல் முடங்கிக்கிடக்கும் படத்தின் பெயரோ மே 17. முழுநீள, அரசியல் படம் இயக்கும் ஆசை உள்ளதா உங்களுக்கு?

மெர்குரி
மெர்குரி

`ஜிகர்தண்டா'வின் வெற்றிக்கான அடித்தளம், அதன் கதாபாத்திர வடிவமைப்புகள்தான் என நம்புகிறேன். கார்த்திக் மற்றும் சேது என இரண்டு கதாபாத்திரங்கள். கார்த்திக், சேதுவாக மாறுவதும். சேது, கார்த்திக்காக மாறுவதும்தான் கதாபாத்திரங்களின் ஆர்க். இந்த இரண்டு ஆர்க்குகளையும் வைத்துக்கொண்டு திரைக்கதையில் விளையாடியிருப்பீர்கள். பள்ளி நாடகத்தில் தன்னைப் பார்த்து மற்றவர்கள் சிரித்ததுதான், சேது ரௌடியானதின் ஆரம்பப் புள்ளி. ஆனால், அவனை வைத்து ஊரே சிரிக்கும் ஒரு படத்தையே இயக்கினால், சேது என்னவெல்லாம் செய்வான். அவன் கோபம் எந்த நிலையை எட்டும். ஆனால், அவனின் கோபம் மறைந்து, அவன் மனநிலை மாறுவதற்கான இடங்களை, இறுதிக்காட்சிக்கு முந்தைய காட்சிகளில் அவ்வளவு கவித்துவமாகக் காட்சிப்படுத்தியிருப்பீர்கள். குறிப்பாக, நம்பும்படியாகவும்...

'யெப்பா சேது, ஆத்தாவுக்கு தண்னி மோந்து கொடுப்பா' எனும் குரல், ஏன் என் இதயத்தை இப்போதும் கனமாக்குகிறது? இதைத்தவிர வேறு வசனமே, அந்த கதாபாத்திரத்துக்குக் கிடையாது. ஆனாலும் அந்தக் குரல் எப்படி மிகச் சரியாக காதுக்குள் ஒலிக்கிறது? தான் சுட்டுக்கொன்ற சௌந்தரின் மகள், தன் நடிப்பைப் பாராட்டி கைகொடுக்கும்போது, சேது அல்ல சேதுவினும் உக்கிராமனவன்கூட உடைந்துதான் போவான். இந்த பே ஆஃப்களுக்கு, திரைக்கதையினூடே உறுத்தாமல் பொருத்திய செட்-அப்களை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கும். முதல் ஆக்டில், `சேதுவைப் பற்றி கார்த்திக் தெரிந்துகொள்ள முயல்வது' என த்ரில்லராக நகரும் கதை, இரண்டாவது ஆக்டில், `சேதுவுடனேயே கார்த்திக் பயணிப்பது' என காமெடியும் - டிராஜெடியும் கலந்து நகரும். மூன்றாவது ஆக்டிலோ, அப்படியே டிராமாவாக மாறும். இப்படி ரோலர் கோஸ்டர் ரைடைப் போல, ஜானர்களைத் தாடலடியாக ஸ்விஃப்ட் செய்வதையும், எதிர்பாராத ட்விஸ்ட்டுகளை வைப்பதையும் இதற்கு முன்னர் பாத்திருந்தபோதும் `ஜிகர்தண்டா' ஆச்சர்யத்தையே தந்தது.

கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ்

`இறைவி' படத்தின், ப்ரீ புரொடக்‌ஷன் நேரத்தில், ஆனந்த விகடனில் உங்களைப் பற்றிய சிறு செய்தித் துணுக்கில் குறிப்பிட்டிருப்பார்கள். `ரஜினியையும் நவாசுதீன் சித்திக்கையும் ஒரே கதையில் நடிக்கவைக்கணும்' என்பது உங்களின் கனவு என. அந்தக் கனவை, `பேட்ட'யில் நிஜமாக்கினீர்கள். உங்களின் கனவு வேறு என்னவென்று எனக்குத் தெரியாது. அது எதுவாயினும், வரும் காலங்களில் நிஜமாக வேண்டுமென உங்கள் ரசிகனாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். `ஜெகமே தந்திரம்' படத்தை இணைந்துப் பார்க்கலாம் என ஜாவீத் கேட்டிருக்கிறான். நிச்சயம் இன்னொரு ரோலர் கோஸ்டர் ரைடு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். சிறப்பான, தரமான சம்பவமா செய்யுங்க இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ஆல் தி பெஸ்ட்!

இப்படிக்கு,

உங்கள் ரசிகன்