சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

தன்னுடன் போட்டி போடும் கலைஞன்!

ராஜ்குமார் ராவ்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜ்குமார் ராவ்

ராஜ்குமார் ராவ் என்ற பெயர்கொண்ட அவர், தொடர்ந்து நம்மை ஈர்க்கிறார்.

“உடல் எடையை ஏற்றுவது, இறக்குவது, தாடி வளர்ப்பது... இதெல்லாம் செய்வது மட்டுமே ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பது (Method Acting) என்றாகிவிடாது. இவையெல்லாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்வது மட்டுமே! ‘மெத்தட் ஆக்டிங்’ என்பது, என்றுமே முடிந்திராத ஒரு பயிற்சி. அதை அறிந்து அந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்பவரே சிறந்த ‘மெத்தட் ஆக்டர்’.”

பாலிவுட்டில் ஒரு நடிகர் இருக்கிறார். அவர் கமர்ஷியல் படங்களும் செய்வார். மாற்று சினிமாக்களின் பின்னாலும் ஓடுவார். கேமியோ ரோலிலும் தலைகாட்டுவார், ஒரு படத்தில் அவர் மட்டுமே பாத்திரம் என்றாலும் நடிப்பார். பதற்றமே உருவான, எப்போதும் பயமும் தயக்கமும் எட்டிப் பார்க்கும் பக்கத்து வீட்டு இளைஞனாகவும் கலக்குவார், யாரும் எதிர்பாராமல் எல்லோருக்கும் துரோகம் செய்யும் குரூர மனிதராகவும் பதற வைப்பார்.

தன்னுடன் போட்டி போடும் கலைஞன்!
தன்னுடன் போட்டி போடும் கலைஞன்!

எல்லா வகைப் படங்களையும் தன் 11 வருட கரியரில் செய்து முடித்துவிட்டார் அவர். ஆம், அவர் செய்யாமல் விட்டுவிட்ட ஜானர்களை இயக்குநர்கள் இன்னும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர் இதுவரை ஏற்றிராத தன்மைகள் கொண்ட கதாபாத்திரங்களைக் கதாசிரியர்கள் இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், ராஜ்குமார் ராவ் என்ற பெயர்கொண்ட அவர், தொடர்ந்து நம்மை ஈர்க்கிறார். ஏதேனும் ஒரு வகையில் எதையோ வித்தியாசமாகச் செய்து நம் பாராட்டை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு சென்றுவிடுகிறார். எவ்வளவு உஷாராக இருந்தாலும் ‘சிரிச்சா போச்சு’ ரவுண்டின் கலைஞர்கள்போல தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருக்கிறார். நாம் தயாராக இருந்தால் மாற்றமும் ஏற்றமும் நம்மைத் தேடிவரும் என்பதுபோல, அவர் விரும்பியபோதெல்லாம் அவர் கரியரை அடுத்தடுத்த தளத்துக்குக் கொண்டு செல்லும் ஸ்கிரிப்ட்கள் அவரைத் தேடி வந்திருக்கின்றன.

பாலிவுட்டில் இயக்குநர் திபாகர் பானர்ஜி நெஞ்சை உறையவைக்கும் படங்கள் பலவற்றைச் செய்திருக்கிறார். அவற்றில் மிக முக்கியமானது 2010-ல் அவர் இயக்கிய ஆந்தாலஜி படமான ‘Love Sex Aur Dhokha’ (காதல், செக்ஸ் மற்றும் துரோகம்). இதில் வரும் இரண்டாவது கதையில், தன் கடனை அடைக்க ஒரு பெண்ணின் செக்ஸ் டேப்பைப் படமெடுத்து விற்கும் கீழான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ராஜ்குமார் ராவ். இதுதான் இவரின் முதல் படம். அதற்கடுத்து ‘ராகினி எம்.எம்.எஸ்’ என்ற பேய்ப் படம், பிஜோய் நம்பியார் இயக்கிய ‘சைத்தான்’ படம் என நெகட்டிவ் ரோலோ, பாசிட்டிவ் ரோலோ, ஸ்கிரிப்ட் கேட்டதைத் தயங்காமல் செய்தார். பாலிவுட்டில் நீண்ட காலம் நாயகனாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் எந்த நடிகரும் செய்யத் தயங்கும் படங்களைத்தான் ராஜ்குமார் ராவ் தன் முதல் மூன்று படங்களாகச் செய்தார். அவர் வந்திருக்கும் நோக்கம் வேறு என்பதைச் சொல்ல இதைவிட வேறு வார்த்தைகள் தேவையில்லை.

தன்னுடன் போட்டி போடும் கலைஞன்!
தன்னுடன் போட்டி போடும் கலைஞன்!

ராஜ்குமார் ராவுக்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது 2013-ல் வெளியான ‘கை போ சே.’ குஜராத் நிலநடுக்கம், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், குஜராத் கலவரம் போன்றவற்றை மையப்படுத்தி மூன்று நண்பர்களின் வாழ்வையும் அதனுள் கலந்திருக்கும் கிரிக்கெட்டையும் நெகிழ்ச்சியாகச் சொன்ன படம் இது. அதுவரை இலக்கில்லாத நடிகராகப் பார்க்கப்பட்ட ராஜ்குமார் ராவ், இதன்மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார்.

அதேபோல் அவர் கரியரில் மிக முக்கியமான படம் ‘ஷாஹித்.’ வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலருமான ஷாஹித் ஆஸ்மியின் வாழ்வை மையப்படுத்தி வெளியான படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ராஜ்குமார் ராவ் தேசிய விருதைப் பெற்றார். அவரின் மார்க்கெட் உச்சம் சென்றது. இந்தப் படம்தான் இயக்குநர் ஹன்சல் மேத்தா - ராஜ்குமார் ராவ் காம்போவை பாலிவுட்டுக்கு அறிமுகம் செய்தது. இன்றுவரை இந்த காம்போ தோற்றதே இல்லை! ‘ஷாஹித்’துக்கான தேசிய விருது இவரைத் தேடி சுலபமாக வந்துவிடவில்லை. நிஜ ஷாஹித்தின் குடும்பத்தோடு நேரம் செலவிட்டார். அவரைப் பற்றி அறிந்துகொண்டார். “ஹன்சல் சார் இந்தக் கதையைச் சொன்னபோது ஷாஹித்தைப் போல எந்த மனிதனால் இருக்க முடியும் என்றே தோன்றியது. இந்தப் படம் தனிப்பட்ட முறையிலும் எனக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது” என்கிறார் ராஜ்குமார் ராவ்.

தன்னுடன் போட்டி போடும் கலைஞன்!
தன்னுடன் போட்டி போடும் கலைஞன்!

தன் நடிப்பில் அடுத்த கட்டத்துக்குச் செல்லத் துடித்துக்கொண்டிருந்த ராஜ்குமார் ராவுக்குச் சரியாக வந்து அமைந்தது விக்ரமாதித்ய மோத்வானே இயக்கத்தில் 2017-ல் வெளியான ‘டிராப்ட்.’ ஆள் அரவமில்லாத பெரிய அபார்ட்மென்ட் ஒன்றினுள்ளே சிக்கிக்கொண்ட ஒருவன் அதிலிருந்து மீளப் போராடும் சர்வைவல் கதையே இந்தப் படம். சவாலான இந்தக் கதையில் அற்புதமாக நடித்து பிலிம்பேர் விருதைத் தட்டிச் சென்றார் ராஜ்குமார் ராவ். “இந்தப் படம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எனக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. இதற்காக 18 கிலோ வரை உடல் எடையைக் குறைத்தேன். 15 நாள்கள் பெரிதாக எதுவுமே உண்ணாமல் நடித்தேன். என் உடலிருந்த நிலைக்கு நடிக்க முடியுமா என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. ஏதோ என் உடலுக்கும் மனதுக்கும் தோன்றியபடி நடித்தேன். அதுவே இந்தக் கதைக்குப் பொருந்தியும்போனது” என்று இந்தப் படத்துக்காகத் தான் பட்ட கஷ்டத்தைப் பின்னாளில் பகிர்ந்துகொண்டார் ராஜ்குமார் ராவ்.

ஆயுஷ்மான் குரானா மற்றும் க்ரீத்தி ஷனோனுடன் இவர் நடித்த ‘பரெய்லி கி பர்ஃபி’ என்ற காமெடி டிராமா அவர் கரியரின் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றிகளில் ஒன்றாக அமைந்தது. “என்னை சீரியஸான நடிகராகவே பார்த்துவிட்ட மக்கள் இந்தப் படத்தில் என்னைப் பார்த்து ஆச்சர்யமடைந்தார்கள். இதில் ஓவர் ஆக்டிங் செய்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். மக்கள் இந்தப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டது எனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது” என்று சொல்லும் ராஜ்குமார் ராவ், அதன் பிறகு தொடர்ந்து அவ்வப்போது காமெடிப் படங்களில் கலக்க ஆரம்பித்தார்.

‘நியூட்டன்’ படம்தான் ராஜ்குமார் ராவை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றது. இந்தப் படம் தேர்தல் என்றால் என்னவென்றே அறிந்திராத நக்சல்களின் பிடியிலிருக்கும் கிராமம் ஒன்றிற்குத் தேர்தல் பணியாளராகச் செல்லும் ஒருவரின் சாகசங்களைச் சொன்னது. படம் தேசிய விருதைப் பெற்ற அதே நேரம், அந்த வருடம் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படமாகவும் அமைந்தது. சுயாதீனப் படமாக உருவான ‘நியூட்டன்’, யாரும் எதிர்பாரா வண்ணம் கமர்ஷியலாகவும் ஹிட்டடித்தது. “பல ஆழமான கதைகள் எழுதி வைத்திருந்தவர்களுக்கு ‘நியூட்ட’னின் வெற்றி நம்பிக்கையைக் கொடுத்தது. இப்படியான படங்களுக்கும் மார்க்கெட் உண்டு, இவற்றை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள் என்ற உண்மையை பாலிவுட்டுக்கு எடுத்துச் சொன்னது” என்று படம் குறித்துச் சிலாகிக்கிறார் ராஜ்குமார் ராவ்.

தன்னுடன் போட்டி போடும் கலைஞன்!

2018-ல் வெளியான ‘ஸ்த்ரி’, காமெடி பேய்ப்படம் என்ற வகையில் ராஜ்குமாருக்கு ஒரு நல்ல வெற்றியாக அமைந்தது. ‘சலாங்’, ‘தி வொயிட் டைகர்’, ‘ரூஹி’ என கொரோனா காலத்திலும் ராஜ்குமார் ராவின் படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

“என்னிடம் பிளான் B என எதுவும் இருந்திருக்கவில்லை. எனக்கு வேறு எந்தத் தொழிலிலும் நாட்டமில்லை. நடிகனாக வேண்டும் என்றே நினைத்தேன். நடிகனாகிவிட்டேன்” என்று சொல்லும் ராஜ்குமார் ராவ், தன் கரியரில் எப்போது மாற்று சினிமா செய்ய வேண்டும், எப்போது வியாபாரத்துக்காகப் படம் செய்யவேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.

தன்னுடன் போட்டி போடும் கலைஞன்!
தன்னுடன் போட்டி போடும் கலைஞன்!

“நான் போட்டி போடுவது என்னுடன் மட்டுமே. நல்ல படங்கள் செய்யவேண்டும். 50 வருடங்களுக்குப் பிறகும் என்னை மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும், அவ்வளவே!” என்று தெளிவாகப் பேசும் ராஜ்குமார் ராவ், பாலிவுட்டின் கான்களின், கபூர்களின் வரிசையில் நிச்சயம் இல்லை. அவர்களை விடுத்து வேறொரு பாதையில் பயணிக்கும் மாற்று சினிமாவின் நடிகர்களுடனும் அவர் ஓடவில்லை. அவர் இரண்டுக்கும் மையமாக புதிய பாதை ஒன்றில் பயணிக்கிறார். போட்டி தொடங்கும் முன்னரே, ‘நான் ஒருவன்தான் ஓடுகிறேன், எனக்குத்தான் முதல் இடம்’ என உறுதிசெய்துவிட்டு ஓடும் ஒருவரின் ஓட்டம் அது. அதனால்தான் ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்!