சினிமா
Published:Updated:

“விரைவில் தமிழ் சினிமா இயக்குவேன்!”

வாசன் பாலா
பிரீமியம் ஸ்டோரி
News
வாசன் பாலா

என் கரியரை நானேதான் வடிவமைத்துக் கொண்டேன். பதற்றமோ ஓட்டமோ என்னிடம் இல்லை. 2006-ல் சினிமாவுக்குள் வந்தவன்

காலையில் நாம் பயன்படுத்தும் அம்மா - மகள் சென்டிமென்ட்டோடு வரும் ஹமாம், சர்ஃப் எக்செல் சோப்புகளில் ஆரம்பித்து சமீபத்தில் தோனி நடித்த விளம்பரம் வரை முப்பதுக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற விளம்பரங்களை 7 மொழிகளில் இயக்கியவர், பாலிவுட் இயக்குநர் வாசன் பாலா. மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த தமிழர். நெட்ப்ளிக்ஸ்க்காக உருவாக்கிவரும் சினிமாவுக்காக பிஸியாக ஓடிக்கொண்டிருந்தவரிடம் பேசினேன்.

“நிறைய கமர்ஷியல்கள் நீங்கள் இயக்கியது என்று கேள்விப்பட்டோம். நீங்கள் அடிப்படையில் பாலிவுட்டின் இளம் தலைமுறை இயக்குநர். எப்படி விளம்பரப் பட உலகத்துக்குள் வந்தீர்கள்?”

“முதலில் நிறைய நன்றி, என்னை அடையாளம் கண்டுகொண்டமைக்கு. நான் இரட்டை இலக்க எண்ணிக்கையில் விளம்பரங்களை இயக்கியிருக்கிறேன். எதெல்லாம் நான் இயக்கியது எனப் பட்டியலிட்டுச் சொல்ல மாட்டேன். அதில் கண்ணுக்கே தெரியாத ஒரு பொருளில் ஆரம்பித்து, அண்ணாந்து பார்க்கும் ஒரு பொருள் வரை நிறைய இருக்கிறது. நீங்கள் தினமும் டி.வி பார்ப்பவராக இருந்தால் என் விளம்பரங்களைக் கடந்துதான் செல்வீர்கள் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். நான் இயக்கிய விளம்பரங்களை நான் பட்டியலிட்டுச் சொல்வது அறம் கிடையாது. ஏனென்றால் ஒவ்வொன்றும் வெவ்வேறு பிராண்ட், விளம்பர ஏஜென்ஸிக்களுக்காக இயக்கியது. பட்டியலைச் சொன்னால், இதுதான் டாப், அதுதான் டாப் எனப் பேச்சு வந்துவிடும். அதெல்லாம் சர்வைவலுக்காகப் பண்ணியது. ஆனால், சினிமாவில்தான் நான் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். இப்போது என் கனவுப்படங்களுள் ஒன்றான ‘மோனிகா ஓ டார்லிங்’ என்ற படத்தை நெட்ப்ளிக்ஸ்க்காக இயக்கிக்கொண்டிருக்கிறேன். படத்தில் பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோ ராஜ்குமார் ராவ், ஹீரோயின்ஸ் ராதிகா ஆப்தே, ஹூமா குரேஷி போன்றவர்கள் இருக்கிறார்கள். செம ரொமாண்டிக் த்ரில்லர் ஜானர் அது. நீங்கள் எதிர்பார்க்காத புதுவிதமான சினிமா அனுபவமாக அது இருக்கும். அதை முடித்ததும் ‘பேண்டம்’ என்ற சூப்பர் ஹீரோ படம் ஒன்றை இயக்கப்போகிறேன்!”

“விரைவில் தமிழ் சினிமா இயக்குவேன்!”

“நீங்கள் இயக்கிய ‘மார்த் கோ தர்த் நஹி ஹோத்தா’ என்ற படம் கமர்ஷியலாகவும் இல்லாமல் பேரலல் சினிமாவாகவும் இல்லாமல் புதுவித மிக்ஸிங் ஜானரில் இருந்தது. திட்டமிட்டுச் செய்ததா?”

“என்னுடைய சிந்தனை ஓட்டத்தை அது பிரதிபலித்தது. இந்தியாவின் Dead Pool என்று கொண்டாடப்பட்ட அந்த ஸ்கிரிப்ட்டை எழுத ஆரம்பித்ததில் தொடங்கி கடைசி ஷாட் வரை ஒரே மனநிலையில் யோசித்தேன். என் கதை என் மனதின் பிம்பம். அந்த அலைவரிசையோடு அந்தப் படத்தைப் பார்த்தால் வித்தியாசமான திரை அனுபவத்தைக் கொடுக்கும். அது தவறா சரியா எனத் தெரியவில்லை. ஆனால், சினிமாவைத் தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். என் சினிமாவைக் கொண்டாடவும், விமர்சிக்கவும் நிறைய பேர் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தனை வருட அனுபவத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களை இப்போது முழுமையாகச் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டேன்!”

“உங்களை அறிந்த என்னைப் போன்ற ஆட்களுக்குத்தான் தெரியும், நீண்ட நாள்களாக சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக இருக்கிறீர்கள் என்று. ஆனால், நீங்கள் இயக்கியது இரண்டே படங்கள். அதிலும் ஒன்று பலவருடங்களாக வெளிவரவில்லை. இதெல்லாம் உங்களுக்கு சோர்வை உண்டாக்குகிறதா?”

“என் கரியரை நானேதான் வடிவமைத்துக் கொண்டேன். பதற்றமோ ஓட்டமோ என்னிடம் இல்லை. 2006-ல் சினிமாவுக்குள் வந்தவன். உதவி இயக்குநராக அனுராக் காஷ்யப்பிடம் ‘தேவ்-டி’ படத்தில் ஆரம்பித்த பயணம் 2018-ல் ‘மார்த்...’ என் முதல் படமாக தியேட்டரை எட்டிப் பார்த்தது. ஆனால், 2012-ல் என் முதல் சினிமா ‘பெட்லர்ஸ்’ படத்தை இயக்கிவிட்டேன். உலக திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த அந்தப் படம் கமர்ஷியல் காரணங்களுக்காக இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை. இனி ரிலீஸ் ஆகாது என்ற மனநிலையில் அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாகிவிட்டேன். நடுவில் ஆந்தாலஜி படம், நண்பர்களின் கதைகளுக்குத் திரைக்கதை என பிஸியாகவே இருந்தேன். ஓர் இயக்குநராக எனக்கு வருத்தமிருந்தாலும் நடந்தவை அனைத்துக்கும் என் தவறு மட்டுமே காரணம் இல்லை என்பதால் கடந்து வந்துவிட்டேன். என் மனைவி பிரேர்னா என் படங்களின் எடிட்டர். ஆனால், வீட்டில் அதிகம் சினிமா பேசிக்கொள்ள மாட்டோம். காதல் திருமணம் என்பதால் புரிந்துதான் மணமுடித்துக்கொண்டோம். குழந்தைகள், வீடு, சினிமா என மென்மையான வாழ்க்கைமுறை என்னுடையது!”

“விரைவில் தமிழ் சினிமா இயக்குவேன்!”

“ஒரு மென்மையான ஆளான நீங்கள் கதை, திரைக்கதை எழுதி, அனுராக் காஷ்யப் இயக்கி வெளிவந்த ‘ராமன் ராகவ் 2.0’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 60களில் மும்பையை நடுநடுங்க வைத்த சைக்கோ சீரியல் கில்லரான ராமன் ராகவ் வாழ்க்கையைப் பிரதிபலிக்காமல் ஏன் மாடர்ன் படமாக அது வெளிவந்தது?”

“என் குருநாதர் அனுராக் காஷ்யப்பின் ‘பாம்பே வெல்வெட்’ படத்தின் ட்ரையாலஜியில் ஒன்றாக ராமன் ராகவ் சீரியல் கில்லரின் வாழ்க்கையைப் படமாக்கலாம் என 2009-ல் நானும் அவருமே ஸ்கிரிப்ட் ரெடி செய்து வைத்திருந்தோம். ‘பாம்பே வெல்வெட்’ படம் எங்கள் இருவருக்குமே கனவுப்படம். நான் திரைக்கதை எழுதியதில் பிரமாண்டமான படமும் அதுதான். ரன்பீர், அனுஷ்கா சர்மா போன்ற பிரபலங்கள் இருந்தும் கோடிகளில் வாரியிறைத்து பீரியட் படமாக வெளிவந்தும் படம் சரியாகப் போகவில்லை. இருவருக்குமே மனச்சோர்வு வந்துவிட்டது. பம்பாயின் வாழ்வியலை மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற எங்கள் கனவையும் அதோடு கலைத்துவிட்டோம். ஒருவேளை பாம்பே வெல்வெட் ஓடியிருந்தால் ஒரிஜினல் ராமன் ராகவ் கதையை தத்ரூபமாகக் காட்டியிருப்போம். அவ்வளவு ஆய்வுப்பணிகளும் விரயமாகிவிட்டது. ஆனாலும், அனுராக் புது யோசனை ஒன்றைச் சொன்னார். ‘நாம் ஏன் காப்பி கேட் கில்லர் ஒருவனைக் காட்டக் கூடாது?’ ஒரு பெரிய கிரிமினலைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகி இன்றைய காலகட்டத்தில் கொலைகள் செய்பவனாகக் காட்டலாமே எனப் புதுவிதமான கதையைச் சொன்னோம். அதில் ஒரு ஒழுங்கீனமான போலீஸ் அதிகாரியாக விக்கி கௌஷல் பாத்திரத்தை வைத்து, திரைக்கதையை ரிவர்ஸ் ஃபார்மட்டில் வடிவமைத்திருந்தோம். த்ரில்லர் ஜானரில் அது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.”

“ஆங்கிலத்தைப்போலவே உங்களிடம் தமிழும் சரளமாக வருகிறது. உங்கள் வேர் இங்கு இருக்கிறதா?”

“தாத்தா பாட்டியெல்லாம் தஞ்சாவூர். அம்மா அப்பா வளர்ந்து என்னை வளர்த்தது மும்பையின் இதயமான மாதுங்கா பகுதி. அது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. இங்கிருக்கும் ஒரு தியேட்டரில் கமல்-ரஜினி படங்கள் ரிலீஸாகும். முதல் நாள் முதல் ஷோ பார்ப்பேன். நான் பார்த்த முதல் உலக சினிமா ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’தான். என் அப்பா வீடியோ டெக் கொண்டு வந்து எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை ஏரியா மக்களுக்குக் காட்டுவார். அவர் காட்டிய நாடோடி மன்னன்தான் நான் பார்த்த முதல் தமிழ் சினிமா. மணிரத்னம், பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா படங்களை அறிமுகப்படுத்தியதும் அவர்தான். வீட்டில் எப்போதும் இளையராஜா பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். ராஜாவின் வெறித்தனமான ரசிகன் நான். அதனால் இன்றுவரை தமிழ் சினிமாவை மிஸ் பண்ண மாட்டேன். 100 வருட சிறப்பான பாரம்பர்யம் தமிழ் சினிமாவுக்கு இருக்கிறது அல்லவா!”

“விரைவில் தமிழ் சினிமா இயக்குவேன்!”

“சமீபத்தில் வந்த தமிழ்ப் படங்களில் எது உங்களை ரொம்பவே கவர்ந்தது?”

“ஓ.டி.டி-யின் காரணமாக அனுராக் காஷ்யப்புக்கு ரெகமென்ட் பண்ணும் அளவுக்கு ஒரு படத்தைக்கூட மிஸ் பண்ணாமல் பார்ப்பேன். அப்படி சமீபத்தில் பார்த்து ஆச்சர்யப்பட்ட சினிமா ‘கடைசீல பிரியாணி.’ எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்த எனக்கு அந்த இயக்குநரின் தைரியமான முயற்சியும், த்ரில்லரை உருவாக்கிய ஸ்டைலும் ரொம்பவே பிடித்தது. கமர்ஷியலாக ‘மாநாடு’ படம் பிடித்தது. டைம் லூப் கான்செப்ட்டைப் பார்வையாளர்களுக்கு இவ்வளவு எளிமையாக அழகாக போர் அடிக்காமல் சொல்லவே முடியாது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். வெற்றிமாறன் படங்களின் மேக்கிங் ரொம்பப் பிடிக்கும். சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி படங்களை மிஸ் செய்யவே மாட்டேன்!”

“தமிழ் சினிமா பக்கம் எப்போது உங்கள் பார்வை திரும்பும்? சென்னைக்கு உங்களை எப்போது எதிர்பார்க்கலாம்? ஓ.டி.டி-யின் தயவால் இப்போதெல்லாம் எல்லோரும் உங்களைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள் தெரியுமா?’’

“கடைசியாக நெட்ப்ளிக்ஸில் வந்த ‘ரே’ என்ற ஆந்தாலஜியில் என் படம் எப்படி இருந்தது என்பதைப் பற்றி வந்த விமர்சனங்களில் சென்னையிலிருந்துதான் அதிகம். என் பெயர் தமிழ்ப் பெயராக இருப்பதால் என்னைச் சென்னைத் தமிழன் என நினைக்கிறார்கள் போல. அதனால் என் இனிய தமிழ் மக்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நான் விரைவில் சென்னைக்கு வருவேன். அழகான தமிழ் சினிமா இயக்குவேன். ஒரு பெரிய ஸ்டார் நடிப்பார். என் கதை அண்ணா நகர், புரசைவாக்கம், திருவான்மியூர் பகுதிகளைச் சுற்றி வரும். சென்ட்ரல் ஸ்டேஷன் வந்து இறங்குவதற்கு முன் உங்களுக்கு கால் பண்ணுகிறேன். என்னைப் பார்க்க வாருங்கள். நான் இறங்கி வரும்போது அக்னி நட்சத்திரம் கார்த்திக் போல `ராஜா...ராஜாதி ராஜன் இந்த ராஜா’ என்று பின்னணி இசை ஒலிக்க சைடுவாக்கில்படிகளில் இறங்கி வருகிறேன்!”