சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

பாலிவுட்டின் அரசி!

தீபிகா படுகோன்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபிகா படுகோன்

முன்னாள் பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனின் மகளாகப் பிறந்த தீபிகா, நடிகையாகத் தன் கரியரைக் கன்னட சினிமாவில்தான் தொடங்கினார்

"நான் என்னை ஒருபோதும் ஒரு நட் சத்திரமாக நினைத்துக்கொள்வதில்லை. என் வயதிலிருக்கும் மற்ற பெண்களைப் போலத்தான் நானும். அவர்கள் அலுவலகங்களில், வெவ்வேறு பணிகளில் இருக்கிறார்கள். நானும் வேலைதான் செய்கிறேன். என் பணி நடிப்பு, அவ்வளவே! நான் மட்டும் இங்கே எதையோ வித்தியாசமாகச் செய்வதாக என்றுமே நினைத்ததில்லை.”தென் மாவட்டங்களிலிருந்து ரயிலேறி வந்து கோலிவுட்டில் ஸ்டாரானவர்களின் கதைகள் நாம் அறிந்ததே! தீபிகாவின் கதை கொஞ்சம் பெரிய பட்ஜெட். அவர் தென்மாநிலமான கர்நாடகாவிலிருந்து ஃப்ளைட் ஏறி மும்பை சென்று ஸ்டாரானார். முன்னாள் பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனின் மகளாகப் பிறந்த தீபிகா, நடிகையாகத் தன் கரியரைக் கன்னட சினிமாவில்தான் தொடங்கினார். ‘ஐஸ்வர்யா’ என்ற படத்தில் உபேந்திராவுடன் நடித்த தீபிகா, பின்னர் கன்னட சினிமா தனக்கான வெளி இல்லை என்று முடிவு செய்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு பாலிவுட் என்ட்ரி. முதல் படமே ஷாருக்கானுடன், அதிலும் இருவருக்குமே அதில் டபுள் ரோல். பூர்வ ஜென்ம ஞாபகம், பேய், த்ரில்லர், பாலிவுட்டையே ஸ்பூஃப் செய்து கலாய்த்தது, 50-க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்களின் கேமியோ என அந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மசாலா ‘ஓம் சாந்தி ஓம்.’ தன் முதல் இந்திப் படத்திலேயே பிலிம்பேர் விருது பெற்றார் தீபிகா. அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தன.

பாலிவுட்டின் அரசி!
பாலிவுட்டின் அரசி!

தீபிகாவும் ரன்பீர் கபூரும் இணைந்த ‘பச்னா ஏ ஹஸினோ’ படம் வரவேற்பைப் பெற்றது. இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் என அப்போதே பாலிவுட் கிசுகிசுத்தது. தொடர்ந்து, இயக்குநர் இம்தியாஸ் அலியின் ‘லவ் ஆஜ் கல்’ படத்தில் சயிஃப் அலிகானுடன் ஜோடி சேர்ந்த தீபிகா, 2010-ம் ஆண்டு பிஸியான நடிகை ஆனார். அந்த வருடம் அவரின் 5 படங்கள் வெளியாகின. பாலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகையாக அரியணையை எட்டிப் பிடித்தார். அதே சயிஃப் அலிகான், அமிதாப் பச்சன் மற்றும் மனோஜ் பாஜ்பாயுடன் இவர் நடித்த ‘ஆரக்ஷன்’ தோல்வியடைந்தாலும், ஓபிசி ரிசர்வேஷன் குறித்து பாலிவுட்டுக்குப் பாடம் எடுத்த முக்கியமான படம் அது. கமர்ஷியலாக தீபிகாவுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் 2012-ல் வெளியான ‘காக்டெயில்.’ மாடர்ன் பெண்ணாக தீபிகா வரும் காட்சிகளில் எல்லாம் ஹைவோல்டேஜ் டிராமாதான். நன்றாக நடிக்கவும் தெரிந்தவர் என்ற பெயரும் கிடைத்தது. அதே உத்வேகத்துடன் அதற்கடுத்த ஆண்டில் அவர் நடித்த நான்கு படங்களும் சூப்பர் ஹிட்டாயின. அதில் ரன்பீருடன் இவர் மீண்டும் நடித்த ‘ஏ ஜாவனி ஹை தீவானி’ படமும் ஷாருக்கானுடன் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படமும் வசூலில் பெரும் சாதனை படைத்தன.ரன்வீர் சிங்குடன் இவர் முதன்முதலில் இணைந்த பிரமாண்ட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘கோலியோன் கி ராஸ்லீலா ராம்லீலா’ தீபிகாவுக்கு இரண்டாவது பிலிம்பேர் விருதை வாங்கிக்கொடுத்தது. தொடர்ந்து வித்தியாசமான, அதுவரை பாலிவுட்டில் சொல்லப்படாத கதைகளை எழுதிய, படமாக்கிய ஷூஜித் சர்கார் அமிதாப் பச்சன், இர்ஃபான் கான் மற்றும் தீபிகாவை வைத்து ‘பிகு’ படத்தை எடுத்தார். அமிதாப் தேசிய விருதையும் பிலிம்பேர் விருதையும் பெற, தீபிகாவும் தன் மூன்றாவது பிலிம்பேர் விருதைப் பெற்றார். ரன்வீர் சிங் நல்ல நடிகனாகத் தன்னை உருமாற்றிக் கொள்ள இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் மூன்று படங்கள் உதவின என்றால், அந்த மூன்று படங்களிலும் நாயகி தீபிகாதான். குறிப்பாக, ‘பாஜிராவ் மஸ்தானி’யில் ‘மஸ்தானி’யாக ஜொலித்திருப்பார் தீபிகா. தொடர்ந்து 2017-ல் ‘XXX: Return of Xander Cage’ படத்தில் வின் டீசலுக்கு ஜோடியாக படத்தின் நாயகியாகவும் நடித்து ஹாலிவுட்டில் தடம் பதித்தார். 2017 - 18 காலகட்டம். ஸ்ரீ ராஜ்புத் கர்ணி சேனா அமைப்புக்கு சஞ்சய் லீலா பன்சாலி எடுத்த ‘பத்மாவதி’ படத்தின் மேல் கடுங்கோபம் உருவானது. காரணம், ராஜ்புத் அரசப் பரம்பரையை அந்தப் படம் தவறாகச் சித்திரித்திருக்கிறது என்ற வாதம்தான். டிரெய்லரை மட்டுமே பார்த்துவிட்டு, செய்துகொண்டிருக்கும் வேலையை அப்படியே போட்டுவிட்டுத் தெருவில் பதாகைகளுடன் இறங்கியது அந்தக் கும்பல். துணைக்கு நிறைய சாதி சார்ந்த அமைப்புகள் பார்ட்னர்ஷிப் போட்டன. படத்தின் செட்களில் கலவரம் மூண்டது. படத்தின் நாயகி பத்மாவதியாக நடிக்கும் தீபிகா படுகோனின் மூக்கை வெட்டுவதாக ஒரு தரப்பு கொக்கரித்தது. தாக்கூர் அமைப்பு, தீபிகா மற்றும் இயக்குநர் பன்சாலியின் தலைகளைக் கொண்டுவருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசு எனப் பகிரங்கமாகவே அறிவித்தது. சாதாரண பிரச்னைக்கே, இந்துத்வ அரசியலின் ஆதரவாளர் கங்கனா ரணாவத்துக்கு ‘Y Plus’ பாதுகாப்பு அளித்த மத்திய அரசு, தீபிகா விஷயத்தில் மும்பை போலீஸ் பார்த்துக் கொள்ளட்டும் என அமைதி காத்தது. ‘பத்மாவதி’ படம் ‘பத்மாவத்’ என்ற பெயரில் ரிலீஸானது.

பாலிவுட்டின் அரசி!
பாலிவுட்டின் அரசி!

2019-ம் ஆண்டு நாடு முழுவதும் போராட்டங்களைக் கிளப்பியது இந்தியக் குடியுரிமைத் திருத்த சட்டம். முக்கியமாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போராட்டக் களமானது. நந்திதா தாஸ், அதிதி ராவ் ஹைதரி, பரினிதி சோப்ரா, பூமி பெட்னேகர் உள்ளிட்ட சில பிரபலங்கள் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகவும் நின்றனர். ஒரு மாலை வேளையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குச் சென்று போராடும் மாணவர்களோடு நின்றார் தீபிகா படுகோன். மாணவர்களுக்கு அவர் எந்த அறிவுரைகளையும் வழங்கவில்லை. வெளியே வந்து மீடியாவிடமும் எதுவும் பேசவில்லை. ‘அது மாணவர்களின் போராட்டம், அதில் நடிகர்கள் திரையை ஆக்கிரமிக்கக்கூடாது’ என்பதில் தெளிவாக இருந்தார் தீபிகா. அதே சமயம், அவர்களுக்குத் தன் ஆதரவு உண்டு என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்தார். ‘ஆன்டி-இந்தியன்’ பட்டம் அவரைத் தேடி வந்தது. வலதுசாரிகள் அவரின் ‘சபாக்’ படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என ட்விட்டரில் டிரெண்டு செய்தனர்.‘டிரையல் பை மீடியா’ - அதாவது மீடியாவே ஒருவரின் மீதான குற்றச்சாட்டை விசாரித்து, ஆதாரங்களைச் சேகரித்து, அவர் குற்றவாளியா இல்லையா என்று தீர்ப்பும் எழுதுவது. சமகாலத்தில், பாலிவுட்டில் இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட நடிகை தீபிகா படுகோன்தான். சுஷாந்த் சிங் தற்கொலை, அதன் மூலம் வெளிவந்த அவரின் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி விவகாரம், பின்னர் தொடர்ந்த போதைப்பொருள் மாஃபியா விசாரணை என சந்தேக வளையத்தில் சிக்கிய சூப்பர் ஸ்டாராகிப்போனார் தீபிகா. குற்றம் நிரூபிக்கப்படும் முன்னரே வாட்ஸப் மெசேஜ்களை வைத்துத் தீர்ப்பு எழுதியது வட இந்திய மீடியா. ரன்பீருடனான பிரேக் அப்பிற்குப் பிறகு அதிகமான கேள்விகளை எதிர்கொண்டதும் தீபிகாதான். ரன்வீர் சிங்குடன் காதல், திருமணம் என்று நிகழ்ந்த பின்னரும் இன்றுவரை ரன்பீர் குறித்த கேள்விகள் தீபிகாவை வட்டமடிக்கின்றன.

பாலிவுட்டின் அரசி!
பாலிவுட்டின் அரசி!
பாலிவுட்டின் அரசி!

பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பொதுவில் வைத்துப் பேசுவது இந்தியர்களின் வழக்கம். தீபிகாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. பார்வதியைப் போலவே மனநலன் குறித்து அதிகம் பேசுபவர் தீபிகா. 2015-ம் ஆண்டில் தன் மனநலன் பெரிதும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பதாகத் தெரிவித்தவர், அதோடு நிற்காமல், ‘தி லிவ் லவ் லாஃப் பவுண்டேஷன்’ என்ற அமைப்பை நிறுவி, அதன் மூலம் மனநலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் 1970-களின் பாலிவுட் சூப்பர்ஸ்டாராக நடித்த தீபிகா, ஒரு காட்சியில் காரை விட்டு இறங்குவார். ரசிகர்கள் படை அவரைச் சூழ்ந்துகொண்டு அவரிடம் ஒரு ஆட்டோகிராப் பெற்றுவிடப் போராடும். பாலிவுட்டில் தீபிகா படுகோன் தோன்றிய முதல் காட்சி இதுதான். அப்போது அவருக்கு ‘இது நிஜ வாழ்விலும் நடக்கும்’ என்ற நம்பிக்கை இருந்திருக்குமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், அது நடந்தது. அடுத்த 10 வருடங்களில் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற ஸ்டார் அந்தஸ்து, அவரின் கடின உழைப்பால் சாத்தியமாயிற்று. ஆனால், ஒரு சின்னத் திருத்தம். இப்போது அவரிடம் ஆட்டோகிராப் வாங்கப் பலரும் துடிப்பது, அவர் நடிகை என்ற காரணத்தினால் மட்டுமல்ல; ஒரு போராளி, மனிதநேயத்தின் பக்கம் நிற்பவர் என்பதாலும்தான்!