Published:Updated:

வக்கீல் சாப் வைரல் வீடியோ : பவன் கல்யாணின் பர்ஃபாமென்ஸையே மிஞ்சும் அந்த சிறுவர்கள் யார்?!

வக்கீல் சாப் வைரல் வீடியோ
வக்கீல் சாப் வைரல் வீடியோ

''சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டார். அம்மா கூட சேர்ந்து மீன் வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கேன். போன வருஷம் லாக்டெளன் போட்டப்போ வியாபாரமும் இல்ல, வேலையும் இல்ல. அப்போதான் சுஹானி, வருண்கிட்ட எல்லாம் இந்த யூ-ட்யூப் ஐடியா பத்தி சொன்னேன். எல்லாரும் குஷியாகிட்டாங்க.''

தெலுங்கு படமான ‘வக்கீல் சாப்’ திரைப்படத்தின் முக்கிய சண்டை காட்சியை டிக்டாக் செய்து எல்லோரையும் ‘வாவ்' என ரசிக்க வைத்திருக்கிறது ஒரு யூ-ட்டிப் வீடியோ. ‘’யாருடா இந்த பசங்க’’ என வலைதளங்கள் பல பிடித்து தேடினால், அதன் ஆரம்ப இடம் நெல்லூர். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல், தினக்கூலியை மட்டுமே நம்பி வாழ்வை நகர்த்திக்கொண்டுடிருக்கும் எளிய இளைஞர்களின் உருவாக்கத்தில் உருவான அந்த வீடியோ தான் சோஷியல் மீடியாவின் இன்றைய ஹிட் ஹாட் ட்ரெண்ட். இளைஞர் பட்டாளத்திடம் பேசினேன்.

‘’நாங்க நாலு பேரு... எங்களுக்கு சினிமா பார்க்குறதைத்தவிர சினிமாவில் எதுவும் தெரியாது. சின்ன வயசுல இருந்தே நாங்க ஒரே தெரு ஃப்ரெண்ட்ஸ். ஆந்திரா நெல்லூர்ல உள்ள வெங்கடேஷபுரம்தான் எங்களுக்கு சொந்த ஊரு. குப்பமான எங்க ஊரின் அடிப்படை தொழிலே மீன் பிடிக்கிறதுதான்’’ என அப்பாவியாய் பேசும் சுபானிதான் இன்றைய வைரல் வீடியோவான பவன் கல்யாண் சண்டைகாட்சியை இமிடேட் செய்த சண்டைக்காட்சியின் ஒளிப்பதிவாளர்.


‘’உங்க வீடியோ இங்க தமிழ்நாட்டுல வைரல் என சொன்னால்?’’

‘’அப்படியா நம்பவே முடியல'' என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் கிரண். இவர்தான் இந்த வைரல் வீடியோவின் இயக்குநர்.

கிரண்
கிரண்

‘’நான் ஒன்பதாவது படிச்சுட்டு இருக்கேன். சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டார். அம்மா கூட சேர்ந்து மீன் வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கேன். போன வருஷம் லாக்டெளன் போட்டப்போ வியாபாரமும் இல்ல வேலையும் இல்ல. அப்போ தான் சுஹானி, வருண்கிட்ட எல்லாம் இந்த யூ-ட்யூப் ஐடியா பத்தி சொன்னேன். எல்லாரும் குஷியாகிட்டாங்க. ஆனா, சினிமா பத்தி எதுவே தெரியாதுன்னும் சொன்னாங்க. பரவால்ல எடுத்து எடுத்து கத்துக்குவோம்னு ஆரம்பிச்சோம். இன்னைக்கு எல்லாரும் வீடியோ பார்த்து கொண்டாடுறாங்கன்னு சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என கிரண் சொல்ல

ஆர்ட் டைரக்டர் வருண் தொடர்ந்தார்.

‘’ஆரம்ப நாட்கள்ல ஷூட்டிங் போகணும்னா காசே இருக்காது. ஆளுக்கு நூறு இருநூறுனு கையில கிடைக்கிற காசை வெச்சு செலவு பண்ணிக்கிட்டு இருந்தோம்’’ என சொல்ல கிரண் தொடர்ந்தார்.

‘’இந்த வக்கீல் சாப் வீடியோவை சண்டைக்காட்சிக்கு ரெண்டு நாள், டயலாக் போர்ஷனுக்கு ஒரு நாள்னு மொத்தம் மூணே நாள்ல முடிச்சுட்டோம். மொத்த வீடியோவுமே மொபைல்லயே ஷூட்பண்ணி மொபைல்லயே எடிட் பண்ணுனோம்.’’

டீம்
டீம்

‘’எப்படி நடிகர், நடிகைகள் எல்லாம் தேர்வு பண்ணீங்க?’’

‘’நடிகர்கள் வேணும்னு தேடினப்போ பெரிய ஆளுங்க கிட்ட போக வேண்டாம், அவங்க கிட்ட சொல்லி புரிய வச்சாலும் எங்கயாச்சும் சறுக்குனா அது நம்மள இன்னும் சோர்ந்து போக வச்சுரும்னு எங்க ஏரியாக்குள்ள இருந்தே நடிக்க ஆர்வம் உள்ள பசங்களா தேடி தேடி நடிக்க வச்சோம்.

வக்கீல் சாப் வீடியோவுல நடிச்ச பையன் பேரு முன்னா. பத்தாவது படிச்சுட்டு இருக்கான். ‘வீடியோ பண்ணுவோம் வாடா’ன்னு சொன்னோம். ‘எப்போ ஷூட்டிங் அண்ணா’ன்னு கிளம்பி வந்தான். ஆரம்பத்துல இப்படி கேமரா எடுத்துட்டு சுத்த போகும்போது எங்க எல்லார் வீட்டுலயுமே பயந்தாங்க. ‘எதுவுமே தெரியாம இப்படி சுத்திக்கிட்டு இருக்காங்க. வருமானம் இல்ல. இதையே நம்பி வழிமாறிப்போயிருவோமோ’ன்னு பயந்தாங்க. இப்போ வர்ற வரவேற்பை பார்த்து சந்தோஷப்படுறாங்க.

ஒவ்வொரு சண்டைக்கும் முன்னாடி நிறையவே பயிற்சி எடுத்துப்போம். அது அப்படியே ஷூட் போறப்போ பர்ஃபெக்ட்டா வந்துரும். ஆரம்ப நாட்கள்ல வெறும் தரையில தான் ஸ்டன்ட் பண்ணுவோம். இப்போதான் கொஞ்ச நாளா கொஞ்சம் பாதுகாப்பான உபகரணங்களை பயன்படுத்த ஆரம்பிச்சிருக்கோம்’’ என்றார் கிரண்.

ஆர்ட் டைரக்டர் வருண் பேசும்போது, ‘’இவுங்க திடீர்னு ஒரு சீன் எதாச்சும் சொல்லி இதான் ரீக்ரியேட் பண்ண போறேன்னு சொல்லிருவாங்க. நாம தான் ஆர்ட் பார்க்கணும்னு அந்த அந்த இடத்துல அந்த மூட் கிரியேட் பண்றதுக்காக நிறைய மெனக்கெட வேண்டி இருக்கும். ஆனா, பட்ஜெட் இருக்காது. இருந்தாலும் ஒரிஜினல் ஃபீல் வர்றதுக்குன்னு எங்கெல்லாம் கம்மியா இருக்குன்னு பார்த்து பார்த்து பண்ணுவோம்’’ என்றார்.

வக்கீல் சாப் வைரல் வீடியோ : பவன் கல்யாணின் பர்ஃபாமென்ஸையே மிஞ்சும் அந்த சிறுவர்கள் யார்?!

‘’தமிழ்நாட்டுலயே கொண்டாடுறாங்க… ஆந்திரா ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?’’ என்றால், ‘’வீடியோ ரிலீசானதுல இருந்து பவன் கல்யாண் ரசிகர்கள் எல்லாம் பயங்கரமா கொண்டாடிட்டு இருக்காங்க. எங்களுக்கே சர்ப்ரைஸா இருக்கு. இசையமைப்பாளர் தமன் ஷேர் பண்ணிருந்தார். உழைப்புக்கான அங்கீகாரமா பார்க்குறோம். மக்கள் எங்கள் வீடியோக்களை ஏத்துக்கிட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்ற கிரணிடம் ‘’அடுத்து என்ன பண்ண போறீங்க எனக் கேட்டால்?’’

‘’பெரிய சினிமாவுக்கான கனவும் ஆசையும் உள்ளுக்குள்ளே வந்துருச்சு. பெரிய சினிமாவுக்கான கதைகளும் உள்ளுக்குள்ள இருக்கு. அதை திரைக்கதையா மாத்துற வேலைகள்ல இருக்கோம். எல்லாம் சரியா அமைஞ்சா இதே டீமை நீங்க பெரிய திரையிலயும் பார்க்கலாம்’’ என்று கிரண் சொல்ல எல்லோரும் கோரஸாக சந்தோஷக் கூச்சல் போடுகிறார்கள்.

சமீபத்தில் வெளியாகி ஓடிடியில் ஹிட் அடித்த cinemaBandi திரைப்படத்தின் ‘எல்லாருக்குள்ளேயும் ஒரு சினிமா படைப்பாளி இருக்கிறான்’ என்கிற Tagline ஐ உண்மை என நிரூபித்திருக்கிறார்கள் இந்த இளைஞர்கள்.

அடுத்த கட்டுரைக்கு