
ஆலியா பட் இந்தியில் அவரது சொந்தக் குரலில்தான் பேசுகிறார். அதனால், அவரின் ஐந்தாறு படங்களைப் பார்த்து வாய்ஸ் டோன், டயலாக் டெலிவரியெல்லாம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்தேன்.
சிவகுமாரின் மகளும், சூர்யா, கார்த்தியின் தங்கையுமான பாடகி பிருந்தா சிவகுமார் ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் மூலம் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே ஆலியா பட்டிற்குப் பின்னணிக் குரல் கொடுத்த உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் இருப்பவரிடம் ‘வாழ்த்துகள்’ கூறிப் பேசினேன்…
“பிரம்மாஸ்திரா வாய்ப்பு எப்படி வந்தது?”
“இந்தப் படத்தில் பணிபுரிந்த சுமன் எங்கள் தூரத்துச் சொந்தம். என் பாடல்களையும் கேட்டுள்ளார். என்னை வெவ்வேறு எமோஷன்களில் பேசவைத்து ‘பிரம்மாஸ்திரா’ மெயின் டீமுக்கு அனுப்பினார் சுமன். ஆலியா பட் குரலுக்கு ஏற்றவாறு எனது குரல் செட் ஆனதால், அவர்களும் ஓகே சொன்னார்கள். டப்பிங்கும் நடிப்பது போன்றுதான். புது அனுபவமாக இருந்தது. டப்பிங் யூனியனில் ரிஜிஸ்டர் செய்து கார்டு வாங்கியபிறகே டப்பிங் பேசமுடியும் என்றார்கள். கடந்த வருடம் அப்ளை செய்து கார்டு வாங்கினேன். ஆனால், இந்த வருடம்தான் வாய்ப்பு வந்தது. திறமையின் அடிப்படையில் தேர்வானதில் பெரும் சந்தோஷம். என்னை டப்பிங் பண்ணச் சொல்லி முதலில் ஊக்கப்படுத்தியது, என் மாமியார் பானுமதிதான். ‘என்ன வாய்ப்பு வந்தாலும் எந்தத் தயக்கமும் காட்டாதே. தைரியமா பண்ணு’ என்று ரொம்ப என்கரேஜ் செய்தாங்க. அண்ணனிடம் சொன்னபோது ‘இவ்ளோ பெரிய புரொடக்ஷன்ல உன்னோட வாய்ஸை அப்ரூவ் பண்ணிருக்காங்க. உன் வாய்ஸ்ல என்னவோ இருக்கு’ன்னு சொல்லி வாழ்த்தினாங்க.”

‘‘டப்பிங் கொடுக்கும்போது ஏற்படும் சவால்கள் என்ன?”
“ஆலியா பட் இந்தியில் அவரது சொந்தக் குரலில்தான் பேசுகிறார். அதனால், அவரின் ஐந்தாறு படங்களைப் பார்த்து வாய்ஸ் டோன், டயலாக் டெலிவரியெல்லாம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்தேன். இந்திக்கும் தமிழுக்கும் லிப் சிங்க் பண்ணுவது கஷ்டம். அதற்கு ஏற்றவாறு பேசவேண்டும். அவர்கள் சொன்ன டயலாக்கை அப்படியே சொல்லாமல், நாம் என்ன பெட்டராகப் பண்ணமுடியும், நம்ம மக்களுக்கு தமிழில் என்ன மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தினால் ரிலேட் பண்ண முடியும் என்பதையெல்லாம் யோசித்துப் பேசினேன். டப்பிங் படம் என்பதால் தமிழ் ரசிகர்கள் அந்நியமாக ஃபீல் பண்ணக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்கான பாராட்டுகள் வந்துகொண்டிருப்பதில் மகிழ்ச்சி.”
‘‘நீங்க ‘செங்காட்டுல’ ஆல்பத்தில் நடித்துள்ளீர்களே… சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்ததா?”
“நடிப்பதற்கு மட்டுமல்ல, பாடுவதற்கும் வாய்ப்புகள் வந்தன. நடிக்க விருப்பமில்லாததால் விட்டுவிட்டேன். பாடும் வாய்ப்பு வந்தபோது, எனக்கு பொதுத்தேர்வு இருந்தது. அதனால் அப்பா, அம்மா இருவருமே தேர்வில் கவனத்தைச் செலுத்தச் சொன்னார்கள். ‘படிக்கிற வயசுல படிக்கணும். படிப்பால் நாம் எதையும் சாதிக்க முடியும்ங்குற நிலைமைக்கு வந்தபிறகுதான் தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பிக்கணும். இரண்டிலுமே ஒரே நேரத்துல கவனத்தைச் சிதறவிடக்கூடாது’ என்று எங்கள் எதிர்காலத்தின் மீதான அக்கறையில் அப்பா கொஞ்சம் கண்டிப்புடன் இருப்பார். ஸ்டெல்லா மேரிஸ் காலேஜில்தான் ஃபைன் ஆர்ட்ஸ் படித்தேன். ஓவியம் வரைவது, பாடுவது என்றிருப்பேன். ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் ரொம்ப என்கரேஜ் செய்வார்கள். அந்த ஊக்கம்தான், என்னைத் தற்போது பாடவைத்துக்கொண்டிருக்கிறது.”
“சினிமாப் பாடல்களைவிட நிறைய பக்திப் பாடல்கள் பாடியிருக்கீங்களே?”
“இப்போதைக்கு, 2டி மற்றும் டிரீம் வாரியர் பிக்சர்ஸில் பாடியுள்ளேன். எனது முதல் படமான ‘மிஸ்டர் சந்திரமெளலி’ வெளியிலிருந்து வந்த வாய்ப்புதான். அதேநேரம், பக்திப் பாடல்கள் பாடுவது எனக்குப் பிடித்திருக்கிறது. கோயிலுக்குச் சென்று கடவுளை நினைத்து மனமுருகிப் பாடுவதில்தான் ஆத்ம திருப்தியே கிடைக்கிறது. இந்த வருடம் தைப்பூசத்தின் போதுகூட ‘கந்தவேல் ஆல்பம்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டோம். முருகர் மேல் எனக்குத் தனி பக்தி உண்டு. சமீபத்தில் துர்கா ஸ்டாலினின் கீழப்பெரும்பள்ளம் குலதெய்வக் கோயிலுக்காக இரண்டு அம்மன் பாடல்களைப் பாடியுள்ளேன். ரொம்ப நல்லா வந்திருக்கு.”

‘‘சினிமாவில் சூர்யாவின் 25 ஆண்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
‘‘அண்ணன் எனக்கு இன்னொரு அப்பா மாதிரி. அண்ணன் சினிமாவுல மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் எனக்கு ஹீரோதான். அவரின் உழைப்பு அபாரமானது. இந்த 25 வருடங்களில் அவர் நடிச்ச எல்லாப் படத்துக்குமே 100 சதவிகிதம் உழைப்பைத்தான் போட்டிருக்கார். அவங்களோட மெனக்கெடலை வார்த்தைகளில் சொல்ல முடியாது. யார் எதைப் பண்ண முடியாது என்கிறார்களோ, அதைப் பண்ணிக் காட்ட நினைப்பார். ஆரம்பத்தில் இதெல்லாம் மைனஸ்னு சொன்னவங்களே, இப்போ அண்ணனைப் பாராட்டுறாங்க. இதற்கெல்லாம், அண்ணனின் அர்ப்பணிப்புதான் காரணம்.”
‘‘உங்க அப்பா பெயரும் கணவர் பெயரும் ஒன்றுதான். சுவாரசியமா இது அமைஞ்சிருக்கு இல்லையா?”
“எனக்கு ரெண்டு பேருமே பெரிய சப்போர்ட். ஒரே பெயரில் ரெண்டு பேரும் அமைந்தது ஸ்பெஷல்தான். ‘என்னை சிவான்னு கூப்பிடு’ என்று கணவர் சொல்லிக்கொண்டே இருப்பார். நான் இதுவரை, கணவரைப் பெயர் சொல்லி அழைத்ததில்லை. ‘பிரம்மாஸ்திரா’ படத்தில் ஹீரோவின் பெயர் சிவா. படம் முழுக்க ‘சிவா... சிவா...’ என்று பேசினேன். அப்படிக் கூப்பிடுறதை கணவர் படத்தில் பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவார்.’’