Published:Updated:

` `முன்பே வா' பாடல் சான்ஸ் வந்தும் மிஸ் பண்ணிட்டேன்... ஏன்னா?!' - பிருந்தா சிவகுமார் ஷேரிங்ஸ்

சூர்யா, கார்த்தியுடன் பிருந்தா
சூர்யா, கார்த்தியுடன் பிருந்தா

`செங்காட்டுல’ என்ற கிராமத்து மணம் வீசும் ஆல்பம் ஒன்றில் பாடியும் நடித்தும் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார் பிருந்தா. மகிழ்ச்சியில் இருந்தவரிடம் பேசினோம்.

சினிமா கலைக் குடும்பத்தின் செல்ல வாரிசான பிருந்தா, நடிகர் சிவக்குமாரின் மகள். சூர்யா, கார்த்தியின் அன்புத் தங்கை. பின்னணிப் பாடகியான பிருந்தாவும், குடும்பத்திலுள்ள சினிமா பிரபலங்கள் பட்டியலில் இணைந்தவர். `செங்காட்டுல’ என்ற கிராமத்து மணம் வீசும் ஆல்பம் ஒன்றில் பாடியும் நடித்தும், புது முயற்சியில் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். மகிழ்ச்சியில் இருந்தவரிடம் பேசினோம். இசைப் பயணம், குடும்ப பாசம் எனப் பலவற்றையும் பகிர்ந்துகொண்டார்.

பிருந்தா
பிருந்தா

``பெற்றோருக்குப் பூர்வீகம் கொங்கு மண்டலம். அப்பாவின் சினிமா வேலைகளால அண்ணன்களும் நானும் சென்னையிலதான் வளர்ந்தோம். ஆனா, கிராமத்து மண்வாசனை எங்களுக்குக் கிடைக்கணும்னு பெற்றோர் ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்தாங்க. பாட்டியின் ஊர் கவுண்டம்பாளையம். ஸ்கூல் சம்மர் லீவ்ல ரெண்டு மாசம் முழுக்கவே அந்த ஊர்லதான் இருப்போம். கிராமத்து வாழ்க்கையை ரசிச்சு வாழ்ந்தோம். ஊர்ல எல்லோருமே சொந்தங்கள், உறவுகள். எல்லா வீட்டுப் பிள்ளைகளுடனும் விளையாடுவோம். அண்ணனுங்க பயமில்லாம கிணத்துல குதிச்சு விளையாடுவாங்க.

பச்சைப்பசேல்னு சுத்தியும் விவசாய பூமிதான். அந்த நினைவுகளோடு, அடுத்த பத்து மாசத்தைக் கழிப்போம். அந்தப் பசுமையான மெமரீஸ் நகரப் பகுதியில வாழும் பிள்ளைகளுக்கு முழுமையா கிடைக்காதது சின்ன வருத்தம். என்னோட பிள்ளைங்களோட பியானோ குரு ஏ.டி.ராம் சார், கிராமத்துச் சூழலை மையப்படுத்தி ஒரு பாடலை தயார் பண்ற முயற்சியில் இறங்கினார். `செங்காட்டுல’ பாடலை உருவாக்கி என்னைப் பாடச் சொன்னார். போன வருஷம் ஜனவரியிலேயே ரெக்கார்டிங் பண்ணிட்டோம்.

பிருந்தா
பிருந்தா

அதுக்குப் பிறகுதான் அதை விஷூவலாவும் காட்சிப்படுத்தும் ஐடியா உருவாச்சு. என்னோட சின்ன வயசு கிராமத்து வாழ்க்கை முறையைக் காட்சிப்படுத்தலாம்னு நினைச்சேன். அதை ராம்சார்கிட்ட யோசனையா சொன்னேன். அவரோட தம்பி பஹத், மணிரத்னம் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தவர். ஒளிப்பதிவுலயும் அனுபவமுள்ள பஹத், அந்தப் பாடலுக்குப் பொருத்தமான விஷுவல் காட்சிகளை நாகர்கோவில் பகுதியில ஷூட் பண்ணினார். சென்னை, கேளம்பாக்கத்துல கடந்த டிசம்பர்ல நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரே நாள்ல ஷூட் பண்ணினோம். கிராமத்துக் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளையும் அதிகம் காட்சிப்படுத்தியிருந்தோம்.

`திங் மியூசிக்’ யூடியூப் சேனல்ல பொங்கல் சமயத்துல இந்த ஆல்பத்தை ரிலீஸ் பண்ணினோம். சன் மியூசிக்லயும் ஒளிபரப்பினாங்க. கணவர் மற்றும் என் பெற்றோர் குடும்பத்துலயும் ரொம்பவே பாராட்டினாங்க. தெரிஞ்ச எல்லோருக்கும் இந்தப் பாடல் லிங்க்கை அனுப்பி சந்தோஷப்பட்டார் அப்பா. `உன்னோட சொந்த முயற்சியில நல்ல பாடலைப் பாடியிருக்க’ன்னு ரெண்டு அண்ணன்களும் மனதாரப் பாராட்டினாங்க. ஆல்பத்துல நான் நடிச்சிருப்பது ரெண்டு அண்ணிகளுக்கும் கூடுதல் மகிழ்ச்சி”

பிருந்தா
பிருந்தா

- புன்னகையுடன் கூறும் பிருந்தா, சிறுவயது முதலே கர்னாடக மற்றும் இந்துஸ்தானி இசை கற்றுவருகிறார். ஆனாலும், பின்னணிப் பாடகியாகும் ஆசை தாமதமாகவே நிறைவேறியிருக்கிறது.

``ஸ்கூல் படிக்கும்போது, இசை நிகழ்ச்சிகள்ல அதிகம் பாடினேன். கார்த்திக் ராஜா சார் மியூசிக்ல பாடும் வாய்ப்பு கிடைச்சது. டென்த் பப்ளிக் எக்ஸாம் நேரத்துல அந்த வாய்ப்பை ஏற்க முடியல. அப்புறம் `சில்லுனு ஒரு காதல்’ படத்துல வரும் `முன்பே வா’ பாடல் வாய்ப்பு வந்தும், ரஹ்மான் சார்கிட்ட பாட இசை அனுபவம் இன்னும் அதிகம் இருந்தா நல்லா இருக்கும்னு அந்த வாய்ப்பையும் தவற விட்டேன். `எதிர்காலத்துல பின்னணிப் பாடகியாகவே ஆசைப்படுறேன். அதுக்கு நீங்க ஆதரவு தரணும்’னு கணவர்கிட்ட சம்மதம் வாங்கின பிறகுதான் கல்யாணத்துக்கு ஒப்புகிட்டேன்.

இளையராஜா, பவதாரணியுடன் பிருந்தா...
இளையராஜா, பவதாரணியுடன் பிருந்தா...

பிறகு, தொடர்ந்து மியூசிக் கத்துகிட்டாலும் சரியான வாய்ப்பு வரல. இந்த நிலையிலதான், `மிஸ்டர் சந்திரமெளலி’ படத்துல பாடகியா அறிமுகமானேன். அப்புறம் சூர்யா அண்ணனோட தயாரிப்புல ஜோதிகா அண்ணி நடிச்ச `ஜாக்பாட்’, `ராட்சசி’, `பொன்மகள் வந்தாள்’ படங்கள்ல தலா ஒவ்வொரு பாடல் பாடினேன். பல இசையமைப்பாளர்களின் ரசிகை. ஆனாலும், இளையராஜா சாரின் இசைன்னா எனக்கு உயிர். சின்ன வயசுல அவர் வீட்டுல நடக்கும் நவராத்திரி கொலு நிகழ்ச்சியில கலந்துப்பேன். அவர் இசையில பாடுறது எனக்குக் கனவு. அதை ராஜா சார்கிட்டயே சொல்லியிருக்கேன். அந்த ஆசையும் நிறைவேறும்னு உறுதியா நம்புறேன்” என்று நம்பிக்கையுடன் கூறும் பிருந்தாவின் பேச்சு, குடும்பத்தினர்மீது திரும்பியது.

``அப்பா சினிமாவுல புகழ் பெற்றாலும், பிள்ளைகள் மூவரும் சினிமாவுல வரணும்னு அவர் ஆசைப்படல. சினிமா தாக்கம் எங்க படிப்பையும் வளர்ச்சியையும் பாதிக்காத வகையில அம்மா எங்களை ரொம்பவே பொறுப்பா வளர்த்தாங்க. அண்ணனுங்களையும் என்னையும் சொகுசாவும் ஆடம்பரமாகவும் வளர்க்க அம்மா ஒருபோதும் நினைக்கல. கடைக்குப் போறது, ஸ்கூலுக்கு பஸ்ல அனுப்புறதுனு சராசரியான வாழ்க்கை முறையுடன், எல்லா கஷ்ட நஷ்டங்களும் புரியும்படிதான் வளர்த்தாங்க. அது எங்க வளர்ச்சிக்கு ரொம்பவே பயனுள்ளதா அமைஞ்சது.

குடும்பத்தினருடன் பிருந்தா...
குடும்பத்தினருடன் பிருந்தா...
Vikatan

அதனாலதான், சினிமாவுக்குப் போகணும்னு எந்தத் திட்டமிடலும் பயிற்சியும் இல்லாத அண்ணனுங்க இருவரும், சொந்த முயற்சியில போராடி தங்களுக்கான இடத்தைப் பிடிச்சிருக்காங்க. குடும்பத்தின் அஸ்திவாரமா இருக்கும் அம்மா, எங்க நலனுக்காக மட்டுமேதான் சிந்திப்பாங்க. தனக்கான தேவை, பிடிச்ச விஷயங்கள், கொண்டாட்டம், தனிப்பட்ட வாழ்க்கைனு எதையும் அவங்க இதுவரை வாழ்ந்தது இல்ல. அம்மாவின் உலகமே நாங்க மட்டும்தான்.

எங்க மூவரின் பிள்ளைங்களுக்கும் குடும்ப பாசம், உறவுகளின் அன்பும் அரவணைப்பும் அவசியம் தேவை. அதனால விடுமுறை நாள்கள்ல பிள்ளைகளுடன் அப்பா வீட்டுக்குப் போயிடுவேன். அந்த நேரம் கொண்டாட்டமா இருக்கும். கூட்டுக் குடும்பத்துல ப்ளஸ், மைனஸ் ரெண்டும் இருக்கக்கூடும். ஆனா, எல்லோருமே விட்டுக்கொடுத்துப் போகும்போதுதான், ப்ளஸ் அதிகமாகி கூட்டுக்குடும்பத்தின் அவசியம் மேன்மையடையும்.

கணவருடன் பிருந்தா
கணவருடன் பிருந்தா
சைக்கிளிங், வைல்ட் லைஃப் போட்டோகிராபி, இளையராஜா பாட்டு... அமுதா ஐ.ஏ.எஸின் பர்சனல் பக்கங்கள்!

சினிமா, குடும்ப வாழ்க்கைனு பல விஷயங்கள் பத்தியும் வீட்டுல வெளிப்படையா கருத்துகளைப் பகிர்ந்துப்போம். சினிமாவுக்கு உதவுமேன்னு சிலம்பம் விளையாட்டைப் பத்தி ஜோதிகா அண்ணிகிட்ட ஒருமுறை நான் சொன்னேன். உடனே அதை அவங்க ஆர்வமா கத்துகிட்டாங்க. அவங்களோடு நானும் ரஞ்சனி அண்ணியும் கம்பெனி கொடுத்து சிலம்பம் கத்துக்கிட்டோம். அந்த அனுபவத்துலதான், `ராட்சசி’, `ஜாக்பாட்’ படத்துல ஜோதிகா அண்ணி சிலம்பம் சுத்துற மாதிரியான காட்சிகள் அமைஞ்சது. இப்படி ஒருத்தர் வளர்ச்சிக்கு இன்னொருத்தர் ஆலோசனை சொல்வோம்” என்று புன்னகையுடன் முடித்தார் பிருந்தா.

அடுத்த கட்டுரைக்கு