
இதுவரை பார்த்திடாத தோற்றத்தில் இருக்கவேண்டும் என ஏலியனின் வடிவத்திற்கு அதிகம் யோசித்தவர்கள் கொஞ்சம் திரைக்கதைக்காகவும் சிரத்தை எடுத்திருக்கலாம்.
ஹாலிவுட்டிலிருந்து ஆறிப்போன பீட்சாவை இறக்குமதி செய்து அதில் நம்மூர் சால்னா, சாம்பார் எல்லாம் ஊற்றிக் குழப்பியடித்தால் அதுதான் இந்த ‘கேப்டன்.'
இந்திய ராணுவத்தில் பணியாற்றும் கேப்டன் ஆர்யாவுக்கு அவர் டீம்மேட்கள்தான் நண்பர்கள், குடும்பம் எல்லாம். வெற்றிகரமாய் பல தீவிரவாத சதித்திட்டங்களைத் தகர்க்கும் அந்த அணிக்கு வட கிழக்கு இந்தியாவின் ஆளரவமற்ற ஒரு காட்டுப் பிரதேசத்தைக் கண்காணிக்கும் வேலை தரப்படுகிறது. ‘அதுக்கென்ன, சப்ப மேட்டர்' என அசால்ட்டாய் அவர்கள் காட்டுக்குள் காலடி எடுத்து வைக்க, கட். சில நிமிடங்கள் கழித்து அவர்களுள் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். கட். சில நிமிடங்கள் கழித்து ஆர்யா ஆஸ்பத்திரியில் இருக்கிறார். கட். சில மாதங்கள் கழித்து ஆர்யா மீண்டும் காட்டுக்குள் போகிறார். கட். சில நிமிடங்கள் கழித்து அந்த அணி ஒரு வினோத உயிரினத்தால் தாக்கப்படுகிறது. கட். சில தினங்கள் கழித்து அந்த வினோத உயிரினத்தின் பின்னணி தெரியவருகிறது. கட். சரியாய் 120 நிமிடங்கள் கழித்து நாம் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ‘இவ்வளவு நேரம் என்ன பார்த்தோம்?' என நமது இடப்பக்க மூளை நம்மைக் கேள்வி கேட்கிறது.

ஆர்யா - எந்தவித எமோஷன்களுக்கும் இடமில்லாத விறைப்பான மிலிட்டரி அதிகாரி என்பதால் அதிகம் மெனக்கெடாமல் தப்பித்துக்கொள்கிறார். நாயகி ஐஸ்வர்ய லஷ்மிக்கு மிஞ்சிப்போனால் நான்கு காட்சிகள் இருக்கும். சீனியரான சிம்ரனுக்கு அதைவிட இரண்டு காட்சிகள் அதிகம் இருக்கலாம். பிரதான கதாபாத்திரங்களுக்கே இவ்வளவுதான் வெளி எனும்போது மற்றவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
இமானின் இசையில் எல்லாமே ஏற்கெனவே கேட்ட ரகம். யுவாவின் ஒளிப்பதிவு ஓகே. முன்பின்னாய் நகரும் பிரதீப் ராகவின் படக்கோவை துளியும் கதை நகர உதவவில்லை. ஆனால் அதற்கு அவரைக் குற்றம் சொல்லவும் முடியாது.
‘என்னமோ நடக்கப்போகிறது' என்கிற ஆர்வத்தை முதல்பாதியில் உண்டாக்கியவகையில் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் பாஸ்மார்க் வாங்குகிறார். ஆனால் போகப் போக அந்த எதிர்பார்ப்பை புஸ்வாணமாக்கிக் கொளுத்தி விளையாடுவதுதான் சோகம்.

இதுவரை பார்த்திடாத தோற்றத்தில் இருக்கவேண்டும் என ஏலியனின் வடிவத்திற்கு அதிகம் யோசித்தவர்கள் கொஞ்சம் திரைக்கதைக்காகவும் சிரத்தை எடுத்திருக்கலாம். தேமேவென வந்து போகும் சென்டிமென்ட் காட்சிகள், கதையில் கொஞ்சமும் ஒட்டாத கேரக்டர்கள் என படத்தில் நாம் ஒன்றிப்போக ஒன்றுமே இல்லை.
சரி, அந்த வினோத ஜந்தாவது பயமுறுத்துகிறதா என்றால், வந்து எச்சில் துப்பிவிட்டுப் போவதோடு அதுவும் கடமையை முடித்துக்கொள்கிறது. சி.ஜி-யும் சரி, இறுதியாய் வரும் பிரமாண்ட(?) ஆக்டோபஸும் சரி, போங்கு பாஸ்!
தமிழ் சினிமாப் படைப்பாளிகள் அப்டேட் ஆகவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார் இந்த ‘கேப்டன்.'