Published:Updated:

`ஒரு சொல் கொல்லும், அறம் வெல்லும்'... மதுரை சினிமாக்களில் `ஆடுகளம்' ஏன் முக்கியமானது?

ஆடுகளம்

'கதையே இதுதானோ?' என்று பார்வையாளர்கள் நினைக்கும்போது ஆடுகளமும் மாறியிருக்கும்; ஆட்டமும் மாறியிருக்கும். ரத்தினசாமியிடமிருந்து ஆட்டம் பேட்டைக்காரனுக்குக் கைமாறியிருக்கும். 'ஆடுகளம்' திரைக்கதையின் முக்கியமான இயல்பு இது. #10YearsOfAadukalam

`ஒரு சொல் கொல்லும், அறம் வெல்லும்'... மதுரை சினிமாக்களில் `ஆடுகளம்' ஏன் முக்கியமானது?

'கதையே இதுதானோ?' என்று பார்வையாளர்கள் நினைக்கும்போது ஆடுகளமும் மாறியிருக்கும்; ஆட்டமும் மாறியிருக்கும். ரத்தினசாமியிடமிருந்து ஆட்டம் பேட்டைக்காரனுக்குக் கைமாறியிருக்கும். 'ஆடுகளம்' திரைக்கதையின் முக்கியமான இயல்பு இது. #10YearsOfAadukalam

Published:Updated:
ஆடுகளம்
வெற்றிமாறனின் `ஆடுகளம்' மூன்று வகைகளில் முக்கியமான சினிமா. தமிழ் சினிமா அது ஆரம்பித்த காலத்திலிருந்து சில வழக்கங்களைக் கைவிடாமல் வைத்திருக்கிறது. அதிலொன்று மனிதர்களைக் கறுப்பு - வெள்ளையாக அணுகுவது. கறுப்பு - வெள்ளை காலத்திலிருந்து கலர் சினிமாவாக மாறிவிட்டபோதிலும் இந்த கறுப்பு - வெள்ளை அணுகுமுறையைத் தமிழ் சினிமா விடவில்லை. நல்லவன் - கெட்டவன் என்ற இருமை எதிர்வுகளுக்கு இடையில்தான் அது இயங்கிக்கொண்டிருக்கிறது.

நாயகன் என்றால் நல்லவன், நன்னோக்கம் கொண்டவன், தாய் மீதும் தங்கை மீதும் அளவற்ற அன்பு கொண்டவன், பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்பவன், சாகசங்களின் மூலம் நீதியை நிலைநாட்டுபவன். வில்லன் அநீதிகளின் மொத்த உருவம், எப்போதும் அதிகாரத்தைக் கைக்கொள்பவன், சின்னச்சின்ன வெற்றிகளை ருசித்தாலும் இறுதியில் வீழ்பவன்.

ஆடுகளம்
ஆடுகளம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், வாழ்க்கை அப்படியில்லை. யாரும் வாழ்நாள் நல்லவராகவோ தீமைக்கு ஆயுள் சந்தா கட்டியவராகவோ இருப்பதில்லை. சூழல்களே மனிதர்களைத் தீர்மானிக்கின்றன. அவர்களது குண இயல்புகளில் ஏற்படும் மாற்றங்களே அவர்களைத் தந்திரங்களின் பக்கம் நகர்த்துகின்றன. இதைக் கச்சிதமாகப் பிரதிபலித்ததுதான் 'ஆடுகளம்' படத்தின் வெற்றி. பேட்டைக்காரன் மதுரையின் திறமை வாய்ந்த சேவல் சண்டைக்காரர். அந்தக் கலையின் நுணுக்கங்கள் அறிந்தவர். அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்துபவர். தனக்கென்று ஒரு குழு வைத்து அவர்களைப் பயிற்றுவித்து வழிநடத்தி அன்பு செலுத்துபவர். ஆனால் தனக்கு அடுத்திருக்கும் தலைமுறையிடம் எப்போதும் அளவற்ற விசுவாசத்தை எதிர்பார்ப்பவர். அது தவறும்போதும் அவரது தன்னகங்காரம் (ஈகோ) சவாலுக்கு உள்ளாக்கப்படும்போதும் அறம் தவறி எப்படி கீழ்மைக்குச் செல்கிறார் என்பதைத்தான் 'ஆடுகளம்' விவரித்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உண்மையில் இங்கு 'களம்' என்பது சேவல் சண்டையல்ல. மனித உணர்வுகளுக்கு இடையிலான போராட்டமே களம். சேவல் சண்டை சில நிமிடங்களே திரைப்படத்தில் இடம்பெறுகிறது. ஆனால் மனித உணர்வுகளுக்கு இடையிலான போராட்டம்தான் படம் முழுதும் முன்வைக்கப்படுகிறது. இது பேட்டைக்காரனுக்கும் கருப்புக்கும் இடையிலான மறைமுக 'ஆடுகளம்'. இந்த ஆடுகளத்தில் தான் எப்படி வீழ்த்தப்படுகிறோம் என்பது கருப்புக்குத் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் தான் இந்த ஆடுகளத்தில் இருக்கிறோம் என்பதே கருப்புக்குத் தெரியாது. இந்த ஆடுகளத்தின் அநீதியான விதிகளை உருவாக்குபவராக பேட்டைக்காரனே இருக்கிறார். தான் தனது மாணவனால் வீழ்த்தப்பட்டதாக நினைக்கும் பேட்டைக்காரன் பகையை நேரடியாக எதிர்கொள்ளாமல், தனது மாணவனைத் தந்திரங்களால் வீழ்த்த நினைக்கும் விளையாட்டுக்கான 'ஆடுகளம்' இது.

ஆடுகளம்
ஆடுகளம்
screenshot taken from sunNXT

'ஆடுகளம்' திரைப்படத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் அதன் மதுரைத்தன்மை. அப்போது 'மதுரை சினிமாக்கள்' என்பது நோயாகத் தமிழ் சினிமாவைப் பற்றியிருந்த தருணம். 2004ல் வெளியான 'காதல்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் வாரந்தோறும் மதுரை சினிமாக்கள் வெளியாகின. 'காதல்' திரைப்படம் தென்மாவட்டத்தின் சாதியக் கொடூரத்தையும் வெளியில் அன்பொழுகத் திரியும் மனிதர்கள் எப்படி சாதிய வன்முறையில் ஊறிப்போனவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் முகத்தில் அறையும் எதார்த்தத்துடன் பதிவு செய்தது.

ஆனால் 'காதல்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு வந்த 'மதுரை சினிமாக்கள்', 'காதல்' படம் முன்வைத்த சாதி எதிர்ப்பைக் கைகழுவிவிட்டு வன்முறையையும் நிலப்பரப்பையும் வட்டார வழக்கையும் சடங்குகளையும் மட்டும் எடுத்துக்கொண்டன. இன்னும் சொல்லப்போனால் 'காதல்' திரைப்படத்துக்கு முற்றிலும் எதிர்த்திசையில் சாதியப் பெருமிதத்தையும் அதன் அடிப்படையிலான வன்முறையையும் வீரமாகவும் மதுரைப் பண்பாடாகவும் சித்திரித்தன.

இந்த 'மதுரை சினிமாக்கள்' மனிதர்களுக்கு முதுகில் முதுகெலும்பு இருந்ததோ இல்லையோ சாதியத்தால் கூர்தீட்டப்பட்ட அரிவாள்கள் இருந்தன.
ஆடுகளம் ஷூட்டிங் ஸ்பாட்டில்...
ஆடுகளம் ஷூட்டிங் ஸ்பாட்டில்...

இந்த 'மதுரைப்படங்களில்' இருந்துதான் ஆடுகளம் தனித்த ஒரு கதைசொல்லலை முன்வைத்தது. சேவல் சண்டை என்ற பண்பாடு சார்ந்த நிகழ்வை எடுத்துக்கொண்டு மனித உணர்வுகளில் ஏற்படும் மாற்றத்தை அறத்தின் கேள்வியாக முன்வைத்தது. 'ஆடுகளம்' கதைமாந்தர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று படம் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில் பெருமிதமோ வீரமோ தனிமனிதர்களின் பண்புநலன்களைச் சேர்ந்தது என்பதை அழுத்தமாக முன்வைத்தது. மற்ற மதுரை சினிமாக்கள் காட்டத்தவறிய மனிதர்களையும் அவர்களது இயல்பான வாழ்க்கையையும் அதே மதுரையில் சிறுபான்மையினராக வசிக்கும் ஆங்கிலோ இந்தியன் மக்களையும் காட்சிப்படுத்தியது.

'ஆடுகளம்' படத்தின் மூன்றாவது சாதனை, அந்தப் படத்துடன் தொடர்புடையவர்களும் அந்தப் படம் உருவாக்கப்பட்ட விதமும். அந்தப் படத்தின் பெரும்பான்மையான கலைஞர்கள் மதுரையுடன் தொடர்புடையவர்கள் அல்லர். இயக்குநர் வெற்றிமாறன் வட தமிழகத்தைச் சேர்ந்தவர். தனுஷ் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 'பேட்டைக்காரன்' வ.ஐ.ச.ஜெயபாலனோ ஈழத்துக்கவிஞர். நாயகி டாப்ஸி தமிழ்நிலத்துக்கு வெளியில் இருந்து வந்தவர். ஆனாலும் 'ஆடுகளம்' அசலான மதுரை சினிமாவாக உருவானது. இன்னும் சொல்லப்போனால் இழுத்து இழுத்துப் பேசுவதுதான் மதுரை வட்டார வழக்கு என்று மற்ற மதுரை சினிமாக்கள் சித்திரித்திருந்த பிம்பத்துக்கு மாறாக இயல்பான வட்டார வழக்கை ஆடுகளத்தில் பார்க்கலாம். இதற்குப் பெரும்பங்காற்றியவர் 'ஆடுகளத்தில்' பணிபுரிந்த 'மதயானைக்கூட்டம்' இயக்குநர் விக்ரம் சுகுமாரன்.

தனுஷ் - டாப்ஸி
தனுஷ் - டாப்ஸி
ஆடுகளம்

திரைக்கதை, பாத்திரப்படைப்பு என்றளவிலும் 'ஆடுகளம்' நேர்த்தியான சினிமா. முதல்பாதி கலகலப்பான வாழ்க்கை, இரண்டாம் பாதி சிக்கல் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் மீதான சித்திரிப்பு என்பது வெற்றிமாறனின் 'பொல்லாதவன்' திரைக்கதை அமைப்பு. ஆடுகளமும் அதே அமைப்பையே கொண்டிருந்தது. சேவல்சண்டையின் நுட்பங்கள், கருப்புவின் காதல், நண்பர்களுடனான வாழ்க்கை போன்றவை முதல்பாதி. அந்த முதல்பாதியிலேயே ரத்தினசாமி என்ற போலீஸ்காரருக்கும் பேட்டைக்காரன் குழுவுக்கும் இடையிலான முரண் விவரிக்கப்பட்டிருக்கும்.

'கதையே இதுதானோ?' என்று பார்வையாளர்கள் நினைக்கும்போது ஆடுகளமும் மாறியிருக்கும்; ஆட்டமும் மாறியிருக்கும். ரத்தினசாமியிடமிருந்து ஆட்டம் பேட்டைக்காரனுக்குக் கைமாறியிருக்கும். 'ஆடுகளம்' திரைக்கதையின் முக்கியமான இயல்பு இது.

பேட்டைக்காரன் பாத்திரம் கச்சிதமாகச் சித்திரிக்கப்பட்ட தமிழ் சினிமா பாத்திரங்களில் ஒன்று. குரு-சிஷ்ய மரபு என்பதே பெரும்பாலும் ஜனநாயக விரோதமானது. ஒரு குரு எப்போதும் தன் சிஷ்யர்கள் தன்னை மீறாமலிருக்க வேண்டும் என்றே விரும்புகிறார். சீடர்கள் குருவிடமிருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் காலமும் குருவின் காலமும் வெவ்வேறு. குரு தன் வாழ்க்கையின் மத்திய காலத்திலோ இறுதிக்காலத்திலோ இருக்கும்போது சீடர்கள் வாழ்க்கையின் முன்பருவக்காலத்தில் இருக்கிறார்கள். அந்தக்கால மாற்றம் குரு அறியாதது. அந்தக் காலம் தந்த வசதிகளும் படிப்பினைகளும் சீடர்களை வார்த்தெடுக்கிறது. அவர்கள் புதிய உத்திகளை முயன்று பார்க்கிறார்கள். ஆனால் காலத்தால் பின்தங்கிய குருவோ அதைத் தனக்கு இழைக்கப்பட்ட அவமானமாகக் கருதுகிறார். 'காலமும் சீடர்களும் தன்னைத் தாண்டிச் செல்லக்கூடியவர்கள்' என்று உணரும் குருவே நேசத்துக்குரிய வழிகாட்டியாக நிலைத்து நிற்கிறார்.

ஆடுகளம்
ஆடுகளம்

'பேட்டைக்காரன்' என்ற குரு, மீறலை விரும்பாத குரு. தன் சீடன் வென்றதும் தான் பலவீனமானதாக உணர்கிறார். இந்தப் பலவீனமும் தாழ்வு மனப்பான்மையுமே தந்திரமாகவும் அதிகாரமாகவும் மாறுகிறது. திறமையற்றவர்கள் தாங்கள் எதிர்பாராத உயரங்களை அடையும்போதும் இப்படித்தான் தங்கள் பலவீனத்தை அதிகாரமாக மாற்றிக்கொள்கிறார்கள். இளவயது சீடன் தன்னை மீறியதும் பேட்டைக்காரனுக்கு வயது என்பதே சுமையாகிப்போகிறது. தன்னைவிட வயது குறைந்தவர்கள் மீதான அவநம்பிக்கை, தன் இளவயது மனைவி மீதான சந்தேகமாகவும் மாறுகிறது. அவர் ஒரேநேரத்தில் தன் மனைவியின் காதலுக்கும் தன் சீடனின் நம்பிக்கைக்கும் துரோகம் இழைக்கத்தொடங்குகிறார். ஈழத்துக்கவிஞர் ஜெயபாலன் திரைக்குப் புதியவர் என்றாலும் அவரது மீசையும் கண்களும் பேட்டைக்காரனையும் அவரது வன்ம தந்திரத்தையும் வரைந்துவிடுகின்றன. டப்பிங் குரல் ராதாரவியுடையது!

தனுஷ் என்ற அசாத்திய நடிகனுக்கு முக்கியமான பாத்திரம் கே.பி.கருப்பு. தனுஷின் திரைவாழ்க்கையைக் கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை அவர் தன் நடிப்பையும் உடல்மொழியையும் மாற்றிக்கொண்டு வந்திருப்பதைக் கவனிக்கலாம். 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்' தனுஷ் வேறு, 'புதுப்பேட்டை' தனுஷ் வேறு. ஆனாலும் சில தொடக்ககால இயல்புகள் அவரிடம் எஞ்சியிருக்கும். உதாரணத்துக்குத் 'திவ்யா திவ்யா' என்று உரத்த குரலில் பேசும் தொனி 'புதுப்பேட்டை'யிலும் இருக்கும். செல்வியை ஏமாற்றித் திருமணம் செய்துவிட்டு, நடக்காத முதலிரவை நடந்ததாகத் தன் சகாக்களிடம் விவரிக்கும் காட்சியில் இதை உணரலாம். ஆனால் 'பொல்லாதவன்' தனுஷ், முற்றிலும் சட்டை உரித்த பாம்பு. அந்தப் படத்தில் உடல்மொழி, முகபாவனைகள், வசன உச்சரிப்பு எல்லாவற்றையும் மாற்றியிருப்பார்.

ஆடுகளம்
ஆடுகளம்

'ஆடுகளம்' தனுஷோ 'பொல்லாதவன்' தனுஷைவிட முற்றிலும் மாறுபட்டவர். இந்த மாற்றங்கள்தான் பல்வேறு சாதனைகளைத் தனுஷின் தோள்களில் கொண்டுவந்து கிடத்துகின்றன. மதுரையைச் சேர்ந்த ஒரு வெள்ளந்தி இளைஞன், அவனுக்கு சேவல் சண்டையும் குரு பேட்டைக்காரனும்தான் உலகம். இதற்கிடையில் நண்பர்கள், அவர்கள் 'லந்து' மற்றும் ஐரீன் காதல். இப்படி ஒரு வாழ்க்கையை நிகழ்த்திக்காட்ட தனுஷ் என்ற கலைஞனால்தான் முடியும். 'அண்ணே' என்ற அன்பூறும் வார்த்தை மதுரை மண்ணின் அடையாளம். இறுதிவரை தன் குருவை நம்பி ஏமாறும் அப்பாவி இளைஞன் வேடத்தில் அச்சு அசல் பொருந்தியிருப்பார். உண்மையில் இது தனுஷ் நடிப்புலகத்துக்கான 'ஆடுகளம்'.

ஆங்கிலோ இந்தியர்கள் வாழ்க்கை அவ்வளவாகத் தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்தப்பட்டதில்லை. பொதுவாகவே கலப்பினத்தவர்களின் வாழ்க்கை விசித்திர இயல்புகள் கொண்டது. அக்கரைக்கோ இக்கரைக்கோ செல்ல இயலாமல் ஆற்றின் நடுமார்பில் நிற்பவர்கள். ஆங்கிலோ இந்தியர்களை ஆங்கிலேயர்கள் தனக்குக் கீழான இனமாகவே நினைப்பார்கள். இந்தியர்களோ அவர்களை விநோதமாகப் பார்த்து விலகி நிற்பார்கள். அதேநேரத்தில் அந்தப் பெண்களின் 'வெள்ளாவி' நிறமும் ஆங்கிலமும் வசீகரிக்கக்கூடியவை. அப்படித்தான் கருப்புக்கும் ஐரீன் மீது ஈர்ப்பு வருகிறது. ஐரீனைப் பொறுத்தவரை விலகித் தனித்திருக்கும் தன் இனத்தைத் தாண்டி, ஆறுதல் தரும் ஒரு தோழமை தேவை. அது கருப்புவாக அமைகிறது. ரோட்டோரக் கடையில் பரோட்டா சாப்பிட்டு, கைகழுவி சட்டையிலேயே துடைத்துக்கொள்ளும் அந்த இயல்பு அவளுக்குப் பிடித்துப்போகிறது. பெண்கள் ஆண்களைவிட நுண்ணுணர்வு மிக்கவர்கள் என்பதற்கான உதாரணம் ஐரீன். கூடுதலாகக் கற்ற கல்வியும் சேர்ந்துகொள்ள கருப்புக்கும் துரைக்கும் முன்னால் பேட்டைக்காரனின் வஞ்சக உள்ளத்தைப் புரிந்துகொள்கிறவள் ஐரீனே.

ஆடுகளம்
ஆடுகளம்

படத்தின் முதல்பாதியை ஆக்கிரமிக்கும் ரத்தினசாமி பாத்திரமும் தனித்துவமானது. தனது போலீஸ் உத்தியோகத்தின்மூலம் அதிகாரத்தை அனுபவித்தாலும் அவரால் வெற்றிபெற முடியாத களமாகச் சேவல் சண்டை இருக்கிறது. அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளைக் கச்சிதமாக நடித்திருப்பார் 'ஆடுகளம்' நரேன். தன்னையறியாமலே பேட்டைக்காரனின் தந்திரங்களுக்குப் பலியாகும் 'துரை'யாக கிஷோர் இயல்பான நடிப்பை வழங்கியிருப்பார். சென்றாயன், முருகதாஸ், தினேஷ் என்று சின்னச் சின்னப்பாத்திரங்களிலும்கூட தேர்ச்சியான நடிப்பு. ஜி.வி.பிரகாஷின் இசையும் வேல்ராஜின் ஒளிப்பதிவும் ஆடுகளத்தின் அடர்த்தியைக் கூட்டியது.

எல்லாவற்றையும்விட உச்சம், ஆடுகளத்தின் க்ளைமாக்ஸ். 'தமிழ் சினிமாவின் சிறந்த க்ளைமாக்ஸ்' என்று பட்டியலிட்டால் முதல் 10 இடத்துக்குள் வரத் தகுதி வாய்ந்தது.

தூள்பறக்கும் சண்டைக்காட்சிகளோ கட்டடங்கள் இடிந்து வாகனங்கள் நொறுங்கும் பிரமாண்டப் பேரழிவுகளோ அதிரடித் திருப்பங்களோ இல்லை. பேட்டைக்காரனின் வன்மத்தையும் தந்திரத்தையும் முழுமையாக அறிந்துகொள்ளும்போது கருப்பு, "உன்னைப் பெத்த அப்பன் மாதிரிதாண்ணே நினைச்சேன்?" என்றுதான் கேட்பான். அந்தக் கேள்வியைக் கருப்பு முடிப்பதற்கு முன்பே பேட்டைக்காரன் தன் கழுத்தறுத்துக்கொள்வார். அறத்தின் வெப்பம் மிக்க கேள்விக்கு முன்னால் பதில்களற்று மாண்டுபோகும் உயிர் அது.

ஆடுகளம்
ஆடுகளம்

உண்மையும் அறமும் நிரம்பிய கேள்வி கருப்புடையது. சேவலை அறுக்கச் சொல்லி அறுக்காததால் ஏற்பட்ட வன்மத்தால் ரத்தம் விஷமாகிப்போன பேட்டைக்காரன் இப்போது தன்னைத்தானே அறுத்துக்கொண்டு மாள்கிறார். ஆடுகளம் இப்போது பேட்டைக்காரனின் ரத்தத்தால் நனைந்துகிடக்கிறது.

அறத்துக்கு முன்னால் தன்னைப் பலிகொடுத்து ஆட்டத்தை முடித்துவைக்கிறார் பேட்டைக்காரன். 'ஒரு சொல் கொல்லும், அறம் வெல்லும்' களம்... இந்த ஆடுகளம்!