சினிமா
Published:Updated:

“மனசு நிறைய கருணை!”

‘செல்’ முருகன் - விவேக்
பிரீமியம் ஸ்டோரி
News
‘செல்’ முருகன் - விவேக்

விவேக் 1961-2021

விவேக் என்றதும் உடனே நினைவில் வந்த பெயர் ‘செல்’ முருகன். 28 வருடங்களுக்கு மேலாக விவேக்குடன் தொடர்ந்த பயணம். இப்படி ஒரு கடின தருணத்தில் முருகனுக்கு பேசுவதே இயலாத செயலாக இருந்தது. ‘நாம் எல்லாம் மூடப்பட்டிருக்கிறோம்... நம்மைத் திறக்கும் சாவி உண்மையான நண்பனிடம் இருக்கிறது’ என ரூமி சொல்வார். அதேபோல், கண்ணீருடன் ‘செல்’ முருகன் பேசினார்.

“மனசு நிறைய கருணை!”

“நான் விவேக் சாரைப் பார்த்தது ரொம்ப தற்செயல். டைரக்டர் மணிவண்ணன் சாரிடம் செல்போனை விற்பனைக்குக் கொண்டுபோய்க் கொடுப்பேன். அவர் சில பேர்கிட்டே என் பெயரைச் சொல்லி சிபாரிசு செய்வார். அப்படிப் போய்ப் பார்த்தவர்தான் விவேக். ‘உன்னை நம்பி வாங்கலாமா’ன்னு கேட்டுட்டு செல்போன் வாங்கினார். ‘அடுத்த நாள் வந்து சொல்லித் தாரேன்’னு வந்திட்டேன். பேசிக்கொண்டிருந்த போது ‘நீ நல்லா பேசுற... சுவாரஸ்யமா இருக்கு. எழுது’ன்னு சொன்னார். ‘நமக்கு அதெல்லாம் வராது’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அடிக்கடி கூப்பிடுவார். நான் அடிக்கிற ஜோக்ஸ் பிடிக்கும். கிண்டல் பண்ணினா நல்லா சிரிச்சு ரசிப்பார். ஒருநாள், ‘திருநெல்வேலி படத்துல மூடநம்பிக்கை பத்தியெல்லாம் சொல்லி காமெடி ட்ராக் பண்றேன். ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லு’ன்னு சொன்னார். ஒருநாள் என் பிரெண்ட்கிட்டே ‘ஏன்டா வேலைக்குப் போகலையா’ன்னு கேட்டேன். ‘தொடையில பல்லி விழுந்திருச்சு போகலை’ன்னு சொன்னான். ‘பெரிய ரம்பா தொடையா அது, அதை எடுத்துப் போட்டுட்டுப் போடான்னு சொன்னேன்’னு சொன்னேன். அவரால் சிரிப்பு தாங்க முடியவில்லை.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவர்கூடவே இருந்திட்டேன். எந்த ஸ்கிரிப்டா இருந்தாலும் சேர்ந்து உட்கார்ந்து பேசுவார். நாங்க சேர்ந்து பேசினதையெல்லாம் சினிமாவில் கலந்து டைமிங்கில் அடிப்பார். எக்கச்சக்கமாக ஜனங்ககிட்டே போய்ச் சேர்ந்தது. எங்கே போனாலும் என்னைக் கூட்டிட்டுப் போவார். நண்பர்கள், பிரபலங்களிடம் ‘நம்ம செல் முருகன்’னு அறிமுகப்படுத்துவார். எங்கேயும் என்னை விட்டுக் கொடுக்கமாட்டார். மலேசியாவிற்கு நடிகர் சங்க விழாவிற்குப் போனாலும், ‘எந்திரன்’ விழாவிற்குப் போனாலும் என்னையும் கொண்டுபோய் முன்னிலைப்படுத்தி விடுவார். ‘என்ன டயலாக் சார் இது’ன்னு யாரு பாராட்டினாலும் ‘எல்லாம் நம்ம பையன் முருகன்’தான்னு பெருமையாகச் சொல்வார்.

28 வருஷமாக அவர்கூட இருக்கேன். ஒரு சுடுசொல் சொன்னதில்லை. எப்பவாவது கோபப்படுவார். ஆனால் உடனே மறந்து விடுவார். சின்னச் சின்னதாக சண்டை போட்டுக்குவோம். நான் கோவிச்சுக்கிட்டு வீட்ல இருந்திட்டால் அவர்தான் கூப்பிடுவார். நான்தான் விவேக் மாதிரி இருப்பேன். அவர் ‘செல்’ முருகன் மாதிரி இருப்பார். என்னை ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக்கிட்டார். எங்ககிட்ட எந்த ஃபார்மாலிட்டியும் இல்லை. எப்பவும் பேசிக்கிட்டால் கிண்டல், கேலி கொண்டாட்டம்தான். ரொம்பப் பெரிய விஷயம்... என்னை அப்படியே நம்புவார். கால்ஷீட், பண வரவெல்லாம் நான்தான் பார்த்துக்குவேன். ஒரு நாளும் யார் என்ன கொடுத்தாங்கன்னு வந்து கணக்கு கேட்டதே இல்லை. அதை நினைச்சாத்தான் இப்ப மனசு தாங்க முடியாம சுக்கு நூறாப் போகுது. அடுத்த இடம் எங்கே போறதுன்னு தெரியலை. என்னை அவரும் அவரை நானும் நம்பி இருந்திட்டோம். மனிதனுக்கு மனிதன் உதவி செய்வது கருணையின் ஆதாரம். அந்தக் கருணை அவருக்கு மனசு நிறைய இருந்தது.

“மனசு நிறைய கருணை!”

மருத்துவமனைக்கு ஊசி போடப்போகும் போதுகூட ‘ஏதாவது பஞ்ச் சொல்லிட்டுப் போடா முருகன்’னு கேட்டார். ‘இன்ஷூரன்ஸ் எடுத்ததுக்காக ஆக்சிடென்ட் செய்துக்கலாமா, அதே மாதிரி ஊசி போட்டுட்டா மாஸ்க் எடுத்திடலாமான்னு சொல்லுங்க’ன்னு சொன்னேன். சிரிச்சுக்கிட்டே ஊசி போடச் போனார். என்னால் மின் மயானத்துல வச்சு அவரைப் பார்க்க முடியலை. சந்தோசமும் சிரிப்பும் களிப்புமா இருந்த அவரை என்னால் அப்படிப் பார்க்கவே முடியலை. மெரினா பீச்சுல அந்தச் சாம்பலைக் கரைச்சோம். என்னடா வாழ்க்கைன்னு வெடிச்சு சிதறிப் போயிடுச்சு மனசு.

மேலே சொல்ல ஒண்ணுமில்லை சார். காலம்தான் மாத்தியமைக்கணும்; ஆசுவாசப்படுத்தணும்; தேத்தணும்”

சொல்லும்போதே குரல் உடைகிறது ‘செல்’ முருகனுக்கு.