Published:Updated:

விஷாலின் துப்பு துலக்கல்கள், வாவ் யுக்திகள், மென்சோக புன்சிரிப்புகள்! - 'சக்ரா' +/- ரிப்போர்ட்!

விகடன் விமர்சனக்குழு
சக்ரா
சக்ரா

ஒன்று ''நானும் மதுரைக்காரன்தான்டா'' என்று ஊர் முழுக்க பனியனோடு சுற்றிவருவார். இல்லையென்றால் மிலிட்டரி, போலீஸ் என காக்கி யூனிஃபார்ம் மாட்டிவிடுவார் விஷால்.

ஒரே நேரத்தில் சென்னையில் அடுத்தடுத்து திருட்டுகள் நடக்கின்றன. அதை எப்படி விஷால் கண்டுபிடிக்கிறார் என்பது தான் சக்ரா.

சுதந்திர தினத்தன்று ஒட்டுமொத்த போலீஸும் பாதுகாப்பில் ஈடுபட, சென்னையின் குறிப்பிட்ட வீடுகளில் பக்காவாக பிளான் செய்து திருடுகிறது ஒரு கும்பல். அதைப் பார்த்து போலீஸ் விழி பிதுங்கி நிற்க, ராணுவ அதிகாரியான விஷால் ஒட்டுமொத்த சார்ஜையும் துப்பாக்கி இல்லாமல் எடுத்து எப்படி துப்பு துலக்குகிறார் என்பதை த்ரில்லராக(!!!) சொல்கிறது 'சக்ரா'. அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியிருக்கிறார்.

விஷாலின் படங்களை இரண்டாகப் பிரித்துவிடலாம். ஒன்று ''நானும் மதுரைக்காரன்தான்டா'' என்று ஊர் முழுக்க பனியனோடு சுற்றிவருவார். இல்லையென்றால் மிலிட்டரி, போலீஸ் என யூனிஃபார்ம் மாட்டிவிடுவார். இந்தப் படம் இரண்டாவது வகை. விசேஷத்துக்கு வந்த சொந்தக்காரர், வீட்டை காலி பண்ணாமல், அங்கேயே செட்டில் ஆவதுபோல் மிலிட்டரி ஆஃபீசராக வரும் விஷால் படம் முழுக்க போலீஸுக்கு கட்டளையிட்டுக்கொண்டே இருக்கிறார். விஷால் சொல்வதைத்தான் கமிஷ்னரே கேட்கிறார். (அடடே!)

Chakra movie stills
Chakra movie stills

படத்தில் விஷாலுக்கு பெரிதாக இன்ட்ரோ சீன் இல்லை. ஆனால், நாயகி ஷ்ரதாவுக்கு இருக்கிறது. போலீஸ் உயரதிகாரியாக பயங்கர பில்ட்அப்போடு வருகிறார். சிறப்பாக நடிப்பவர் எனப் பெயர் எடுத்த ஷ்ரதாவுக்கு சிறப்பானதொரு திருஷ்டி பொட்டு 'சக்ரா'. தமிழையே ஆங்கிலத்தில் பேசும் கார்ப்பரேட் கம்பெனி முதலாளியாக ஸ்ருஷ்டி டாங்கே. அவர் ஸ்ருஷ்டி டாங்கேதானே என கூகுளில் சரி பார்ப்பதற்குள் காணாமல் போய்விடுகிறார்.

"என் புருஷன் கார்ப்பரேட்ல வேலை பார்க்கலைங்க, கார்ப்பரேஷன்ல வேலை பார்த்தாரு" போன்ற மென்சோகம் இழையோடும் வசனங்கள் நம்மை மென்சிரிப்போடு கடக்கவைக்கின்றன. ஆனால், ரோபோ ஷங்கர் காமெடி என்கிற பெயரில் செய்யும் வன்முறைதான் உச்சம். ரோபோ சார்... நாங்க பாவம் சார்!

Chakra movie stills
Chakra movie stills

சைபர் ஹேக்கிங் என்பது ஒன்றுமே இல்லை, வங்கிக் கடத்தல் போன்றதுதான் எனும் டேக்லைனுடன் ஆரம்பிக்கிறது படம். உண்மையில் சைபர் ஹேக்கிங் பற்றிய புரிதலும் அந்த அளவுக்குத்தான் படக்குழுவுக்கு இருந்திருக்கிறது என்பதைத்தான் படம் உணர்த்துகிறது. வாய்ஸ் சின்க்ரனைசர், டேட்டா சர்வீசஸ், 1.5 ஜிபி நெட் இலவசம் என டிஜிட்டல் இந்தியா நக்கல்கள் எந்த லாஜிக்கும் இல்லாமல் போகிறபோக்கில் வந்து போகின்றன. துப்புதுலக்க விஷால் மேற்கொள்ளும் யுக்திகள் எல்லாம் வேற லெவல்... வேற லெவல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படத்தில் பாடல்கள், ஜீப்பில் பறக்கம் சண்டைக் காட்சிகள் இல்லை என்பதுதான் ஆறுதல். யுவனின் பின்னணி இசை படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு ரூட்டில் அதிர வைத்துக்கொண்டே இருக்கிறது.

ஹேக்கிங், திருட்டு என்பதையெல்லாம் கடந்து ஹீரோவுக்கு வில்லன் செய்யும் ஏதோவொரு விஷயம் எமோஷ்னலாக பாதிக்க வேண்டும். அது ஹீரோவைத் தாண்டி, பார்வையாளர்களையும் அந்த உணர்ச்சிக்குள் தள்ள வேண்டும். அந்த எமோஷனல் கனெட்க் என்னவென்றால் விஷாலின் தந்தை வாங்கிய சக்ரா விருதும் திருடர்களால் திருடப்படுகிறது. அவரது பாட்டியும் தாக்கப்படுகிறார். இங்கிருந்துதான் விஷாலின் வேட்டை ஆரம்பமாகிறது. டைட்டிலுக்கு நியாயம் சேர்க்கப்பட்டுவிட்டது.

Chakra movie stills
Chakra movie stills

முடிவு தெரிந்த பின்னும், நடக்கும் சதுரங்க ஆட்டங்களைக்கூட பொறுத்துக்கொள்ளலாம், என்பதைப் போல் அடுத்த பாகத்துக்கான லீடு வைத்திருக்கிறார்கள். படத்தில் பலரும் அதிர்ந்தது அந்தக் காட்சியில்தான்.

டிஜிட்டல் இந்தியா குறைபாடுகளை நக்கலடிக்க மெனக்கெட்டதில், கொஞ்சமாவது கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதிலும் மெனக்கெட்டிருக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு