Published:Updated:

சந்திரபாபு: சார்லி சாப்ளினின் தமிழ்ப் பிரதி..! #HBDChandrababu

சந்திரபாபு
சந்திரபாபு

நடிகர் சந்திரபாபு; நடிப்பு, நகைச்சுவை, பாடகர் எனப் பல தளங்களில் வெற்றிக்கொடி நாட்டியவர். இன்று அவரின் 92-வது பிறந்தநாள்.

தமிழ் சினிமாவின் தொடக்க காலம் தொட்டு 40 ஆண்டுகள் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த கதாநாயகர்கள், எம்.ஜி.ஆரும் சிவாஜியும்தான். அதே நேரத்தில், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களான எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, டி.எஸ்.பாலையா, ரெங்காராவ், எஸ்.வி.சுப்பையா, நாகேஷ் எனப் பலரும் இவர்களுக்கு இணையாகப் புகழ்பெற்றிருந்தனர். இவர்களில் நடிகர் சந்திரபாபு, நடிப்பு, நகைச்சுவை, பாடகர் எனப் பல தளங்களில் வெற்றிக்கொடி நாட்டியவர். இன்று, அவரின் 92-வது பிறந்தநாள்.

தூத்துக்குடியில், ஒரு கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த சந்திரபாபுவுக்கு, பாட்டும் நடனமும் அத்தனை எளிதாகக் கை வந்தது. ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்றே குடும்பத்தினர் செல்லமாக அழைத்தனர்.

சிறு வயதிலேயே பாடும் திறமைபெற்றிருந்த சந்திரபாபு, மேற்கத்திய நவநாகரிகத்தையும் கலாசாரத்தையும் பெரிதும் விரும்பினார். 16 வயதில் சென்னைக்கு வந்து திரையுலகில் நுழைய பல முயற்சிகளை மேற்கொண்டார்.

சினிமாவில் வாய்ப்புத் தேடி பல இடங்களில் அலைந்துதிரிந்தார். எங்கும் ஏமாற்றமே காத்திருந்ததால், மனம் வெறுத்துப்போய் தற்கொலைக்கு முயன்றார். அதனால் இவரை காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சியைக் கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார்.

"உங்களுக்கு நான் சுட்டுக்கொண்டதுதான் தெரியும்; என் காயத்தை உங்களால் உணரமுடியாது. அதுபோலத்தான் என் துயரமும்" என்று இவர் கூறிய பதிலில் இருந்த நகைச்சுவையையும் சோகத்தையும் உணர்ந்த நீதிபதி, அறிவுரை கூறி அவரை விடுதலைசெய்தார்.

Chandrababu
Chandrababu

1947-ம் ஆண்டு, 'அமராவதி' என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்துவைத்த சந்திரபாபு, விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950-களில், பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். தூத்துக்குடிகாரரான இவர் பேசிய மெட்ராஸ் பாஷை, அச்சு அசலாக அப்படியே இருந்தது.

சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. இவர் மணந்த பெண், தான் வேறொருவரை விரும்புவதாகக் கூறவே, அந்தப் பெண்ணின் விருப்பப்படியே சந்தோஷமாக வாழ, அவரை அனுப்பிவைத்தார். இதை அடிப்படையாக வைத்தே 'அந்த 7 நாட்கள்' படத்தின் திரைக்கதையை அமைத்ததாக, நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் பின்னாளில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

சந்திரபாபு, எம்.ஆர்.ராதா
சந்திரபாபு, எம்.ஆர்.ராதா

நகைச்சுவை நடிப்பில் சார்லி சாப்ளினின் தமிழ்ப் பிரதியாக சந்திரபாபு இருந்தார். இவரின் நகைச்சுவைக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காத்திருந்தது. ஒரு சில நேரங்களில் கதாநாயகர்களின் படங்களே இவரின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கவேண்டிய நிலையும் அப்போது ஏற்பட்டது.

தான் சம்பாதித்த அளப்பரிய சொத்துக்களையெல்லாம் சொந்த படத் தயாரிப்பில் மெள்ள மெள்ள இழந்தார். ’கவலை இல்லாத மனிதன்’ மற்றும் ’குமார ராஜா’ என்னும் இரண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும், இனி நகைச்சுவை நடிகராகப்போவதில்லை என்று அறிவித்தார். ஆனால், அந்த இரண்டு படங்களும் தோல்வியடைந்தன. மீண்டும் நகைச்சுவை வேடமேற்று நடித்தார்.

சந்திரபாபு
சந்திரபாபு

டி.எஸ். பாலையா - சந்திரபாபு, எம்.ஆர்.ராதா - சந்திரபாபு என இருவர் காம்போவில் இவர்கள் செய்து கலக்கிய காமெடிதான், பின்னாளில் கவுண்டமணி - செந்தில் காம்பினேஷனுக்கு அஸ்திவாரம்.

80-களில், ஜனகராஜுக்கென தனியாக தத்துவப் பாடல் ஒன்றை இளையராஜா பாடுவார். அப்படிப் பாடிய பாடல்கள் யாவும் அப்போது ஹிட். இதற்கு முன்னோடியாக, நகைச்சுவைக்கென தத்துவப் பாடல்களை அமைத்து, தானே பாடிப் புகழ்பெற்றவர் சந்திரபாபு. இத்தனைக்கும், இவரின் குரல் தட்டையாக இருக்கும். ஆனால், செய்நேர்த்தியுடன் எளிய மொழிநடையில் பாடல்களைப் பாடிய விதத்தில் இன்றளவும் இவரின் பாடல்களுக்கு மாற்று கிடையாது.

சந்திரபாபு
சந்திரபாபு

மேற்கத்திய இசையின் கானா பாடல்களாகத் திகழ்ந்த பாப் இசைத் துள்ளல்தான், சந்திரபாபு பாடல்களின் அடிநாதம். பாடல் தொடங்கும்போதே கேட்பவரின் மனதுக்குள் உற்சாகம் பொங்கச்செய்யும் பிஜிஎம், நம்மை அந்தச் சூழலுக்கே கொண்டுசேர்க்கும்.

கண்ணதாசனும் சந்திரபாபும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத வெளிப்படையான கலைஞர்கள். அதனால் கண்ணதாசன் எழுதி, சந்திரபாபு பாடிய பாடல்கள் ஏதோ ஒரு விதத்தில் சந்திரபாபுவின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவே பின்னாளில் அமைந்தன.

``நண்பரா வந்தீங்கன்னா, உட்லண்ட்ஸ்ல ஃபில்டர் காபி சாப்பிடலாம்..!''- நாகேஷ் பிறந்ததினப் பதிவு

'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை

வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை’

என்னும் ’அன்னை’ படத்தில் கண்ணதாசன் இயற்றிய பாடல் வரிகளைப் போன்றே சந்திரபாபுவின் வாழ்க்கை இருந்தது. ஃபர்ஸ்ட் ஆஃப் சூப்பர், செகண்டு ஆஃப் டிராஜெடி என்னும் விதமாகவே அமைந்தது.

அடுத்த கட்டுரைக்கு