லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

வாசன் நல்லாருக்கணும்... அவரை ஒரே ஒரு தடவை பார்க்கணும்! - `சந்திரலேகா’ டிரம் டான்ஸ் பாட்டி

லலிதா
பிரீமியம் ஸ்டோரி
News
லலிதா

என்னோட பூர்வீகம் நாகப்பட்டினம். அதுக்கு முன்னாடி பர்மாவுல இருந்தோம். வறுமையான குடும்பம். ஆனாலும் எங்க அம்மா எங்களைப் படிக்க வச்சாங்க.

1948-ல் ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளியான படம் `சந்திரலேகா'. அதன் டிரம் டான்ஸ், இன்றைக்கும்கூட பலராலும் போற்றிப் புகழக்கூடிய அளவுக்குப் படைக்கப் பட்டிருக்கும். பிற்காலத்தில் வெளியான எல்லா பிரமாண்டங்களுக்கும் அடிப்படையே, அந்த சந்திரலேகாவின் பிரமாண்டம்தான் என்று சொல்லும் அளவுக்கான படைப்பு அது. அந்த டிரம் டான்ஸர்களில் ஒருவராக ஆடியவர்தான் இந்த லலிதா பாட்டி.

வாசன் நல்லாருக்கணும்... 
அவரை ஒரே ஒரு தடவை பார்க்கணும்! -  `சந்திரலேகா’ டிரம் டான்ஸ் பாட்டி

“அப்போல்லாம் ஷாட் சரியா வரலைன்னா அதை எடிட் செய்யுற அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கல. பல முறை ஒத்திகை பார்க்க வச்சிட்டுதான் ஒவ்வொரு ஷாட்டையும் எடுப்பாங்க. அப்ப என் கூட ஆடின யாரும் இப்ப உயிரோட இல்ல” எனப் பேசத் தொடங்கினார்.

“அந்த டிரம் டான்ஸுக்கு எவ்வளவு செலவு பண்ணினாங்கன்னு தெரியுமா, எத்தனை ஒத்திகை நடந்துச்சுன்னு தெரியுமா..?!'' என்றவர், தன் வாழ்க்கையைப் பற்றிய நினைவு களையும் தொடர்ந்தார்.

“என்னோட பூர்வீகம் நாகப்பட்டினம். அதுக்கு முன்னாடி பர்மாவுல இருந்தோம். வறுமையான குடும்பம். ஆனாலும் எங்க அம்மா எங்களைப் படிக்க வச்சாங்க. எங்கம்மா டீச்சர். அப்பா எங்களை விட்டுட்டுப் போயிட் டாங்க. என்னுடன் பிறந்தவங்க மொத்தம் நாலு பேரு... எனக்குதான் ஏனோ படிப்பு ஏறல. எங்க வீட்டுப் பக்கத்துல பணக்கார பசங்க எல்லாம் டான்ஸ் ஆட கிளாஸுக்கு போவாங்க. அவங்க பின்னாலேயே போய் கிளாஸுக்கு வெளியே நின்னு அவங்க ஆடுறத பார்த்துக்கிட்டே இருப்பேன். வீட்டுக்கு வந்ததும் கண்ணாடி முன்ன நின்னு அங்க பார்த்ததை ஆடிப் பார்ப்பேன். அப்படித்தான் நான் பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். குடும்ப பாரம் மொத்தமும் அம்மா மேலயும் எம்மேல யும் விழுந்துச்சு. குரூப் டான்ஸ்ல ஆடி சம்பா திச்சுதான் எல்லாரையும் கரை ஏத்துனேன்.

வாசன் நல்லாருக்கணும்... 
அவரை ஒரே ஒரு தடவை பார்க்கணும்! -  `சந்திரலேகா’ டிரம் டான்ஸ் பாட்டி
வாசன் நல்லாருக்கணும்... 
அவரை ஒரே ஒரு தடவை பார்க்கணும்! -  `சந்திரலேகா’ டிரம் டான்ஸ் பாட்டி
லலிதா பாட்டி
லலிதா பாட்டி
லலிதா பாட்டி
லலிதா பாட்டி

என்னோட 40 வயசு வரைக்கும் சினிமா துறையில இருந்தேன். அப்பல்லாம் குரூப் டான்சர்களுக்கு ஆளுக்கு 40 ரூபா தருவாங்க.. அதுலதான் மொத்த குடும்ப செலவும் நடக்கும். ஒரு தயாரிப்பாளரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவருக்கு வேற குடும்பமும் குழந்தைங்களும் இருந்தது அப்புறமாதான் எனக்குத் தெரிஞ்சது. எங்க போனாலும் எதுக்கெடுத்தாலும் சந்தேகம் தான். குடியும் சந்தேக நோயும் என் புருஷன் வாழ்க்கையையே அழிச்சுடுச்சு. புருஷன்தான் சரி இல்லன்னா, என் புள்ளையும் சரி இல்ல. என்னோட ஒரே மகனை குரூப் டான்ஸ் ஆடிதான் சம்பாதிச்சுக் கல்யாணமும் பண்ணி வச்சேன். குடிக்கு அடிமையாகி இறந்து போயிட்டான். எனக்கு உறவுனு சொல்லிக்க இன்னிக்கு யாரும் இல்லை’’ என்றவரின் கண்களில் வெறுமை.

‘‘எந்த நிலையிலயும் உழைச்சு சாப்பிடணும், யாரையும் நம்பி வாழக் கூடாதுன்னு இருந்தேன். தள்ளாத வயசுல என் சொந்தக்காரங்க தான் கொஞ்சகாலம் என்னைப் பார்த்துகிட்டாங்க. அப்புறம் முதியோர் இல்லத்துல விட்டுட்டாங்க. அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல... என்னோட 93 வயசுலயும் நான் ஆடிப்பாடி முதியோர் இல்லத்துல சந்தோஷமா இருக்கேன். கடந்த காலத்துல நிறைய கசப்பான அனுபவங்கள் இருந்தாலும், நல்ல உள்ளங்களையும் சந்திச்சிருக்கேன். அப்படி நான் பார்த்து வியந்த ஒரு மனுஷன்தான் எஸ்.எஸ்.வாசன். கஷ்டப்பட்டு முன்னேறினவர். வாசன் நல்லா இருக்கணும். அப்பல்லாம் விகடன் ரெண்டணாவுக்கு வாங்குவோம். செட்டுக்குள்ள எல்லாரோடவும் ரொம்ப சகஜமா பழகின வாசன் இன்னும் கண்ணுக் குள்ளேயே இருக்காரு. உன் கூட என்னையும் கூட்டிட் டுப் போறியா... அவரை நான் ஒரே தடவை பார்த்தா போதும்'' என்றவரிடம், `அவர் இப்போது இல்லை' என்றோம்.

தெளிவாகப் பேசுகிற பாட்டி இதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாமல், மீண்டும் மீண்டும் ‘‘வாசன் இப்ப எப்படி இருக்காரு...’’ என்றே கேட்டுக்கொண்டிருந்தார். 93 வயதுக் குழந்தைக்கு எப்படிப் புரியவைப்பது?