Published:Updated:

"அப்பா பாரதிராஜா இதை செஞ்சா மட்டும் போதும்"- கொந்தளித்த சேரன்

சேரன்
சேரன்

எங்களுக்கு இங்க இவ்வளவு பிரச்னை இருக்கு நீங்க இயக்குநர் சங்கத்துல போயி உக்காந்துக்கிட்டீங்க

நடிகர் சங்க தேர்தல் உச்சக் கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கம் நேற்று இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கூடியது. இந்த சந்திப்பில் 26 நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்க உறுப்பினரும் தற்போது நடிகர் சங்க தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரி கணேசன் இந்த உதவிக்கு தேவையான ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை பாரதிராஜா மூலம் வழங்கினார்.

ஐசரி கணேஷ்
ஐசரி கணேஷ்

இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், ஜே. சதிஷ் குமார், டி.சிவா, முரளிதரன், கேயார், ஏ.எல். அழகப்பன், கே.ராஜன்,சுரேஷ் காமாட்சி, சி.வி.குமார், நடிகர் பிரசாந்த உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய தயாரிப்பாளர் ராஜன் விஷால் குறித்து பேசும்போது, "விஷால் எந்த தயாரிப்பாளருக்கும் நல்லது நினைத்தத்தில்லை. சி.வி.குமாரிடம் வாங்கிய முன்பணம் 4 கோடியை படம் நடிக்க முடியாது எனக் கூறி 2 வருடம் கழித்து திரும்பக் கொடுத்துள்ளார். அதேபோல் 'டிக் டிக் டிக்' படம் எடுத்த ஜபக்கிடம் ரூபாய் 4 கோடி வாங்கி கொண்டு 1 வருடம் கழித்து வட்டி கணக்கிடாமல் திருப்பிக் கொடுத்துள்ளார். ரூபாய் 7.40 கோடியாக இருந்த தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளை பணத்தை நிர்வாக சீர்கேட்டினால் இன்று ஒன்றுமில்லாமல் செலவு செய்துள்ளனர். தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு விஷால் 'கருப்புராஜா வெள்ளைராஜா' படத்தில் ரூபாய் 5 கோடி நஷ்டம் ஏற்படுத்தினார். அவர் அந்தப் படத்தில் அவர் ஒழுங்காக நடித்திருந்தால் நடிகர் சங்கத்துக்கு 10-12 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்" என்றார்.

தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் கேயார், " 'அயோக்யா' புகழ் விஷால் என்பது பொருத்தமாக இருக்கும். நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கம் போல் ஆகிவிடக்கூடாது என்பதால் தான் அங்கு போட்டிக்கு எதிர் அணி உருவாகியுள்ளது, இது கடவுள் சித்தம். கொடுக்கும் நிலையில் இருந்த தயாரிப்பாளர் சங்கத்தை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டார் விஷால். சும்மா இருந்த இளையராஜா சாரைக் கூப்பிட்டு விழா நடத்தினார்கள். அதில் லாபம் இல்லை. இளையராஜா சாருக்கே ஒரு கோடி ரூபாய் பாக்கி." என்றார்.

பாரதிராஜா
பாரதிராஜா

பின்னர் பேசிய பாரதிராஜா," கேயார், தியாகராஜன், ராமநாராயணன், முரளிதரன் ஆகியோர் இருக்கும்போது தயாரிப்பாளர் சங்க சபைக்கு ஒரு மரியாதை இருந்தது. இன்று, அது மெல்ல தேய்ந்து நிர்வாக சீர்குலைவால் இந்த நிலைமைக்கு வந்துவிட்டது. சங்கத்தில் ஒரு பெருச்சாளி உள்ளே புகுந்ததுதான் இதற்கு காரணம்,விஷால் ஒரு புல்லுருவி அவரை சஙகத்தின் பதவியில் மீண்டும் அமர வைக்கக் கூடாது. ஐசரி ஒரு போன்ற ஒரு நல்ல மனிதரை பார்ப்பது அரிது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரைப் போன்றவர்களை நடிகர் சங்கம் அரவணைத்துக் கொள்ளவேண்டும். நடிகர்கள் சங்கத்தின் தலைவராக பாக்யராஜ் போட்டியிடுதால் இதைச் சொல்லவில்லை, தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம் என பெயர் மாற வேன்டும் என்றால் சுவாமி சங்கரதாஸ் அணியை வெற்றி பெற செய்யவேண்டும். நான் இறப்பதற்குள், தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை என்ற ஒன்றை உருவாக்கிவிட்டுதான் செல்வேன்" என்று சூளுரைத்தார்.

சேரன்
சேரன்

இறுதியாக பேசிய இயக்குநர் சேரன்." அனுபவமில்லாதவர்களை பதவியில் உட்கார வைத்துவிட்டு இன்று அவதிப்படுகிறோம். இதைத்தான் மூன்று வருடத்துக்கு முன்னர் ஜோசியம் பார்த்தார்போல் கூறினேன், யாரும் கேட்கவில்லை. நாடாக இருக்கட்டும் சங்கமாக இருக்கட்டும் நமது உறுப்பினரகள் தேர்ந்தெடுத்துத்தான் இந்த நிர்வாகம் வந்தது. இப்போது மாட்டிக்கொண்டோம் என்றால் ஒரு பயனும் இல்லை.

முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் தலைமை பதவிக்கு வர வேண்டும். 200 புதுத் தயாரிப்பாளர்கள் வருஷாவருஷம் வர்றாங்க அவங்க அதுக்குப் பிறகு காணாமப் போயிடுறாங்க. இங்கே சின்ன தயாரிப்பாளர், பெரிய தயாரிப்பாளர்னு வித்தியாசம் இல்லாம் நஷ்டம் அடையுறாங்க. தமிழ் சினிமா வர்த்தகம் ஒரு 20-30 வருஷம் பின்னாடி போயிட்டிருக்கு.இதைமாற்ற எங்க அப்பா பாரதிராஜா தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைமையேற்க வேண்டும் என்றார். எங்களுக்கு இங்க இவ்வளவு பிரச்னை இருக்கு நீங்க இயக்குநர் சங்கத்துல போயி உக்காந்துக்கிட்டீங்க. நீங்க இதை செஞ்சா போதும், இயக்குநர் சங்கத்தை நாங்க பார்த்துக்கிறோம்." என்றார்.

நடிகர் சங்கத் தேர்தலில் சவாமி சங்கர்தாஸ் அணிக்கு விஷாலை எதிர்க்கும் அதிருப்தி தயாரிப்பாளர்கள் பலர் ஆதரவு தெர்வித்திருப்பது நடிகர் சங்க தேர்தலில் முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு