செவாலியர் சிங்கம்!
நடிப்புலகில் ஈஃபல் டவர் போல உயர்ந்து நிற்கும் சிவாஜி கணேசனுக்கு பிரான்ஸ் நாடு செவாலியர் விருது தந்து கெளரவித்தது சுவையான பொருத்தம்.
இன்று நடிகர்களாக இருப்பவர்கள் புதிய வித்தியாசமான உத்திகளைக் கற்பதற்கு வீடியோ போன்ற விஞ்ஞான வசதிகள் எத்தனையோ இருக்கின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, சிவாஜி நடிப்புலகில் காலடி வைத்தபோது டி.வி. கூட கிடையாது. எப்போதாவது சில ஆங்கிலப் படங்கள் சென்னையில் ஒரிரு தியேட்டர்களில் வந்தால் உண்டு!
அப்படிப்பட்ட காலகட்டத்தில் `சுயம்பு' போல கிளம்பி விசுவரூபமெடுத்து வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும் அளவுக்கு நடிப்பில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் காட்டிய ஒரு மாபெரும் சக்தி சிவாஜி!

திரையுலகில் சிங்கம்போல கம்பீரமாகப் பவனிவந்த சிவாஜியின் நடிப்பை ஒப்பிட இன்னொரு நடிகரைத் தேடிப்பிடிப்பது இயலாது. உதாரணமாக, அவரால் சோகக் காட்சி ஒன்றில், தான் அழுது மற்றவர்களின் பரிதாபத்தையும் பெற முடியும், தான் அழாமலேயே மற்றவர்களை அழவைக்கவும் முடியும்!உண்மையில், தமிழர்கள் தங்களுடைய ரசிப்புத் திறனைத் தீட்டிக் கூர்மைப்படுத்திக் கொள்ளக்கூடிய அற்புதமான ஒரு நடிப்புப்பட்டறையாக நமக்கு வந்து வாய்த்தவர் சிவாஜி.தமிழின் பெருமையை நிலைநாட்ட தமிழன்னை கவிச் சக்ரவர்த்தி கம்பனைக் கொடுத்ததாகச் சொல்வதுண்டு. அது இந்த நடிப்புச் சக்ரவர்த்திக்கும் பொருந்தும்.
- ஆசிரியர்